Pattukkottaiyaar

சிலம்பொலி சு.செல்லப்பன்

முத்திரை பதித்த முத்திறக் கவிஞர்
-முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்

sellappan

திரைப்படங்களில் பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கு இசையமைத்துப் பயன்படுத்தியபோது நாட்டு விடுதலை உணர்வு, சமுதாயச் சிந்தனைகள் பற்றிய கருத்துகள் நல்ல தமிழில் நம் காதுகளில் ஒலிக்கக் கேட்டோம். அவர்களையடுத்து திரைத்துறைப் பாடல்களில் மூன்று முக்கியத் திருப்பங்கள் ஏற்பட்டன. சீர்திருத்த – பகுத்தறிவுப் பாடல்களை எளிய இனிய தமிழில் உடுமலை நாராயணக் கவிஞர் எழுதினார். காதல், வாழ்வியல், தத்துவப் பாக்களை பண்டை இலக்கியப் பாங்கில் பாடியளித்தார் கவிஞர் கண்ணதாசன். தொழிலாளர் உயர்வையும், பொதுவுடைமைக் கொள்கைகளையும் கவிஞர் கலியாணசுந்தரத்தின் பாடல்கள் முதன்மைப்படுத்தி ஒலித்தன.

கலியாணசுந்தரம் பட்டுக்கோட்டையில் மிக எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தவர்; இளைய வயதிலேயே துன்பங்களால் சூழப்பட்டவர்; 29 வயதே வாழ்ந்த அவர், தோழர் ப. ஜிவானந்தம் சொல்வதுபோல தம் வாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்; பொதுவுடைமைக் கட்சியிலே பங்கு கொண்டு அருந்தொண்டாற்றியவர்; பாவேந்தர் பாரதிதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றித் தன்மானக் கருத்துகளை நன்கு உணர்ந்தவர். ஆதலின் அவருடைய பாடல்களில் தொழிலாளர் முன்னேற்றம், பொதுவுடைமைக் கொள்கைகள், தன்மானக் கருத்துகள் ஆகியன இயல்பாகவே இடம் பெற்றுள்ளன. ஆயினும் கலியாணசுந்தரம் தொழிலாளர் கவிஞராகவும் பொதுவுடைமைக் கவிஞராகவும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

கவிஞர் கலியாணசுந்தரம் மிகக் குறைந்த வயதே வாழ்ந்திருக்கிறார்.

அதற்குள்ளாக அவர்தம் உள்ளத்தே முகிழ்த்த கருத்துகளையெல்லாம் அணையுடைத்த வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடச் செய்திருக்கிறார். பட்டுக் கோட்டையார் என்றாலே கவிஞர் கலியாணசுந்தரத்தையே குறிக்கும் எனத் தன்பெருமையை உயர்த்திக் கொண்டுள்ளார். பொது மேடைக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்குமே இவர் பெரும்பான்மை எழுதியதால் இவருடைய பாடல்கள் இசைப் பாடல்களாகவே மிகுதியும் உள்ளன. எளிய நடை; உள்ளத்தைப் பிணிக்கும் ஆற்றல்; உணர்ச்சிக் கொந்தளிப்பு ஆகிய இவற்றின் இணைப்பே பட்டுக்கோட்டை கலியாணசுந்தரத்தின் பாடல்கள்.

முன் எவரும் சொல்லாத வகையில்….

பட்டுக்கோட்டையார் உழவர் குடும்பத்தைச் சார்ந்தவராதலாலும், உழவுத் தொழிலில் நேரடியாக ஈடுபட்டவராதலாலும், அவர்கள் முன்னேற்றங்காண வேண்டுமெனும் தணியா ஆர்வமுடையவராதலாலும் அவருடைய உவமைகள் பெரும்பாலும் உழவுச் சூழலையே கொண்டிருப்பனவாக அமைந்திருக்கக் காண்கிறோம்.

ஆற்றோரம் மேவும் அடர்சோலை போல
படர் காதலாலே பலன் காணுவோம்
*
மடைதாண்டி விழுந்த வாளை மீன்போல்
வள்ளி துள்ளி வரப்பில் குந்தினள்!
*
அவன்    :    ஏருலே கட்டின மாடுக போல
இணைஞ்சு வாழலாம் – நாம
இணைஞ்சு வாழலாம்!
அவள்    :    புளிச்ச வேறுல நட்ட நாத்துப் போல
செழிக்க வாழலாம் – குடும்பம்
செழிக்க வாழலாம்.
*
வாழைத்தோட்டம் போல் தழைத்து
வளர் மூங்கிலைப் போல நாமும் வாழுவோம்
*
மாறாத அன்பாலே பாரிலே
வளர்மூங்கிலைப் போல நாமும் வாழுவோம்

வாளை மீன், அடர்வோலை, ஏரிலே கட்டப்பட்ட மாடுகள், வாழைத் தோட்டம், வளர்மூங்கில், புளித்த சேற்றில் நட்ட நாற்று ஆகியவை – உழவர்களோடு தொடர்புடையவை – கவிஞருக்கு உவமப் பொருள்களாகியுள்ளன. அடர்ந்த சோலையின் நிழல் இடைவெளியேதுமின்றிக் குளிர் மிகுந்திருப்பது போல காதலும் இடையறவின்றி இனிப்புடையதாயிருக்க வேண்டும் என உவமை விளக்கம் பெறுகிறது. புளிச்ச சேற்றிலே நட்ட நாற்று செழித்து வளரும் என்னும் உழவுத் தொழிலுண்மை புலப்படுத்தப் பட்டுள்ளது. வாழையடி வாழையெனத் தொடர்ந்தும், மூங்கிலைப் போல் ஒருவர்க்கொருவர் பிடிப்புடனும் வாழவேண்டும் என்பதும் உணர்த்தப்படுகிறது.

அறிந்த செய்திகளேயாயினும் பட்டுக்கோட்டையார் உவமைகளைத் தனித் தன்மையோடு முன் எவரும் சொல்லாத வகையில் சொல்லுகிறார்.

பெரும்வெயிலால் வண்டல்நிலம் வெடிப்பதைப் போல்
பிளவுபட்டுப் பிளவுபட்டு
மக்கள் வாழ்கின்றனரே என வேதனைப் படுகிறார்.

ஒருவன் கேட்டது இன்பம்; கிடைத்ததோ துன்பம். இது எதிர் பார்த்தது நிழலை ஆனால் அடைந்ததோ வெயிலை என்பதை ஒத்தாயிற்று.

வாழ்க்கைப் பாதை நேராக அமையாது போனால் நேரிடுவது துன்பமே, திண்டாட்டமே என்பதை
தண்டவாளம் விட்டிறங்கித் தத்தளிக்கும் எஞ்சினைப்போல்
கொண்டவன் தனைமறந்து திண்டாடும்
நிலைக்கு ஒப்பிடுகிறார்.

இராஜா தேசிங்கு,
உறையிலிருக்கும் போர்வாள் போலே
அறையி லிருந்தான்
வீரம் அடங்கியிருக்கிறது. வாள் வெளியேறின் அங்கு வீரம் விளையாடும்.

இராஜா தேசிங்கின் தோழன் முகம்மதுகான். அவன் பொன்நிற மேனியன்.
போரில் வெட்டுண்டு குருதியிலே வீழ்ந்தான். இதனைக் கவிஞர்,
தங்கத் தூணொன்று குங்குமச் சேற்றில் சாய்ந்ததோ
என்கிறார். குருதியைக் குங்குமச் சேறாக்கி, பொன்னிறமுடைய முகம்மதுகானைத் தங்கத் தூணாக்கி, குங்குமச் சேற்றில் விழும் தங்கத் தூண் எனக் கூறப்பட்டுள்ள உவமை தரும் இன்பம் உவமையிலா இன்பமல்லவா?

ஜாரின் கொடுங்கோன்மையால் மக்கள் படாத பாடு பட்டனர்; அடியுண்டனர்; உதையுண்டனர். அவர்கள் வாழ்வோ சின்னா பின்னமாகிச் சிதைவுண்டது. மக்கள்
செக்கிலிட்ட தேங்காய் போல்
ஆயினர். மக்கள் நசுக்கப்பட்டனர் என்பதற்கு இஃதொரு சரியான உவமையன்றோ?

பெண்ணின்,

நளின நடை அன்னம் போலே
நெளியும் இடை மின்னல் போலே
ஆடை கொடி பின்னல் போலே
அன்பு மொழி கன்னல் போலே
என உவமைகளை பட்டுக்கோட்டையார் அடுக்கிச்செல்லும் அழகு ஒரு தனியழகே!

பெரிதாக ஊதப்பட்டுள்ள பலூன்
மாடி வீட்டு சீமானைப் போல் வயிறு பெருத்த
தோற்றத்திலே இருக்கிறதாம்! மாடி வீட்டுச் சீமானின் வயிற்றின் தோற்றத்தைக் காட்டுவதிலே எத்துணை குத்தல்? எத்துணை நையாண்டி?

அழிக்க முடியாத உணர்ச்சிகள்

தொழிலாளர் நிலை குறித்தும் அவர்கள் உயர்வு குறித்தும் திரைப்படப் பாடல்களில் உள்ளம் உருகப் பாடியவர்களில்
பட்டுக்கோட்டையார்க்கே முதலிடம் என்பதை யாரும் மறுக்க முடியாது! அவருடைய பாடலடிகள் மக்கள் மனத்திலே உணர்ச்சி பொங்க எழுதப்பட்டு அழிக்க முடியா நிலையைப் பெற்றுள்ளன.

தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது

இந்த அடிகளை உச்சரிக்காத வாயே தமிழ் நாட்டில் இல்லை எனலாம்.

உழைக்கும் மக்கள் உரிய பலனின்றி வாடுவதைக் காணும் கவிஞருள்ளம் வெதும்புகிறது.

நாடு செழிக்க உழைக்கும் எளியவர்
நாதியின்றி உள்ளம் நைந்திடக் கண்டேன்
என ஏழை எளிய மக்களின் துன்பத்தைக் கண்டு கவிஞருள்ளம் நைந்திடுவதை இவ்வடிகள் நன்கு புலப்படுத்துகின்றன.

காடு வௌஞ்சென்ன மச்சான் – நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

இந்த வினா மறைவது எந்நாள்? அந்நாளே நமக்கு நன்னாள்.

நாடு செழிக்க மாடாக உழைப்பவர்கள் அரை வயிற்றுக் கஞ்சியுமின்றித் துடிக்கின்றனர். இனியும் அவர்கள் பொறுமையோடிருக்கப் போவதில்லை. பொங்கி எழத்தான் போகி றார்கள்! அப்போது என்னாகும்? பட்டுக்கோட்டையார் பதிலளிக்கிறார்.

பொறுமை ஒருநாள் புலியாகும் – அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும்
*
பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால்
பூமி நடுங்குமடா!
கொடுமை புரியும் பாதகனை – அவன்
குறைகள் விழுங்குமடா!

ஏழை, முதலாளி, உள்ளவன், இல்லாதவன்; தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்ற தன்மைகள் நிலவியிருப்பதை இனியும் இளைத்தவர்கள் கைகட்டிப் பார்த்திருக்க மாட்டார்கள்|

வசதி யிருக்கிறவன் தரமாட்டான் – அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்

இது பட்டுக்கோட்டையாரின் கணிப்பு. இதுவே பாரோரின் கணிப்பாகவும் மாறி வருவதால் ஏழைகளின் இருண்ட வாழ்வில் விரைவில் புதிய ஒளி பரவும் எனப் பட்டுக்கோட்டையார் உறுதியாக நம்புகிறார்.
எனவே,

ஏழைகளின் புதுஉலகம் தெரியுதடா! – நாம்
ஏமாந்து வந்தநிலை ஒழியுதடா!
எனப் பாடுகிறார். உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் ஏய்த்துப் பிழைக்கும்

கூட்டம் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும்.

ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே
எக்காளம் போடுற கூட்டம் _ நாட்டில்
எக்காளம் போடுற கூட்டம் _ மக்கள்
எதிர்த்துக்கிட்டா எடுக்கணும் ஓட்டம்
என்பதையும் பட்டுக்கோட்டையார் சொல்லி வைக்கிறார்.

சிந்தனை வீச்சும் சொல்லாட்சியும்!

பட்டுக்கோட்டையார் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றியவர். அவ் வியக்கத்தின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதித் தந்தவர்; அந் நாடகங்களில் நடித்தவரும் கூட. அவர் பொதுவுடைமை இயக்கத் தோழர். அவருடைய உயிர்நாடியான இக் கொள்கை அவருடைய பாடலெங்கும் பரவிக் கிடக்கின்றன.

சாலையில் பழுது நீக்கும் வேலை நடைபெறுகிறது. போக்குவரத்தை எச்சரிக்க அங்கொரு சிவப்புக் கொடி கட்டப்பட்டிருக்கிறது. சாலையின் பழுது போக்கும் போது மேடு பள்ளங்கள் நிரவப்பட்டுச் சமமாக்கப்படும். இதைக் காணும் கவிஞர்
ஏற்றத் தாழ்வு இருக்குமிடம் எங்குமே – மாற்றம்
காணவே பறக்கும் – செங்கொடி

சாலையின் ஏற்றத் தாழ்வு மட்டுமன்று; ஏற்றத் தாழ்வு எங்கே இருந்தாலும் அதைப்போக்க அங்கே செங்கொடி பறக்குமெனப் பொதுவுடைமைக் கட்சியின் கொடிப் பெருமையைப் பாடுகிறார்.

ஜார் எனும் கொடுங்கோலனை உருசிய மக்கள் வென்று வீழ்த்தினர். குடி மக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடியரசு தோன்றியது.
பொறுமை யிழந்தனர் மக்களெ லாம்மனம்
பொங்கி எழுந்தனர் எரிம லைபோல்
உரிமை பறித்த உலுத்தர் எதிர்த்தனர்
ஒருமித்த ஜனசக்தி வென்றது வென்றது
என எக்களிப்புடன் கலியாணசுந்தரம் பாடிப் பரவச மடைகிறார். பொதுவுடைமை இயக்க ஏடான ஜனசக்தியின் பெயரைக் குறிப்பிட்டு அது வென்றது வென்றது என நினைக்கும்படியாகவும் இப் பாடலை அமைத்திருக்கிறார்.

உருசியாவில் லெனினும் ஸ்டாலினும் செய்த புரட்சியினாலே கொடுங்கோலாட்சி ஒழிந்து குடியாட்சி மலர்ந்தது.
அடக்குமுறைக் கஞ்சாத லெனின் ஸ்டாலின்
ஆரம்பித்த புரட்சியிலே அமைதி கண்டார்
நடத்துஎன்றார் சோவித்தை மக்கள்; அன்னார்
நட்டுவைத்த செம்பயிரும் நட்பும் வாழ்க!

மக்களாட்சி தோன்றியது என்பதை செம்பயிர் நட்டு வைக்கப்பட்டது என்கிறார். அச்சில் வந்த பட்டுக்கோட்டையாரின் முதல் கவிதையில் உள்ள இந்த அடிகளில் கவிஞர் தம் சிவப்புச் சிந்தனையைப் பதிய வைத்துவிட்டார்! செம்பயிர் எனும் சொல்லாட்சியைத் திறம்படச் செய்துள்ளார். சிவப்புப் பயிர் என்றும் செம்மையான பயிர் என்றும் இரு வகையில் எண்ணுவதற்கு இடமளிக்கிறது இச் சொல்.

எல்லார்க்கும் எல்லாம் என்னும் பொதுமை தோன்றிவிட்டால் நாட்டில் பொல்லாமை எதுவுமே இருக்காது.

கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது!

மனிதரைப்போல் வம்புகள் வேண்டாம்

மக்கள் மதம், சாதி என்ற பெயர்களால் சிதறுண்டு கிடக்கின்றனர். ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாறாக இவை வேற்றுமைக்கே வித்திடுகின்றன. பட்டுக்கோட்டையார் பல்வேறு காரணங்களால் வேறுபட்டுக் கிடக்கும் மனித இனம் ஒன்றுபட்டு வாழ வேண்டுமென வலியுறுத்துகிறார்.

ஒடஞ்சி போன நமது இனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்

அப்போதுதான் நாம் முன்னேற்றம் காணமுடியும். இயற்கையில் மரஞ்செடி கொடிகள், விலங்கினங்கள், பறவைகள் எல்லாம் தம்முள் வேற்றுமையின்றி ஒன்றுபட்டு வாழ்கின்றனவே!

மனிதரைக் காட்டிலும் மரமும் கொடியும்
வளரும் பயிரும் மாடும் பறவையும்
சேர்ந்து வாழுது சிறந்து விளங்குது
வீழ்ந்தாலும் எழுந்தாலும் வேற்றுமை யில்லே

ஆறறிவு பெற்றுள்ள மனிதன் இவற்றைக் கண்டேனும் திருந்திக் கொள்ளக் கூடாதா?

ஓங்கி உயர்ந்த மலையில் தோன்றும் அருவிகள் ஒன்று கலக்கும்போது வேற்றுமை பார்ப்பதில்லையே! ஒன்றாகச் சேர்ந்து கடலிலே சென்று கலக்கின்றனவே! மனிதனோ சமுதாயம் எனும் பெருங்கடலில் அணைந்து கொள்ளவோ ஒன்றி விடவோ மறுக்கிறானே! ஏன்?
உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியில் கலக்குது
ஒற்றுமை யில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது!

ஒற்றுமையை வலியுறுத்த பல்வேறு எடுத்துக் காட்டுகளை பட்டுக்கோட்டையார் எடுத்துக் காட்டுகிறார். பாவையர் பாடி சித்திரக் கைத்தறிச் சேலைகளை நெய்கிறார்கள். பாவில் அத்தனை நூலும் ஒழுங்காய் இருந்தால்தான் அழகிய ஆடை கிடைக்கும். ஒரு நூல் அறுந்து போனாலும் குளறுபடிதான்!

ஒற்றுமையோடு அத்தனை நூலும்
ஒழுங்கா வந்தால் வளரும் – இதில்
ஒரு நூலறுந்தால் குளறும்

சாதியோ, மதமோ எதுவாக இருந்தாலும் அவை பாவினை இணைக்கும் ஊடை நூலாக ஒன்றுபடுத்த வேண்டும்! மாறாக, இன்று அவை நேர்த்தியான ஆடையை – ஒன்றுபட்ட சமுதாயத்தை – வெட்டித் துணிக்கும் கத்தரிக்கோல்களாக அல்லவா விளங்குகின்றன.

மூங்கில்கள் புதரில் ஒன்றையொன்று தழுவி வளர்கின்றன; எல்லாம் சேர்ந்து ஒரே வேர்ப் பிடிப்பில் உள்ளன; ஒன்றின் வளர்ச்சியை மற்றொன்று தடுப்பதில்லை. மனித குலமும் ஒரே வேர்ப் பிடிப்பு கொண்டதாக இருக்க வேண்டாமா?

ஓங்கி வளரும் மூங்கில் மரம்
ஒன்னையொண்ணு புடிச்சிருக்கு
ஒழுங்காக் குருத்துவிட்டு கெளைகெளையா வெடிச்சிருக்கு
ஒட்டாம ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? _ எதிலும்
ஒற்றுமை கலைஞ்சதுன்னா வளர முடியுமா?

மல்லிகைப் பூவுக்கும், ரோசாப் பூவுக்கும் இரண்டினுள் எது உயர்ந்தது எனும் வாக்குவாதம் நடக்கிறது. ஒவ்வொரு உயர்வாகச் சொல்லச் சொல்ல வாதம் நீள்கிறது. முடிவுகாண முடியவில்லை. இரண்டுமே தாமரையிடம் சென்று,
தங்கச்சி தங்கச்சி தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான் சிறந்தவ
எடுத்துச் சொல்லு தங்கச்சி?
என்று கேட்டன. ராமரை சொல்லியது, மலருவதெல்லாம் உதிருவதுண்டு; மனிதரைப் போல வம்புகள் பேசி அழிந்திட வேண்டாம் என்ற அறிவுரை கூறி, சமாதானப்படுத்தி முடிவில்,

…………….எல்லோரும் _ ஒன்றாய்
இருக்கவேணும்! _ அப்போதுதான்
உலவும் சமாதானம் _ எங்கும் நிலவும் சமாதானம்
என்று கூறியது. செடியிடம் கவிஞர் காட்டும் நல்லறிவு மனிதரிடம் இல்லையே!

காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம் என ஒரு பாடல் தொடங்குகிறது. அதில் காக்கைகள் மனிதர்கள் தங்களைப்போல் ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் கொத்திக் கொள்கிறார்களே என்று கேலியாகப் பேசிக் கொண்டனவாம்! காக்காய் கல்யாணத்தில்,
வீட்டுக்கு வீடு விருந்துகளாம்
வில்லுவண்டிக் கூட்டுமேலே ஊர்வலமாம்!
பழங்களும் விதைகளும் பரிசுகளாம் – அதன்
பரம்பரை மொழியிலே வாழ்த்துகளாம்!
ஒற்றுமையில்லாத மனிதரைப் போல் – அது
ஒண்ணு ஒண்ணு கொத்திக்கிட்டு ஓடலையாம்

பட்டுக்கோட்டையாரின் அழகிய சால்லோவியம் இது. காக்கையிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு, நாம், வாழ்க்கை நடத்தினால் நன்மையுண்டு என்பதை நயமாகவும் நெஞ்சில் படும்படியாகவும் எடுத்துரைக்கிறார். காக்கைகள் பரம்பரை மொழியிலே வாழ்த்துகள் கூறின என்று சொல்வதன் வாயிலாக நம் வீட்டுத் திருமணங்கள் நம் தாய் மொழியில்தான் நடக்க வேண்டும்; நம் பரம்பரை மொழியில்தான் வாழ்த்துகள் ஒலிக்க வேண்டும் என்னும் கருத்தையும் புலப்படத்தியிருக்கிறார்.

மதக் கொடுமைகள் மாய வேண்டும் என்பதில் கவிஞர்க்குத் தனித்த அக்கறை உண்டு. செஞ்சிக்கோட்டை மன்னன் இராஜா தேசிங்கு; அவனுடைய நண்பன் முகமத்கான்; வேற்று மதத்தவன், போரில் குண்டடிப்பட்டு முகமத்கான் இறந்தான். அப்போது இராஜா தேசிங்கு கூறுவதாகப் பட்டுக்கோட்டையார் பாடுகிறார்:

தனித்தனி மதத்தில் பிறந்த நமது
சரித்திரமே ஒரு புதுமையடா!
இணைந்த நம்குரலின் ஒற்றுமை முழக்கம்
என்றும் அழியாத பெருமையடா!
என்றும் அழியாத பெருமையுடன் மதங்கள் ஒருமைக் குரல் எழுப்ப வேண்டுமென ஆசைப்படுகிறார். ஆனால் மத வெறியர்களின் படுபாதகச் செயல்களால், என்றும் ஒழியாத சிறுமைக் குரல்கள் அல்லவா நாட்டில் கேட்ட வண்ணம் இருக்கின்றன. இதற்கொரு முடிவே இல்லையா?

காதல் எழுப்பும் சாதி மறுப்பு

சாதி விளைக்கும் கொடுமைகள் எத்தனை எத்தனை? இருவர் காதலிக்கின்றனர்! சாதி பார்க்கும் பழங்காலப் பைத்தியங்கள் இளங்காதலை ஏற்குமா? என்ற வினா எழுப்பி, கவிஞர் காதலின் இலக்கணமே சாதி மறுப்புத்தான் என்கிறார்.

காரணம் விளக்கியும் கதையேண்டி
காதலின் இலக்கணம் இதுதாண்டி
விணர்கள் இட்ட சாதி வேலிதாண்டி
விந்தைகள் புரிவதும் அதுதாண்டி!
வெற்றியோ, தோல்வியோ சாதியை எதிர்க்கும் சக்தி காதலுக்காவது இருக்கிறதே!

யாருமேலே கீறினாலும் இரத்தம் ஒண்ணுதானே!

அப்படியிருக்க பிறப்பிலே உயர்வு தாழ்வு கற்பிப்பது ஏன்?

இவ்வாறாக சாதிக் கொடுமை, மதவெறி, உயர்வு தாழ்வு, ஆண்டான் அடிமை எனும் அனைத்து வேறுபாடுகளும் அழிய
வேண்டும் – அழிக்கப்பட வேண்டும் என்பதைக் கவிஞர் வாய்ப்பு நேர்ந்த இடத்திலெல்லாம் வலியுறுத்த தவறியதே இல்லை!

பரம்பரைச் செல்வம் வெட்கம்

பட்டுக்கோட்டையார் காதல் பாடல்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார். காதலியைக் காணும் காதலன் அவளை
ஆடை கட்டி வந்த நிலவோ? – கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ?
எனப் புகழ்கிறான். அவள் ஆடை கட்டி வந்த நிலவு. இதை மற்றவரும் பாடியுள்ளனர். ஆனால் அவள் காதலன் கண்ணிலே மேடை கட்டி ஆடுகின்ற எழில் என்பதாகப் பட்டுக்கோட்டையார் மட்டுமே பாடியிருக்கிறார். அவனுடைய கண் மேடையிலே எழில் ஆடுகிறதாம்! கற்பனையின் உச்சிக்கே இங்கே கவிஞர் சென்று விடுகிறார்.

காதலர் இருவரும் நல்ல இளம் பருவத்தினர். இருவருக்கும் ஆசை துடிக்கிறது; ஆனால் வெட்கம் தடுக்கிறது.
பருவ மனசு ரெண்டும் துடிக்குது – ஆனா
பரம்பரை வெட்கம் வந்து இடிக்குது
பரம்பரை வெட்கம் என்பதிலே உள்ள நயம் நம்மைச் சொக்க வைக்கிறது.

கூந்தல் மேகம் போன்றது; விழி அம்பை ஒத்தது என்று கூறுவது மரபு. அதையே நயமேற்றி
மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தோடு சிநேகம் – குறி
யாகப் பாய்ந்திடும் நாணப் பார்வை
வீரன் கணையிலும் வேகம்
எனப் பாடுகிறார்.

ஒருத்தி மற்றொருத்தியைக் கேட்கிறாள்: என் முகத்திலே மஞ்ச புடிச்சிருக்கா? அதற்கு மற்றவள், உன் மச்சானைக் கேட்டாத் தெரியுமடி என்கிறாள்.

ஒருத்தி    :        மாரியக்கா மாரியக்கா
மஞ்சப் புடிச்சிருக்கா – எம் முகத்திலே
மஞ்சப் புடிச்சிருக்கா?
பெண்    :        மரிக்கொழுந்து மரிக்கொழுந்து – உன்
மச்சானைக் கேட்டா தெரியுமடி – புது
வடிவும் அழகும் வடியுமடி – அதில்
புரியா விஷயமும் புரியுமடி

அழகை மச்சான்தான் பாராட்ட வேண்டும்; அதிலேதான் ஒரு தனி சுகம் உண்டு எனும் மரபு வழிப் பண்பாட்டை நாட்டுப்புறப் பெண்களின் உரையாடலிலே காட்டி விடுகிறார்.

காதலி ஒளி மிகுந்தவள் என்று கூற வேண்டும். இங்குக் கவிஞர் கூறியிருப்பது சொல்லச் சொல்ல இனிப்பதாய் இருக்கிறது. காதலன், காதலியிடம்,
இல்லத்தில் நீயிருந்தால் இருள்வர அஞ்சுதடி
மெல்ல தமிழ்உனது சொல்லில்வந்து கொஞ்சுதடி!
கவிஞரின் தமிழ் நம் செவிகளிலும் உள்ளங்களிலும் வந்து கொஞ்சி விளையாடுகிறது என்பது உண்மையிலும் உண்மை.

காதலனைப் பிரிந்திருக்கும்போது காதலியின் நிலை என்ன? கவிஞர் கூறுகிறார்:
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் கூடுதுங்க
காதலன் வராதபோது காதலிக்குப் பாலும் புளிக்கும்; பண்ணியங்களும் கசக்கும்; சந்தனக் கலவையும் சுடும் எனப் பாடுவது உண்டு.

மடியில் மணக்கும் மகரத்தேன்

இன்று குழந்தைகளாக இருப்பவர்கள் வருங்காலத்தில் இந்நாட்டின் ஆளும் வாய்ப்புள்ளவர்களாவர். ஆகவே அவர்கள் சரியான முறையில் வளர்க்கப்பட வேண்டும். பிஞ்சு உள்ளத்தில் பதியும் கருத்துகள்தாம் வாழ்வின் எந்த நிலையிலும் நிலைத்து நிற்கும். ஆகவே வளரும் குழந்தைகளுக்கு வளமான கருத்துகளை வாரி வழங்கியிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.
தொட்டிலில் உறங்கும் குழந்தைக்குத் தாலாட்டிலேயே,
அப்பா அம்மா சொன்னதைக் கேளு
அறிவு வந்ததும் சிந்திச்சுப் பாரு
அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி
அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி!
என சிந்தனையைத் தூண்டி விடுகிறார்.

குழந்தைகள் சுறுசுறுப்பாயிருக்க வேண்டும். ஆதலால்,
சூரத் தமிழ்ப் பயலே தொட்டில் உதைக்கையிலே
சோம்பல் ஒழிகவென்று சொல்லி உதை
என சோம்பலை உதைத்து எறியச் சொல்லுகிறார்.

குழந்தைகளுக்கு ஆசிரியர் பாடம் படத்துவதாக இரண்டு பாடல்கள் உள்ளன. ஒன்று அகர வரிசையைச் சொல்லிக் காட்டுகிறது; மற்றொன்று பெருக்கல் வாய்ப்பாட்டினைக் கற்றுக் கொடுக்கிறது. ஓரொன்று ஒன்று… பத்தொன்று பத்து எனும் அவ்வாய்ப்பாட்டில் ஒவ்வொரு எண்ணுக்கும் ஒன்றாக, பத்து முத்தான கருத்துகளை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஒன்று – உள்ள தெய்வம் ஒன்று; இரண்டு – ஆண், பெண் ஜாதி இரண்டு என இவ்வாறு கருத்துகள் தொடர்கின்றன. மேலும் அப்பாடலிலேயே
பேதங்கள் தீர்த்து பெருமையை உயர்த்து
நீதியைக் காத்து நேர்மையைக் காட்டு
என்பன போன்ற சத்தான கருத்துகளையும் பிஞ்சு மனத்தில் வித்துகளாகத் தூவி விடுகிறார்.

குழந்தையை ஆடி வரும் தேனே என்றும் துறவிக்கும் வேட்கையைத் தரும் இன்பக் கட்டு என்றும் புலவர்கள் போற்றுவர்.
பட்டுக்கோட்டையார் குழந்தையை
மடியிலாடி மழலைபேசி மணக்கும் மதுரத்தேனே
என்கிறார். மேலும்
பட்டுப்போலே – தங்கத் தட்டுப்போலே – கரும்புக்
கட்டுப்போலே கெடந்து கண்ணைப் பறிப்பான்
என்றும் மனங்குளிரப் பாடுகிறார்.

பொக்கை வாய்க்கும் புகழ்சேர்க்கும் தமிழ்
தமிழின் உயர்வையும் சிறப்பையும் தக்கவாறு பட்டுக்கோட்டை பாடியிருக்கிறார்.
தாயால் பிறந்தேன்; தமிழால் அறிவுபெற்றேன்
என்கிறார்.
மனைவியின் பேச்சு, கணவனுக்குத் தமிழாய் இனிக்கிறது?

சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில்
வள்ளியுரைக் கின்றாள் மச்சா னிடத்தில்
தேன் சொட்டுச் சொட்டாக விழுந்து சுவையேற்றுவதுபோல தமிழின் இனிமையைக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.

நாட்டுப் புறத்தினர் பழக்க வழக்கங்களை நன்கறிந்தவர் நம் கவிஞர். அவர்கள் பயணம் ஒன்று பாடப்பட்டுள்ளது.
நாட்டுப் புறத்தினர் நடக்கும்போது
பாட்டும் பேச்சும் பலபல கதையும்
வீட்டு நடப்பும் வேற்றார் விபரமும்
கேட்டும் விளக்கியும் செல்வது வழக்கம்
கிழவியின் தமிழ்வாய் சும்மா இருக்குமா?
பயணக் குழுவிலிருக்கும் ஒரு கிழவி பேசுகிறாள். அவள் வாயை, தமிழ் வாய் என்கிறார் கலியாணசுந்தரம். பொக்கை வாய் கூட, தமிழால் பெருமை பெற்று விடுகிறது.

காதலன் காதலியைப் பிரிந்து சங்கடப்படுவதை,
தன்னந் தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
என்றுரைக்கிறான். காதலி அவனுக்குத் தமிழ்ச் சுடராகிறாள்.

கடலை, தமிழ்க் கடல் எனக் கூறிப் பெருமை கொள்கிறார்.
சந்தன மரக்கிளையும் தமிழ்க் கடலும் – தழுவி
சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்

தமிழ் நாடு, ஆந்திர நாடு, கன்னட நாடு, மலையாள நாடு ஆகிய நான்கு நாடுகளின் ஆண்களும் பெண்களும் தத்தம் நாட்டின் பெருமை பேசுவதாக ஒரு பாடல் உள்ளது. தமிழ்நாட்டுப் பெண், தமிழ் மக்கள்,
மதுரத் தமிழ் வழிந்து உதிரத்தொடு கலந்து
மனத்தில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்
எனப் பாடுகிறாள். வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்வதாகத் தன் மொழிப் பெருமை பேசுகிறாள். மற்ற நாட்டவர்கள் நீர்வளம், நிலவளம் பற்றிப் பாடுவதாக கவிஞர் எழுதவில்லை. தமிழின்றித் தமிர்நாடு இல்லை; தமிழ் நாட்டை நினைக்கையிலேயே அமுதத் தமிழ் மொழிதான் முன் நிற்கிறது என்பதை இப்பாடல்வழி பட்டுக்கோட்டையார் உணர்த்துகிறார்.

குறளின் ஒளிச்சுடர்
தமிழ்ப் புலவர்களில் திருவள்ளுவர்மேல் பட்டுக்கோட்டையார் தணியாத பற்றுக் கொண்டிருக்கிறார். திருக்குறள் வாழ்வியல் நூல். திருவள்ளுவர் வழியே நம் வாழ்க்கை வழி. அவ்வழியில் நடப்பதுவே அறிவுடைமை என்னும் கருத்துகளை பாடல்களில் கவிஞர் வெகு சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

வள்ளுவர் வழியினிலே – இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே

மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம்கடமை
*
வள்ளுவப் பெருமான் சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை

திருக்குறள் நூலைப் படிப்பதுதான் சிறு குழந்தைகளின் முதல் வேலையாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறப்படுகிறது.

திருக்குறள் நூலை
சிறந்தமுப் பாலை
கருத்துடன் காலை
படிப்பதுன் வேலை

ஆசிரியை பிள்ளைகட்குப் பாடம் நடத்துகிறார். வினாவும் மறுமொழியுமாக வகுப்பு தொடர்கிறது.
ஆசிரியை :    ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன? சொல்லு?
என்கிறார். சிறுவர்கள், வள்ளுவன் என மறுமொழி சொல்லுகின்றனர்.

திருவள்ளுவரின் திருக்குறளை மனத்தில் கொண்டு, அக்குறட் கருத்துகளைத் தன் மொழியில் கவிஞர் பல இடங்களிலே பாடியிருக்கிறார்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்பது திருக்குறள். இக்குறளையும், உழவு அதிகாரத்தில் உள்ள இதையொத்த திருக்குறட்பாக்களையும் மனத்தில் கொண்டு,

ஒருவன்    :    ஓதுவார் தொழுவாரெல்லாம்
உழுவார் தலைக்கடையிலே…
மற்றவன்    :    உலகம் செழிப்பதெல்லாம்
ஏர்நடக்கும் நடையிலே
எனப் பட்டுக்கோட்டை பாடியிருக்கிறார்.

பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்யக் கூடாது. ஒருக்கால் அப்படிச் செய்து விட்டாலும் மீண்டும் அதைச் செய்யாதிருப்பது நன்று எனும் பொருள் கொண்ட குறள் ஒன்று உண்டு.
எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
இக்குறளை மனத்தில் கொண்டு பட்டுக்கோட்டையார் எழுதுகிறார்.

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து – தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா – அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ
*
அஞ்சுவ (து) அஞ்சாமை பேதமை; அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
என்னும் திருக்குறளை நம் கவிஞர்,
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமோ?
என ஒரு கேள்விக்குள் அடக்கி விடுகிறார்.

நெசவுத் தொழிலைக் குறிப்பிடும்போது அது வள்ளுவர் செய்த மேன்மைத் தொழில் என்கிறார்.
வள்ளுவரின் வழிவந்த பெரும்பணி – வாழ்வில்
நன்மை யுண்டாக்கும் தன்மானம் காக்கும்
திருவள்ளுவரைப் போலவே ஔவையாரையும் கவிஞர் பெரிதும் மதிக்கிறார். ஔவை சொல் கேள் என்கிறது ஒரு பாடல்.
ஆதிமகள் அவ்வை சொல்லை
அலசிப் பார்த்தா மனசிலே
நீதியென்ற நெல் விளையும்
நெருஞ்சி படர்ந்த தரிசிலே!
ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இலக்கிய மரபுக் கருத்துகள் பட்டுக்கோட்டையார் நெஞ்சிலும் ஆலம் விழுதுகளெனப் படர்ந்துள்ளன.

பாய வந்த புலியை, தமிழ் மறத்தி முறத்தினாலே அடித்து விரட்டினாள் எனத் தமிழர் வீரம் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. இங்கே, புலியை விரட்டினாள் என்று மட்டுமே சொல்லப்படுகிறது. கலியாணசுந்தரம் காட்டுகின்ற மறத்தியோ, புலியை அடக்கி, ஏறி மிதித்து, அதன் பல்லைக் பிடுங்குகிறாள்.

வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேருசொல்லி வில்லை எடுப்பா
மீறிவரும் புலியை வீரத்தினால் அடக்கி
ஏறி மிதிச்சுக்கிட்டு பல்லை எடுப்பா
பாண்டியன் நெடுஞ்செழியன், என்னை எதிர்ப்பவர்கள் தூங்குகின்ற புலியை இடறிய குருடன் போல அழிந்தொழிவர்; அவர்கள் பிழைப்பதென்பது ஒருக்காலும் முடியாது என வீரவுரை பகர்கிறான்.
துஞ்சுபுலி இடறிய சிதடன்போல
உய்ந்தவன் பெயர்தலோ அரிதே!
என அவன் வஞ்சினம் உரைப்பதாகப் புறநானூற்றுப் பாடல் மொழிகிறது. பட்டுக்கோட்டையார், புலியின் கடுங்கோபம் தெரிந்திருந்தும் அதன் வாலைப் பிடித்து ஆட்டுபவர் நிலை என்னவாகும் என எண்ணிப் பார்க்கச் சொல்கிறார்.

………….. புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடித்து ஆட்டுது
மணிமேகலை காப்பியத்தில் அரசமாதேவி, தன் அரண்மனைக்கு வந்த அறவண அடிகளை, அடிகளே! நீவிர் யாண்டு பல வாழ்ந்து முதுமை பெற்றிருந்தாலும், நா தளர்வில்லாதவராய் அறம் கூறி வருகிறீர்கள்! நீவிர் இன்னும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வரவேற்கிறாள்.
யாண்டுபல புக்கலும் இணையடி வருந்தஎன்
காண்தரு நல்விணை நும்மையீங் கழைத்தது;
நாத்தொலை வில்லா யாயினும் தளர்ந்து
மூத்தவிவ் யாக்கை வாழ்க பல்லாண்டு
இதே கருத்தை உள்ளடக்கியதாக நம் கவிஞர் பாடல் ஒன்று அமைந்துள்ளது.
முடிகள் நரைத்தாலும் மூளை நரைக்காமல்
முன்னேறி வந்தவரே – ஐயா – உங்கள்
பொன்மேனி வாழியவே!
என்பது அப்பாடல். மணிமேகலை காப்பிய வரிகளுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் தரவேண்டும். பட்டுக்கோட்டையார் பாடலோ எழுதப் படிக்கத் தெரியாதவர்களே என்றாலும் கேட்ட அளவிலேயே புரிந்து கொள்ளத்தக்க – உணர்ந்து கொள்ளத்தக்க எளிமையாய் இனிக்கிறது.

மக்கள் மொழியில் மக்களுக்காக

பேசும்பொழுதும் எழுதும் பொழுதும் பழமொழிகளை எடுத்துச் சொல்லி, விளக்கமுறச் செய்வது இயல்பு. மக்களிடையே பெரு வழக்கமாக இருந்துவரும் பழமொழிகளைப் பட்டுக்கோட்டையார் தம் பாடல்களில் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார்.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
*
பிள்ளைப் பூச்சியை மடியில் கட்டிக் கொண்டு
புராணம் படித்தவன் போல
*
அவலை நினைச்சு உரலை உருட்டுவதுபோல
*
கொம்பொடிஞ்ச மாடு குதிச்சுஎன்ன புண்ணியம்?
*
கந்தைத்துணி ஆனாலும் கசக்கிக் கட்டிக்கிட்டா
*
சேலையுள்ள சீமாட்டி தினம் ஒன்றைக் கட்டிக்கலாம்
(கூந்தலுள்ள சீமாட்டி அள்ளி முடிஞ்சிக்கலாம் என்பதைச் சற்று மாற்றி எழுதியுள்ளார்)

வெந்த வீட்டிலே கெடச்சது லாபமென
விழுந்து சுருட்டுறான்
மக்களுக்காக மக்கள் மொழியில் எழுதுவதால் மக்களுடைய பேச்சு வழக்கு அவருடைய பாடல்களில் பொருத்தமாக வந்து இணைகிறது.

பாரதி வழியில்
பாரதியின் விடுதலை உணர்வு, பொதுவுடைமை நோக்கம், பெண் விடுதலை ஆகியவற்றில் பட்டுக்கோட்டையார் உள்ளம் பறிகொடுத்தவர். பாரதியைப் பற்றி அவர் பாடியுள்ள பாடல்களில் வீரம் கொப்புளிக்கிறது; அறிவு மணக்கிறது; சோர்வு அழிகிறது.
பாரதிக்கு நிகர் பாரதியே – மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள்
சீருயர்த்தும் பணியில்                (பாரதி)
பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான்
பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்
‘பாரத ஜனங்களின் தற்கால நிலை’ எனும் தலைப்புள்ள பாடலில் பாரதியார், நாட்டு மக்கள் நிலை கெட்டிருப்பதை எண்ணி நெஞ்சு பொறுக்காமல், அவர்கள் அஞ்சியஞ்சிச் சாகும் அவல நிலையைப் புலப்படுத்துகிறார்.
நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத்
துயர்ப்படுவார எண்ணிப் பயப்படுவார்    (நெஞ்சு)
இந்தப் பயத்தை ஒட்டி விரட்ட வேண்டும் எனச் சின்னப் பயலுக்கு வீரமூட்டுகிறார் பட்டுக்கோட்டை.
வேப்பமர உச்சியில்நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே – நீ வெம்பி விடாதே
சிறு வயதிலேயே மடமைக் கருத்துகளுக்கு இடங்கொடாமல் இந்நாட்டு இளைஞர்கள் பகுத்தறிவுடனும் வீரத்துடனும் ஏறுநடை பயில என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அத்தனையையும் சொல்லி அறிவுறுத்துகிறார் பட்டுக்கோட்டையார்.

பாரதியின் சில அடிகளிலே உள்ளம் பறிகொடுத்த பட்டுக்கோட்டை, அவ்வடிகளை அவ்வாறே தன் பாடல்களில் எடுத்தாள்கிறார்.
பெண்    :    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண்    :    ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
என ஓர் ஆணையும் பெண்ணையும் பாடவைக்கிறார் பட்டுக்கோட்டை. இருவர் பாடலும் இணையும்போது,
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
எனும் பாரதியின் பாடலடிகள் கிடைக்கின்றன.
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் _ நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் _ ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
என, பாரதியார், இந்திய மக்கள் அனைவரையும், எல்லாரும் இந்நாட்டு மன்னர் என மும்முறை அழுத்தந் திருத்தமாக உரைக்கிறார். பட்டுக்கோட்டையார் பாரதியின் இவ்வடிகளை ஒரு பாடலுக்குத் தொடக்கமாகவே அமைத்துக் கொள்கிறார்.
எல்லோரும் இந்நாட்டு மன்னரே – நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரே
நல்லார், பொல்லார், உள்ளார், இல்லார் எவரேயாயினும் எல்லோரும் இந்நாட்டு மன்னரே எனக் குரல் கொடுக்கிறார்.
இல்லை என்ற கொடுமை – உலகில்
இல்லையாக வைப்போம்
என்கிறார் பாரதியார், பட்டுக்கோட்டையோ
கஞ்சியில்லை என்ற சொல்லைக்
கப்ப லேற்றுவோம் – செகத்தை
ஒப்ப மாற்றுவோம்
என்கிறார்.

பட்டுக்கோட்டையார் பாரதியாரிடம் பற்றுக் கொண்டவர். பாரதிதாசனோடு பழகியவர். அவர்கட்கிருந்த பெண் விடுதலை நாட்டம் இவரிடமும் படிந்திருக்கக் காண்கிறோம்!

ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
யாரோ எழுதி வைச்சாங்க – அன்று
யாரோ எழுதி வைச்சாங்க – அதை
அமுக்கிப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேன்னு
ஆண்கள் ஒசந்துக் கிட்டாங்க – பெண்கள்
ஆமைபோல ஒடுங்கிப் போனாங்க

பெண்கள் அடிமையானதற்கான காரணத்தை விளக்குகின்ற கவிஞர், ஆணொடு பெண் சரிநிகர் சமானமாக வாழவேண்டும்; ஆணுக்கு அளிக்கப்படும் உரிமைகள் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். திருமணத்தில் பெண்ணுக்கு ஆண் தாலி கட்டுவது பெண்ணடிமையைச் சுட்டுவதே! தந்தை பெரியார் தாலி அணிவித்தல் கூடாதென்றார். தாலி கட்டத்தான் வேண்டுமென்றால் பெண்ணுக்கு ஆண்கட்டுவது போல, பெண்ணும் ஆணுக்குக் கட்ட வேண்டும் என்றும் கூறினார். இக்கருத்தை வழிமொழிவது போல, பட்டுக்கோட்டையார் பாடுகிறார்.
ஆண்    :    போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும் – ஒலகம்
புதுசா மாறும் போது பழைய
மொறையை மாத்திக்கணும் – தாலி போட்டுக்கிட்டா
பட்டுக்கோட்டையார் தாலி வேண்டும் என்னும் கருத்துடையவராக இருந்திருக்கிறார்.
பெண்    :    கழுத்திலே தாலி கெடந்தா
காலிகூட மதிப்பான் – கொஞ்சம்
கண்ணியமா நடப்பான் – அந்தக்
கயிறு மட்டும் இல்லையின்னா
கழுதைபோல இடிப்பான்
ஆண்    :    ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
அடுத்த பொண்ணு மதிப்பா – கொஞ்சம்
அடங்கி ஒடுங்கி நடப்பா – இந்த
அடையாளம் இல்லையின்னா
அசட்டுத் தனமா மொறைப்பா
பெண்களை ஆண்கள் கரவு உள்ளத்தோடு பார்ப்பதும், தனித்து வரும் பெண்களிடம் வம்பு செய்வதுமாக உள்ளனர். ஆதலால்,
சீவி முடித்துத் திருமணக்கும் பொட்டுவைத்து
கோவிலைச் சுற்றிவரும் குலமகளே – பாவியரின்
கண்ணி லகப்பட்டுக் களங்கப்படா வண்ணம்
உன்னை நீ காப்பாற்றிக் கொள்
என்கிறார். பெண்களை நேரத்தோடு வீட்டுக்குச் சென்று விடுமாறும் கூறுகிறார். கயமைத்தனம் செய்யும் ஆண்களுக்குப் பெண்கள் எப்படிப் பாடம் புகட்ட வேண்டும். எப்படி எதிர்த்து நிற்க வேண்டும் என்பது குறித்துப் பட்டுக்கோட்டையார் பாடல் எதுவும் இல்லை. பாரதி காட்டிய புரட்சிப் பெண் போன்ற படைப்பை கவிஞர் எழுதுவதற்கான வாய்ப்பு எவ்வாறோ இல்லாமல் போயிற்று.

பாரதிதாசன் பரம்பரை

பாவேந்தருடைய எண்ணங்களோடு பட்டுக்கோட்டையார் ஒன்றிக் கலந்தவர். பாவேந்தர் நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார். இக்கருத்து பட்டுக்கோட்டைக்கு மிகவும் பிடித்திருக்கிறது; மணமக்கள் இத்தொடரை மனத்திலே கொள்ள வேண்டும் என்கிறார்.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்னதுண்டு;
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந்தால் வாழ்வுக்கு மிக நன்று
பாவேந்தரின் தொடர் எந்த அளவுக்கு பட்டுக்கோட்டையை ஆண்டிருக்கிறது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.

பாவேந்தருடைய பாடலடிகள் பட்டுக்கோட்டையின் பாடல்களில் பல இடங்களில் பயின்று வருவதைக் காணலாம்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
பொங்கும் தமிழ்ர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
எனப் பாவேந்தர் முழங்குகிறார்.

பொங்கும் தொழிலாளர்க் கின்னல் புரிந்திடும்
பன்மனப் போக்கிரிகள் – மங்கி
எங்கோ மறைந்தனர் என்றோ ஒழிந்தனர்
என்னுங் குரல்கள் எழுப்பிடுவோம்!
எனக் குரலெழுப்புகிறார் பட்டுக்கோட்டை!

ஆடவரின் காதலுக்கும் பெண்கள் கூட்டம்
அடைகின்ற காதலுக்கும் மாற்ற முண்டோ?
பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட் கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ?
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?
எனக் கேட்கிறார் பாவேந்தர். கைம்பெண் மணத்தை மறுப்பது மட்டுமா? அவர்கட்கு மானக்கேடு நேருமாறு வீண் கதைகளையும் கட்டி விடுகின்றனரே எனக் கவலைப்படுகிறார் பட்டுக்கோட்டை.

மனைவி மறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு – இளம்
மங்கையை முடிப்பதுண்டு மண்டை வரண்டு – தன்
கணவனை இழந்தவள் கட்டழகி யானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு

சாக மட்டும் உரிமையுண்டு எனும் தொடரில் பொதிந்துள்ள சோகம், கோபம், வேகம் எத்துணை எத்துணை?
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்
– இது பாவேந்தர் பாட்டு. இது பட்டுக்கோட்டையாரிடம்,
மங்கையின் பார்வையில் மலையசையும்
என அருமையாகச் சுருக்கம் பெறுகிறது.

காதலி காதலனுக்கு எழுதும் கடிதத்தை, இருக் கின்றேன், சாகவில்லை; என்றறிக என முடிப்பதாகப் பாவேந்தர் பாடுகிறார்.
இறக்கவில்லை இருக்கின்றேன்; இதுதான் நிலைமை
எனக் காதலன் காதலிக்கு எழுதுவதாகப் பட்டுக்கோட்டை பாடுகிறார்.

பாவேந்தர் எழுதியுள்ள புரட்சிக் கவி எனும் காப்பியத்தில்,
ஆரத் தழுவி அடுத்தவி னாடிக்குள் உயிர்
தீரவரும் எனினும் தேன்போல் வரவேற்பேன்
என்கிறாள் மன்னன் மகள் அமுதவல்லி, தீந்தமிழ்க் கவிஞன் உதாரனிடம். பட்டுக்கோட்டையார் அம்பிகாபதி அமராவதிக்கு எழுதும் கடிதமாக ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில் அம்பிகாபதி,
விருப்பம்போல் சேர்ந்து விளையாடி மறுகணத்தில்
நெருப்பில் குதிப்பதென்றால் நிம்மதியாய் ஏற்பேன்
என அமராவதிக்கு எழுதுகிறான்.
கூழுக்குப் பற்பலர் வாடவும் – சிற்சிலர்
கொள்ளை யடித்தலைச் சகியோம்
எனும் பட்டுக்கோட்டையின் பாடல்
கூழுக்குப் பற்பலர் வாடவும்
சிற்சிலர் கொள்ளை யடிப்பதும் நீதியோ – புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?
எனும் பாவேந்தர் பாடலின் தாக்கமாகும்.

காதலன் ஒருவன் தமிழ் தெரியாத – அறியாத ஒருத்தி தனக்குக் காதலியாக இருக்கக் கூடாது என்கிறான்.
என்மீதில் ஆசை வைக்காதே – மயிலே
என்னைப் பார்த்தும் சிரிக்காதே!
உன்மேல் நான்ஆசை வைக்க வில்லை – நீதான்
உண்மையிலே தமிழ் மகள் இல்லை    (என்)
மாதொருத்தி வேண்டும் எனக்கும் – தமிழ்
மகளாய் இருந்தால்தான் இனிக்கும், ஆதலால்    (என்)
என்கிறான் காதலன். காதலில் சாதிகள் அழிந்திட வேண்டும்; ஆனால் தமிழ் வீழ்ந்திடக் கூடாது.

ஒருவன் பாட்டுப்டியாதவன்; ஆனாலும் பத்து இலட்சம் சொத்துடையவன் என்று கேள்விப்பட்ட காதலி, அவனைத் தன் வீட்டுப் படியேற வேண்டாம் என்று துரத்தி விட்டாள். சென்றவன் திருக்குறளைப் படித்துத் தெளிந்தேன் என்று திரும்பி வந்தான். அப்படியானால் வா! உன்னிட மிருந்து படித்தேன் அளவான இன்பத்தைப் பெற்றுக் கொள்வேன்; கொடு என அவனை ஏற்றுக் கொள்கிறாள் எனும் கருத்தமைந்த பாவேந்தர் பாடல் ஒன்று உண்டு.
பாட்டுப் படியானாம்; பத்திலக்கம் உள்ளவனாம்;
வீட்டுப் படியேற வேண்டாம்என் றோட்டினாள்;
வள்ளுவன்ப டித்தேன்என் றான்நீ வழங்கிடுநான்
கொள்ளுவன்ப டித்தேன்என் றாள்
திருக்குறள் படித்தவனே – தமிழறித்தவனே தனக்குக் காதலனாக இருக்க வேண்டும் என்கிறாள் காதலி.

இப் பாடல்களின் தாக்கத்தால் பட்டுக்கோட்டை, மாமியார் ஒருத்தி தனக்கு மருமகளாக வருபவள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லும்போது அவள் திருக்குறள் படித்தவளாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வதாகப் பாடுகிறார்.
மருமகளாக வரும் மங்கை எவளோ? – என்
மருமகளா யிருக்கத் தகுந்தவளோ?
பொறுக்கி எடுத்த முத்துக் கருத்தைத்
தொகுத்து வைத்த திருக்குறள்
முப்பாலும் படிப்பவளோ… ஆ… கனல்
தெரிக்கக் கொதித்து மணிச்சிலம்பை புடைத்துநீதி
தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ?
என்பது அப்பாடலின் ஒரு பகுதி.

‘அழகு’ எங்கும் உள்ளது. அதனை நசையோடு நோக்கவேண்டும் என்பார் பாவேந்தர்!
அடடே! செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிலத்தினிலே என்விழியை நிறுத்தினாள்;
கலப்பை தூக்கிச் செல்லும் உழவன், விளைந்த நன்செய் நிலம் – இங்கெல்லாம் அழகு சிரிக்கிறதாகப் பாவேந்தர் காண்கிறார். அவர் வழிவந்த பட்டுக்கோட்டையாரும் பாவேந்தரைப் போலவே அழகைக் காணுகிறார்.
கண்ணை இழுக்கும் அழகொன்று கண்டேன்
காவியம் ஓவியம் யாவையும் கண்டேன்
அழகைக் காண்கிறார்; அதுவே அவருக்குக் காவியமாகவும் ஓவியமாகவும் திகழ்கிறது. அழகை எங்கே கண்டார்? ஏரோட்டும் விவசாயி எருதுகளை ஏரியிலே நீராட்டுவது; அவன் மனைவி பானையைத் தலையிலே வைத்துப் பக்கவமாக நடப்பது; ஆண்களும் பெண்களும் வயலிலே வேலை செய்வது; பொன்னைப் பழிக்கும் கதிர்கள் ஒன்றை யொன்று பின்னி அசைந்தாடுவது ஆகிய இவற்றிலெல்லாம் அழகு நடனமிடக் காண்கிறார்.
வண்ணக் கலையங்கு வாழ்ந்திடக் கண்டேன்
என அந்த அழகையே கலையாகக் கண்டு மகிழ்கிறார்.

பட்டுக்கோட்டையார் பாரதியாரை மதித்தவர்; அவருடைய பாடல்களில் திளைத்தவர்; அவருடைய கொள்கைகளைப் போற்றியவர்; எனினும் அவரை நேரில் பார்த்தறியாதவர். ஆனால் பாவேந்தருடனோ பணியாற்றி யிருக்கிறார்; அவரை உயிரினும் மேலாகக் கருதியிருக்கிறார்; தாளில் முதலில் வாழ்க பாரதிதாசன் என்று குறித்த பிறகே பாடல்களை எழுதியிருக்கிறார்; பாவேந்தரின் பாடற் கருத்துகளைப் பெருமளவில் எடுத்தாண்டிருக்கிறார்; பாவேந்தரின் தலைமையில்தான் அவருடைய திருமணமே நடைபெற்றிருக்கிறது. இவ்வளவிருந்தும் பாரதியாரைப் பற்றித் தனியே ஒரு பாடல் எழுதியதுபோல, பாவேந்தரைப் பற்றி தனியே ஒரு பாடல் எழுத வாய்ப்பில்லாது போனது ஏனெனத் தெரியவில்லை.

கற்பனையில் புதுமை
கலியாணசுந்தரம் சமுதாய அவலங்களை ஒழிக்கப் போர்க்குரல் கொடுப்பவராக இருந்தபோதிலும், அவருடைய உள்ளம் மென்மையானது. இரவு வேளை; நிலா ஒளி பொழிகிறது; கவிஞர் மகிழ்ந்திருக்கிறார். காரிருளுள் நிலவு ஒளி பொழிகிறது; கவிஞர் மகிழ்ந்திருக்கிறார். காரிருளுள் நிலவு மறைகிறது. கவிஞர் நெஞ்சம் கனக்கிறது; அவர் பூ உள்ளம் பாடுகிறது:
குமுதம் வாய்திறந்து குலுங்கும் வேளை
குலவியுடனே ஒளிதனிலே குளிக்கும் வேளை
அமுதான நிலைகண்டு கருமேகம் புகுந்தால்
அதைநானும் சகியேனே! கலை வெள்ளமே!
நிலவே முகிலை நீக்கி வெளியே வா வா! என்கிறார். நிலவை, கலை வெள்ளமே எனச் சொல்வது நிலவொளியினும் குளிர்ச்சியாயிருக்கிறது.

இயற்கையைக் கற்பனையோடு பாடுவதில் பட்டுக்கோட்டையின் பாங்கு தனித்திருக்கிறது. நிலவையும் விண்மீன்களையும் பாடாத கவிஞரே இல்லை எனலாம். நிலவுப் பெண்ணைக் காவல் காக்கும் தோழியராக விண்மீன்களைச் சொல்வதும், நிலவில் உள்ள கறையை, நிலவுப் பெண்ணின் முகத்திலுள்ள காயமாகக் கொண்டு, இது உன் காதலன் கிள்ளியதால் ஏற்பட்ட காயமோ? என்று கேட்பதும் புதுமையான கற்பனைகள்.
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
கவால்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே!
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே!
எனும் பட்டுக்கோட்டையின் பாடல் தனிச்சுவை கொண்டது.

வளர்ச்சியும் மகிழ்ச்சியும்
மக்கள் அறிவு நிறைந்தவர்களாக, அறிவியற் கருத்துகளை உணர்ந்தவர்களாகத் திகழ வேண்டும் என்பது பட்டுக்கோட்டையார் எண்ணம்.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி
என்பது அவர் வாக்கு. அறிவு வளர்ச்சியினாலே மனிதன் இன்று விண் வெளியில் உலா வருகிறான். அறிவினால் மனித சக்தி சந்திரனைத் தொட்டுச் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. விண்ணுலகு உண்டு; அதன் அரசன் இந்திரன் என்பதை யெல்லாம் அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது.
இந்திரன்தான் விண்ணாட்டின் அரசன் என்ற
இலக்கணத்தை மாற்றியது மனித சக்தி!
இந்திரனும் முடியரசாய் இருக்கொணாது
எனும் குறிப்பைக் காட்டியது மனித சக்தி!
இந்திரன் விண்ணுலகின் முடியரசன் என்றால், மனிதன் அவன் நாட்டில் நுழைந்து சந்திரனைத் தொட்டபோது எங்கே போனான்? விண்ணுலகிலும் முடியரசு வீழ்ந்து குடியரசு மலர்ந்து விட்டது! இவற்றையெல்லாம் – இந்த அறிவியல் வளர்ச்சியையெல்லாம் செய்தது எது? மந்திரமன்று; மனித சக்தி – ஆம் மனித சக்தி. மனித சக்தி மகத்தானது.

அறிவு வளர்ச்சி வேண்டும் ஆனால் அது அழிவு சக்தியாக மாறிவிடக் கூடாது என்றும் கவிஞர் எச்சரிக்கிறார். அன் பில்லாத அறிவு அழிவையே தரும். அன்பின் வழியதே உயிர் நிலை!
அன்பில்லாத அறிவாலே, நேரும்
அழிவைக் கேளுங்கோ!
வேட்டுவச்சுப் பலநாட்டை அழிக்கவே
விஞ்ஞான ஆராய்ச்சி – செய்து ஆட்டிப் படைப்பதும் அன்பில்லாத
அறிவாலே உருவாச்சு!
அன்பில்லா அறிவு பாழ் என உணர்தல் வேண்டும்.

திரையில் ஒரு புரட்சி
திரைப் படங்களில் பக்திப் பாடல்கள் எழுதியாக வேண்டிய கட்டாயம் ஏற்படவே செய்யும். அவ்வாறான கடவுட் பாடல்கள் எழுதும்போதும் பட்டுக்கோட்டையார் மக்களை மறந்து விடுவதில்லை. தெய்வத்தின் பெருமையைப் பேசுவதைவிட, தெய்வம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என எழுதுவதே அவர் நோக்கமாகிறது. மக்கள் தெய்வங் களிடம் பக்தி கொள்வதை விடுத்து, தெய்வங்கள் மக்களிடம் பக்தி கொள்ள வேண்டும் என்கிறார்.
சித்திரைத் தேரோடும் தென்மதுரை வாழும் சக்தி மீனாட்சித் தாயை வேண்டுவதாக உள்ள பாடலில்,
அன்பும் அறிவும் நெஞ்சில் ஆக்கமும் உண்டாக
அல்லலின்றி உலகம் அமைதியுடன் விளங்க
இன்ப நீதி அருள்வாய் என இறைவிக்கே கட்டளையிடுகிறார்.

‘சிவசக்தி! வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என வேண்டினார் பாரதியார். பட்டுக்கோட்டையார்.
சத்தியமே லட்சியமாய்ச் சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம் தா
எனப் பிறருக்குழைக்கும் பெற்றியே உண்மையான தெய்வ பக்தியாக இருக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

சமயபுரத்து மாரியம்மனைப் பார்த்து, அம்மா,
இன்பம் என்ற சொல்லைக் கேட்டதுண்டு – அது
எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
என்று கேட்கிறார். அனைவர்க்கும் தாயான அம்மன் ஏழை வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காதது ஏனோ? அது மட்டுமா மேலும் வன்மையாகக் கூறுகிறார்:
எந்த சாமிக்கும் காது கேக்கலே
இல்லாதவனை எட்டிப் பார்க்கலே
கோவில்களுக்கு உண்மையான பக்தியோடு செல் பவர்கள் மிகக் குறைவே! தம் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஆண்டவனை வேண்டுதலே வேண்டுதலாக இருக்கிறது. ஆலயங்கட்குச் சென்று, ”அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்: ஆருயிர்கட் கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்?” என்று வேண்டுபவர் எத்தனை பேர்? கடவுளை வழிபடுவதற்குச் செல்வதைவிட்டு, அங்குத் தரும் சுண்டலுக்காகச் செல்வது பக்தியாகுமா?
பக்த ஜனங்க கவன மெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லே பஜனையில்லே

பக்தி இறைவன் மீதா, சுண்டலின் மீதா?
பக்தர்கள் தாம் விரும்பும் வகையில் இறைவனைச் சென்று தாமே வழிபட வேண்டும். இடைத்தரகர் கூடாது. இறைவன்தான் எல்லா இடத்திலும் இருப்பவனாயிற்றே! அவனைக் கற்கோயிலுள் வைத்துப் பூட்டிக் காசு பறிப்பது ஏமாற்று வித்தையல்லவா?
காசு தந்தால்தான் உன்னைக்
காணும்வழி காட்டுவதாய்
கதவுபோட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?
என கடவுளையே கேட்கிறார். இதைக் கேட்டால் நாத்திகன் என்ற பட்டமா?

கடவுள் உண்டு. இல்லை என்ற ஆராய்ச்சி கிடக்கட்டும். முதலில் மக்கள் அனைவர்க்கும் கஞ்சிக்கு வழி தேடுவதைக் கவனிப்போம். கடவுள் கதையைப் பேசி, கருத வேண்டிய வேலைகளை மறந்துவிட்டோமே!
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக் குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதவர்கள் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு – பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு!
கடவுளை வழிபடுபவர்கள் கடவுள் காட்டும் வழியில் செல்ல வேண்டாமா? முருகன், குறமகள் வள்ளியை மணந்தான். சாதி வேலியை முதுலில் தாண்டியவன் அவன் தான். முருகனே கலப்பு மணத்துக்கு முன்னவனாக இருக்க, அவனை வணங்கும் பக்தர்கள் அதனை மறுப்பதேன்? அப்படியானால் கடவுள் காட்டிய வழியையே மறுக் கிறார்களா? முருகனிடம் கவிஞர் கேட்கிறார்:
மாறாது உனைவந்து வணங்கும் மனிதர் – சொந்த
வாழ்வில் மட்டும் சாதிமயக்கம் வந்தது ஏனையா?
முருகா! உனக்குச் சாதி மயக்கம் இல்லையே! உன் பக்தர்களுக்கு அது எப்படி வந்தது? நானே சாதி பார்க்கவில்லை; உனக்கெதற்கு சாதி? என்று தட்டிக் கேட்க வேண்டாமா? கவிஞரின் வினாக்கள் இவ்வகையில் அமைகின்றன. முருகனின் மறுமொழி யாதோ?

கடவுளைப் பாடும்போதும் கலியாணசுந்தரம் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டிருந்தாரே தவிர, கடவுளைப் போற்றிப் புகழ்வதைப் பொருட்படுத்தவில்லை. திரைத் துறையில் இவ்வளவு பெரிய மாற்றத்தைச் செய்திருப்பது உண்மையிலேயே பெரும் புரட்சி.

மிக உயர்ந்த தத்துவக் கருத்துகளை மிக மிக எளிமை யாகக் கூறும் ஆற்றல் பட்டுக்கோட்டையார்க்குக் கைவந்த கலையாக இருக்கிறது. பாடுபட்டுத் தேடிப் பணத்தைக் குவித்து வைப்பவர்களே! கூடுவிட்டு ஆவி போன பிறகு அதை நீங்கள் அனுபவிக்க முடியுமா? என்று யாக்கை நிலையாமையைக் கூறி, இருக்குங் காலத்திலேயே நல்லதைச் செய்து புகழ் தேடுங்கள் என்று பெரியோர் சொன்னதை பட்டுக்கோட்டையும் மிகத் தெளிவாகவும், அனைவரும் உணரும் வண்ணமும் எடுத்துரைக்கிறார்.
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெலாம் சேத்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? – நீ
துணிவிருந்தாக் கூறு

ஏதேதோ சொந்தம் என்று கொண்டாடி வம்புகள் பேசி, வாதுகள் செய்து, நெஞ்ச அமைதி அழிகிறாயே! உனக்கென்று இறுதியில் சொந்தமாகப் போவது எது என்று எண்ணிப் பார்த்தாயா?
சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்

வாய்விட்டு உரக்கச் சிரிக்காமல், உள்ளத்திலேயே நினைந்து நினைந்து சுவைக்கும்படியான மென்மை நகைச்சுவையை எழுத்தில் கொண்டு வருவது எளிய செயலன்று. பட்டுக்கோட்டையின் பாடல்களில் இவ்வாறான நகைச் சுவை ஆங்காங்கே இழையோடி பாட்டு நெசவை நேர்த்தியாக்கியிருக்கிறது, பிள்ளையார் திருமணமாகாதவர்! அவரை ஒருவர் வணங்குகிறார்; வணங்குபவரும் திருமண மாகாதவர்! அவரைப் பார்த்து சிலர் கேலி வெய்வதாக ஒரு பாட்டு.
தன்கொருத்தி யில்லாமே தனித்திருக்கும் சாமியிடம்
எனக்கொருத்தி வேணுமின்னு கேட்க வந்தாரோ?
பிள்ளையார் தனக்கே பெண்தேடிக்கொள்ள முடியவில்லை; இவருக்கு அவர் எங்கே பெண்தேடித் தரப்போகிறார்; சிந்திக்கச் சிந்திக்க மனத்துள்ளேயே நகைக்கச் செய்யும் சிறப்பான நகைச் சுவையன்றோ இது?

நகைமேல் மட்டுமே நாட்டங் கொள்ளும் பெண்களை நறுக்கென்று குட்டுமாறு ஒரு நகைச்சுவை.
காசுமாலை போடாமே கழுத்துச் சுளுக்குதுன்னு
கண்ணீர்விடும் பெண்களுக்கு மருந்துண்டோ?
என்றொருவன் கேட்க, மற்றொருவன் மருந்து சொல்கிறான்:
இருக்கு.
மூசைத் தங்கத்தைக் கம்பி நீட்டி சூடுகாட்டி
முதுகிலே ரெண்டு வாங்கினா குணங்கிடைக்கும்
நினைக்க நினைக்கக் காட்சி மனக்கண் முன்னே நின்று நகைப்பூட்டிக் கொண்டேயிருக்கிறதன்றோ?

நான் யார்?
பட்டுக்கோட்டையார் முதன் முதலில் எழுதிய பாட்டு, மக்கள் ஏமாற்றுக்காரர்களிடமிருந்து விடுபட்டு நலம்பெற வேண்டும் என்னும் கருத்துடையதே!
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே – கரை
ஓரத்தில் மேயாத கெண்டைக் குஞ்சே!
தூண்டில் காரன்வரும் நேரமாச்சு – ரொம்ப
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!
என்பதுதான் அவர் எழுதிய முதல் பாடல், மக்கள் ஏமாந்து பலியாகி உயிரை இழப்பவர்களாக இருக்கக் கூடாது; எச்சரிக்கையுடன் வாழவேண்டும் என்னும் இவ்வெண்ணத்தின் வளர்ச்சியாகவே அவருடைய பாடல்கள் வளர்ந்தன.

கடைசியாக, ஒரு படத்திற்கு பல்லவி மட்டும் எழுதி விட்டு, பாடலை முடிக்காமலேயே மறைந்துவிட்டார்!
தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்!
போனா எவனும் வரமாட்டான் – இதைப்
புஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்
நான் மனிதன்; இறந்தவன் இறந்தவன்தான்; இதைப் புரிந்த நீங்கள் எனக்காக அழ வேண்டாம்! உங்கள் பணியைத் தொடருங்கள்! வெற்றி காணுங்கள் எனச் சமுதாயத்திற்குப் பட்டுக்கோட்டை சொல்லிச் சென்றதுபோல இருக்கிறது இப் பல்லவி. பல்லவியை தொடரும் பாட்டு போல, என் பணியின் தொடர்ச்சியாக உங்கள் பணி அமையட்டும் எனச் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் பட்டுக்கோட்டை.

(பாடல்களையும், கவிதைகளையும் காலவாரியாகத் தொகுத்து, கவிஞரின் கையெழுத்துப் பிரதியில் உள்ள வெளிவராத பாடல்களையும் இணைத்து, திரைப்படத்தில் பயன்படுத்தியது போக கவிஞரின் கையெழுத்துப் பிரதியில் உள்ள வரிகளை அடிக்குறிப்புகளாகக் கொடுத்து, கவிஞரின் கையெழுத்துப் பிரதிகளையும் சேர்த்து கே.ஜீவபாரதி அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள முழுமையான “பட்டுக்கோட்டையார் பாடல்கள்” நூலில் முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன்)

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment