பட்டுக்கோட்டையார் பற்றி தமிழக முதலமைச்சர் கலைஞர்
மு. கருணாநிதி
முதலமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை – 600 009
நாள்: 13.2.1997
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
என்கிறார் திருவள்ளுவர்.
இவ்வுலகில் 29 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்து – என்றும் நிலைத்து நிற்கும் எளிய பாடல்கள் மூலம் சமுதாயப் பிரச்சினைகளைப் பாடி, மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து – இணையிலாப் புகழ் படைத்த இனிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி (Literature is the mirror of Life) என்பார்கள்
பட்டுக்கோட்டையார் பாடல்கள், அவர் காலத்திய சமுதாயப் பிரச்சினைகளை எதிரொலித்தன.
”வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பி விடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பி விடாதே”
என்று மூடப்பழக்கங்களை நம்பி இளைஞர்கள் முடங்கி விடக் கூடாது என எச்சரிக்கிறார்.
நெசவாளர் துயர் துடைக்கும் நோக்கில் கைத்தறித் துணிகளை எல்லோரும் வாங்கி அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கவிஞரால் பாடப்பட்ட
”சின்னச்சின்ன இழை பின்னிப்பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி – நம்ம
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் வேலையடி”
என்ற பாடலைத் தமிழகத்தில் முணுமுணுக்காத தமிழர்களே இல்லை எனலாம்.
பொதுவுடமைக் கொள்கையில் நாட்டம் கொண்டிருந்த பட்டுக்கோட்டையார்,
“வசதி யிருக்கிறவன் தரமாட்டான் – அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்”
என்று பொதுவுடைமைக் கொள்கை மலரப் போர்ப் பரணி பாடினார்.
செய்யும் தொழில் எதுவாயினும் அதில் சிந்தையொன்றி ஈடுபட்டுச் சிறப்படைய வேண்டும் என்பதைச்
“செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம்”
எனப்பாடி ஈடுபட்டுள்ள தொழிலில் ஒவ்வொருவரும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரெல்லாம் ஊட்டி வளர்த்த சமுதாய உணர்வுகள் அடிக்கடி சோதனை களுக்கு ஆளாகி வருகின்ற காலகட்டத்தில் – தமிழ்ச் சமுதாய உணர்வுக்கு உரமாய்ப் பயன்படும் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை முழுமையாய்த் தொகுத்து வெளியிடும் அன்பர் திரு. கே. ஜிவபாரதி அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறேன்.
படித்துப் பாடிச் சுவைப்பதற்கு மட்டுமல்லாமல் பண்பாட்டு உணர்வுகள் பெருகுதற்கும் பயன்படட்டும் இந்தப்பட்டுக்கோட்டையார் பாடல்கள்.
(பாடல்களையும், கவிதைகளையும் காலவாரியாகத் தொகுத்து, கவிஞரின் கையெழுத்துப் பிரதியில் உள்ள வெளிவராத பாடல்களையும் இணைத்து, திரைப்படத்தில் பயன்படுத்தியது போக கவிஞரின் கையெழுத்துப் பிரதியில் உள்ள வரிகளை அடிக்குறிப்புகளாகக் கொடுத்து, கவிஞரின் கையெழுத்துப் பிரதிகளையும் சேர்த்து கே.ஜீவபாரதி அவர்களால் தொகுக்கப்பட்டுள்ள முழுமையான “பட்டுக்கோட்டையார் பாடல்கள்” நூலுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் வழங்கிய அணிந்துரை )
Place your comment