Pattukkottaiyaar

தமிழில்

LF banner t
க்கள் கவிஞர் என்று போற்றப்படுகின்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சில ஆண்டுகளே பாடல்கள் எழுதி சிறுவயதிலேயே மறைந்து விட்டாலும் அவர் படைத்த பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன. 1930ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ஆம் நாளன்று பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29ஆம் வயதில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாளன்று மறைந்தார்.

arunachalam

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு எனும் அழகிய கிராமத்தில் அருணாசலம் -விசாலாட்சி தம்பதியருக்கு இளைய மகனாகத் தோன்றிய பட்டுக்கோட்டையார் தனது 15ஆம் வயதில் ஓடிப்போ, ஓடிப்போ, கெண்டைக் குஞ்சே என மீனைப் பார்த்து முதல் பாடலை இயற்றினார்.

visalakshiஇயற்கை, சமூக நலம், அரசியல், பொதுவுடைமை, தத்துவம், காதல், மூடநம்பிக்கைக்கு எதிராக என்று பல பொருட்களில் பாடல்களைப் படைத்து பட்டுக்கோட்டை ஆனார். தனது முதல் திரைப்பாடலை 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக எழுதினார். ஆனால் அவர் இரண்டாவதாக பாடல் எழுதிய மஹேஸ்வரி படம் தான் முதலில் 1955ஆம் ஆண்டு வெளியானது. படித்த பெண் 1956ஆம் ஆண்டு வெளியானது. 1956ஆம் ஆண்டு வெளியான பாசவலை படம் பட்டுக்கோட்டையாரை புகழேணியில் ஏற்றிவிட்டது. புகழின் உச்சியை ஐந்தே ஆண்டுகளில் எட்டிப் பிடித்த கவிஞர் எரிகின்ற விண்மீன் போல் ஒளிவீசிக் கொண்டே மறைந்தார்.

கவிஞரின் தந்தையார் அருணாசலம் அவர்களும் கவிஞர் தான். அவர் எழுதிய முசுகுந்த நாட்டு வழிநடைக் கும்மி எனும் கும்மிப்பாடல் இன்றும் பட்டுக்கோட்டைப் பகுதி கிராமங்களின் வரலாற்று நூலாக விளங்குகிறது.

கவிஞரின் மூத்த சகோதரர் கணபதிசுந்தரம் சிறந்த ஓவியர் மட்டுமல்லாது கவிஞரும் கூட. தற்போது உயிருடன் இல்லை. கவிஞரின் மனைவி கௌரவம்மாள்; மகன் குமாரவேலு. மனைவிக்குக் கடிதம் எழுதினாலும், தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவார் கவிஞர்; அவர் திருமணம் பாவேந்தர் தலைமையில்தான் நடைபெற்றது.

கவிஞரின் பாடல்கள் மிக எளிமையான தமிழில் இருந்தாலும் அதில் சந்தம் இருக்கும். தாளம் போட்டுக் கொண்டேதான் பாடலை யோசிப்பாராம் கவிஞர். எளிமையான பாடல்களில் மிக ஆழமான உண்மைகள், கருத்துகள் கேட்போருக்கு உடனே புரிந்தன; உள்ளத்தில் பதிந்தன.

தீவிர சிந்தனையும், சமூகப் பொறுப்புணர்ச்சியும் இயற்கையாகக் கொண்டிருந்த பட்டுக்கோட்டையார் பள்ளி சென்றதில்லை. உள்ளூரிலே இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் இரண்டு மூன்று ஆண்டுகள் அடிப்படை கல்வி கற்றதோடு சரி. விவரம் தெரிகின்ற வயதில் தந்தை பெரியாரின் இயக்கமான சுயமரியாதை இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். திருவாரூரில் இயக்க மேடைகளில் சீர்திருத்தப் பாடல்களை கவிஞர் பாடியபோது தான் கலைஞர் அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. வளர்ந்து இளைஞன் ஆனதும் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, நடிகர் டி.எஸ்.துரைராஜ் மூலம் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார்.

நெடிய உருவம் கொண்ட பட்டுக்கோட்டையாரும், பின்னாளில் புகழ் பெற்ற நடிகரான ஓ.ஏ.கே.தேவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். தனது நாடக நாட்களின் இறுதியில் 1951ஆம் ஆண்டு கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார். அவர் பெயர் அப்போது ஏ.கே.சுந்தரம். பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட, கவிஞர் 1952இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அ.கல்யாணசுந்தரம் என்ற தன் பெயரை அகல்யா என்று சுருக்கி அந்தப் பெயரில் எழுதிய பாடலைப் பாவேந்தர் பாராட்ட, கவிஞர் என்ற அங்கீகாரம் கிடைத்தது.

1953இல் சக்தி நாடக சபா கலைக்கப்பட்டதும் சிவாஜி நாடக மன்றத்தில் சென்னையில் சேர்ந்து, நாடகங்களில் நடித்துக் கொண்டே நாடகங்களுக்கு பாடல்களும் எழுதினார். போதிய வருவாய் இன்றி பட்டினியோடு பட்டுக்கோட்டையார் கழித்த நாட்கள் பல. அந்த ஓரிரு ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து கொண்டு அவர் பார்த்த உலகம் அவருக்கு மிகப் பெரிய அனுபவ அறிவைக் கொடுத்தது. அதன் மூலம் அவர் பெற்ற சிந்தனைத் தெளிவு, இளமையில் வறுமை, கவிஞரின் இயற்கையான கவித்திறனை ஒருமுகப்படுத்தியது. பொதுவுடைமைச் சிந்தனையைப் பெருக்கியது.

சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டையாருக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தியில் பாடல்கள் எழுதினார். முதல் பாடல் ஜனசக்தியில் 1954இல் வெளிவந்தது. ஜீவாவின் உதவியால் பொதுவுடைமை இயக்க நாடகமான கண்ணின் மணிகள் நாடகத்திற்கும் பாடல்கள் எழுதினார், திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்புத் தேடி பட்டுக்கோட்டையார் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல, அதுவும் பல நாட்களில் பட்டினியோடு. 1954ஆம் ஆண்டு முதல் முதலாக படித்த பெண் திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதினார். கவிஞரின் இரண்டாவது படம் மஹேஸ்வரி, 1956இல் முதன்முதலாக பட்டுக்கோட்டையாரின் பாடல்களைத் தாங்கி வெளிவந்தது. நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழுநேரமும் பாடல்கள் எழுதுவதில் ஈடுபட்டார். 1956ஆம் ஆண்டிலேயே பாசவலை படம் வெளிவந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மக்கள் அனைவராலும் போற்றிப் புகழப்பட்ட கவிஞர் ஆனார். அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இறுதி நாள் வரை தொடர்ந்தது.

marriage

1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – கௌரவம்மாள் திருமணம் சென்னையில் பாவேந்தர் தலைமையில் நடைபெற்றது. 1958ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் கவிஞருக்கு மகன் பிறந்தான்; குமாரவேலு என கவிஞரின் தந்தையார் பேரனுக்குப் பெயர் சூட்டினார். அதே ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், மக்கள் வாழ்வில் விடியலைக் கூவி அறிவித்த கவிஞர் வாழ்வு முடிவடைந்தது. இந்தியா விடுதலை பெற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1972ஆம் ஆண்டு இந்தியா அரசு வெளியிட்ட விடுதலை வெள்ளி விழா மலரில், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்கள் என்று தலைப்பிட்டு பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று வரிசைப்படுத்தி அப்பெருமக்கள் எழுதிய பாடல், ஒவ்வொன்றையும் வெளியிட்டிருந்தது. அரசின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன் மக்கள் கவிஞர் என்று பட்டம் பெற்றவர் கவிஞர். 1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு மக்கள் கவிஞர் என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்தது.

1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, கவிஞருக்கு பாவேந்தர் விருது வழங்கியது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும் மக்கள் கவிஞரின் நெருங்கிய நண்பருமான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து கவிஞரின் மனைவி பாவேந்தர் விருதைப் பெற்றுக் கொண்டார். 1993ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தவாறு கவிஞரின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

manimandapam

பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு மணிமண்டபம் அரசால் கட்டப்பட்டு 2000ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மக்கள் கவிஞரின் புகைப்படங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள் அங்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் அடங்கிய முதல் தொகுப்பு 1965ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டு நிறுவனத்தால் பி.இ.பாலகிருஷ்ணன் முயற்சியால் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. பின்னர் கவிஞரின் பாடல்கள் அடங்கிய நூல்கள் பலரால் வெளியிடப்பட்டது. கே.ஜீவபாரதி கவிஞரின் பாடல்களை முழுமையாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பா.உதயகுமார், சு.சாலமன் பாப்பையா, இ.செம்பியன், எம்.பி.மணிவேல், பா.வீரமணி, தா.பாண்டியன், இராகுலதாசன், தில்ரூபாசண்முகம் என பலர் கவிஞர் பாடல்களை ஆய்வு செய்து எழுதியுள்ள ஆரிய நூல்கள் வெளிவந்துள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் குறித்த ஆய்வு இருக்கை ஒன்று இயங்கி வருகிறது.

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment