Pattukkottaiyaar

சுவையான தகவல்கள்

பட்டுக்கோட்டையார் மனைவி கருணாநிதிக்கு நன்றி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள் மாண்புமிகு முதல்வருக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

எனது கணவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவைப் போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் கவிஞருக்கு மணிபண்டபம் கட்டி அதை திறந்து வைத்துள்ளீர்கள். எனது கணவர் புகழ் நிலைத்து நிற்க, இந்த அரிய செயலை செய்ததற்காகவும், எனது குடும்பத்திற்கு அரசு சார்பில் சென்னையில் வீடு ஒதுக்கி தருவதாக அறிவித்ததற்காகவும் நான், எனது மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவரது மன மண்டபத்திலும் வீற்றிருக்கும் பட்டுக்கோட்டை

கருணாநிதி புகழாரம்

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முற்போக்குக் கொள்கையில் பற்றுடைய அனைவரது மன மண்டபங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் வீற்றிருக்கிறார் என முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.

பட்டுக்கோட்டையில் புதன்கிழமை மாலை ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:

பகுத்தறிவுப் பாசறையில் பயின்றவர்கள், பொதுவுடமைக் கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் ஆகியோர் அனைவரது மனதிலும் மறையாமல் உள்ளார் கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்று மேலும் பல கவிஞர்கள் தோன்ற வேண்டும். எழுத்தாளர்களால் இந்த உலகம் முன்னேற முடியும். எழுத்தாளர்கள் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக, லட்சியவாதிகளாக இருந்தால் இந்த உலகம் முன்னேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையின் ஒரு கணுவாகத் திகழ்ந்தார் கல்யாணசுந்தரம்.

விழாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் துணைவியார் கௌரவம்மாள், புதல்வர் குமாரவேலு, சகோதரர் கணபதிசுந்தரம் ஆகியோர் முதல்வரால் கௌரவிக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, கோ.சி.மணி, முல்லைவேந்தன், பொன்முடி, துரைமுருகன், புதுக்கோட்டை மக்களவை உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு, தஞ்சை மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏனாதி பாலசுப்பிரமணியம், திருஞானசம்பந்தம், கருப்பண்ண உடையார், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் மூ.ராசாராம் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் மெகராஜ் நன்றி கூறினார்.

செய்தி: தினமணி (மதுரை) 17.12.1989

மக்கள் கவிஞரின் தொடக்கமும் முடிவும்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தந்தை அருணாசலம் பிள்ளையும், அண்ணன் கணபதி சுந்தரமும் கவிஞர்கள்.

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த அணைக்காடு டேவிஸ் தொடர்பினால், கவிஞரின் குடும்பம் ஆரம்ப காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டது.

கணபதிசுந்தரத்தின் சுயமரியாதைப் பாடல்களை மேடைகளில் பாடி வந்த பட்டுக்கோட்டையார், சிறு வயதிலேயே நல்லதைச் செய்பவன் நாத்திகனா? என்ற பாடலை எழுதி, அண்ணனிடம் காட்டிப் பாராட்டுப் பெற்றார். இதுவே பட்டுக்கோட்டையாரின் முதல் பாடல். ஆனால் இந்தப் பாடலின் முதல் வரியைத் தவிர மற்ற வரிகள் கிடைக்கவில்லை. அதே போன்று இந்த கால கட்டத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய எந்தப் பாடலும் கிடைக்காமல் போய்விட்டது.

பட்டுக்கோட்டையாருக்கு அப்போது பதினான்கு வயது. அவருடைய சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு கிராமத்துக் குளத்தங்கரையில் அமர்ந்து, குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் குளத்தின் கரையோரத்தில் நூற்றுக்கணக்காக கெண்டை மீன் குஞ்சுகள் துள்ளிக் குதித்து விளையாடின. அவற்றை கவனித்த கவிஞரின் மனதில்,

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே _ கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே!

தூண்டில்காரன் வரும்
நேரமாச்சு -_ ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே
கெண்டைக் குஞ்சே!

என்ற கவிதை தோன்றியது. இந்தக் கவிதையிலும் எஞ்சிய பகுதி உண்டா? இல்லை. மேலே குறிப்பிட்ட வரிகள் மட்டும்தான் கவிஞர் எழுதினாரா? என்ற விபரம் கிடைக்கவில்லை.

பட்டுக்கோட்டையார், சக்தி நாடக சபாவில் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் கம்பெனி புதுவையில் நாடகம் நடத்தியபோது, ராஜகுருவாக கவிஞர் நடித்தார். அப்போது பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னனின் அறிமுகம் கவிஞருக்கு கிடைத்தது. மன்னர் மன்னன் கவிஞரை பாவேந்தருக்கு அறிமுகம் செய்தார். அந்த நாடகக் குழு புதுவையில் தங்கியிருந்த வரை, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பாவேந்தரைச் சிந்திப்பதையும், அவருடைய கவிதைகளை நகல் எடுத்துக் கொடுப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார் கவிஞர். பாவேந்தர் நடத்திய குயில் பத்திரிகையைக் கவனிப்பதிலும், பாவேந்தருக்குப் பணிவிடை செய்வதிலும் கவிஞர் ஈடுபட்டார். அப்போது ஒருநாள் ஒரு கவிதை எழுதி, அதை பாவேந்தரிடம் காட்ட அஞ்சி, கவிஞர் தந்தை பெயராகிய அருணாசலத்தின் முதல் எழுத்து அ கவிஞரின் பெயராகிய கல்யாணசுந்தரம் என்பதில் கல்யா ஆகியவற்றை இணைத்து அகல்யா என்ற புனை பெயரிட்டு, அஞ்சலில் வந்த கவிதைகளுக்கிடையே, தனது கவிதையையும் வைத்துவிட்டார் கவிஞர். கவிதைகளைப் படித்துப் பார்த்த பாவேந்தர் அகல்யா கவிதையை மிகவும் பாராட்டினார். அப்போதும் கவிஞர் அந்தக் கவிதையை எழுதியது தான்தான் என்று கூறவில்லை. பாவேந்தர் பாராட்டிய அந்தக் கவிதையும் இதுவரை கிடைக்கவில்லை. பாவேந்தரின் தொடர்பு மக்கள் கவிஞருக்கு சினிமா உலக அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் பாடல் ஒன்றும் எழுதவில்லை.

1954 நவம்பர் 7இல் ஜனசக்தி நவம்பர் புரட்சி மலராக வெளிவந்தது. இந்த மரலில் நவம்பர் புரட்சியை வரவேற்று பட்டுக்கோட்டையார் எழுதிய புதிய ஒளி வீசுது பார் என்ற கவிதைதான் அச்சில் வந்த பட்டுக்கோட்டையாரின் முதல் கவிதையாகும்.

புதிய ஒளி வீசுதுபார்
இமயம் தாண்டிப்
புன்சிரிப்புக் காட்டுதுபார்
இன்பம் அங்கே

“புதிய ஒளி வீசுதுபார்
இமயம் தாண்டிப்
புன்சிரிப்புக் காட்டுதுபார்
இன்பம் அங்கே”

என்று தொடங்கும் அந்தக் கவிதை. மகாகவி பாரதி, ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி என்ற கவிதைக்குப் பின் ரஷ்யப் புரட்சியைப் பற்றி வெளிவந்த கவிதைகளில் முதலிடத்தைப் பெறுகிற கவிதையாகும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அப்போது உறுப்பினர்களாக இருந்த முக்தா சீனிவாசன், டி.கே.பாலசந்தர் ஆகியோர் திண்டுக்கல்லில் நடக்கவிருந்த விவசாயிகள் சங்க மாநாட்டில் நாடகம் அரங்கேற்ற விரும்பினர். டி.கே.பாலசந்தர் தங்கியிருந்த மைலாப்பூர் அறையில் இதுபற்றி மாலை நேரங்களில் விவாதிப்பர். அந்த விவாதங்களில் தோழர் ஜீவாவும் கலந்து கொள்வார். கண்ணின் மணிகள் என்ற அந்த நாடகத்தை மயிலை நித்தியானந்தம் எழுதினார். அந்த நாடகத்திற்குரிய பாடல்கள் பற்றி விவாதம் எழுந்தபோது, அதற்கு ஒருவரை அழைத்து வருவதாகக் கூறினார் ஜீவா. அதன்படி மறுநாள் பட்டுக்கோட்டையாரை அங்கே அழைத்துச் சென்றார்.

பட்டுக்கோட்டையாரிடம் கதையைச் சொல்லி, ஒரு விவசாயி, தன் முறைப்பெண்ணிடம் பாடுவது போன்று ஒரு பாடல் எழுதக் கூறினர்.

ஆண்: கதிராடும் கழனியில்

சதிராடும் பெண்மணி

கலைமேவும் அடியிலே

கவர்ந்தாய் கண்மணி

முதிராத செடியே

முல்லை மலர்க் கொடியே

பெண்: அன்பே என் ஆருயிரே

ஆணழகே என்னுடன்

தென்பாங்குப் பண்பாடும்

தீராத இன்பமே!

ஆண்: ஏரோட்டும் விவசாயி

எருதுகளை ஏரியிலே

பெண்: நீராட்டும் அழகைப்பாரு

கண்ணாலே!

ஆண்: பாராட்ட வேண்டியவள்

பானைகளைத் தலையில் வைத்து

பக்குவமா வாராபாரு

பின்னாலே!

பெண்: தேனாறு பாயுது

செங்கதிரும் வாயுது

ஆனாலும் மக்கள் வயிறு காயுது!

ஆண்: மானே இந்த நாட்டிலே வகையான மாறுதல்

வந்தாலன்றி ஏது சீருகள்?

இருவரும்: உழவனும் ஓயாத

உழைப்பும் போல் நாமே

ஒன்றுபட்டு வாழ்க்கையினில்

என்று மிருப்போம்

என்ற பாடலை எழுதிக் கொடுத்தார் பட்டுக்கோட்டை. அங்கிருந்த அனைவராலும் இந்தப் பாட்டு பாராட்டப் பெற்றது. ஜீவா, பட்டுக்கோட்டையைத் தட்டிக் கொடுத்து, நீ மீண்டும் தோன்றிய பாரதியடா! என்று பாராட்டினார். இந்த பாடலே பட்டுக்கோட்டையார் நாடகத்திற்காக எழுதிய முதல் பாடலாகும்.

அதே நாடகத்தில்,

கண்ணை இழுக்கும்

அழகொன்று கண்டேன்

காவியம் ஓவியம்

யாவையும் கண்டேன்

மின்னை நிகரிடைப் பெண்களும் ஆண்களும்

வேலை செய்யும் அந்தக்

கோலத்தைக் கண்டேன்

என்று தொடங்கும் மற்றொரு பாடலையும் எழுதினார் பட்டுக்கோட்டை.

முதலில் குறிப்பிட்ட பாடலில் சிறிது மாற்றம் செய்து, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற படத்திற்கு, பிற்காலத்தில் பயன்படுத்திக் கொண்டார் பட்டுக்கோட்டை.

1954இல் தொடங்கிய படித்த பெண் என்ற திரைப்படத்தில்தான் பட்டுக்கோட்டையார் முதன் முதலாக சினிமாவுக்குப் பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றார். இந்தப் படத்தில்,

காப்பி ஒண்ணு எட்டணா

கார்டு சைசு பத்தனா

காண வெகு ஜோரா யிருக்கும்

காமிராவைத் தட்டினா

என்ற பாடலையும்,

வாடாத சோலை மலர் பூத்த வேளை

வளர்காத லாலே

மனம் பொங்குதே

என்ற பாடலையும் எழுதினார் பட்டுக்கோட்டை. இந்தப் படம் 1956இல் தான் வெளி வந்தது. இந்தப் படத்திற்குப் பின் ஆரம்பிக்கப்பட்டு 1955லேயே வெளிவந்துவிட்ட மஹேஸ்வரி என்ற படத்தில்,

அள்ளி வீசுங்க _ பணத்தை

அள்ளி வீசுங்க _ என்

ஆசை வேணும்

என்றால் காசை அள்ளி வீசுங்க

என்ற பாடலையும்,

அறம் காத்த தேவியே

குலம் காத்த தேவியே _ நல்

அறிவின் உருவான ஜோதியே

கண்பார்த் தருள்வாயே

அன்னையே! அன்னையே!

என்ற பாடலையும்,

சின்ன வீட்டு ராணி

எங்க ராணி

சிங்காரத் தங்க நிறம்

அவள் மேனி

கொள்ளைக்காரன் போலே

எல்லை தாண்டி வந்த

கொடியவரை அழிக்கும்

கோபராணி

என்ற பாடலையும்,

அழகு நிலாவின் பவனியிலே

அமைதி கொஞ்சும் இரவினிலே

அல்லி மலர்ந்தே ஆடுதே

ஆடும் காரணம் ஏதோ?

என்ற பாடலையும்,

ஆகாய வீதியிலே

அண்ணாந்து பார்த்தபடி _ என்ன

ஆராய்ச்சி பண்ணுறீங்க?

சொந்தமாய் இருந்து

ஆனந்த நேரமிதை

ஏனோ வீணாக்குறீங்க

என்ற பாடலையும் எழுதினார்.

பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் இடம் பெற்று, முதலில் வெளிவந்த படம் என்ற பெருமையை அந்த மகேஸ்வரி பெற்றாள்.

1954இல் திரைப்படத் துறையில் புகுந்த பட்டுக்கோட்டையார், சிறிது காலத்தில் திரைப்படக் கவிஞர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு புகழின் உச்சியில் ஏறி நின்றார்.

சினிமா போஸ்டர்களில் பாடலாசிரியர் பெயர் போடத் தொடங்கியதும், பாடலாசிரியர் பெயரைக் கண்டதும் தியேட்டரில் ஜனங்கள் கரகோஷம் செய்ததும் பட்டுக்கோட்டையாருக்குக் கிடைத்த வெற்றிகளாகும். அதே போன்று தங்கள் படத்திற்குப் பட்டுக்கோட்டையாரின் பாடலுக்காக அவர் வீட்டு வாசலில் தயாரிப்பாளர், டைரக்டர்களின் கார்கள் காத்துக் கிடந்ததும், பிளாங்க் செக்குகளைக் கொடுத்து, பாட்டுக்கு வேண்டிய தொகையை கவிஞரையே எழுதச் சொன்ன சம்பவங்களும் பட்டுக்கோட்டையாரின் பாடலுக்குக் கிடைத்த வெற்றிகளாகும்.

சினிமாவில் பிஸியாக பட்டுக்கோட்டையார் இருந்தபோதும் கூட வாய்ப்புக் கிடைக்கும் போது ஜனசக்தியில் கவிதை எழுதுவதையும், ஜீவாவையும், இயக்கத் தோழர்களையும் சந்திப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார். ஜீவாவின் தொடர்பு பட்டுக்கோட்டைக்கு வழிகாட்டியாக அமைந்தது.

செக்கத் சிவந்த செழுங்

கதிரோனும்

கிழக்கினில் வந்துவிட்டான் _ புவி

மக்கள் மதிக்கண் விழித்துக்

கிளம்பிட

வானில் உதித்துவிட்டான்

கொக்கரக் கோவென கோழியுங்

கூவுது

கொக்கொடு பற்பல புட்களும்

மேவுது

தொக்கி நின்ற யிருள் சொல்லாமல்

ஓடுது

பத்துத் திசையிலும் _ ஜன

சக்தி முழங்கிடுதே!

தெற்கில் ஒரு குரல் தென்பாங்கு

பாடுது

தீய செயல்களைச் செங்கைகள்

சாடுது

பக்குவங்கொண்ட படைபல கூடுது

சிக்கலறுத்துப் பொதுநடை போடுது

சொத்தை மனந்திருந்தப் _ புதுச்

சத்தம் பிறந்திடுதே!

கத்தும் பறவை கனிமரத்தில் வந்து

ஒற்றுமை காட்டிடுதே -_ தலைப்

பித்தம் பிடித்ததொரு கூட்டம்

தனித்தனி

பேதம் வளர்த்திடுதே!

ரத்த வியர்வைகள் சொட்ட உழைத்தவன்

நெற்றி சுருங்கிடுதே _ ஏழை

உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்

கொட்டம் அடங்கிடுதே _ மக்கள்

வெற்றி நெருங்கிடுதே

என்ற கவிதையை 15.8.1959இல் வெளிவந்த ஜனசக்தியில் எழுதினார் பட்டுக்கோட்டை. இந்தக் கவிதைதான் அவர் எழுதிய கடைசிக் கவிதையாகும்.

இரவு பத்து மணி இருக்கும். வர்ண விளக்குகள் ஆங்காங்கே இந்திர ஜாலம் புரிந்து கொண்டிருக்க விஜயா கார்டனில், வீனஸ் பிக்சர்ஸ் கல்யாண பரிசு வெள்ளி விழாவில் விருந்துக்குப் பிறகு நான் ஓரிடத்தில் அமர்ந்திருந்தேன். சாப்பாட்டை முடித்துவிட்டு, தாம்பூலத்தைக் குதப்பியபடி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்குச் சிறிது தூரத்தில் நின்றிருந்தார். நான் அவரை அழைத்தேன். என்னருகில் வந்து உட்கார்ந்து கொண்டே அவர், உங்களை நானே பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் என்றார் சிரித்துக் கொண்டே.

என்ன விஷயம்? என்று கேட்டேன்.

கவிஞன் என்பவன், பல்வேறு இசைக் கருவிகளை வைத்து சங்கீதத்தை உண்டாக்கும் கலைஞரைப் போல, வார்த்தைகளைப் பொறுக்கி எழுதுபவனா? என்று அவர் என்னிடம் கேட்டார்.

கவிஞர் கேட்ட கேள்வி என்னை திடுக்கிட வைத்தது! அதுவும் சாதாரணக் கவிஞரா அவர்!

எனக்குப் புரியாத ஒன்றைக் கேட்கிறீர்கள் _ என்னைப் பொறுத்த வரை கவிதை என்பது இதயத்தில் சுரந்து, எண்ணத்தில் மிதந்து வருவது. சொற்களைக் கண்டு பிடித்துப் போட்டுக் கவிதை எழுதினால், அது கவிதை ஆகாது! என்றேன்.

இதை நமது சங்கீத டைரக்டர்கள் ஏன் உணருவதில்லை? மெட்டமைக்க அவர்களுக்கு நமது கவிதை ஏற்றதாக இல்லாவிட்டால், மெட்டை மாற்றுவதற்குப் பதில் ஏன் கவிதையை மாற்றச் சொல்கிறார்கள்? அதற்காகச் சொற்களை எப்படிப் பொறுக்கிப் போட வரும்? என்றார் கவிஞர். உண்மைதான்! என்றேன் நான்.

இங்கு இது மட்டுமல்ல! நடிகர்கள் கூட கவிதைகளில் கை வைத்து விடுகிறார்கள். ஒரு பெரிய தயாரிப்பாளருக்காக நான் பாட்டொன்று எழுதினேன். அதில் வரும் கவிதையை ஹாஸ்ய நடிகர் சொல்படி மாற்றிவிட்டார் தயாரிப்பாளர். நடிகர்கள் தங்கள் கருத்தைச் சொல்லாமே தவிர, பாட்டை மாற்றுவது கூடாது என்பது என் அபிப்பிராயம். அப்படிப் பார்க்கப்போனால் கவிஞர்களும் நடிகர்களைப் பற்றி குறை கூற இடம் ஏற்படும் என்றார் பட்டுக்கோட்டை.

எப்படி? என்றேன்.

கவிதையில் வரும் சொற்களின் ஆழத்தையும் நயத்தையும் பொருளையும் உணர்ந்து எத்தனை நடிகர்கள் பாடி, நடித்திருக்கிறார்கள்? அதே போல் நடனத்தையும் பாவத்துடன் உணர்ந்து யார் ஆடுகிறார்கள்? நடிகைகள் காட்டும் அபிநயத்துக்கும் பாட்டுக்கும் அநேகமாகப் பொருத்தம் காணவே முடியாது. இதே போல் பாட்டு ஒரு பங்கு என்றால் அதற்கான இசை இரண்டு பங்காக இருக்கக் கூடாது! நான் சமீபத்தில் காவடிச்சிந்து மெட்டில் ஒரு ஸ்டூடியோ முதலாளியின் படத்திற்குப் பாட்டெழுதிக் கொடுத்தேன். அதில் பாட்டில் முக்கால் பகுதியை நீக்கிவிட்டு, மற்ற பகுதிக்கு வெறும் இசையை இணைத்திருக்கிறார்கள். இம்மாதிரி செய்வதையும் நான் மனதார வெறுக்கிறேன். இதனால் கவிஞனுக்கு ஏற்படும் உற்சாகத்தையும் குலைத்து விடுகிறார்கள் என்று சொன்னார் கவிஞர் திலகம்.

இதையெல்லாம் மனதுக்குள் போட்டுப் புழுங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இதை அப்படியே ஒரு கட்டுரையாக வடித்துத் தருகிறேன். உங்கள் வரப்போகும் இதழில் போட்டு விடுங்கள் என்றார் கவிஞர்.

நிச்சயமாகச் செய்வோம். ஆனால் உங்களிடமிருந்து கட்டுரை வருவதுதான் சீக்கிரத்தில் நடக்காத காரியமாயிற்றே! என்றேன்.

இம்முறை அப்படியாகாது என்று நினைக்கிறேன். அப்படி ஒரு கால் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால் இதை பேட்டி என்ற வகையில் உங்கள் பத்திரிகையில் வெளியிட்டு விடுங்கள்! என்றார் என்று பேசும்பட நிருபர் எழுதினார். இந்தப் பேட்டியில் பட்டுக்கோட்டையார் கூறியிருக்கும் கருத்துக்கள் அன்றைய இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் நெஞ்சில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டியவைகளாகும். இந்தப் பேட்டியில் ஒருக்கால் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால் என்று கூறிய பட்டுக்கோட்டை திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 8.10.1959 அன்று மறைந்தார்.

மேலே குறிப்பிட்ட பட்டுக்கோட்டையாரின் பேட்டியை பேசும் பட நிருபர், கவிஞர் தந்த கடைசிப் பேட்டி என்ற தலைப்பில் ஓர் கட்டுரையாக எழுதினார். இதுவே அந்த மக்கள் கவிஞரின் இறுதிப் பேட்டியாகும்.

மயானத்தில் மக்கள் கவிஞரின் உடம்புக்குத் தீயிடப்படுகிறது. அக்னி நாக்குகள் அந்த மகத்தான கவிஞனை ஆரத் தழுவுகிறது. அங்கே நடந்த இரங்கற் கூட்டத்தில், அதோ தீயில் எரிந்து கொண்டிருக்கிறானே அவனுக்கு, அரை அணாவுக்கு வேர்க்கடலையும், பழைய விக்ரமாதித்தன் கதைப் புத்தகத்தையும் வாங்கிக் கொடுத்தால் நூறு பாட்டு எழுதிக் கொடுப்பான் என்று ஜீவா பேசினார். பட்டுக்கோட்டை இறந்ததைக் கேட்டு அழுதவர்களை கூட ஜீவாவின் பேச்சைக் கேட்டு அழுதவர்கள் அதைவிட அதிகம் என்று நினைவு கூறுகிறார் டைரக்டர் முக்தா சீனிவாசன்.

பாட்டுக்காக ஒரு படம் ஒடுகிறதென்றால், அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டெழுதியிருக்கிறாரா? என்று கேட்கும் நாள் இது. அவர் பாட்டெல்லாம் பைந்தமிழ் நாவுக்கிசைந்த சொல். காதுகளுக்கினிய கானம். கருத்தில் மணக்கும் கவிதை என்று தமிழகம் அவரைப் போற்றுகிறது. தமிழ் சினிமா உலகில் உதய ஞாயிறுராகத் தோன்றி இசை மணம் பரப்பிய அந்த இளம் கவிஞர் மறைந்து விட்டார் என்ற செய்தி செந்தமிழ் நாட்டில் உள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துவிட்டது.

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே

ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

என்ற பாட்டைப் பாடிய புலவர் மண்ணில் மறைந்துவிட்டார். தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடி, தமிழனை விதித்திருக்கச் செய்த கலைஞன் மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்! அவர் பாடல்கள் சிரஞ்சீவியாகப் பல குழந்தைகள் நாவில் ஒலிக்கின்றன.

உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீயாட

உல்லாசம் பொங்கும்

இன்பத் தீபாவளி என்று மழலை மொழியில் பாடாத குழந்தைகளும் தமிழகத்தில் உண்டோ? ஆனால், கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளியாக அவர் வாழ்வு முடிந்து விட்டது.

அருமை இளம் மனைவியையும், ஐந்து மாதக் குழந்தையையும், வயது முதிர்ந்த தாயையும், தந்தையையும் ஆறாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அவர் மறைந்தார் என்பதைக் கேட்கும் போது, யார்தான் கண்ணீர் விடாமல் இருக்க முடியும்?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அகால மரணம் கவிதை உலகத்திற்கு ஒரு மாபெரும் நஷ்டம். படத்தொழிலுக்கு ஒரு பெரும் நஷ்டம். தமிழ்நாட்டுக்கே அது தாங்க முடியாத நஷ்டம் என்று 18.10.59 அன்றைய ஆனந்த விகடன் தலையங்கத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசனுக்குப் பின் தமிழ் இலக்கியத்தில் புதிய ஞாயிறாகத் தோன்றி, புதிய ஒளி பாய்ச்சிய அந்த மக்கள் கவிஞன், தனது இறுதி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தான். அவனுடைய கவிதைகளைப் படிப்பதும், மக்களிடத்தில் கொண்டு செல்வதும் புரட்சிகரமான கடமைகளில் முதன்மையானதாகும்!

_ கே.ஜீவபாரதியின் கட்டுரையிலிருந்து

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

நாட்டுடைமை ஆக்கப்படும்

ஜெயலலிதா உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் துணைவியார் திருமதி கௌரவம்மாள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களை நாட்டுடைமையாக்குமாறு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த முதல் அமைச்சர், கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய அனைத்து பாடல்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் இதற்குரிய மேல் நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அரசு அலுவலர்களை முதல் அமைச்சர் பணித்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

செய்தி: தினத்தந்தி, 14.7.1993

பட்டுக்கோட்டையில் ஒரு பாட்டுக்கோட்டை

கவிஞர் வைரமுத்து

திரைப்படங்களுக்கு, காலத்தை வெல்லும் தத்துவப் பாடல்கள் பலவற்றை எழுதி பெரும் புகழ் பெற்றவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரைப் பற்றியும், பட்டுக்கோட்டையில் அவர் மனைவியை சந்தித்தது பற்றியும் இக்கட்டுரையில் கூறுகிறார், கவிஞர் வைரமுத்து.

செங்கப்படுத்தான்காடு எவ்வளவு தூரம்?

பக்கம்தான். ஒரு பதினைந்து நிமிட நேரப் பயணம்.

மனசு துடித்தது.

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் ஒரு சோக உருண்டை சுற்றிக்கொண்டே இருநத்து.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

தன்னால் கலப்பை பிடித்து மண்ணை உழவும் முடியும், பேனா பிடித்து மனிதர்களை உழவும் முடியும் என்று மார்தட்டி மெய்ப்பித்த ஒரு மக்கள் கவிஞன். அவன் பிறந்த மண்ணை வணங்கப் போகிறோம் என்ற பரவசமும் பரபரப்பும் நெஞ்சு முழுக்க நிறைந்திருந்தன.

உடன் வந்த தோழர்களுக்கெல்லாம் ஒரே உற்சாகம்.

பக்தர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தருவது தலயாத்திரை. என் தம்பிகளுக்கெல்லாம் அன்று மகிழ்ச்சி தந்தது தமிழ் யாத்திரை.

காருக்கு வெளியே கண்களை வீசிக்கொண்டே வந்தேன்.

செம்மண்! செம்மண்!

ஓ! பொதுவுடைமைக் கவிஞன் பூத்தமண் செம்மண்ணாய்த்தானே இருக்க முடியும்!

வழியெல்லாம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவுகள் நெஞ்சில் நுரைத்துக் கொண்டே வந்தன.

இதோ! காக்கைகளும் குருவிகளும் பறந்து திரிகிற இந்தக் கிராமத்து வெளியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் விளைந்து வந்த கவிஞன் அவன்.

ஒரு வகையில் பார்த்தால் அந்த மக்கள் கவிஞனும் நானும் ஒரே குடும்பத்துக் குழந்தைகள்தாம்.

ஆனால் என்னினும் பலமடங்கு அவன் வாழ்க்கை என்ற கல்வியை வாழ்ந்து கற்றவன்.

அவனுடைய பாடல்களெல்லாம் தெருக்களில் எழுதப்பட்டவை; திண்ணைகளில் வாசிக்கப்பட்டவை; வாழ்க்கையைப் பிழிந்து பிழிந்து வார்த்தைச் சாராய் இறங்கியவை.

கற்பனைகளைப் போதுமான அளவுக்கு மட்டும் தொட்டுக் கொண்டு வாழ்க்கை உண்மைகளுக்கே பெரிதும் வழிவிட்டவை.

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே _ அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே

_ என்ற வரிகளெல்லாம் தமிழர்களின் அன்றாட வாழ்வில் அங்கமாகிவிட்ட வரிகள்.

சாலி மரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்துகளில் பட்டுக்கோட்டையின் பாட்டு வரிகளை எங்களூர் கிராமத்து கிழவர்கள் மேற்கோள் காட்ட நான் கேட்டிருக்கிறேன்.

பழமொழிகளுக்கும் அவன் பாடல்களுக்கும் அதிக வித்தியாசமாயிருப்பதாய் நான் அறியவில்லை. ஏனென்றால் இரண்டுமே வாழ்க்கையின் கர்ப்பத்திலிருந்து வந்த விழுந்த வரிகள்.

பட்டுக்கோட்டையின் பாடல்களைக் கேட்கத் தவறாதீர்கள் என்ற சிறப்புக் குறிப்போடு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை எங்கள் கிராமத்துச் சுவர்களில் நான் பார்த்திருக்கிறேன்.

சில ஆண்டுகள் மட்டுமே அவன் சினிமாவில் வாழ்ந்தான்.

ஆனால் அந்தச் சில ஆண்டுகளுக்குள்ளேயே திரைப்படம் என்ற பாற்கடலை ஆழக்கடைந்து அமுதம் மட்டும் எடுத்துக் கொடுத்துவிட்டு அகால மரணம் அடைந்துவிட்டான்.

ஒரு மனிதனின் புகழ் என்பது ஆயுளால் தீர்மானிக்கப்படுவதில்லை.

எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் பாம்பு விஷத்தைத் தான் சேமித்து வைக்கிறது.

சில மாதங்களே வாழ்ந்தாலும் தேனீ தேனைத்தான் சேகரித்துத் தருகிறது.

முப்பது ஆண்டுகள் நிறைவதற்குள்ளே முடிந்து போன ஒரு கவிஞன் முன்னூறு ஆண்டுகளுக்குத் தேவையான அனுபவங்களை அள்ளித்தந்து விட்டுப் போயிருக்கிறான்.

சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக்கிசிச்சீங்க?

_ என்று இந்த சமூகத்தைப் பார்த்துக் கோபம் கொப்புளிக்கக் கேட்டவன் கடைசியில் சலித்துப்போய் _

சொல்லுறதப் சொல்லிப்புட்டேன்

செய்யுறதச் செஞ்சிக்குங்க

_ என்று கண்ணீரோடு கண்மூடிவிட்டான். அவன் பல்லவிகள் காலத்தால் அழியாதவை. ஒரு பாடலில் பல்லவி என்பது பளிச்சென்று வந்துவிழ வேண்டும்.

பாடல் கேட்பவன் முதல் வரியிலேயே மூர்த்தையாகி விழுந்து விட வேண்டும்.

இரண்டாவது வரி எழுப்பிவிடவேண்டும்.

இந்த இரண்டு ஜாலங்களையுமே செய்து காட்டின பட்டுக்கோட்டையின் பாட்டு வரிகள்.

இரையோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே!

இதுதான் உலகம் வீண் அனுதாபம் கண்டு நீ

ஒருநாளும் நம்பிடாதே

பதிபக்தியில் அவன் எழுதிக் காட்டிய இந்தப் பல்லவியின் அதிர்ச்சியில் இருந்து தமிழ்நாடு சில ஆண்டுகளாய் மீளவே இல்லை.

கருத்துவளம் கொண்ட பாடல்களில் மட்டுமல்ல காதல் வளம் கொண்ட பாடல்களிலும் இப்படித்தான் மின்னல் பல்லவிகள் கண்ணைப் பறித்தன.

முகத்தில் முகம் பார்க்கலாம்

விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

தங்கப்பதுமையில் பட்டுக்கோட்டையின் இந்தப் பாட்டு காதலிகளின் முகங்களையெல்லாம் காதலர்களின் கண்ணாடிகளாக மாற்றிவிட்டது.

நாடோடி மன்னனுக்கு எழுதப்பட்ட துங்காதே தம்பி தூங்காதே பாட்டு கேட்டு பல தமிழர்கள் தங்கள் நீண்ட உறக்கத்தைக் கலைத்துக் கொண்டு மெல்ல மெல்லக் கண் கசக்கினார்கள்.

பட்டுக்கோட்டையில் பாட்டு வரிகளை உச்சரிக்க உச்சரிக்க அந்நாளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், நடிகர் திலகம் சிவாஜிக்கும் இருந்த புகழ் அடர்த்தியானது; இன்னும் ஆழமானது.

அந்த மக்கள் கவிஞன் பிறந்த மண்ணைத் தொட்டு வணங்க வேண்டுமென்பது நான் பல ஆண்டுகளாய் முடிந்து வைத்திருந்த கனவு.

இந்த முறை பட்டுக்கோட்டையில் ஒரு விழாவுக்குச் செல்லும் வாய்ப்பு வந்ததால் செங்கப்படுத்தான்காடு சென்றுவர வேண்டுமென்பதைத் திட்டமிட்டு வைத்திருந்தேன்.

பிரதான சாலையில் இருந்து விரிந்து கிளைச் சாலையில் விரைகிறது கார்.

பனைமரங்களின், தென்னை மரங்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு எங்கள் வாகனம் மேடு பள்ளம் உள்ள பாதையில் மெல்ல நகர்கிறது.

பள்ளம் மேடு உள்ள சாலையிலே

கொஞ்சம் பார்த்து

நடக்கணும் காளைகளே!

என்ற பட்டுக்கோட்டை வரிகளை மனது பாடிக்கொள்கிறது.

இதுதான் அவன் பிறந்து வளர்ந்த மண்.

அவனுக்கு உப்பிட்ட மண், உணர்வூட்டிய மண்.

தண்ணீர் கலக்க முடியாத தாய்ப்பாலில் தமிழ்ப்பால் கலந்து கொடுத்த மண்.

இறங்குங்கள் என்றார்கள்.

இறங்கினேன்.

மனசை ஏதோ பிசைந்தது.

தம்பி தஞ்சை செழியன், அருமை நண்பர் ஆசிப், கவிதைக் காவலர்கள் ரெங்கசாமி, பன்னீர்ச்செல்வம், பாலையன், வேதாரண்யம் காந்திநாதன், டாக்டர் பவுன்துரை, பாபநாசம் மணிமுடி, தம்பி பாஸ்கரன் உள்பட இன்னும் பல கவிதை நண்பர்கள் அந்த சின்னக் குடிலைச் சென்றடைந்தோம்.

மழை பெய்த களிமண் நிலமாய் எல்லோர் நெஞ்சிலும் ஒரு நெகிழ்ச்சி.

பட்டுக்கோட்டையின் துணைவியார் திருமதி கௌரவம்மாள் அம்மையார் எங்களைப் பண்பாடு கமழ வரவேற்கிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் திரு கணபதி சுந்தரம் கலகலவென்று பேசி எங்களுக்குக் களிப்பூட்டுகிறார்.

தம்பியைப் பற்றி ஈரமான நினைவுகளைப் பரவசத்தோடு பந்தி வைக்கிறார்.

பட்டுக்கோட்டையின் திருமணத்தில் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்த்துரை வழங்கும் படம் எங்கள் கண்களில் நிறைகிறது.

அங்கே நாங்கள் அமர்ந்து உரையாடியது கொஞ்ச நேரந்தான்.

ஆனால் அந்தக் கொஞ்ச நேரத்திலும் இதயத்திற்கு எத்தனையோ இறக்கை முளைத்து இறந்தகால வெளியெங்கும் பறந்து பறந்து திரிந்தது.

எங்கள் எல்லார் கைகளிலும் அவர்கள் இளநீர் கொடுத்தார்கள்.

எங்கள் எல்லார் கண்களிலும் கண்ணீர் இருந்தது.

ஏப்ரல் 13 தான் அந்தப் பிறவிக் கவிஞனின் பிறந்த நாள்.

ஆமாம்! அவன் பிறந்து அறுபத்திரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன.

அவன் மறைந்த நாள் எதுவென்று கேட்பீர்கள்.

இல்லை.

கவிஞனுக்கு ஏது மறைந்த நாள்?

எழுத்தில் _ காற்றில் _ இதயங்களில் _ எண்ணங்களில் _அந்த வரகவிஞன் வாழ்ந்து கொண்டே இருக்கிறான். வாழ்ந்து கொண்டே இருப்பான்.

தமிழ்ப்பற்றும், பாட்டுப் பற்றும், சமூகப் பற்றும் கொண்ட பெருமக்களில் யாராவது அந்த நித்தியக் கவிஞனுக்கு நினைவகம் அமைப்பார்களா?

ஒரே ஒரு முறைதான் கணவரோடு வெளியே சென்றேன்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி பிரத்யேக பேட்டி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

தமிழ் பட உலகில் கொடி கட்டி பறந்த மக்கள் கவிஞர்!!

மிகவும் குறைந்த வயதில் (29 வயது) வாழ்ந்தாலும் அவர் இயற்றிய பாடல்கள் தமிழ்ப்பட உலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.

இந்த மண்ணை விட்டு பட்டுக்கோட்டையார் மறைந்தாலும் அவர் எழுதி வைத்த பாட்டுக்கோட்டை மூலம் இன்றும் அவர் தமிழக மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

பட்டுக்கோட்டையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை எழில் மிக்க சின்னஞ்சிறு கிராமம்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சொந்த ஊர், பெயர்: செங்கபடுத்தான்காடு,

கிராமத்தின் ரோட்டோரம் தென்னை மரக்கன்றுகளும், மாமரங்களும் கொஞ்சி குலாவும் மனதை கொள்ளை கொள்ளும் வனப்பு மிகுந்த படர்ந்த தோட்டம். அந்த தோட்டத்தின் மத்திய பகுதியில் சிறிய ஓட்டு வீடு. வீட்டை நெருங்கியதும்…

உள்ளே இருந்து வெளியே சிரித்த முகத்துடன் வந்து வாங்க என்று வரவேற்றார் கவுரவம்மாள். பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாணசுந்தரத்தின் துணைவியார்.

வீட்டுக்குள் நுழைந்ததும் வாசலில் மாட்டி வைக்கப்பட்டிருந்த பட்டுக்கோட்டையாரின் பெரிய போட்டோ… சிரித்த முகத்துடன் இருந்த அவரின் தோற்றம்… வாங்க… என்று நேரிலே அவரும் வந்து வரவேற்றது போலிருந்தது.

பட்டுக்கோட்டையாருடன் வாழ்ந்த வாழ்க்கை அனுபவம், பட்டுக்கோட்டையாரின் சினிமா வாழ்க்கை குறித்த கவுரவம்மாள் மலரும் நினைவுகளாக கூறியதாவது:

உங்கள் கணவரின் கவித் திறன் பற்றி…?

ஆரம்பத்தில் அந்த திறமை பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. வீட்டில் இருக்கும்போது கம்பெனிகாரங்க (பட கம்பெனி) வந்து பாட்டு எழுத கூட்டிட்டு போயிடுவாங்க… எனக்கு கவலையா இருக்கும். ஒரு சமயம் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்த அவரிடம் ஏங்க… இவ்வளவு நேரம் கழித்து வீட்டுக்கு வர்றீங்க, மனைவி, பிள்ளையெல்லாம் மறந்திட்டீங்களா? என்று கேட்டேன்.

உடனே அவர், எனக்கு சொந்தமாவது… சுகமாவது… மனைவி, பிள்ளையைவிட நாட்டு மக்கள்தான் முக்கியம். நாட்டு மக்களுக்கு கருத்துள்ள பாட்டுகளை கொடுக்கனும். அதற்கு நான் பாட்டு எழுதனும் என்று கோபமாக கூறிவிட்டார். அன்றிலிருந்து நான் வாயையே திறக்க மாட்டேன். அவரது கவி திறமை வளர… வளர… புகழும் வளர்ந்தது. அது எனக்கு பெருமையாக இருந்தது. பிறகு மெது, மெதுவாக அவரை புரிந்து கொண்டேன்.

உங்கள் கணவருடன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி…?

எங்களுக்கு கல்யாணம் ஆகும்போது எனக்கு 18 வயது. என்னுடன் அவர் வாழ்ந்ததே 20 மாதம்தான். அதுவே அவருடன் 20 வருடம் வாழ்ந்தது போலிருந்தது. 29 வயதில் எங்களைவிட்டு மறைந்துவிட்டார். சினிமா உலகமே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவருடன் வாழ்ந்த 20 மாத இல்வாழ்க்கை இன்னும் பசுமையாகவே இருக்கிறது. தினமும் அதை எண்ணியே 40 வருஷத்தை கழித்துவிட்டேன். இப்போது எனக்கு 57 வயது ஆகிறது.

உங்களுடன் வாழ்ந்த காலத்தில் பட்டுக்கோட்டையாருடன் நீங்கள் வெளியே சென்ற அனுபவம் பற்றி…?

சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஒரேயொரு தடவைதான் அவர் என்னை வெளியே அழைத்து சென்றார். அப்போது பாட்டு எழுதுவதற்காக மகாபலிபுரம் சென்றிருந்தார். கார் டிரைவரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். சென்றேன். அன்று மகாபலிபுரத்தை அவருடன் சுற்றி பார்த்தேன். நாங்கள் சேர்ந்து பார்த்த ஒரே இடம் மகாபலிபுரம்தான். அன்று ஒரே நாளில் 3 பாட்டுகள் எழுதினார். என்ன பாட்டுகள்… என்று நினைவுக்கு வரவில்லை.

உங்களுடன் அவர் பிரியமாக இருப்பாரா?

ரொம்ப பிரியமாக இருப்பார். நான் என்ன சொன்னாலும் சிரித்து கேட்டுக் கொண்டே இருப்பார். கோபமே வராது. ஆனால் கோபம் வந்து விட்டால் பெருங்கோபம் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது.

உங்கள் கணவரின் இளம் வயது வாழ்க்கை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

அவருக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கத்தான் ஆசை இருந்தது. ஊர் ஊராக சென்று நாடகத்தில் நடிப்பார். அப்போதெல்லாம் மைக் கிடையாது. மைக் இல்லாமல் சத்தம் போட்டு பாட்டு படிப்பார். அவருக்கு பெரிய குரல். பாடினால் ஒரு கிலோ மீட்டர் தூரம் கேட்கும் என்று சொல்வார்கள்.

பட்டுக்கோட்டையார் சினிமாவில் நடித்திருக்கிறாரா?

சினிமாவில் நடிக்கத்தான் ரொம்ப ஆசை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை சந்தித்தார். அவரை சந்தித்ததிலிருந்து அவரது ரூட்டே மாறியது. மனம் கவிதையை நாடியது. பாட்டுகள் எழுதுவதிலேயே ஆர்வம் ஏற்பட்டது. பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுள்ளவர். கடிதம் எழுதும்போது கூட வாழ்க பாரதிதாசனார்! என்று எழுதி விட்டுதான் தொடங்குவார். அவர் தலைமையில் தான் எங்கள் திருமணமும் நடந்தது.

பட்டுக்கோட்டையார் இயற்றிய பாட்டுகள் பற்றி…

அவர் எழுதிய பாட்டுகள் யாவும் அவரது சொந்த அனுபவத்தில் எழுதியது. ரொம்ப கஷ்டப்பட்டு அதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தால் எழுதினார். ஆனால் இப்போதுள்ள கவிஞர்கள் அந்த கஷ்டங்களில் பாதி கூட அனுபவித்து இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

உங்கள் கணவர் எழுதிய பாடல்களில் நீங்கள் அசைபோடும்… அதாவது பிடித்த பாடல்கள்?

எல்லாமே பிடிக்கும். காடு வெளைஞ்சென்ன, மச்சான்… நமக்கு கையும் காலும் தானே மிச்சம் என்ற பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

உங்கள் ஓய்வு நேரங்களை எப்படிக் கழிக்கிறீர்கள்?

டி.வியில் நாடக சீரியல்களை பார்ப்பேன். பழைய படங்கள் போட்டால் பார்ப்பேன்.

கவிஞர் கண்ணதாசனுக்கு விசாலி கண்ணதாசன் வாரிசாக உள்ளார். கவிஞர் மருதகாசிக்கு அவரது மகன் மருதபரணி உள்ளார். அதேபோல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரதுக்கு வாரிசு என்று யாரும் இல்லையே?

எனது ஒரே மகன் குமாரவேலு கவர்னர் மாளிகையில் ப.ஆர்.ஓ.வாக பணிபுரிகிறான். அவனுக்கு எழுத்தில் நாட்டம் இருந்தாலும் அதில் நேரம் இல்லை. அவனுக்கு அகல்யா என்ற மகளும், செல்வசுந்தரம் என்ற மகனும் (பேரக் குழந்தைகள்) உள்ளனர்.

பேரப்பிள்ளைகளில் யாராவது பட்டுக்கோட்டையாரின் வாரிசாக வருவார்களா?

வந்தால் மகிழ்ச்சியே!

உங்கள் கணவரின் சிநேகிதர்கள் யார்?

ஓ.ஏ.கே. தேவரும், சிவாஜி கணேசனும்தான் ஆரம்ப கால சிநேகிதர்கள். 3 பேரும் சேர்ந்து சக்தி நாடக சபா நடத்தி வந்தார்கள். தொடர்ந்து நடத்த வசதி இல்லாததால் 3 பேரும் சபாவை   கலைத்து விட்டு தனித் தனியாக மெட்ராஸ் போனாங்க… 3 பேருமே தங்களுக்குரிய பாணியில் சினிமாவில் நிலைத்து பெயர் பெற்றார்கள். சிமான உலகில் புகுந்ததும் எம்.ஜி.ஆர். என் கணவருக்கு நெருங்கிய நண்பர் ஆனார். அவருக்குத்தான் நிறைய பாட்டுகள் எழுதி உள்ளார். என் கணவரது மறைவு கேட்டு எம்.ஜி.ஆர். துடிச்ச துடிப்பு இப்போது நினைத்தாலும் என் கண்கள் கலங்கி விடும் (சொல்லும்போது நிஜமாகவே கண் கலங்கி கண்ணீர் துளிகள் பூத்தது).

தமிழக அரசு உங்களுக்கு பல உதவிகள் செய்து இருப்பது பற்றி…?

என் கணவர் மீது எம்.ஜி.ஆர்., கலைஞர் இருவருக்குமே பாசம் உண்டு. இருவருமே சினிமா உலகில் இருந்து வந்தவர்கள். ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது என்னை நேரில் அழைத்து கவுரவப்படுத்தி உதவி செய்தார். இன்னும் என்ன வேண்டும்? என்று கேட்டு மகிழவைத்தார். இப்போது பட்டுக்கோட்டையில் தமிழக அரசு ரூ. 20 லட்சம் செலவில் என் கணவருக்கு மணி மண்டபம் கட்டி வருகிறது. இந்த ஆண்டு முடிவுக்குள் கலைஞரே வந்து திறக்க போவதாகவும் அறிந்தேன். முன்கூட்டியே அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் மலர் இதழிலிருந்து

சாதனை படைத்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

தஞ்சை மாவட்டம பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 13.4.1930இல் பிறந்தார். தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4வதாகப் பிறந்தவர் கல்யாணசுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம்.

உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்யாணசுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்குப் போகவில்லை.

அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார்.

தந்தை அருணாசல கவிராயர் கவிதை எழுதும் ஆற்றல் உடையவர். தந்தையைப் போலவே கணபதி சுந்தரமும் கவிதை பாடுவதில் வல்லவர். சிறந்த ஓவியராகவும் விளங்கினார். அத்தகைய அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த கல்யாணசுந்தரத்திடம் கவிதை புனையும் ஆற்றல் இயல்பாகவே அமைந்துவிட்டது.

இளம் வயதிலேயே, பாடல்களைப் பாடுவதில் கல்யாணசுந்தரம் ஆர்வமாக இருந்தார்.

நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பிறகு பார்த்துவிட்டு வந்தவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக்கொண்டிருப்பது கல்யாணசுந்தரத்தின் விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளும் கம்யூனிசக் கொள்கைகளும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

இதனைத் தொடர்ந்து இளம் வயதிலேயே மேடைப் பாடகரானார்.

நல்லதைச் சொன்னா நாத்திகனா?

இதுதான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் முதல் பாடலாகும். இதை எழுதி அண்ணன் கணபதி சுந்தரத்திடம் காட்டி அவரது பாராட்டை பெற்றார்.

சினிமா சிந்தனை மேலோங்க கல்யாணசுந்தரம் கிளம்பி சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த டி.எஸ்.துரைராஜ் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நாங்கள் எல்லாம் நாடகத்தில் நடித்துவிட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். நீயும் முதலில் நாடகம் முடித்து விட்டுப் பின்பு சினிமாவுக்கு வருவதான் சிறந்தது என்று டி.எஸ்.துரைராஜ் ஆலோசனை கூறியதோடு சிபாரிசு கடிதம் கொடுத்து சக்தி நாடக சபாவுக்கு அனுப்பி வைத்தார்.

முதலில் நாடகத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு தரவில்லை. நாடக சபாவுக்கான ஆயத்த வேலைகளையே செய்து வந்தார். பின்னர் அவரது குட்டிக்கதைகளையும், பாடல் திறமையையும் அறிந்ததால், நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். என் தங்கை, கவியின் கனவு ஆகிய நாடகங்களில் நடித்தார்.

கவியின் கனவு நாடகத்தில் முக்கியமான ராஜகுரு வேடமேற்று நடத்து வந்த எம்.என்.நம்பியார் சபாவில் இருந்து விலகி விட்டதால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கல்யாணசுந்தரத்துக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரம் அவருக்கு புகழைத் தேடிக்கொடுத்தது. அப்போது ஏ.கே.சுந்தரம் என்றே அழைக்கப்பட்டார்.

1954ஆம் ஆண்டில் டி.கே.பாலசந்திரன் தயாரித்த கண்ணின் மணிகள் என்ற நாடகத்தில் கல்யாணசுந்தரம் போலீஸ்காரர் வேடமேற்று நடித்தார்.

அந்த நாடகத்தில் அவர் எழுதிய, தேனாறு பாயுது. செங்கதிரும் சாயுது ஆனால் மக்கள் வயிறு காயுது என்ற பாடல் பிரபலமானது.

இந்த பாட்டுத்தான் பின்னர் சில புதிய கருத்துக்களோடு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு சினிமாப் படத்திலும் இடம் பெற்றது.

பிறகு புதுச்சேரி சென்று தனது மானசீக குருவான பாரதிதாசனை சந்தித்தார். ஏற்கெனவே அறிமுகம் ஆகி இருந்த கல்யாணசுந்தரத்தை அவர் தன்னுடன் தங்கி இருந்து குயில் ஏட்டை வெளியிடும் பணியில் ஈடுபடுமாறு கூறினார். அதன்படியே பாரதிதாசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

அந்த சமயத்தில் பாரதிதாசன் எழுதும் கவிதைகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சமூகப் பார்வையை கூர்மைப்படுத்தியது எனலாம்.

பாரதிதாசனிடம் மாணவராக இருந்து கவிதை இலக்கணங்களை கற்றுக் கொண்டார். பல நல்ல கவிதைகளை எழுதி பாராட்டும் பெற்றார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு வசனம், பாடல் எழுதும் பணியில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தார். கல்யாண சுந்தரத்தையும் பாட்டு எழுதுவதற்காக அங்கு அழைத்துச் சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் மாடர்ன் தியேட்டர் சாருடன், பாரதிதாசனுக்கு கருத்து ஏற்பட்டு திரும்பினார். உடனே அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டார். ஆனால் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தை தட்டிக் கொடுத்து நீ முன்னேற வேண்டியவன், பொறுத்துக் கொண்டு இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு போனார்.

குருவின் கட்டளையை ஏற்று கல்யாணசுந்தரம் சேலத்திலேயே தங்கி இருந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா படங்களுக்கு பாடல் எழுதினார்.

இப்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட உலக பிரவேசத்துக்கும் துணையாக பாரதிதாசன் விளங்கியதால் தன்னுடைய கவிதை, கடிதம் எதுவாக இருந்தாலும் முதலில் பாரதிதாசன் துணை என்று எழுதும் வழக்கத்தை கையாண்டார். சில பாடல் எழுதும்போது வாழ்க பாரதிதாசன் என்றும் எழுதி இருக்கிறார்.

1950ஆம் ஆண்டுவாக்கில் சினிமாவுக்கு பாட்டெழுதுவதில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணகவி போன்றோர் பிரபலமாக இருந்தார்கள். அந்தக் காலகட்டத்திலேயே கல்யாணசுந்தரமும் நுழைந்தார்.

1954இல் கல்யாணசுந்தரம் படித்த பெண் என்ற படத்துக்குத்தான் முதன் முதலாக 2 பாடல்கள் எழுதினார். ஆனால் அந்தப் படம் வெளிவர தாமதமானது.

இதனால் அவர் பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் மகேஸ்வரி என்பதாகும். இந்தப்படம் 13.11.1955இல் வெளிவந்தது. அதற்கு அடுத்து 20.4.1956இல் படித்த பெண் வெளிவந்தது.

மகேஸ்வரி படத்தில் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்: அறம் காத்த தேவியே, குலம் காத்த தேவியே! _ நல் அறிவின் உருவமான சோதியே கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே! என்பதாகும்.

1956ஆம் ஆண்டில் வெளிவந்த பாசவலை, ரங்கோன் ராதா, மர்மவீரன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார்.

பின்னர் 1957, 1958ஆம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் நடித்த படங்களிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெறத் தொடங்கின.

அந்த காலத்தில் திரை உலகில் நுழைவது என்பது எளிதான காரியமில்லை. அதற்கு கல்யாணசுந்தரம் விதிவிலக்கல்ல. பல சோதனைகளை அனுபவித்து இருக்கிறார்.

சென்னைக்கு வந்து அவர் குடியேறியது ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் இருந்த 1-0ஆம் நெம்பர் வீட்டில். அங்கு ஒரு அறையை 10 ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். அது சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே. தேவரும் தங்கி இருந்தனர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆரம்ப காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராக இருந்து வந்திருக்கிறார்.

சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். அதற்குரிய பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றார். பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வேண்ணா வந்து பாருங்கோ என்று பதில் வந்தது. ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்தார். நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும் என்று சொல்லிவிட்டு அந்த பட அதிபர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

உடனே கல்யாணசுந்தரம் தனது சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து ஏதோ சில வரிகள் எழுதி அதை மேஜை மீது வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி சென்று விட்டார். கொஞ்ச நேரத்தில் படக் கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார்.

கல்யாணசுந்தரம் அப்படி என்னதான் எழுதி வைத்தார்? இதோ இதுதான்: தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன், நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன், நீ யார் என்னை நில் என்று சொல்ல?

இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.

மாடர்ன் தியேட்டர்சுக்கு அவர் பாடல் எழுதிக் கொண்டிருந்தபோதும் ஒரு சம்பவம் நடந்தது. அதிபர் டி.ஆர்.சுந்தரம் பாடலை திருப்பி அனுப்பி விட்டார். உடனே கல்யாணசுந்தரத்தை நண்பர்கள் சமாதானப்படுத்தி சுந்தரத்தின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே நாற்காலியில் அமர்ந்தபடி சுந்தரம் பேசினார். அவருக்கு எதிரில் நாற்காலி எதுவும் போடப்படவில்லை. அதுதான் அங்கு வழக்கம். இதனால் கல்யாணசுந்தரமும் அவருடன் சென்ற 2 நண்பர்களும் நின்று கொண்டே இருந்தனர். திடீரென்று கல்யாணசுந்தரம் ஒரு பேப்பர் கேட்டு வாங்கினார். அதில் ஒரு வரி எழுதி சுந்தரத்திடம் நீட்டினார்.

அவரும் அதை பார்த்தார். முகம் மாறியது. சற்று நேரத்தில் 3 நாற்காலிகள் வந்தன. 3 பேரும் உட்கார முடிந்தது.

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும் இது தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிக் கொடுத்தது.

கல்யாணசுந்தரத்துக்கு வெற்றிமேல் வெற்றி குவியத் தொடங்கியது.

1956க்கு பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களோடு பல படங்கள் வெளிவர தொடங்கின. குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் தத்துவப் பாடல்கள் இடம் பெற்றன. அவை அவரை புகழ் ஏணியின் உச்சிக்கே கொண்டு சென்றன.

இயக்குனர் கே.சுப்பிரமணியம், கல்யாணசுந்தரத்தை எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ், ஜானகி, ஆர்.எம்.வீரப்பனுக்கு அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் முதல் சொந்தப்படமான நாடோடி மன்னன் படத்துக்கு கல்யாணசுந்தரம் பல பாடல்களை எழுதினார். அதில் தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. கல்யாணசுந்தரம் புகழின் சிகரத்தை அடைந்தார்.

எம்.ஜி.ஆர். நடித்த அரசிளங்குமரி, கலைஅரசி, சக்கரவர்த்தி திருமகள், மகாதேவி, விக்கிரமாதித்தன், திருடாதே போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி, இரும்புத்திரை, உத்தமபுத்திரன், பதிபக்தி, தங்கப்பதுமை, பாகப்பிரிவினை, புனர்ஜென்மம் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.

டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த கல்யாணபரிசு படத்துக்கு எழுதிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆற்றலை கவிஞர் கண்ணதாசன் புகழ்ந்து பாராட்டியுள்ளார். ஒரு கட்டுரையில் அதுபற்றி கண்ணதாசன் கூறியிருப்பதாவது:-

திரை உலகில் பாட்டு எழுதுவோர் வரலாம். போகலாம். ஆனால் ஒரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்பமானான் ஒரு பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்கினான் மண்ணுக்குள்ளே! திரையுலகில் அவனே தத்துவ ஞானி. ஆழ்ந்த சிந்தனை அழுத்தமான சொல்லாட்சி. ஒரு வரிக்கு ஒரு வரி உயிர் கொடுக்கும் தன்மை. அவன் எழுதிய பாடல் எல்லாம் அப்படி அமைந்ததாகும்.

இவ்வாறு கண்ணதாசன் கூறி இருக்கிறார்.

புகழின் உச்சியில் இருந்தபோது 1959ஆம் ஆண்டு மத்தியில் கல்யாணசுந்தரத்துக்கு மூக்கில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. பிறகு அவர் வீடு திரும்பினார்.

மறுபடியும் மூக்கில் தொந்தரவு ஏற்படவே அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் 8.10.1959 அன்று மரணம் அடைந்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தபோது அவருக்கு 29 வயதுதான். மனைவி பெயர் கவுரவாம்பாள். ஒரே மகன் குமாரவேல் 5 மாத கைக்குழந்தை.

சென்னை ராயப்பேட்டை ஜெகதாம்பாள் காலனியில் உள்ள எண் 15 வீட்டில் குடியிருந்து வந்தனர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சந்திரபாபு, டைரக்டர்கள் பீம்சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

1981ஆம் ஆண்டு, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப்படுவதாக, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். விருது வழங்கும் விழாவுக்கு, கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவாம்பாள் வந்திருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.

1995ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்குவதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக, கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவாம்பாளுக்கு ரூ. 5 லட்சமும், மகன் குமாரவேலுக்கு ரூ. 5 லட்சமும் 3.11.1995இல் ஜெயலலிதா வழங்கினார். (குமாரவேலு தமிழக அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றுகிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவை போற்றும் வகையில், பட்டுக்கோட்டையில் மணி மண்டபம் ஒன்றை அரசு அமைத்துள்ளது.

_ தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகளிலிருந்து

இப்படி ஒரு கவிஞனா?

மெய்சிலிர்க்கும் மெல்லிசை மன்னர்

மாடர்ன் தியேட்டர்ஸ், ஏ.வி.எம். போன்ற பெரிய பட கம்பெனிகள் பாப்புலர் இந்தி டியூன்களைக் கொடுத்து அதையே தமிழ்ல போடச் சொல்லி இசையமைப்பாளர்களை இம்சைப்படுத்துவாங்க. அப்படி இருந்த ஒரு வழக்கத்தை பிரேக் பண்ணவங்க விஸ்வநாதன் ராமமூர்த்தியாகிய நாங்கதான்!

ஹிட் சாங்ஸ் கொடுத்ததால எங்க மேலே மதிப்பேற்பட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் அவங்க அடுத்த படம் பாசவலைக்கும் எங்களையே ஒப்பந்தம் பண்ணாங்க. படம் ஒரு மியூஸிகல் சப்ஜெக்ட், அதனால பாட்டுக்கள் எல்லாம் நல்லா வரணும்னு சொல்லிட்டாங்க.

மறுபடியும் சேலத்துல காம்ப் பாசவலை படத்துக்காக. ஒரு நாள் மாடர்ன் தியேட்டர்ஸ் மானேஜர் சுலைமான் என்கிட்ட வந்தாரு.

பையன் ஒருத்தன் வந்திருக்கான்… பாட்டெல்லாம் நல்லா எழுதுவானாம்… நான் நம்ம படத்தோட சில சிச்சுவேஷன் சொல்லியிருக்கேன்… அவன் பாட்டு எழுதிக் கொண்டு வந்திருக்கானாம்… என்று சுலைமான் சொன்னாரு.

எனக்கு பாசவலை படத்தோட கதை மனப்பாடமே ஆயிடுச்சி… நான் விஷுவலாவே மனசுக்குள் படமே பார்த்துட்டேன்.

நான், சுலைமான்… எங்களுக்கு ஏற்கெனவே கைவசம் நிறைய படங்கள் இருக்கு… இந்தப் படத்துக்காக இங்கே இருக்கப்போறது ஆறே நாள்தான்… மெட்ராஸ்ல வேற நிறைய வேலை இருக்கு… கண்ணதாசன், மருதகாசி யாரையாவது எழுதச் சொல்லுங்க… இப்ப புதுசா பாட்டெழுதறவங்களைப் பாக்கறதுல எல்லாம் எங்க டைமை வேஸ்ட் பண்ண முடியாது…னு கொஞ்சம் அகந்தையோடு சொன்னேன்.

அந்தப் பையன் போயிட்டு அடுத்த நாளும் வந்தான். என்னங்க… அந்தப் பையன் நல்லாவே பாட்டு எழுதியிருக்கான். அதைக் கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்… நல்லா இருந்தா கூப்பிடுங்க… நல்லா இல்லேன்னா நானே அனுப்பிச்சிடறேன்… என்றார் சுலைமான்.

சரி.. சரி… அந்தப் பாட்டை வாங்கிட்டு வாங்கனு சொன்னேன். அந்தப் பாட்டை படிச்சேன்.

குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…

குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்…

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…

சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்…

இன்னிக்கும் எனக்குப் பசுமையா நினைவில் இருக்கு நேத்து ரிக்கார்ட் பண்ண பாட்டோட வரிகள்லாம் இன்னிக்கு ஞாபகத்துக்கு வரலை. ஆனா, கிட்டத்தட்ட 32 வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்ட பாட்டோட வரிகள் இவை.

இந்தப் பாட்டைப் படிச்சுட்டு நான் அசந்து போயிட்டேன். இப்படி ஒரு கவிஞன் இருக்கானா?… உடனே அவனை வரச்சொல்லுங்க சார்…னு சுலைமான் கிட்ட சொன்னேன்.

என் எதிர்ல வந்து நின்ன அந்த இளைஞன் பனைமர உசரத்துக்கு இருந்தான். அந்த இளைஞன்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவனை அப்படியே உட்கார வெச்சு, அந்தப் பாட்டு கொடுத்த இன்ஸ்பிரேஷன்ல பத்தே நிமிஷத்துல அதுக்கு டியூன் போட்டுட்டேன்.

அன்னிக்கு சாயந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்ல ஒரு பூஜை ரூம் உண்டு. அதுக்குள்ள போயிட்டுக் கதவைச் சாத்திட்டு சாமி படங்கள் முன்னால ஆண்டவா… நான் எப்படிப்பட்ட தவறு செய்துட்டேன்…னு சுவத்தில மோதி அழுதேன்.

ஏண்டா விஸ்வநாதா… அதுக்குள்ள உனக்கு அவ்வளவு திமிர் வந்துடுச்சா? அறிவு கெட்டவனே. நீ பெரிய ஆள்னு நினைப்பா… கவிதை எழுதி வந்தவன் கிட்ட என்ன இருக்குனு தெரியாம திருப்பி அனுப்பற அளவுக்கு உனக்கு அவ்வளவு கொழுப்பாடா…?னு என்னை நானே திட்டிக்கிட்டுக் கண்ணீர் விட்டேன். ராத்திரி சாப்பிடாம உண்ணாவிரதம் இருக்கறதுனு முடிவு பண்ணிப் பட்டினி கிடந்தேன். தூக்கமே இல்லை. என்னை நானே வருத்திக்கிட்டேன்.

அந்தப் படத்துல இன்னும் சில பாடல்கள் எழுத சான்ஸ் கொடுத்தேன். இது முடிஞ்சவுடனே, கல்யாணசுந்தரத்தைக் கையோடு மெட்ராஸுக்கு அழைச்சிக்கிட்டு வந்தேன். டைரக்டர் பீம்சிங்கிட்டே அறிமுகம் செங்சு வெச்சேன்.

பாட்டு பிறந்த கதை

ஆடை கட்டி வந்த நிலவோ

சி.பி.ஏ. ஞானப்பிரகாசம்

ஒருமுறை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரது சகோதரர் கணபதி சுந்தரமும் பெண்பார்க்க, பக்கத்து கிராமமான ஆத்திக்கோட்டைக்கு சென்றிருக்கிறார்கள். கிராம வழக்கப்படி பெண் பார்த்து முடித்துவிட்டு தம்பியும் தமையனும் குதிரை வண்டியில் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்கள். வரும் வழியில், கவிஞரின் தமையனார், தம்பி பெண் நன்றாயிருக்கிறாளா? என்று வினைவியிருக்கிறார். அதற்குக் கவிஞர், அழகான பெண்ணண்ணே என்றிருக்கிறார்.

வீட்டுக்கு வந்ததும், தம்பி பெண் எனக்கல்ல உனக்குத் தான் என்றிருக்கிறார் கவிஞரின் தமையனார். உடனே கவிஞர் சந்தோஷ மிகுதியால் ஏட்டில் ஒரு நான்கு வரிகளை எழுதி வைத்துக் கொண்டார். அவர் அவ்வாறு எழுதி வைத்திருந்த வரிகளைத் தான் பிறகு அமுதவல்லி திரைப்படத்துக்குப் பாடலாக வழங்கினார். அந்தப் பாடல்,

ஆடை கட்டி வந்த நிலலோ கண்ணில்

மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர்

ஓடையில் மிதக்கும் மலர்

ஜாடையில் சிரிக்கும் இவள்

காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்

கூடு கட்டி வாழும் குயிலோ!

முதலில் கவிஞருக்குத் திருமணமான பின்னர்தான் அவரது அண்ணனுக்குத் திருமணமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சின்னக்குட்டி நாத்தனா

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரையுலகில் எழுச்சியும் கருத்துச் செறிவும் உள்ள பாடல்களை தருவதில் நிகரில்லாமல் விளங்கினார்.

அதே சமயம் அவர் நகைச்சுவையான பாடல் எழுதுவதிலும் அலாதியான திறமை உள்ளவர்…

பட்டுக்கோட்டையார் திரையுலகில் பிரபலம் ஆகாத காலத்தில் நடிகர் டி.கே.பாலச்சந்திரனின் நாடகக் குழுவுக்கு நிறைய பாடல்களை எழுதித் தந்து கொண்டிருந்தார்…

ஒரு சமயம் அந்த குழுவுடன் பட்டுக்கோட்டையாரும் வெளியூர் நாடகம் ஒன்றிற்கு சென்றிருந்தார்… நாடகம் நடந்து முடிந்த பிறகு காண்ட்ராக்டர் தலைமறைவாகி விட்டதால், இவர்களுடைய குழுவினர் அம்போ என்று நின்றார்களாம்.

கடைசியில் எப்படியோ சென்னை வந்து சேருவதற்காக ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள காசுகளை துழாவி எடுத்துத் தந்து பஸ் டிக்கெட் எடுத்து வண்டியில் ஏறினார்களாம்…

அந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் குழுவினரின் வேதனையை மறந்து சகஜ நிலைக்குத் திரும்புவதற்காக பஸ்ஸிலேயே ஒரு பாட்டை எழுதி பட்டுக்கோட்டையார் பாட ஆரம்பித்தாராம்…

சின்னக்குட்டி நாத்தனா

சில்லரையை மாத்தினா…

குன்னக்குடி லாரியில

குடும்பத்தையே ஏத்தினா…

என்று துவங்கும் அந்தப் பாடலை பட்டுக்கோட்டையார் வாய்விட்டுப் பாடவும், குழுவில் உள்ள அனைவரும் அடுத்த கணமே கவலையை மறந்து கோரஸாகப் பாட ஆரம்பித்துவிட்டார்களாம்…

இந்த பாடல் சிறிய மாற்றங்களுடன் பின்னர் வெளியான ஆரவல்லி படத்தில் இடம்பெற்றது.

எடைக்குப்போன பாட்டுகள்

பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே. தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஓர் அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. பட்டுக்கோட்டையாருக்கும் வாய்ப்பு இல்லை.

ஓய்வு நேரத்தில் எல்லாம் கவிஞர் கையில் கிடைத்த நோட்டுப் புத்தகங்கள் தாள்களில் எல்லாம் ஏராளமான பாடல்களை எழுதி, எழுதிக் குவித்திருக்கிறார்.

ஒருநாள் பட்டுக்கோட்டையார் தேநீர் அருந்தச் சென்றிருந்தபோது, பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி ஒருவர் பழைய பேப்பர்… பழைய பேப்பர் என்று கூவிக்கொண்டே தெருவில் போனான்.

தேவர் அவனைக் கையைத் தட்டி அழைத்தார். அறையில் இருந்த பழைய செய்தி ஏடுகளையும் காகிதங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுவிடாமல் திரட்டி எடுத்து பேப்பர்காரனிடம் போட்டுவிட்டார் தேவர். கவிஞர் டீ குடித்துவிட்டு அறைக்குத் திரும்பி வந்தார். அறை சுத்தமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. எல்லா குப்பைகளையும் எடுத்துப் பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிட்டேன் என்று தேவர் சொன்னபோது கவிஞருக்கு திக் என்றிருந்தது தாம் எழுதி வைத்திருந்த பாட்டு நோட்டுகள், காகிதங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று சுற்றும், முற்றும் பார்த்தார். எதையும் காணோம்.

பாட்டு நோட்டுகளைக் காணோமே… எடுத்து வைத்திருக்கிறீர்களா? என்று அவர் கேட்டபோது, தேவர், அடப்போங்க… உங்கள் நோட்டும் நீங்களும்… உங்க பாட்டை ஒரு பட முதலாளியும் எடுத்துக் கொள்ளவில்லை… பழைய பேப்பர்க்காரனாவது மூன்று ரூபாய்க்கு எடுத்துக் கொண்டான் என்றார் சிரித்துக் கொண்டே.

பட்டுக்கோட்டையார் பாவம்! அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதில் நல்ல, நல்ல பாட்டுக்கள் எல்லாம் எழுதி வைத்திருந்தேனே… என்றார் வருத்தம் தோய்ந்த குரலில், அட… அது போனால் என்ன? அதைவிட நல்ல பாட்டுக்களை உங்களுக்கு எழுதத் தெரியாதா என்ன? எழுதுங்களேன் என்றார் தேவர். தேவரின் அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. படித்த பெண் என்ற ஒரு படத்துக்குப் பாட்டு எழுத கவிஞருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த படம் வெளிவருவதற்குள் மகேஸ்வரி  என்ற படம் கவிஞரின் பாடலோடு வெளிவந்தது. அதன் பிறகு பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்குப் பஞ்சமே இல்லை எழுதி எழுதிப் புகழ்பெற்றார்.

அத்தனை பாடல்களும் ஓ.ஏ.கே. தேவர் குறிப்பிட்டதுபோல இன்னும் நல்ல பாட்டுகள் ஒன்றையொன்று விஞ்சும்படியான இன்னும், இன்னும் நல்ல பாடல்கள்!

சின்னக்குத்தூசி எழுதிய எத்தனை மனிதர்கள் என்ற நூலிலிருந்து…

வாழுகின்ற காலம் வரை

வாழ்ந்துவரும் நின்பெயரே!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி கவியரசு கண்ணதாசன் எழுதிய கவிதை

சின்ன வயதுமகன்

சிரித்தமுகம் பெற்றமகன்

அன்னைக் குணம்படைத்த

அழகுமகன் சென்றானே!

கன்னல்மொழி எங்கே?

கருணைவிழி தானெங்கே?

மன்னர் மணிமுடியில்

வாழ்ந்திருந்த செந்தமிழை(த்)

தென்னவர் பொருளாக்கித்

தீங்கவிதை தந்தமகன்

கண்மூடித் தூங்குகிறான்

கனவுநிலை காணுகிறான்!

விழுதுவிட வந்தமகன்

விழுந்துவிட்டான் சாவினிலே!

அழுதால் வருவானோ?

அரற்றுவதால் கிடைப்பானோ?

ஆறோடி நீரோடி

அழகிழந்த விழிகளெல்லாம்

போராடிக் கொண்டுவரப்

போமோ அவனுயிரை?

தன்னுயிரைத் தருவதனால்

தங்கமகன் பிழைப்பானோ?

என்னுயிரைத் தருகின்றேன்

எங்கேஎன் மாகவிஞன்?

வெற்றிலையும் வாயும்

விளையாடும் வேளையிலே

நெற்றியிலே சிந்தை

நிழலோடி நின்றிருக்கும்

கற்றதமிழ் விழியில்

கவியாக வந்திருக்கும்

அண்ணே என உரைத்தால்

அதிலோர் சுவையிருக்கும்!

பிள்ளைப் பருவம்

பிழையா இளம்பருவம்!

கழுத்தில் தவழ்ந்துவரும்

கைத்தறியின் துண்டெல்லாம்

பழுத்த தமிழ்பாடும்,

பண்புரைக்கும் வாழ்கவெனும்!

வாழும் வயதுமகன்

வளர்ந்துவரும் தேன்கவிஞன்

ஆண்டிரண்டு செல்லவில்லை

அன்புமனை கைப்பிடித்து!

பிஞ்சுமுகம் பாராமல்,

பேதைகுரல் கேளாமல்,

நெஞ்சொடிய ஓலமிடும்

நேயர்முகம் காணாமல்,

காத்திருக்கும் படவுலகின்

கையணைவைக் கருதாமல்

நின்றதுபோல் நின்று

நெடுந்தூரம் பறந்துவிட்டான்!!

முதிர்ந்த கிழமிலையே!

மூச்சடங்கும் வயதிலையே!

உதிர்ந்த மரமிலையே!

உலர்ந்துவிட்ட கொடியிலையே!

வறண்ட குளமிலையே!

வற்றிவிட்ட நதியிலையே!

இருண்ட பொழுதிலையே!

ஏய்க்கின்ற நாளிலையே!

ஆரம்ப மாவதெலாம்

பெண்ணுக்குள் என்றானே,

ஆடி அடங்குகிறான்

மண்ணுக்குள் என்சொல்வேன்?

எங்கினிமேல் காண்போம்?

எவர் இனிமேல் புன்னகைப்பார்?

தங்கமகன் போனபின்னர்

தமிழுக்கும் கதியிலையே!

வெங்கொடுமைச் சாக்காடே!

விழுங்குவதற் கேற்றபொருள்

மங்காத செங்குருதி

மகனென்றோ எண்ணமிட்டாய்?

கல்யாண சுந்தரனே!

கண்ணியனே! ஓர் பொழுதும்

பொல்லாத காரியங்கள்

புரியாத பண்பினனே!

சாவதுல கியற்கை

சாவதற்கும் நீதியுண்டு!

நீதியிலாச் சாவுன்னை

நெருங்கிவிட்ட தென்றாலும்

வாழும் தமிழ்நாடும்

வளர்தமிழும் கலைஞர்களும்

வாழுகின்ற காலம் வரை

வாழ்ந்துவரும் நின்பெயரே!

தலைநிமிர்ந்த தமிழர்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு அகல்யா என்ற கவிஞரைப் பற்றி உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். யார் அந்த அகல்யா?

பாவேந்தர் பாரதிதாசன் ஒருநாள் தனக்கு வந்த கவிதைகளைப் படித்துக் கொண்டிருந்தார்.அதில் அகல்யா என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் பிரமாதமாய் இருந்தன. உடனே தன் மாணவர்களை அழைத்தார். ஆம்பிளைக் கவிஞர்களையெல்லாம் மிஞ்சுறா மாதிரி ஒரு பெண், கவிதை எழுதுகிறாள். படித்தீர்களா? என்று அந்தக் கவிதைகளை அவர்களுக்குப் படிக்கக் கொடுத்தார். அதைக் கேட்டதும் அங்கிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு பயங்கர சந்தோஷம் அவர் அப்போது பாரதிதாசனுக்கு உதவியாளராக இருந்தார். பட்டுக்கோட்டையின் சந்தோஷத்துக்குக் காரணமிருந்தது. அவர்தான் அந்த அகல்யா. அ.கல்யாணசுந்தரம் என்ற தன் பெயரைத்தான் அகல்யா என்று சுருக்கியிருந்தார்.

பட்டுக்கோட்டைக்கருகில் செங்கப்படுதான்காடு கிராமத்தில் அருணாசலம் பிள்ளைக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் கல்யாணசுந்தரம். அருணாசல பிள்ளைக்கு ஆறு குழந்தைகள். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதியுடன் ஓராண்டு அரிச்சுவடி படித்ததோடு கல்யாணசுந்தரத்தின் பள்ளிப் படிப்பு முடிந்தது.

நாடகம் பார்ப்பது, சினிமா பார்ப்பது, பார்த்துவிட்டு அவற்றில் கேட்ட பாடல்களை வரி பிசகாமல் பாடிக் கொண்டிருப்பது சிறுவன் கல்யாணசுந்தரத்தின் விருப்பமான பொழுதுபோக்குகள்.

கல்யாணசுந்தரத்தின் அண்ணன் கணபதிக்கும் பாடல்கள் இயற்றுவதில் ஆர்வம். இருவருமே சினிமாக் கனவுகளோடு சென்னை கிளம்பினார்கள். சென்னையில் வந்திறங்கிய போது அவர்களுக்கொரு அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை நகரமே கலவரத்தில் இருந்தது. காரணம், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் அது. எங்கும் செல்ல முடியவில்லை. வேறு வழியில்லாமல் மீண்டும் தங்கள் சொந்த கிராமத்தின் வறுமைக்கே திரும்பினார்கள். சினிமா ஆசையைத் துறந்து அண்ணன். பணம் சம்பாதிப்பதற்காக பினாங்கு போய்விட்டார். கலையார்வம் மட்டும் தணியவில்லை. சினிமாவுக்குப் பாடல் எழுதுவதற்காக மீண்டும் படையெடுத்தார்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு சென்று வாய்ப்பு கேட்டார் கல்யாணசுந்தரம். ஆனால் அங்கு சினிமா சான்ஸ் கிடைக்கவில்லை. நாடக சான்ஸுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்த ஒரு நண்பர் மதுரையில் நாடகம் நடத்திக் கொண்டிருந்த சக்தி நாடக சபாவுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தனுப்பினார். அந்தக் கடிதத்தைக் கொடுத்ததும் நாடக சபாவில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் வேஷம் எதுவும் தரவில்லை. பாட்டெழுதவும் வாய்ப்புத் தரவில்லை. எடுபிடி வேலைதான். வருத்தத்திலிருந்த கல்யாணசுந்தரத்துக்கு திடீரென்று அதிர்ஷ்டம் அடித்தது. கவியின் கனவு என்ற நாடகத்தில் ராஜ குருவாய் நம்பியார்தான் நடித்து வந்தார். அவரால் நடிக்க இயலவில்லை. உடனே சபாக்காரர்கள் கல்யாணசுந்தரத்தை அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கச் சொன்னார்கள். பிரமாதமாய் நடித்தார். அவரது வாழ்க்கை பிரகாசமானது.

ஒருமுறை பாண்டிச்சேரியில் நாடகம் போட்டுக் கொண்டிருந்த சிலரின் சிபாரிசுக் கடிதங்களோடு பாவேந்தர் பாரதிதாசனைச் சந்திக்கச் சென்றார். கல்யாணசுந்தரத்தையும் அவரது கவிதைகளையும் கண்ட பாரதிதாசனுக்கு அவரை உடனே பிடித்துப் போய்விட்டது. உடனே நாடகக் கம்பெனி வேலையை விட்டுவிட்டு கவிஞரின் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார். கவிஞரின் குயில் பத்திரிகையைக் கவனிப்பதும் அவர் எழுதும் பாடல்களைப் படியெடுப்பதும்தான் கல்யாணசுந்தரத்தின் வேலை. ஏக சந்தோஷம். பாவேந்தரிடம் வேலை பார்ப்பதென்றால் சும்மாவா?

பாவேந்தரிடம் இருக்கும்போதே சினிமா ஆசை மீண்டும் துளிர்த்தது. சென்னைக்குப் புறப்பட்டு வந்தார் கல்யாணசுந்தரம். சென்னை ராயபேட்டை பொன்னுச்சாமி நாயக்கர் தெரு, 10ஆம் நெம்பர் வீடு. முன்புறத்தில் ஒரு சிறிய அறை. மாதம் பத்து ரூபா வாடகை. அந்த அறைக்குள் கல்யாணசுந்தரம், அவரது நண்பர்கள் ஓவியர் ராமச்சந்திரன், நடிகர் ஓ.ஏ.கே.தேவர், தேவரும், கல்யாணசுந்தரமும் நெடு நெடு உயரமானவர்கள். நீட்டிப் படுத்தார்களானால் கால்கள் அறைக்கு வெளியே நீளும். அதே தெருவில் இன்னொரு அறையில் நடிகர் நம்பிராஜனும் அவரது தம்பி பாலகிருஷ்ணனும் தங்கியிருந்தனர்.

நம்பிராஜன்தான் முதலில் பட்டுக்கோட்டையாருக்கு சினிமா வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது. படித்தப் பெண் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளரை பட்டுக்கோட்டையாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதினார் கல்யாணசுந்தரம். அப்போது அவருக்கு வயது இருபத்து நான்கு பாடல் ஒன்றுக்கு அவருக்கு நூற்றைம்பது ரூபாய் சன்மானம் என்று சொல்லப்பட்டது. 1954இல் இயற்றப்பட்ட இந்த இரண்டு பாடல்கள்தான் கல்யாண சுந்தரத்தின் முதல் இரண்டு சினிமா பாடல்கள். சந்தோஷத்தில் மிதந்த கல்யாணசுந்தரத்துக்கு ஒரு வேதனையும் காத்திருந்தது. சொன்ன சம்பளத்தை தயாரிப்பாளர் அவருக்குக் கொடுக்கவில்லை. எத்தனையோ முறை கேட்டும் அவர் அலட்சியப்படுத்தினார். ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்றபோது வெளியிலே நில் என்று சொல்லிவிட்டார். கல்யாணசுந்தரத்துக்கு தாங்கமுடியவில்லை. தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன். நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன், நீ யார் என்னை நில்லென்று சொல்ல? என்று ஒரு காகிதத்தில் எழுதி கதவிடுக்கில் செருகி வைத்துவிட்டு, வந்து விட்டார். படித்துப் பார்த்த பட அதிபர் பதறிப் போனார். கவிஞனின் கோபத்துக்கு ஆளாகி விட்டோமே என்று பயந்து சன்மானத்தைக் கொடுத்தனுப்பினார்.

பலரிடம் வாய்ப்புக் கேட்டு போனாலும் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டார் பட்டுக்கோட்டையார். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் ஒரு பழக்கம். தன்னைச் சந்திக்க வருபவர்களை உட்கார வைத்துப் பேச மாட்டார். ஒருமுறை எம்.எஸ்.விஸ்வநாதன், பட்டுக்கோட்டையாரை அழைத்துக்கொண்டு டி.ஆர்.சுந்தரத்தைச் சந்திக்கச் சென்றார். அந்த அறையில் சுந்தரத்துக்கு மட்டும் ஒரே ஒரு நாற்காலி இருந்தது. மற்றவர்கள் நின்றுகொண்டே பேசவேண்டியிருந்தது. அதைக் கண்டு பட்டுக்கோட்டையாருக்கு எரிச்சல். உடனே ஒரு காகிதம் கேட்டார். வந்தது… எழுதி முதலாளி சுந்தரத்திடம் கொடுத்தார். மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்! என்று எழுதினார். அதைப் படித்ததும் சுந்தரத்துக்கு அதிர்ச்சி. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மூன்று நாற்காலிகள் போடச் சொன்னார்.

பாசவலைக்குப் பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிரபலமான கவிஞராகிவிட்டார். எம்.ஜி.ஆர். அந்தச் சமயத்தில் சொந்தமாக நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது எம்.ஜி.ஆருக்கும், பட்டுக்கோட்டையாருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆரின் மானேஜராக இருந்த ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது, கைகளால் மேஜையில் தாளம் போட்டுக்கொண்டே காடு வௌஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும்தானே மிச்சம்! என்ற பாடலை பாடிக்காட்டினார். அது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. நாடோடி மன்னன் படத்தில் அப்பாடல் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, எம்.ஜி.ஆர். புதிதாக ஒரு காட்சியை உருவாக்கினார். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராய் ஆனதும் ஆட்சியின் கொள்கை என்று கேட்டபோது நானே போடப் போறேன் சட்டம் _ பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலைத் தான் குறிப்பிட்டார்.

மிகக் குறுகியகாலத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அடைந்த புகழ் திரையுலகில் வேறு யாரும் அடையாதது. ஒவ்வொரு பாடலிலும் அவர் கொடுத்த சமுதாயக் கருத்துகள் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன. ஆனால், அவரால் நிலைக்க முடியிவ்லலை. ரத்தக் குழாய் வெடித்து 8.10.1959 மாலை 3.45 மணிக்கு மக்கள் கவிஞர் இறந்துவிட்டார். இறக்கும்போது அவரது வயது 29!

குமுதம், 20.10.2003 இதழில் திருவேங்கிமலை சரவணன் எழுதியதிலிருந்து.

இதுதான் வாழ்க்கை!

உங்கள் வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் என்று பட்டுக்கோட்டையாரிடம் ஒரு நிருபர் வந்தார்.

அந்த நிருபரை தன்னுடைய அறையிலிருந்து அழைத்துக் கொண்டு தெருவில் நடக்கத் தொடங்கினார் கல்யாணசுந்தரம். சிறிது தூரம் நடந்தபின், ரிக்ஷாவொன்றில் ஏறி, மவுண்ட்ரோடு வந்தார்கள். பிறகு நகரப் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கினார்கள். ரயில்வே கேட்டைக் கடந்ததும் டாக்ஸி ஒன்றைப் பிடித்து வடபழனியில் ரெக்கார்டிங்காக அந்த ஸ்டூடியோவின் பாடல் பதிவுக் கூடத்தின் முன்பு இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர் அண்ணே! வாழ்க்கை வரலாறு நினைவூட்டினார்.

இதுதான் வாழ்க்கை வரலாறு. முதலில் நடையாய் நடந்தேன். பஸ்ஸில் போனேன். ரிக்ஷாவில் போனேன். இப்போ டாக்ஸி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு ஒரு பிள்ளையாண்டான் எழுதின பாட்டைக் கேட்டீங்களா? என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், உடுமலை நாராயணகவியிடம் கேட்டார்.

நல்லாதானே எழுதுறான்; என்ன சமாச்சாரம் என்றார் உடுமலை.

சட்டப்படி பார்த்தா எட்டடி தான் சொந்தம்னு எழுதியிருக்கான். அதெப்படி? ஆடி அடங்கும் மனிதனுக்கு ஆறடி நிலம்தானே சொந்தம் என்று தஞ்சை ராமையா தாஸ் கேட்க, இதிலென்ன கஞ்சத்தனம் வேண்டியிருக்குன்னு தாராளமா கூட ரெண்டடி இருக்கட்டுமே என்று பாடி இருக்கான். நல்லதுதானே! உனக்கும் எனக்கும் ஆறடி பத்தாதே! என்றார் உடுமலை நாராயணகவி.

காலைக்கதிர்

முனுசாமி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய கட்டுரையில் காலஞ்சென்ற ஜனசக்தி கே.முத்தையா எழுதுகிறார்:

ஆறடி உயரமுள்ள ஒரு வாலிபர். கழுத்தைச் சுற்றி முன் இருபுறமும் தொங்கும் வெள்ளைத்துண்டு; கையில் காகிதச் சுருள். ஜனசக்தி அலுவலகத்திற்குள் நுழைகிறார். ஆசிரியர் இருக்கும் இடம் பற்றி வினவுகிறார். அடுத்த நிமிடத்தில் அவர் முன்னால் சிரித்தபடி நிற்கிறார்.

என்னை உங்களுக்குத் தெரிகிறதா? செங்கப்படுத்தான்காடு தேர்தல் அலுவலகத்தில் நாம் சந்தித்ததை மறந்து விட்டீர்களா? நான் தான் கல்யாணசுந்தரம்!

தேர்தல் சமயத்தில் சந்தித்தை ஞாபகப்படுத்திக் கொண்டு, ஆமா! ஞாபகமிருக்கு! உட்காருங்கள். என்ன சமாச்சாரம்? என்று வினவினார் ஆசிரியர்.

நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் அப்படியே ஒரு வரி விடாமல் ஜனசக்தியில் வெளியிட வேண்டும்!

படிக்காமல் எப்படி வெளியிடமுடியும்?

இதற்கு பதில் இளைஞரின் புன் முறுவல். காகிதச் சுருள் மேஜைக்கு வருகிறது.

நண்டு செய்த தொண்டு! _ அவரது கவிதையின் தலைப்பு. இரண்டு, மூன்று முறை திரும்பத் திரும்ப படித்த பின், அந்தக் கவிதையைப் பற்றிய கவிஞரின் மதிப்பீட்டை ஆசிரியர் அவர் முன்னாலேயே ஒப்புக் கொள்கிறார்.

கவிதையின் முடிவில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று இருந்தது. சிரித்துக் கொண்டே ஆசிரியர் வினவினார்… கல்யாணசுந்தரம் என்பதே நீண்ட பெயர். அத்தோடு பட்டுக்கோட்டை என்று அடைமொழியும் தந்திருக்கிறீர்களே… கம்பன், வள்ளுவன், இளங்கோ என்று கவிஞர்களின் பெயர்கள் சுருக்கமாக இருப்பது போல், உங்கள் பெயரையும் சுருக்கிக் கொள்ளலாமே! என்றார். அவர்கள் பெரிய மேதைகள், பெரிய கவிஞர்கள், அதனால் தான் சின்ன பெயர்களாக வைத்துக் கொண்டனர். நான் சின்ன ஆள். பெயராவது பெரிய பெயராக இருக்கட்டுமே… என்று பதில் கூறினார்.

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment