Archive for the 'Uncategorized' Category
தனிப்பாடல்கள்
1938
1. நல்லதைச் சொல்பவன்
நல்லதைச் சொல்பவன் நாத்திகனா?- _ உலகில்
இல்லாததைச் சொல்லி ஏமாற்றுவதுதான் முறையா?
1940
2. வட்டிக் கடை சேட்டு
ஏ வட்டிக் கடை சேட்டு
நீ வாலையாட்டாமல் கம்பி நீட்டு
1944
3. ஓடிப்போ
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே- கரை
ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே!
தூண்டில் காரன்வரும் நேரமாச்சு- ரொம்ப
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!
1951 – 1952
4. குடிக்கக் கூழ்தான்
குடிக்கக் கூழ்தான் கிடைக்குமா?
குடிய ரசாட்சி முறைக்கு அடுக்குமா?
பலர் நடமாடும் வழிகளில் படுக்கின்றோம்
பசிப்பிணியால் வாடித் துடிக்கின்றோம்
படுக்கவோ இடமில்லை
உடுக்கவோ உடையில்லை
படித்த அறிவாளி பணம்தரும் முதலாளி
பலர் கூடி வழிகாண முடியாதா? (குடிக்கக்…
5. சுகம்தரும் காதல்
சுகம்தரும் காதல் வளம்பெறும் வாழ்வே ஆஹா
இகம்தனில் மேலாமே
மனந்தனில் ஊறடடும் இன்ப ஊற்றிலே
மிதந்திடும் காதல் வாழ்விலே
உயர்ந்திடும் பூமி மீதே (-சுகம்…
மாலை நேரமே சோலை மீதிலே
வசந்த மாருதம் வீசுதே
உயர்ந்த வானிலே உலவும் வெண்மதி
உதவியால் ஒளி வீசுதே!
6. அன்பில்லாத அறிவாலேநேரும்
அன்பில்லாத அறிவாலேநேரும்
அழிவைக் கேளுங்கோ!
அமைதியாக ஒரு நிமிஷமிருந்து ஆராய்ந்து பாருங்கோ! _ நல்லா
ஆராய்ந்து பாருங்கோ!
வேட்டுவச்சுப் பல நாட்டையழிக்கவே
விஞ்ஞான ஆராய்ச்சி -_ செய்து
ஆட்டிப்படைப்பதும் அன்பில்லாத
அறிவாலே உருவாச்சு!
7. வள்ளலைப் போற்றுவாய்
வள்ளலைப் போற்றுவாய் நெஞ்சே _ ஞான
வாரி எங்கள் வடலூர் ஜோதிராமலிங்க (வள்ளலை…
8. புதுவைக் கவிஞன்
புதுவைக் கவிஞன் கவிதையிலே -_ இன்பம்
பொங்கி வழியுதடா!
1953 – 1954
9. கண்ணால் வரும் ஆபத்து
கண்ணால் வரும் ஆபத்துக்குக்
காதல் என்னும் பெயரெதற்கு?
எண்ணம் செய்யும் மோசத்துக்கு
இன்பம் என்னும் பெயரெதற்கு?
ஆசை செய்யும் பாவத்திற்கு
அன்பு என்னும் பெயரெதற்கு?
நேசம் கொண்ட நெஞ்சத்திற்கு
நினைப்பெதற்கு?
10. ஓரம் கிழிஞ்சாலும்
ஓரம் கிழிஞ்சாலும் ஒட்டுப்போட்டுக் கட்டிடலாம் -_ இது
நடுவே கிழிஞ்சதடி நாகரத்தினமே-அதுவும்
நாலுமுழ வேட்டியடி கனகரத்தினமே!
11. நல்லாருக்கும்
நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடுவில் இருக்கும்சாமி – நீ
கல்லாப்போன காரணத்த எல்லாருக்கும் காமி!
12. சீவிமுடித்து
சீவிமுடித்துத் திருமணக்கும் பொட்டு வைத்துக்
கோவிலைச் சுற்றிவரும் குலமகளே- பாவியரின்
கண்ணில கப்பட்டுக் களங்கம்வரா வண்ணம்
உன்னைநீ காப்பாற்றிக் கொள்!
13. தப்போ சரியோ
தப்போ சரியோ நானிப் பாவைப் பாடிவிட்டே
னப்பாடி என்று புகழ்ந்தாலும் இல்லை
அடப்பாவி என்று கடிந்தாலும் சரியே!
14. உறுபபறுந்து போனாலும்
உறுபபறுந்து போனாலும் உள்ளம் கலங்கேனிச்
செறுப்பறுந்து போனதற்கே சிந்திப்பேன்! -_ நெருப்பை
எதிர்ப்பதற்கும் அஞ்சாத எண்ணம் படைத்தாற்பின்
கொதிக்கும் தார்குளிர் நீர்!
15. ரோட்டில் பள்ளம்மேடு
ரோட்டில் பள்ளம்மேடு எங்கும் பாருங்கள் -_ மேடை
ஆற்றுமணல் காட்சி அங்கு பாருங்கள்!
போக்குவரவை எச்சரிக்கும் செங்கொடி -_ அங்கே
ரோட்டின் ஓரம் காற்றிலாடப் பாருங்கள் -_ பழுது
பார்க்கும் தொழிலாளரைப் பாருங்கள்!
ஏற்றத் தாழ்வு இருக்குமிடம் எங்குமே -_ மாற்றம்
காணவே பறக்கும் செங்கொடி
16. புழலேரி நீரிரு..
புழலேரி நீரிருக்க, போகவர காரிருக்க
பொன்னுசாமி சோறிருக்க தங்கமே தங்கம் _- நான்
போவேனோ சென்னையை விட்டுத் தங்கமே தங்கம்
17. செப்பறிய தம்பான்
செப்பறிய தம்பான் புளிச்சாற்றில்
உப்பதிக மானது ஒரு விந்தை
18. காரந்தினனு
காரந்தினனு காரந்தினனு
ஓரமெல்லாம் எரியுது -_ பொன்னுசாமி
காடை செஞ்ச வேலை இப்போ
காலையில்தான் தெரியுது
1954
19. கதிராடும் கழனியில்
ஆண் : கதிராடும் கழனியில்
சதிராடும் பெண்மணி
கலைமேவும் அழகாலே கவர்ந்தாய் கண்மணி
முதிராத செடியே முல்லைமலர்க் கொடியே!
பெண் : அன்பே என் ஆருயிரே ஆணழகே என்னுடன்
தென்பாங்குப் பண்பாடும் தீராத இன்பமே!
ஆண் : ஏரோட்டும் விவசாயி எருதுகளை ஏரியிலே
பெண் : நீராட்டும் அழகைப்பாரு கண்ணாலே!
ஆண் : பாராட்ட வேண்டியவள்
பானைதனைத் தலையில் வைத்துப்
பக்குவமா வாராபாரு பின்னாலே!
பெண் : தேனாறு பாயுது செங்கதிர் சாயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது
ஆண் : மானே இந்நாட்டிலே வகையான மாறுதல்
வந்தாலன்றி ஏது சீருகள்?
இருவர் : உழவனும் ஓயாத உழைப்பும்போல் நாமே
ஒன்றுபட்டு வாழ்க்கையில் என்று மிருப்போம்!
20. கண்ணை இழுக்கும்
கண்ணை இழுக்கும் அழகொன்று கண்டேன்
காவியம் ஓவியம் யாவையும் கண்டேன்
மின்னை நிகரிடைப் பெண்களும் ஆண்களும்
வேலைசெய்யும் அந்தக் கோலத்தைக் கண்டேன்
வண்ணக் கலையங்கு வாழ்ந்திடக் கண்டேன்
மக்கள் உழைப்பின் உயர்வனெக் கண்டேன்
பொனனைப பழககும கதரகள ஒனறை ஒனறு
பனனப பனன அசைநதாடிக கணடேன
நாடு செழிக்க உழைக்கும் எளியவர்
நாதியின்றி உள்ளம் நைந்திடக் கண்டேன்
நன்றி யில்லாத முதலாளி ஆட்சியின் நயவஞ்ச கத்தால்வந்த நலிவென்று ணர்ந்தேன்
பொறுமை யிழந்தனர் மக்களெல்லாம் மனம்
பொங்கி எழுந்தனர் எரிமலை போல்
உரிமை பறித்த உலுத்தர் எதிர்த் தனர்
ஒருமித்த ஜனசக்தி வென்றது வென்றது
தோளோடு தோள்ஒட்டிச் சென்றனர்
அறிவா ளொடு மார்தட்டி நின்றனர்
ஆளடிமைத் தளையறுந்து வீழ்ந்தது -_ நம்மை அடைத்துவைத்த வெஞ்சிறை உடைந் தொழிந்தது!
21. தாயால் வளர்ந்தேன்
தாயால் வளர்ந்தேன் தமிழால் அறிவுபெற்றேன்
நாயே! நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்
நீ யார் என்னை நில்லென்று சொல்வதற்கு?
22. புதியஒளி வீசுதுபார்
புதியஒளி வீசுதுபார் இமயம் தாண்டிப்
புன்சிரிப்புக் காட்டுதுபார் இன்பம் அங்கே
கதைபுனைந்து கூறவில்லை கண்ணில் தோன்றும்
காட்சியிவை ரஷ்யாவின் மக்க ளாட்சி
சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள்
கதியுயரக் காணும்வழி ஏது மின்றி
மிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேற்றில்
வெம்பியழுதார் பசியால் வெந்தார் நைந்தார்
கொதிக்கின்ற ஏழைமனம் குமுறிற்று ஆனால் கொக்கரிக்கும் ஜார்மன்னன் சிரித்து நின்றான்
இதைக்கண்டார் லெனின், ஸ்டாலின் இன்னும் கண்டார்
எதைக்கொண்டு தீர்ப்பதென விரதம் பூண்டார்
பதைக்கின்ற உயிர்களையும் பார்த்தார் அங்கும்
பல்லிளிக்கும் பணக்கழுகின் நிலையும் பார்த்தார்
சதைக்குன்றாய் வாழுமந்தச் சுரண்டல் வர்க்கம்
ஜாரினுக்குத் தக்கதுணை யாதல் கண்டார்
விதிக்கின்ற சட்டம் ஜனஉரிமை தன்னை
வெடுக்கென்று பறிப்பதையும் எளியோர் வாழ்வைச்
சிதைக்கின்ற தன்மையையும் செக்கி லிட்ட
தேங்காய்போல் தொழிலாளர் துயரும் கண்டார் உதிர்த்தகண்ணீர் துடைத்தெழுந்தார் துணிந்தார் அன்றே
உததததுபார் புரட்சியெனும் உரிமைச் செம்போர்
குதித்தார்கள் மக்களெல்லாம் குருதிப் போரில்
கொழுந்துவிட்டுப் பற்றியது செந்தீ யெங்கும்
ஒடித்தார்கள் அடிமையெனும் விலங்கைச் சென்று
உடைத்தார்கள் அதிகாரக் கோட்டை தன்னை
எதிர்த்துநின்ற தனித்தாளும் முதலாளி த்துவம்
எடுத்தமுழு முயற்சியெல்லாம் மண்ணாய்ப் போச்சு!
குடிக்கின்ற தண்ணீரும் செந்நீ ராச்சு
கோஷமிட்டுக் கிளம்பியது ஏழைக் கூட்டம்
துடிக்கின்ற இதயத்துப் பெண்கள் நாட்டின்
துயர்கொல்லக் குதித்துவிட்டார் போராட்டத்தில்
இடித்தார்கள் எதேச்சாதி காரர் தன்னை
இருகூறாய்ப் பிறந்துவைத்தார் இரங்கா நெஞ்சை
வடித்தார்கள் இரத்தவெள்ளம் வாழ்வுக் காக
மடிந்தஉயிர் கணக்கற்றோர் எனினும் மக்கள்
வெடித்தகுண்டில் கிளம்புகின்ற பொறிகள் போல் கூறிட்டுக் கிளம்பிநின்று முழக்க மிட்டார்
கொடுஞ்சிறையும் கொலைவாளும் மலிந்தது ஆனால்
கொந்தளிக்கும் மக்கள்படை சளைக்க வில்லை
தடதடென ஆடிற்று ரஷ்யா அன்று தலைகொழுத்துத் திரிந்தமன்னன் ஜாரும் வீழ்ந்தான்
விடுதலையும் பிறந்ததங்கு மக்க ளாட்சி
மேவிற்று இன்பமெல்லாம் விளைந்த தங்கே
அடக்குமுறைக் கஞ்சாத லெனின் ஸ்டாலின்
ஆரம்பித்த புரட்சியிலே அமைதி கண்டார்
நடத்துஎன்றார் சோவியத்தை மக்கள் அன்னார்
நட்டுவைத்த செம்பயரும் நட்பும் வாழ்க!
கையெழுத்துப் பிரதி
23. சித்திரைத் தேரோடும்
சித்திரைத் தேரோடும் தென்மதுரை வாழும்
சக்தி மீனாட்சித் தாயே துணை நீயே!
நித்தநித்தமும் தொழும் பக்தர்தமக் கருளும்
புத்தமுதே ஞானப்பொருளே அருள் விருந்தே! – (சித்தி…
சங்கத்தமிழ் மணக்கும் மங்களப் பூங்காவில்
பொங்கித் ததும்புமின்பப் பொற்றாமரைக் குளத்தில்
குங்குமமும் மஞ்சளும் கொஞ்சும் மங்கையர் முகத்தில்
குடியிருக்கும் தாயே குழந்தையற்கருள வாயே! – (சித்தி…
அன்பும் அறிவும் நெஞ்சில் ஆக்கமும் உண்டாக
அல்லலின்றி உலகம் அமைதியுடன் விளங்க பண்பில் உயர்ந்த மக்கள் பகுத்தறிவுடன் வாழ
இன்பநீதி யருள்வாய் ஈஸ்வரி ஜெகதாம்பா… – (சித்தி…
கற்புக்கரசி யெங்கள் கண்ணகியின் சிலம்புக்
காவியத்தில் கலைஞன் ஓவியத்தில் இசையில்
பொற்கைப் பாண்டியன் கொண்ட புகழில் சங்கப்பலகை
அற்புதத்தில் புலவர் அரங்கில் விளங்கும் தாயே! – (சித்தி…
24. ஆணவக்கார
ஆணவக்கார மனிதனையும்
அளக்கும்கோல் ஒன்று உண்டு _ அது
அடர்ந்து உருண்டு திரண்ட இரண்டு
பச்சை மூங்கில் துண்டு
25 .நண்டு செஞ்ச தொண்டு
ஊரை யடுத்த ஓடைக் கரையில்
ஓட்டை நிறைந்த ஒருசிறு குடிசை
நாள்புறம் வயல்கள் நல்ல விளைச்சல்
நாகனும் வள்ளியும் வசிக்கும் இடமிது
சொல்லச் சொல்ல சுவையேறு தமிழில்
வள்ளியுரைக் கின்றாள் மச்சா னிடத்தில்:
மச்சான் மச்சான் கதையைக் கேட்டியா?
வாரக் குத்தகை தர்ரதாச் சொல்லி
வாம்பலில் கொஞ்சம் நட்டுவச் சோமே!
ஆமா ஆமா அதுக்கென்ன இப்போ?
நேத்தைக்குத் தண்ணி நிறைய இருந்ததே
பின்னாடி நட்டதால் பிஞ்சா யிருக்கு இன்னும் பத்துநாள் எல்லாம் பழுத்திடும்
அதுக்கில்லே மச்சான் நான்சொல்ல வந்தது
அடுத்த வயல்லே நின்னாரு
ஆத்து வாய்க்காலை அடைச்சுத் திருப்பணும்
ஐம்பது காசுக்குத் தண்ணி பாய்ச்சணும்
ஆருவந் தாலும் அடிப்பேன் உதைப்பேன்!
அப்படி இப்படீன்னு அலறிக் குதிச்சாரு
இதுக்கும் நமக்கும் எட்டா துன்னு
இருட்டும் முன்னே வீட்டுக்கு வந்திட்டேன்.
பொழுது விடிஞ்சு போய்ப் பாத்தா
பொங்கித் ததும்புது நம்ம வயலும்
வாய்க்காலும் வெட்டலே மடையும் திறக்கலே
வழியும் அளவுக்குத் தண்ணி யேது?
நண்டு செஞ்ச தொண்டு மச்சான்
நாட்டு நிலைமையை நல்லாப் பாத்தது
ஏற்றத் தாழ்வை ஒழிக்க வரப்பில் போட்டது வளையைப் புரட்சி நண்டு,
பாய்ந்தது தண்ணி பரவி எங்குமே
காய்ந்த பயிர்களும் கதிரைக் கக்கின.
ஆகா ஆகா அருமை நண்டே
உனக்கு இருக்கும் உயர்ந்த நோக்கம்
உலக மனிதர்க்கு உண்டா நண்டே?
பெருநிலக் காரன் வரப்பைக் குடைந்து சிறுநிலங் காத்துச் சிறந்த நண்டே!
என்றுநாகன் நன்றி செலுத்து கையில் எதிருள வயல்களை இருவரும் நோக்கினர்
பச்சை மயில்போல் பயிர்கள் அசைந்தன
பழுத்த கதிர்கள் படுத்துக் கிடந்தன
படுத் திருந்த பசுந்தரை அடியில்
வெடித்த கிளையிலும் விஷய மிருந்தது
உழைப்பாளர் பலனை ஒட்ட உறிஞ்சி
ஒதுக்கிப் பதுக்கும் உல்லாச மனிதரின்
கள்ளத் துணிவையும் கருங்காலிச் செயல்களையும்
கொல்லும் ஈட்டிபோல் குருத்துகள் நின்றன
இந்தக் காட்சியில் இன்பம் கண்டனர்
இயற்கை ஆட்சியை இருவரும் வியந்தனர்
மடைதாண்டி விழுந்த வாளை மீன்போல்
வள்ளி துள்ளி வரப்பில் குந்தினள்!
26. எங்கும் விவசாய சங்கம்
எங்கும் விவசாய சங்கம் அமைத்ததில்
அங்கம் வகித்திடுவோம் -_ இந்தத் தங்க முயற்சிக்குப் பங்கம் விளைத்திடும்
தன்மையை யெட்டி மிதித்திடுவோம்
கங்குல் பகல்நின்று காடு திருத்திய
கைகள் உயர்த்திடுவோம் – என்றும்
எங்கள் உழைப்பினை எங்களுக்கே என
எக்காளம் ஊதிக் கிளப்பிடுவோம்
ஊரைச் சுரண்டி உயர்ந்த மனிதரின்
உல்லாச வாழ்க்கையெல்லாம் – தின்னச்
சோறுமின்றித் தினம் கோயிலில் துஞ்சிடும்
தோழன் உதிர்த்த வியர்வையன்றோ?
கைப்பு நிலத்தையும் செப்பனிட்டுப் பயிர்
காத்துக் கதிர் வளர்த்தோர் – அதன்
கண்ட பலனைப் பறிகொடுத்து நின்று
கண்ணீர் வடிப்பதை நாம் சகியோம்
மண்வெட்டி கொண்டு வரம்பு கட்டிப்பெரும்
வாய்க்கால் வடிகால் வெட்டி – நிலம்
பண்பட்டபின் விதை கொட்டி உழைத்தவன்
பக்குவ மாக்கிப் பலன் பெறுங்கால்:
முன்பட்ட பாக்கி முதலுக்கும் வட்டிக்கும்
முற்றும் வரண்டிக் கொண்டு – அங்குத்
தென்பட்ட ஏழைகள் புண்பட்ட நெஞ்சினில்
தீ மூட்டும் செய்கைகளை
கண்கெட்டுப் போனதோ இன்னும் சகிப்பதேன்?
துன்புற்ற தோழர்களே – துள்ளி
மின்வெட்டுப் போலே பளிச்சென்று வாருங்கள் மேதினிக் குண்மை விளக்கிடுவோம்
பொங்கும் தொழிலாளர்க் கின்னல் புரிந்திடும்
பன்மனப் போக்கிரிகள் – மங்கி
எங்கோ மறைந்தனர் என்றோ ஒழிந்தனர்
என்னுங் குரல்கள் எழுப்பிடுவோம்
பித்தேறிக் கத்தும் பெருநிலப் பேயரின்
சொத்தை முயற்சி யெல்லாம் – மக்கள்
சக்தியைக் கண்டு சரிந்து விழிப்பறை
சாற்றிக்கிளர்ந்து நிறைந்தெ ழுவோம்
27. செக்கச் சிவந்த
செக்கச் சிவந்த செழுங்கதி ரோனும்
கிழக்கினில் வந்துவிட்டான் _ புவி
மக்கள் மதிக்கண் விழித்துக் கிளம்பிட
வானில் உதித்துவிட் டான்
கொக்கரக் கோவெனக் கோழியுங் கூவுது
கொக்கோடு பற்பல புட்களும் மேவுது
சக்கரம் போலவே ஜகம்சுழன் றாடுது
தொக்கிநின்ற இருள் சொல்லாமல் ஓடுது
பத்துத் திசையிலும் _ ஜன
சக்தி முழங்கிடுதே! (செக்கச் …
தெற்கில் ஒருகுரல் தென்பாங்கு பாடுது
தீயசெயல்களைச் செங்கைகள் சாடுது
பக்குவங் கொண்ட படை பல கூடுது
சிக்கலறுத்துப் பொதுநடை போடுது
சொத்தை மனம் திருந்தப் _ புதுச்
சத்தம் பிறந்திடுதே! (செக்கச் …
கத்தும் பறவை கனிமரத்தில் வந்து
ஒற்றுமை காட்டிடுதே _ தலைப்
பித்தம் பிடித்தொரு கூட்டம் தனித்தனிப்
பேதம் வளர்த்திடுதே
ரத்த வேர்வைகள் சொட்ட உழைத்தவன்
நெற்றி சுருங்கிடுதே _ ஏழை
உத்தமர் வாழ்வை உறிஞ்சும் உலுத்தரின்
கொட்டம் அடங்கிடுதே _ மக்கள்
வெற்றி நெருங்கிடுதே1 (செக்கச் …
28. சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்
ஆண் : சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்
சோம்ப லில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு _ வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு
மண்ணைக் கிளறிக் குழிய மைச்சு
வாழைக் கன்னுகளை ஊடாலே வச்சு
தண்ணி பெற அக்களை பறிச்சுச்
சந்திர சூரியர் காண ஒழைச்சு
ஒண்ணுக்குப் பத்தாக் கிளை வெடிச்சு
கண்ணுக் கழகா நிண்ணு தழைச்சு
இலை விரிஞ்சிருக்கு _ காய்க்
குலை சரிஞ்சிருக்கு
பெண் : வாழை நிலைக்குது சோலை தழைக்குது
ஏழைகளுக் கதில் என்ன கிடைக்குது?
கூழைக் குடிக்குது; நாளைக் கழிக்குது
ஓலைக் குடிசையில் ஒட்டிக் கிடக்குது
காடு வெளைஞ்சென்ன மச்சான் _ உழைப்போர்க்குக்
கையுங்காலுந்தானே மிச்சம்?
ஆண் : நாடு செழிச்சிட மாடா ஒழைச்சவன்
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
மூடாத மேனியும் ஓடா எளச்சவன்
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
அரைவயித்துக் கஞ்சி குடிக்கிறான் _ சிலநாள்
அதுவுங் கிடைக்காமத் துடிக்கிறான்
பெண் : மாடா உழைச்சவன் வீட்டினிலே _ பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்?
ஆண் : அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே
சேர்ந்ததினால் வந்த தொல்லையடி
பெண் : பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு _ இனிப்
பண்ண வேண்டியது என்ன மச்சான்?
ஆண் : தினம் கெஞ்சிக் கிடப்பதில் பஞ்சந் தெளியாது நெஞ்சம் துணிஞ்சிட வேணுமடி
பெண் : சீறும் புயலால் மெலிந்தவருக்குச் _ சர்க்கார்
செஞ்ச உதவிகள் என்ன மச்சான்?
ஆண் : அங்கு _ நாளும் பிணத்தைப் புதைப்பதற்கு _ நம்ம
நாணய சர்க்கார் உதவுமடி
பெண் : தங்கவும் வீடின்றித் திங்கவும் சோறின்றித்
தத்தளிப்போர்கெதி என்ன மச்சான்?
ஆண் : நாட்டில் _ எங்கும் தொழிலாளர் கூட்டமடி _ அவர்
பங்காளி போன்றோரைக் காப்பாரடி
பெண் : ஏழைகள் ஒன்றாய் இணைந்து விட்டால் _ இங்கு
எஞ்சியுள்ளோர் நிலை என்ன மச்சான்?
ஆண் : சில _ பேழை வயிற்றுப் பெருச்சாளிகள் _ எதிர்
காலத்தை எண்ணித் தெளிவாரடி
பெண் : நாளை விடிஞ்சாப் பெரும் பொங்கல் _ அதில்
நாமும் கலந்திட வேணும் மச்சான்
ஆண் : மிக _ நல்லது வள்ளி கலந்திடுவோம் _ புது
நாளினை எண்ணி வணங்கிடுவோம்.
இருவர் : வல்லமையாலே வளம் பெறுவோம் _ பசித்
தொல்லை அகலத் தொழில் புரிவோம்!
29. மின்னும் இயற்கையெல்லாம்
மின்னும் இயற்கையெல்லாம் உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில் இன்பக்கனல் மூட்டுதடி!
வானநிலாப் பெண்ணை வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே முத்தமிட்டுப் போகுதடி!
துள்ளிவரும் நீரலையில் வெள்ளிமலர் பூத்ததடி!
வள்ளியுனை எதிர்பார்த்து மெல்லுடலும் வேர்த்ததடி!
இல்லத்தில் நீயிருந்தால் இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ் உனது சொல்லில் வந்து கொஞ்சுதடி! (மின்…
30. சின்னயிடை துவளச்
சின்னயிடை துவளச் செங்கைவளை குலுங்கத்
தென்றலொடு கூந்தல் சிலிர்த்து விளையாட
மண்ணுக்கு மேனி வலியெடுக்கும் என்பதுபோல்1
அன்னநடை போட்டு அழகுவிழி அம்புவிட்டுத்
தன்னையும் தாங்காத் தளிர்மேனி _ மீதிலொரு2
சன்னயிழை மெல்லுடையுந் தாங்கித் தனமிரண்டும்3
முன்னே வழிகாட்ட முகத்தில் ஒளிமிதக்க
வண்ணக் கழுத்தில் மணிபுரளத் தோளசைய
மின்னலைப் பற்கள் வெளிக்காட்டி உளம் நிறைக்கக்4
கன்னிப் பருவம் கலையாத பெண்ணொருத்தி
தன்னந்தனியே தமிழ்நாட்டுச் சாலையிலே5
செந்நெற் கதிர்போல் சிரம்வணங்கி வந்தாளே!*
31. சந்திரனைத் தொட்டதின்று
சந்திரனைத் தொட்டதின்று மனித சக்தி
சரித்திரத்தை மீறியது மனித சக்தி
இந்திரன் விண்ணாட்டின் அரச னென்ற
இலக்கணத்தை மாற்றியது மனித சக்தி
இந்திரனும் முடியரசாய் இருக் கொணாது
எனும்குறிப்பைக் காட்டியது மனித சக்தி
மந்திரமா வெறுங்கதையா இல்லை; இல்லை
மனித சக்தி; சோவியத்தின் மனித சக்தி
32. தகரக்குவளை கொண்டு
தகரக்குவளை கொண்டு தாளநடை பயின்று
நகரத்து வீதியில் வந்தனள்! (தகரக்…
அன்புரசம் நிறைந்த அமுதக்கலசம் காட்டி
ஆனந்தம் இந்தாவென்று அழைப்பாள் _ கையை
வானவில்லைப் போல வளைப்பாள் _ அந்தக்
கத்தும்கடல் கொடுத்த முத்து:சசரம் தொடுத்த
காட்சிஎன்னும் அந்தப் பற்களும் _ தமிழ்
சாட்சிசொல்லச் சிந்தும் சொற்களும் _ தன்
துள்ளும் எழிற்கொண்டை யானவிழி ரெண்டை
சொல்லுக் கணையாக விடுவாள் _ அன்பு
உள்ளத்திலே வந்து தொடுவாள்! (தகரக்…
33. இயற்கைக் காட்சி
வானச் சன்தையில் மேக மந்தைகள்
வாங்கு வாரின்றித் திரியுதடி _ அதைக்
காணும் கண்களில் ஆணும் பெண்ணு மாயக்
காதல் விந்தைகள் புரியுதடி!
வீசுந் தென்றலை நாடும் சோலைகள்
வாழ்த்தி யேவர வேற்கிறது _ இளங்
காற்றுடன் மழைத் தூற்றல் தூரவே
கவரிமான் களதை ரசிக்கிறது!
ஓடைக் கரையிலே உயர்ந்த தென்னைகள்
ஓடி ஆடி அசைந் தாடுதே _ இசை
பாடுங் குயிலுடன் கோல மயில்களோ
பரத நாட்டியம் ஆடுதே!
பருவ மங்கையோ பலூன்கள் ஏந்தியே
பாடி ஆடி விலை கூறுகிறாள் _ அட
ஓடி வாங்கய்யா காசத் தாங்கய்யா
ஒதுங்கி நிக்காம வாங்கய்யா!
34. தாமரை
தாமரை என்றொரு ஏடு மலர்ந்தது
தமிழ் மணம் பரப்பச் _ சுவைத்
தேமதுரத் துளி சிந்தி யிலக்கியச்
சிந்தைகளை நிரப்ப _ இன்று (தாமரை…
தம்மவர் மற்றவ ரென்னும் குணமின்றித்
தத்துநடை போட்டு _ முகம்
விம்மிச் சிரிக்கும் குழந்தையைப் புது
வெற்றிவரங் கேட்டு _ இன்று (தாமரை…
பொய்மை படர்ந்து கிடக்கும் நிலத்தினில்
உண்மைகளை விதைக்க _ ஒளி
பொங்கிவரும் கதிர்போல மக்கள் விழிப்
பொய்கையிலே மிதக்க _ இன்று (தாமரை…
அன்றைப் புலவர்கள் ஆக்கங்களுக்குத் தன்
நன்றிதனைக் கூற _ மன
வண்டை யழைத்து விருந்துவைக்கப் புகழ்
மன்றத்தி னிலேற _ இன்று (தாமரை…
கண்ணுக் கினிய கலைஞருக்கும் தமிழ்
பண்ணுக்குரிய வாக்கும் _ கலைப்
பெண்ணுக் கினிய சகலருக்கும் தனிப்
பேறுதனை வளர்க்கும் _ வண்ணத் (தாமரை…
35. சுதந்திரத்தைப் பெற்றுவிட்டால
சுதந்திரத்தைப் பெற்றுவிட்டால இந்தியத் தாய்
சொல்லவொண்ணா மகிழ்ச்சியிலே திளைப்பாள் என்று
தூங்காமல் இரவுபகல் பாடு பட்ட
தோழர்களே! தாய்மாரே! தந்தை மாரே!
சிறைவாழ்க்கை வேற்றாரின் கொடிய சட்டம்
சித்ரவதை குண்டடிகள் யாவுந் தாங்கித்
தேகமெலாந் தியாகவடுப பெற்று நின்ற
சிங்கங்காள் செக்கிழுத்த சிதம் பரமே!
உயிரிழந்தும் செங்குருதி மண்ணிற் பாய்ந்தும்
உரிமைக்கொடி காத்திட்ட குமரக் குன்றே
வறுமையினைச் சுமந்துகொண்டு விடுதலைத் தாய்
வருகைக்கு முழக்கமிட்ட பாரதி யே!
கொடுமையெல்லாம் விடுதலையின் குறிதான் என்று
குறுநகைத்த தில்லையாடி வள்ளி யம்மா
ஒருமையிலே சக்திஇல்லை பன்மை வேண்டும்
ஒன்றுதிரள் வோமென்ற சுபாஷ் வீரா!
உரிமைபெற்றும் கடமையெல்லாம் முடிப்பதற்குள் மத
வெறியினால் பலியான பெரியோய் காந்தி!
தான்மறைந்தும் புகழ்மறையாத் தொண்டு செய்த
தலைவர்களே! நீங்களெல்லாம் இன்றி ருந்தால்
தியாக வடுக்களை எல்லாம் கண்க ளாக்கித்
தேசத்தை நனைத்திருப்பீர் கண்ணீ ராலே
அங்குமிங்கும் வசைபெற்றுச் சுதந்திரத் தாய்
அவதியுறும் நிலைகண்டா லுங்கள் நெஞ்சம்
அனலின் மெழுகென உருகிப்போ யிருக்கும்
அடுத்தாண்டில் இனும்பலவுங் கூறு கின்றேன்
தலைக்கெல்லாம் தலையாய தலைமைத் தாயே
சரித்திரத்தில் இடங்கொண்ட சுதந்திர நாளில்
கொலை நடந்த விபரமெல்லாம் கூறுதற்குக்
கூசுகின்றேன் மற்றுமுள்ள விபரம் சொல்வேன்;
சுதந்திரத்தைப் பெற்றமுதல் ஓர்நா ளேனும்
துளியும்நீ மகிழ்ததுண்டா? உன்றன் மக்கள்
உகந்துமன ஒற்றுமையாய் வாழ்ந்த துண்டா?
உன்னைத்தான் மதித்ததுண்டா? உயர்ந்த துண்டா?
எங்கோர் பகுதியிலே ஒன்று பட்டார்
எனிலதனை ஆதரிக்கும் முறைதானு ண்டா?
பெரும்வெயிலால் வண்டல்நிலம் வெடிப்பதைப் போல்
பிளவுபட்டுப் பிளவுபட்டுச் சுயநலத் தால்
வருமான வேட்கையிலே புகுவ தன்றி
மனதிலெதும் விசாலமுண்டா? பொதுநோக் குண்டா?
இதுவரை நீ மகிழ்ந்திருப்பாய் என்ற எண்ணம்
என்போன்றார்க் கில்லை இனியேனும் அந்தப்
புதுவாழ்வும் ஒற்றுமையும் புனிதத் தொண்டும்
பொலிகவென வணங்கு கின்றோம் அன்னையே நீ
பூரிக்கும் அன்னாளை எதிர்பார்க் கின்றோம்
1959
36. இட்ட விதைகள்
இட்ட விதைகள் பயிராய் முளைத்து
இட்டவர் அதனை உயிராய் மதித்து
இரவும் பகலும் விழித்து உழைத்து
எதிர்ப்புக் களைகளை எடுத்தும் மிதித்தும்
இன்று தொண்டைக் கதிர்தான் நாளை
ரெண்டு தூற்றல் தூறினால் போதும்
கண்டிப் பாகக் கதிர்கள் வந்திடும்
என்று தினமும் எதிர்பார்த்து வந்தோர்
கதிரை அறுத்துக் கண்டு மகிழுவர்
புதிரெனப் பொங்கி உண்டும் மகிழுவர்
இதுவே உழவர்க் கின்பத் திருநாள்
இதுவே ஏழையும் மகிழும் ஒருநாள்
மகள் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு பெற்றோர்
வரிசை கொடுப்பது மரபு ஆகும்
பொங்கல் நாளை என்பதால் பொன்னன்
பொன்னி என்னும் கிழவன் கிழவி
வரிசை எடுத்து மகள்வாழ் சிற்றூர்
மயிலிரண் டாகையால் மஞ்சட் போதில்
வண்ணச் செந்நெல் மணிகள் குலுங்கும்
வயல்களின் வரப்பு வழியே நடந்தனர்
நாடடுப் புறத்தினர் நடக்கும் போது
பாட்டும் பேச்சும் பலபல கதையும்
விட்டு நடப்பும் வேற்றார் விபரமும்
கேட்டும் விளக்கியும் செல்வது வழக்கம்
கிழவியின் தமிழ்வாய் சும்மா இருக்குமா?
அம்மான்! அம்மான்! அழகைப் பாருங்க
அடுக்கு அடுக்காகக் கதிருக வளர்ந்து
கன்னி வரப்பிலே பின்னிக் கெடக்குது
காலெ வச்சா நெல்லு உதிருது
ஆரு தம்மான் இந்த நெலங்கள்
அரும்பாடுபட்டு விளைத் திருக் கிறான்
என்றாள் பொன்னி இதயங் கனிந்து
பொன்னன் சொல்வான் தன்கரம் நிட்டி
அந்த வயலின் சொந்தக் காரன்
அடுத்த ஊரான் பெரும்பணக் காரன்
இந்த வயல்தான் இருளனு டையது
இரண்டு வருஷமா குத்தகைக் குழுதான்
வாய்க்கால் மடையில் வம்புவந்த தால்
வஞ்சகமாய் இருளன் கொலைசெய்யப் பட்டான்
ஆனாலும் பொன்னி அதிசயம் பாரு
அவ்விரு வயல்களில் கதிர்கள் முதிர்ந்து
ஒன்றை யொன்று பின்னிக் கிடக்குது
ஒற்றுமை அன்பை ஊருக்குண ர்த்துது
தென்றல் காற்றிலே சோவென் றசைந்து
திருந்தா மடையர்க்குத் தெளிவுரை கூறுது
இடையிலிருக்கும் வரப்பை…1
… ந்தக் கதிர்களை என்னென்று…
என்றான் பொன்னன் ஏங்கிய குரலில்
சென்று கொண்டே செப்புவாள் பொன்னி
மனிதரைக் காட்டிலும் மரமும் கொடியும்
வளரும் பயிரும் மாடும் பறவையும்
சேர்ந்து வாழுது சிறந்து விளங்குது
வீழ்ந்தாலும் எழுந்தாலும் வேற்றுமை யில்லே
என்றாள் பொன்னி எரிச்சலாய்ப் பொன்னன்
மென்ற கரும்பைத் தூவெனத் துப்பி
போடி! போடி! பொன்னி இந்தப்
போக்கிரிக் கும்பல் புரட்டை விட்டுச்
சேருவ தெங்கே? திருந்துவ தெங்கே?
சிக்கலும் குழப்பமும் கொஞ்சமா நஞ்சமா?
எனக்கும் வயது இத்தனை யாச்சு
ஒனக்கும் பேரனும் பேத்தியு மாச்சு
அப்பவும் பார்த்தோம் அதிலே புடிச்சு
இப்பவும் பார்க்கிறோம் என்னடி மாற்றம்?
ஆமா அம்மான் சும்மா நிறுத்து
அதுக்கும் ஒருநாள் வராமலா போகும்?
பகையில் லாமே பலரும் சேர்ந்து
பழகும் காட்சியைப் பார்க்கத்தான் போகிறோம்
இப்படிச் சொன்னாள் கிழவி கிழவன்
எப்படி அவளின் கனவைக் கலைப்பான்
ஆமா! ஆமா! என்றான் அதற்குள்
மாமா! மாமா! என்றான் மருமகன்
அப்பா அம்மா என்ற மகளுக்
கப்பால் பேரப் பிள்ளைகள் கூடி
பொங்கலோ பொங்கல் என்று கூவினர்
பொன்னனும் பொன்னியும் பூரித்து மகிழ்ந்தனர்
37. பாடுமிடம் தெரிந்து
பாடுமிடம் தெரிந்து பாடவேண்டும் _ ஆடுவோர்
பாட்டின் பொருள் உணர்ந்து ஆடவேண்டும்
பாடும் படக்கலைக்கும் பாடுபட்டோர் தமக்கும்
பலருக்கும் பலனளிக்கும் பக்குவ மிருக்கும்படி _ கவஞன (பாடும்…
கலைஞர்களைக் குழுவாய்க்கூட்ட வேண்டும் _ முதலில்
கதையமைப்பை விளக்கிக்காட்ட வேண்டும் _ அந்தக்
கருத்தோடிணைந்து கவிதீட்ட வேண்டும் _ அதில்
காலத்திற்கேற்ற சுவையூட்ட வேண்டும் _ கவிஞன் (பாடும்…
ஆடற்கலைக்கு அழகு உடலமைப்பு _ இன்னும்
அகத்தின நிலை விளக்கும் முகக்குறிப்பு
பாடற்கலைக் கழகு இசையமைப்பு _ கலை
பலருழைப்பால் வளரும் பொதுப்படைப்பு _ என்பதால் (பாடும்…
ரசிக்கத் தெரிந்தவரே நடிக்கத்துணிய வேண்டும்
நம்பிக்கை கொண்டோர்படம் எடுக்கத்துணிய வேண்டும்
படிக்கத் தெரியாதாரும் பார்த்துத் தெளிய வேண்டும்
படத்தொழில் வளம்சிறக்க பண்பட்ட திறன் வேண்டும்
38.தாண்டித் தாண்டிச்
தாண்டித் தாண்டிச் சதிகளைத் தாண்டி
சமுதா யத்தைத் தாழ்த்திப் போடும்
தடைகளைத் தாண்டிச் சோம்பி அஞ்சிச்
சோர்ந்து கிடந்த மனங்களைத் தூண்டிட
தூக்கம் விடுப்பீர் ஆக்கப் பணிக்கெனப்
பகைமை தீர்க்கும் புதிய நோக்கமே
பாண்டித் தேவன் படத்தின் நோக்கம்
பாண்டித் தேவன் படத்தில் பயனும்
பங்கு கொண்டான் பணிபுரிந் ததின்
ஆக்க முயற்சி அன்பின் புரட்சி
ஊக்கம் தளரா உழைப்புப் பயிற்சி
இப்பெரும் படத்தில் இத்தனை பணிகளில்
என்பணி செப்பிடில் மழையில் ஒருதுளி
வளனுள்ள மலைகளும் வளமுள்ள சோலையும்
தேனிகர்ச் சுனைகளும் சிரித்திடும் மான்களும்
படத்தில் அடைந்தும், நான்பார்த்தும் ரசித்தேன்
உள்ளத்தில் நினைத்ததை உரைக்க விரும்பினேன்
இப்படத் தலைவர் சுப்பிர மணியம்
ஒப்பிலாக் கலைஞர் உலகமே அறியும்
திரைப் படக் கலைத் தாய்
குறிப்பிடத் தக்கவர் தாய்க்குத் தலைமகன்
சிந்தனை, சொல், செயல் யாவுமே பொதுவாய்,
செம்மையும் புதுமையும் செறிந்ததா யிருக்கும்
இன்றைய உலகிற் கென்னென்ன தேவை
இவைவரும் காலத்திற்கெவை அவை நலஞ்செயும்
இவைகளே இவரின் தயைமிகு நினைவுகள்
இவர்தம் படத்தைக் கலைக்கென்றே எடுத்தார்;
கலையினை மக்கள் கலையாக்கிக் கொடுத்தார்
ஏழைகள் துயரை ஏங்கிடும் நிலையைத்
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்து கிடக்கும்
பசிக்குறி முகங்களைப் பாட்டாளி வர்க்கத்தை
நசுக்கிப் பிழிந்திடும் அராஜகச் செயலை
மாற்றிடும் கருத்தை தமிழ்ப்பட உலகம்
வன்மையாய் உரைக்க அஞ்சும் நடுங்கும்
சிக்கல் நிறைந்த வர்க்கங்கள் திருந்த
மக்கள் கலைதான் மலர்ந்திட வேண்டும்
என்னும் பொருள்கள் பாண்டித் தேவனில்
பின்னிக் கிடப்பதைப் பார்ப்போர் அறிவர்
நாட்டை உயர்த்தும் நற்படம் இதுபோல்
நாளும் வளர்த்தல் வேண்டும்; பணத்தின்
வேட்டையே குறிப்பாய்ப் படம் எடுப்போர்
பாட்டையே பாடாமல் காலத்தை நோக்குக
பாண்டித் தேவனைப் பார்த்துத் தெளிக, என்
சொந்த விருப்பமிது மக்கள்தம் விருப்பமும் இவ்விருப்பத் தோடிணைய மறுக் காது
என்று நினைக்கின்றேன் நன்றி வணக்கம்
39. பாரதிக்கு நிகர்
பாரதிக்கு நிகர் பாரதியே _ மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள் சீருயர்த்தும் பணியில் (பாரதி…
ஆறோ டிரண்டு திக்கும் அதிரப் பறை முழக்கும்
அச்சமில்லாத் தமிழில் அறிவில் நிறைந்திருக்கும் (பாரதி…
வீரமும் நெஞ்சந் தன்னில் ஈரமும் வேண்டும் என்றான்
வேற்றாரைக் கண்டஞ்சுவோர் வீணரென்றே புகன்றான்
சோர்வகற்றி யாவரும் ஓர் முகமாய் எழுந்தால்
சூழும் அடிமையிருள் சொல்லாமல் ஓடும் என்றான் (பாரதி…
பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான்
பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்
பேதங்கள் வளர்ப்பவரைப் பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை உண்மையைப் புகழ்ந்தான் (பாரதி…
40. ஏரோட்டும் ஏழை
ஏரோட்டும் ஏழை இதயம் குமுறினால்
போராட்டமே எழுமே! _ புவியிலே
போராட்டமே எழுமே! (ஏரோட்…
குடும்பம் குடும்பமாய்ப் பிச்சை எடுத்தலையும்
கொடுமைகளை இனிச்சகியோம்
கூழுக்குப் பலபேர் வாடவும் _ சிற்சிலர்
கொள்ளையடித்தலைச் சகியோம் (ஏரோட்…
காடுமேடுகளைச் சீர்திருத்தி _ நல்ல
கழனிகள் ஆக்கியது யாரு?
கண்ணீரிலே பயிர் வளர்த்தே _ அதை
நாட்டுக்கு ஈந்தது யாரு?
வயிறு புடைக்கத்தின்னு மாடியிலே உறங்கும்
மனிதர்களே இதைக் கேளீர்! (ஏரோட்…
41. பெண்மையில்லாத வாழ்வில்
பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை _ அதைப்
பேணி வளர்க்காமல் நன்மையில்லை
பெண்முகம்போல் உலகில் தண்மையில்லை _ அவளைப்
பேயென்று தூற்றுவதில் உண்மையில்லை
வெண் மனம்போல் எதிலும் மென்மையில்லை _ சினம்
மீறிவிட்டால் அதுபோல் வன்மையில்லை
42. அந்தக் கவிஞன் பெயர்
அந்தக் கவிஞன் பெயர் யாரறிவார் _ உலக
அதிசயமாய் விளங்கும் அரியணையே _ நீ விரும்பும் (அந்த…
சிந்தையில் கலைக்கன்னி திருநடம் புரிகின்ற
சுந்தரனோ? கவிதைத் தோட்டம் வளர்த்தவனோ? (அந்த…
மக்கள் விரும்பும் குணம் வாய்த்தவனோ? _ தமிழில்
வல்லவனோ? மிகவும் நல்லவனோ?
மங்காத புகழ்கொண்ட சங்கப்புலவன் தானோ?
மணிமுடி அணிவேந்தர் வணங்கிடும் வாணனோ! (அந்த…
மதியில் லாதவரை மனிதராக்கி அறம்
வளரச் செய்திட வந்தவனோ? _ தலை
விதியினால் வளரும் வினைகள் ஏகமென விந்தைப் புராணம் வரைந்தவனோ?
பரமனைக் காணத் தரகனைத் தேடும்
பக்தி மிகுந்தவனோ? _ மனக்
கருணை அன்போடு அறிவெனும் வீடு
கட்டி முடித்தவனோ? (அந்த…
பொதுநலம் பேணும் புதுமைக் கவிஞனோ?
பொருளுக்காகப் பலபொய் புனைந்த வனோ?
புத்தொளி வீசிட மெத்த நகைச்சுவை
அத்தனையும் தரும் உத்தமனோ?
பித்த மனத்தினர் புத்தி தெளிந்திடும்
சக்தி அளித்த மருத்துவனோ!
அரசியற் சபையில அனுமதிக்க ஒரு
அருகதையற்ற சிறுவனோ, கல்வி
அமைந்திடப் பெற்ற அறிஞனோ?
ஜாதி வெறியனோ! நீதி நெறியனோ?
அவனோ? இவனோ? எவனோ? அறியேன்! (அந்த…
43. ஒன்றுகூடி நின்று
ஒன்றுகூடி நின்று வீரசிந்து
பாடுவோம் _ வெற்றி சூடுவோம்
நேர்மையற்ற பேர்கள்வீழ நின்று
வாட்டுவோம் _ நீதி நாட்டுவோம் (ஒன்று…
ஈரமற்ற நெஞ்சுகொண்ட ஈனர் மாய்க்கவே
ஏழையை மிதித்துவாழும் எத்தர் வீழ்கவே!
கோழைஎன்று நம்மைஎண்ணும்
கொள்கை போக்குவோம் _ கிளர்ச்சி கொண்டு தாக்குவோம்
கூடிநின்று கொடியுயர்த்திக்
கொட்டி முழக்குவோம் _ செல்வர் கொட்ட மடக்குவோம்
தோழர்காள்! _ துணிந்த வீரர்காள்! (ஒன்று…
சூழ்ச்சியால் நமைக்கெடுத்த ஆட்சி வெல்லுவோம்
வஞ்சகர் செருக்கொழிந்து வாழ்க்கை எய்துவோம் கஞ்சியில்லை என்ற சொல்லைக்
கப்பலேற்றுவோம் _ செகத்தை ஒப்ப மாற்றுவோம்
பஞ்சையென்று நம்மை எண்ணும்
பான்மை வெல்லுவோம் _ புரட்சிப் பாதை செல்லுவோம்!
தோழர்காள்! _ துணிந்த _ வீரர்காள்!! (ஒன்று…
44. வேலய்யா
வேலய்யா _ வடி வேலய்யா _ உன்னை
வேண்டி வந்தேன் _ ஒரு வேலையா(ய்)
கோலத் தினைப்புனத்தில் ஆலோலம் பாடிய
கோதை வள்ளி காதலா, சாதித் தடை கடந்த… (வேல…
ஆறுமுகத் தோடும், ஈராறு கரத்தோடும்,
ஆடும் மயிலோடும், அணிவெல்லும் வேலோடும்,
மாறாதுனை வந்து வணங்கும் மனிதர் _ சொந்த
வாழ்வில் மட்டும் சாதி மயக்கம் வந்த தேனையா? (வேல…
45. புதுமையான ரோட்டுதான்
புதுமையான ரோட்டுதான் போய்ச்சேர லேட்டுதான்
அதிகமான ஹைட்டுதான் அசந்தால் ஆளு அவுட்டுதான்!
இஞ்சினியர் சாரு ஏறி இறங்கும் காரு
இரவும் பகலும் டூரு நின்னுக்கிட்டா தேரு (புதுமை…
பகட்டாய் சிலர்வந்து ஜம்முன்னு ரசிப்பார் நடுரோட்டிலே நின்னு
பக்கத்திலே வண்டி வந்ததுன்னா பார்த்திடலாம் டான்சு ஒன்னு!
சட்டம் தெரிஞ்ச மனிதருக்குச் சமயத்திலே பின்னாலே கண்ணு
தானா வந்து மோதிக்கிட்டு சாதிப்பாங்க டிரைவர் தப்புன்னு
என்று முள்ள சம்பளந்தான் எங்கும் இந்தச் சங்கடந்தான்
இரண்டு மூன்று மெம்பர்களானால் ஏகாதசி விரதந்தான்!
46. கலைஞன் ஜீவா
புவியினிலே சுவர்க்கத்தைச் சமைப்பதற்குப்
போராடும் வர்க்கத்தின் தலைவன் ஜீவா
தன்னலமே சிறிதுமிலா இயக்கம் தந்த
தமிழ்க்கலையின் முழுவடிவம் கலைஞன் ஜீவா
47. அணுஅணுவாச்
அணுஅணுவாச் செத்தேனய்யா
யாருன்னு பாக்கல ஏனுன்னு கேக்கல
குழிதோண்டும் கொலைகார ஆட்சியிலே
யாருன்னு பாக்கல ஏனுன்னு கேக்கல… _ அணு
ஓங்கி வளர்ந்தமரம் ஒற்றை மனிதமரம்
உடல் கறுப்புநிறம் உள்ளமோ அந்தநிறம்
ஓணான் பதவியிலே உட்கார்ந்து இருந்ததைய்யா _ என்
உயிர்கேட்ட கேள்விக்கெல்லாம் ஊமையாய்ப் போனதைய்யா!
48. அன்பே அமரா!
அன்பே அமரா!
ஆடற்கலை மயிலே அரண்மனைப் பூங்குயிலே
பாடல் இலக்கணமே பைங்கிளியே! செந்தமிழே!
ஈடற்ற பேரழகே! இன்பமே! என் இதயக்
கூடத்திற் கேற்ற குத்துவிளக்கே கேள்!
தூண்டில் புழுவாக்கி என்னைத் தவிக்கவைத்து
மீண்டும் வரமாட்டேன் என்றுவிளம்பி விட்டாய்!
வேடிக்கை ஊடல் விளையாட்டென் றெண்ணினேன்!
வினையென்று ணர்ந்தேன் இன்றுவிழிநீரில் நீந்துகின்றேன்!
காட்டில் விலங்கினங்கள் கையாளும் கொடுமைகள்போல்
மாற்றாரைக் கொன்றதிலே மகிழ்ச்சியும் கொள்ளுகின்ற
ஆண்டான் பரம்பரையில் அவதரித்த பெண்தானே
அரசன்மகள் தானேநீ அப்படித்தான் கூறுவாய்!
வண்ணச் சிலையே மதுநிறைந்த பொற்குடமே
உண்ணக் கனிந்திருக்கும் உயரத்து மாங்கனியே!
மண்ணாளும் வேந்தன் மகளே மனமிருந்தால்
உன்னாலென் மேனி உருகுவதை ஒருமுறைபார்!
காதலிக்கத் தெரியும் கைதழுவி மெய்தழுவி
காணாத இன்பக் கனவுகளைத் தூண்டிவிட்டு
போதும்நான் போகிறேன் மீண்டும் வரமாட்டேன்
வேதனைத் தீயில்நீ வெந்து கருகிப்போ!
என்று மொழிந்து எனைஎளிதில் மறந்தமைதி
கண்டிடவும் நெஞ்சைக் கல்லாக்கவும் தெரியும்!
எட்டாத மாளிகையில் இன்பத்தைப் பூட்டிவைத்து
ஒட்டாமல் வாழ்ந்திடவும் உன்னால் முடியும்!
என்னால் முடியாதே! என்செய்வேன்! என்செய்வேன்!
இலையுதிர்ந்த கொம்பாய் எப்படிநான் வாழ்வேன்!
பறக்கச் சிறகில்லை! பஞ்சாய்ப் பிறந்தேனில்லை!
மறக்கலா மென்றாலோ மனதைத்தான் நீதிருடி
திறக்கவொண்ணாக் கூட்டுக்குள் சிறைவைத்து விட்டாயே!
இரக்கமற்றார் வரிசையிலே இடம்பெற்று விட்டாயே!
உறக்கமில்லை ஊணில்லை உன்பாடு எப்படியோ?
இறக்கவில்லை இருக்கின்றேன் இதுதான் நிலைமை;
கத்திக்கும் ஈட்டிக்கும் கண்ணைச் சிமிட்டாத
காதலென்ன மோதிரமா? கழற்றி எறிந்துவிட,
அல்லும் பகலுமெனை அணுஅணுவாய்ச் சிதைக்காதே!
கொல்லும் மருந்திருந்தால் கொண்டுவந்து தந்துவிடு!
விருப்பம்போல் சேர்ந்து விளையாடி மறுகணத்தில்
நெருப்பில் குதிப்பதென்றால் நிம்மதியாய் ஏற்பேன்!
முத்தம் கொடுத்தென்னை மோனத்தில் ஆழ்த்தி விடு _ இன்றேல்
கத்தியொன்று போதும் உன் கையால் அனுப்பிவிடு!
அன்பை அறுத்துவிட ஏடு வரையாதே _ நீ
அணைத்திருந்த மார்பில் ஆணி அறையாதே!
வந்துவிடு! வந்துவிடு! வரவில்லை யானால்
அந்தக் கணமேஎன் ஆவியுனைக் காணவரும்!
மூச்சு நிற்குமுன்னே முடிவுக்கு வந்துவிடு
ஆச்சென்றால் வாழ்வு அதற்குமேல் ஓடவில்லை
உன் அன்பன்
அம்பிகாபதி.*
கையெழுத்துப் பிரதியில் உள்ள பாடல்கள்
49. இளமை குன்றாக் கலை
இளமை குன்றாக் கலை எங்கள் கலையே _ இதன்
ஏற்றம் பாடாத தமிழ்ப்பாட்டேதும் இல்லை (இளமை…
எளிமையிலும் மனதில் வலிமைதரும் மருந்து
எவர்சமைத்தாலும் நன்கு சுவையளிக்கும் விருந்து! (இளமை…
பண்பட்ட பாடகரின் குரலினிலே _ முறையாய்ப்
பதம்பிடிக்கும் மங்கையர் விரலினிலே!
கண்விட்ட கணைபாயும் அழகினிலே _ கலந்தும்
தன்கட்டுக் குலையாமல் தளிர்விட்டுத் தழைத்தோங்கும்…
அந்திக் கதிரோன் ஒளி வீச்சினிலே _ காதலர்
சந்தித்து உறவாடும் பேச்சினிலே
சிந்தனைச் செல்வர்களின் மூச்சினிலே _ நல்ல
சித்திரக்காரர் வண்ணத்துப் பூச்சினிலே விளங்கும் (இளமை…
பலவித நிலைகாட்டிப் பாரீர் என்றே சிரிக்கும்
பம்பரம்போல் சுழன்று அன்பு நெஞ்சைப் பறிக்கும்
விலகி நிற்கும் நெருங்கும் விந்தையெல்லாம் குறிக்கும்
வேற்றூர் சிதைந்தபோதும் நுற்றுக்கு நூறிருக்கும் (இளமை…
50. வந்தாராம் போனாராம்
வந்தாராம் போனாராம்
வாசலிலே நிண்ணாராம் _ ஓடி
மறஞ்சிக்கிட்ட பொண்ணுக்கிட்ட வார்த்தை ஒண்ணு சொன்னாராம்!
அந்தச் சேதியைக் காதிலே கேட்டாளாம்
சிரிச்சுப்புட்டாளாம்…
அவ திடுக்கிண்ணு பார்வையைப் போட்டாளாம்
திரும்பிக்கிட்டாளாம்…
சிந்தனை பண்ணியும் பேசமுடியாம
தெணறிக்கிட்டாளாம் _ அவரும் ஔறிப்புட்டாராம் _ அவ
முந்தாணித் துணியை முனையிலே புடிச்சு
முறுக்கிப்புட்டாளாம் _ ஆசையை பெருக்கிப்புட்டாளாம்!
அந்தக் காட்சியைக் கண்ணுலே கண்டாராம்
கனைச்சுப்புட்டாராம் _ அவ
கழுத்திலே மாலையைப் போட்டாராம்…
புடிச்சுக்கிட்டாராம்!
51. கண்கள் கொண்ட காதல்
கண்கள் கொண்ட காதல் சொந்தம் பேரானந்தம்!
சுவைதரும் பேச்சினிலே துணிவெனும் மூச்சினிலே
சுகவாரியின் நீச்சலிலே சேர்ந்த ஜோடி காந்தக்கொடி! (கண்…
பூவொன்று தென்றலில் ஆடுதே
புதுவண்டு தேனுண்டு பாடுதே
இதுகாணும் இன்பம் நாளை மாறிடுமோ?
புதிரான கேள்வியேனோ பூங்குயிலே பொன்நாளிலே! (கண்…
மாறாத அன்பாலே பாரிலே
வளர்மூங்கிலைப் போல நாமும் வாழுவோம்
சீரோங்கும் ஜீவசிந்து பாடிடுவோம்
சிங்காரச் சோலைதனில் கூடிடுவோம் தீமைவெல்லுவோம்!*
52. இரும்பை அடிச்சா
இரும்பை அடிச்சா நிமிருது
இளகிப் பழுக்குது _ சில
இதயங்கள் மட்டும் வெகுநாளா
இருந்தபடியே இருக்குது! (இரும்பை…
விரும்புவ தெல்லாம் செய்து தருபவன்
உடம்பை வறுமை உருக்குது _ இந்த
விந்தை உலகைக் கண்டு அவன்
சிந்தும் வேர்வை சிரிக்குது!
ஊரை வளைக்க ஆண்ட வனிடத்தில்
உதவி கோரிடும் இதயம்
உயர்ந்த நிதியின் கண்ணைக் குத்திட
ஊசி தேடுமொரு இதயம்
கீரைகளென்றே ஏழைகள் வாழ்வைக்
கிள்ளப் போகுமொரு இதயம்
கிழட்டு ஞாயத்தைக் கேட்டு உண்மையைக்
கேலி செய்யுமொரு இதயம் _ அது
கிண்டிப் பாக்கிறது எதையும் _ நல்ல _ இரும்பை
53. இளமை குன்றாத
இளமை குன்றாத நிலைமை என்றாலும்
கடமை நினைவாலே செயல் புரிவதிலே _ இவர்
முறைக ளெல்லாம் _ ஒரு புதுமை புவிமேலே _ நல்ல
நேரங்கண்டு நேசங்கொண்டு காதல் அமுதம் கலந்து
காமன் விடும் கணைபோலே _ இவர்
பார்வையில் விழுந்தாலே _ சுகம் பரவிடும் மழை போலே!
54. நெனச்சா ஒடம்பு சிலுக்குது
ஆண் : நெனச்சா ஒடம்பு சிலுக்குது _ அதை
நெனைச்சா ஒடம்பு சிலுக்குது _ நம்ம
நேரில் பார்த்ததையும்
காதில் கேட்டதையும்
நெலைகெட்ட மனிதரின்
மொறைகெட்ட போக்கையும் (நெனச்சா…
பெண் : பேரும்புகழுமா வாழ்ந்த நாட்டிலே
வேருவிட்டுப் படருது வறுமை _ இதன்
காரணந் தெரிஞ்சவங்க காட்டுற பொறுமை
கவலைக்குள்ளாக்குது நம்மை!
ஆண் : உண்மை…
பெண் : நெனச்சா ஒடம்பு சிலுக்குது
ஆண் : ஆவிபோனாலும் மானமிழக்காத
அன்னையர் பிறந்த மண்ணிலே _ இன்று
அடக்கமில்லாமே எடக்குப் பொம்பளைகள்
நடக்கிற நடையும் சரியில்லை _ அந்த
நாடகஞ் சிலருக்குப் புரியல்லே…
பெண் : கொம்புக்குக் கொம்பு
தாவுங்கொரங்குகள் போல் _ பல
குணங்கொண்ட ஆண்களுக்குக்
குறைவில்லை _ நல்ல
குடும்பப் பெருமையைப் பெண்களின் உயர்வைக்
கூறுகட்டி விக்கிறாங்க தெருவிலே _ பெரும்
கொடுமைகள் நடக்குது மறைவிலே
ஆண் : திரை மறைவிலே _ அதை
பெண் : நெனச்சா ஒடம்பு சிலுக்குகு
ஆண் : சந்தேகமென்கிற பெரும் வியாதியால்
தாழந்து கெடக்கிறான் எளச்சவன் _ நெஞ்சில்
சொந்த நம்பிக்கை கொஞ்சமுமில்லாமே
தொடை நடுங்குறான் படிச்சவன்…
பெண் : வெந்த வீட்டிலே கெடச்சது லாபமென
விழுந்து சுருட்டுறான் முளிச்சவன் _ இங்கே
எந்தக் காலத்திலும் விதிவிதி என்று
ஏமாந்து போறான் ஔச்சவன் _ அதை
இருவரும் : நெனச்சா ஒடம்பு சிலுக்குது
ஆண் : வரவர உலகம் போகிற போக்கு
வம்புச் சண்டையா யிருக்கு
பெண் : சவரக்கத்திபோல் பெரளுது நாக்கு
தைதை போடுது பணத்துக்கு _ அதை
இருவரும் : நெனச்சா ஒடம்பு சிலுக்குது
பெண் : அட புத்திகெட்டுப் பேசாதே மச்சான் _ நமக்கு ஒரு
புள்ளைகுட்டி இல்லாம தவிச்சோம் _ இப்ப
ரெத்தினம் பதிச்சாப்போலே
நெல்லுக்கதிர் விட்டாப்போலே
ரெண்டுபேரு நாலுபேரா நிக்கிறோம்! அதை நென
ஆண் : தெக்கத்திச் செங்கரும்பே
செதுக்கிஎடுத்த சந்தனக் கொம்பே
வெக்கத்திலும் உன்னழகு தகத்தகவென குலுங்குதடி!
வேலையிருக்கு சுருக்காப் போயிலையே நறுக்கு _ நம்ம
மூலைவீட்டைத் தனியாக்கூட்டி நல்லாப் பெருக்கு
55 .கலரப்பாதது காசப் போடுங்க
கலரப்பாதது காசப் போடுங்க _ ரொம்ப
கம்மியான ரேட்டுத் தானுங்க!
பலரகமும இருக்குதுங்க _ இது
பம்பாயிலே செஞ்சதுங்க!
பலூன் ஒண்ணு ரெண்டணாங்க
பயந்தி டாதீங்க!
ஊதஊதப் பெருக்கும் _ இது
ஒதச்சுவிட்டாக் குதிக்கும்
ஓட்டை விழுந்த ஒரு நொடியில் _ இதன்
ஒய்யாரம் போய்விடும் பைபோல் சுருங்கிவிடும்
காத்தடிச்ச பக்கம் பறக்குங்க _ ஒரு
கண்ட்ரோலு மில்லாத சரக்குங்க!
வீதிவீதியாத் திரிந்து விற்பனைக்கு வந்தது
வெள்ளரிக்காய் போலிருக்கும் வெளிநாட்டுப் பலூனு!
காதுக்கிட்ட புடிக்காதீங்க காத்துக் கொஞ்சம் ஓவரு
கையவச்சுப் பிதுக்காதீங்க கொறஞ்சுபோகும் ஆபரு!
மாடிவீட்டு சீமானைப்போல் வயிறு பெருத்த சைசு _ இதன்
வண்டவாளம் மதிப்புஎல்லாம் வெடிச்சதுன்னா குணோசு!
ஆடிவரும் குழந்தையெல்லாம் ஆசைப்படும் தினுசு _ ஒங்க
அனைவருக்கும் புடிக்குமுங்க அந்தரகம் புதுசு _ நூலை
அவுத்துப்புட்டா சிறுத்துப்போகும் அப்புறம்ஏது மவுசு?
பாடுபடும் மக்கள்வயிறு பட்டினியால் வாடுவதை
படம்பிடித்துக் காட்டுமிந்த சைசு _ இது
பரம்பரையாத் தொடர்ந்து வரும் கேசு _ இதை
பக்குவமாய் ஊதி அதன் பக்கத்திலே பறக்கவிட்டா
பாகுபாட்டை போக்குவது ஈசி! (கலர்…
56. நாடுயரப் பாடுபடுவோம்
நாடுயரப் பாடுபடுவோம்
நல்லவரைப் பாடியாடுவோம்
சுரண்டலின் பாதைதன்னை மூடுவோம்
தொழிலாலே வாழுவோம்
தூங்காமல் ஒன்றாய்க் கூடுவோம்
இதைக் கேளுங்கோ…
இவ்வுலக நாடு இனி
எங்கள் சொந்த விடு _ இல்லை
என்போர் கண்கள் குருடு!
செந்நெல் வளம்மேவிட வேர்வை
சிந்திடும் கூட்டம் நாமானால்
சீக்கிரமே காண்போம் இன்பமே! (நாடு…
57. உன்னை நினைந்து மனம்
ஆண் : உன்னை நினைந்து மனம் வாடுதே
மின்னல் விழி நாடுதே
ஓடும் நிலவைக் கூடும் முகிலும்
உண்மையெனப் புகலுதே!
சிங்கார மலரிதழோரம்
தேன் அமுதூறுதே
சிறகுவண்டு வருகை கண்டு
செடி உடல் வளைக்குதே!
பெண் : வாளொடு வளையல் நேசமே
மாறாதிது நிஜமே
மாதென்றன் மனம் உல்லாசம்
மணி முடி உங்கள் வசமே!
மன்னாதி மன்னர் பணிவாரே
மான்எனை நம்பினால்
வந்து சுகமே இன்பந்தருமே
வளர்கலை குலுங்குமே!
மாங்கிளையதனில் பூங்கிளி
தூங்காதிருந் திடுதே
மாதுளைக்கனி இரண்டு
மறையுதே அதைக் கண்டு
58. இயற்கையெனும் கலைஞன்
இயற்கையெனும் கலைஞன் அமைப்பினிலே
எத்தனையோ கோடிஇன்பம் உலகினிலே!
அன்பெனும் தொழிலாளி அமைத்தவழி _ அதில்
ஆடிநடந்து செல்லும் காதல்விழி!
கவலைதனை பரதக் கலை வெல்லுமே _ ஆடும்
காலின் சதங்கை அந்தக் கதை சொல்லுமே!
59. ஏறும்போது பாக்கலாம்
ஏறும்போது பாக்கலாம் _ சம்பளம்
ஏறும்போது பாக்கலாம்
எதுக்கு இந்தப் பேச்செல்லாம்? (ஏறும்..
இருபதிலே குடும்பம் நடத்த ஏலுமா? _ ரூபா
இருபதிலே குடும்பம் நடத்த ஏலுமா? _ செலவை
இழுத்துப் புடிச்சுச் சமாளிக்கிற
காலமா? _ இது _ காலமா? _ அது (ஏறும்…
60. இது பொல்லாத அன்புடா
சந்திரன் : இது பொல்லாத அன்புடா
புடிச்சுக்கிட்டா வம்புடா
பொளைக்கிற பொளப்புக்குப்
பொண்டாட்டியா? _ வெறும்
கண்காட்சியா? _ இல்லை
கண்ட பக்கம் திரும்பும் கைகாட்டியா?
பச்சை : ஆணாகப் பொறந்து மூணாசை மறந்து
வீணாகத் திரிந்த வேதாந்திகள் _ இளம்
பெண்ணோடு வாழ்ந்திட எண்ணாமலே _ வெறும்
மண்ணோடு தான் சுமந்தார் _ அந்த
ஏகாந்த நிலைகள் இல்லாத நமக்கு
எளசோ பளசோ இருந்தாகணும் (ஆணாக…
பெண் : மந்திரமில்லை மாயமில்லை
மையுமில்லே பொய்யுமில்லே
அந்திரமில்லே தந்திரமில்லே
அதுமில்லே இதுமில்லே
யந்திரமில்லே ஏதுமில்லே
ஆறுமில்லே தேருமில்லே
சந்திரன்போல சுந்தரப் பொண்ணு
இந்த ரூமிலே இருக்குது பாரு! (மந்திர…
61. கற்பனைச் சோலையிலே
கற்பனைச் சோலையிலே மலரும்
கவிதைகள் ஆயிரமாயிரம்
சொற்குறை வாராமல் தொடர்முறை மாறாமல்
பொற்குவை போல் குவியும்
புதுமைவளம் பொலியும்… (கற்…
அளக்க முடியாத ஆழம்நிறைந்த உள்ளம்
அன்பு பெருக்கெடுத்து ஆடும்தமிழ் வெள்ளம்
இலக்கண இலக்கியங்கள் இயற்றும்கலை இல்லம
அத்தனையும் எழுந்து தித்தித்தை எனத் துள்ளும்… (கற்…
பண்பை வரையறுப்பான் பழகும்முறை யுரைப்பான்
துன்பத்தை இன்பமாய்ச் சுமந்தும் மகிழ்ந்திருப்பான்
கொம்பை உலுக்கிவரும் கொடிய விலஙகினையும்
குழந்தையையும் சமமாய்க் கொள்ளும் புதிர்மனத்தான்! (கற்…
வானத்து வெண்ணிலவைப் பெண்ணென்று பேசுவான்
வாக்கின் திறனாலே ஆணென்றும் பாடுவான்
கானப் பசுங்கிளியைக் காதலிஎன்ற ழைப்பான்
கன்னத்தில் கொத்தும்அது பொல்லாததென்றும் உரைப்பான்
62. பருவமனசு ரெண்டும்
இருவர் : பருவமனசு ரெண்டும் துடிக்குது _ ஆனா
பரம்பரை வெக்கம்வந்து இடிக்குது
கூட்டம் : ஆமா! பரம்பரை வெக்கம் வந்து இடிக்குது!
மாப்பிள்ளை _ பொண்ணு மாப்பிள்ளை _ நல்ல
மாப்பிள்ளை _ பொண்ணு மாப்பிள்ளை!
பெண் : அருகம்புல்லுப் பத்தையிலே
சருகுபோட்ட மெத்தையிலே
அக்காளப் பாத்தால தனிதான் _ அது
அன்பால உண்டான கனிதான்!
ஆண் : அடி திருகுநடக் காத்தாயி சிட்டுக்குரல் முத்தாயி
தெருக்காலே பாருங்கடி மாப்பிளே _ ஒங்க
அக்காளத் தாண்டுறாரு அழகிலே _ உனக்கு
அறிவில்லே! _ அடே இருபுள்ளே! _ அங்கே (பருவ….
63. அன்பில் அரும்புவிட்டு
அன்பில் அரும்புவிட்டு அழகுமலர் ஆனபெண்ணே
பண்பிலே காய்த்து பருவக்கனி யானபின்னே
உண்பதற்கு உரிமை கொண்டேன் உள்ளம் உருகுகின்றேன்
இன்பக் கனியே நீ ஏனோ மறைந்து நின்றாய்.
(பாட்டு)
1. இளங்காதல் மானது
எனைக்கண்டு நாணுது
விளங்காத போதையிலே _ இரு
விழிபோடும் பாதையிலே
2. இளங்காதல் ஓவியம்
எதிர்காலக் காவியம்
விளங்காமல் நாணுவதேனோ _ உன்றன்
விழிரெண்டும் காவிரி மீனோ?
3. இளங்காதல் ஓவியம்
எதிர்காலக் காவியம்
எனைக்கண்டு நாணுவதேனோ?
எழிலகாட்டும் விளையாட்டுத்தானோ?
4. இளங்காதல் அன்னமே
இன்பக்கலை மணமே
விளங்காமல் நாணுவதேனோ? உன்றன்
விழிரெண்டும் காவிரிமீனோ?
64. உதயசூரியன் ஒளியினாலே
உதயசூரியன் ஒளியினாலே (உயிரொளியாலே)
உலகம் செழித்தோங்கி
உயர்வதைப் போலே…
உதயக்கதிரவன் உயிரொளியாலே (ஒளியதனாலே)
உயிரெலாம் விழித் தெழுந்து…
துய்வதைப் போலே
உண்மையின் வளர்
பெண்மையின் சக்தியே
உலகென்னும் குழந்தைக்கு
உணர்வூட்டும் பாலே…
உதயக் கதிரவன்
ஒளியதனாலே
உயிரெல்லாம் விழித்தெழுந்
துய்வதைப் போலே
உண்மையின் வளர்
பெண்மையின் சக்தியே
உலகென்னும் குழந்தைக்கு
உணர்வூட்டும் பாலே…
கடைசிப் பல்லவி
65. தானா எவனும் …
தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் _ மேலே
போனா எவனும் வரமாட்டான் _ இதப்
புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்
திரைப்பாடல்-8
1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209
176. துணிந்தால் துன்பமில்லை
துணிந்தால் துன்பமில்லை
சோர்ந்துவிட்டால் இன்பமில்லை! (துணி…
இனிமை கலந்துவரும் பாட்டாலே _ மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே! (துணி…
கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்பப் பறவையுண்டு பாரிலே!
துடிக்கும் இதயங்களே தாளம் _ காற்றில்
மிதக்கும் ஓசையெல்லாம் கானம் (துணி…
ஆராரோ வென்று அன்னை பாடக் கண்டு
அமைதியிலே குழந்தை தூங்குவது முண்டு
வாடிடும் முல்லை ரீங்கார வண்டு
வருவது கண்டு மனம்பொங்கும் மது சிந்தும்
பகமை நீங்கிவிடும் பாட்டாலே _ பெரும்
பசியும் தீர்ந்துவிடும் கேட்டாலே! (துணி…
இரும்புத்திரை
177.மனிதரை மனிதர்
மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம்கடமை,
வள்ளுவப் பெருமான் சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை,
உழைப்பை மதித்து பலனைக் கொடுத்து
உலகில்போரைத் தடுத்திடுவோம்,
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள்விளக் கேற்றிடுவோம்
178. நெஞ்சில் குடியிருக்கும்
பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா? _ என்
நினைவைப் புரிந்துகொள்ள முடியுமா?
ஆண் : கண்ணில் குடியிருக்கும்
காதலிக்கும் நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா? _ என்
கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா?
பெண் : என்றும்பேசாத தென்றல்
இன்றுமட்டும் காதில்வந்து
இன்பம் இன்பம்என்று சொல்வதும் என்ன?
ஆண் : ஓரவிழிப் பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாததுபோல் கேட்பதுமேனோ?
பெண் : மலர்க்கொடி தலையாட்ட,
மரக்கிளையும் கைநீட்டக்
கிளையில்கொடி இணையும்படி ஆனதுமேனோ?
ஆண் : இயற்கையின் வளர்ச்சிமுறை
இளமைசெய்யும் கிளர்ச்சி முறை
ஏனென்று நீகேட்டால் யானறிவேனோ?
179. கையிலே வாங்கினேன்
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே
மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…
சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…
விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…
கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…
180. ஆசைகொண்ட நெஞ்சிரண்டு
ஆசைகொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்றபோது
ஆடாத சிலைகளும் ஆடாதோ?
ஆனந்த கீதங்கள் பாடாதோ?
ஆடலுக்கும் பாடலுக்கும் ஊதும்குழல் யாழினுக்கும்
ஆதாரமானது கானம்
ஊடலுக்கும் காதலுக்கும் உண்மைஅன்புக் கூடலுக்கும்
உகந்ததுவாலிப காலம்
வண்டுலாவும் மலர்ச் சோலையிலே _ தென்றல்
வந்துலாவுகின்ற வேளையிலே _ காளைக்
கன்றுபோல் உருவம் கொண்ட ஆள்ஒருவன்
நின்றுபோட்ட ஒரு பார்வையிலே _ என்னைக்
கொன்று விட்டானடி மாமயிலே!
இதையும் அதையும்கண்டு மதியும்மயக்கங் கொண்டு
இதயக்கதவை வந்து தட்டுதே _ எண்ணம்
இமயச்சிகரம் தன்னை எட்டுதே!
அதிகத் துணிவுகொண்டு ஆசை கரைபுரண்டு
அதிரத் தலைசுழன்று சுற்றுதே _ நிலவு
அனலை வாரிக் கொட்டுதே!
181. நன்றிகெட்ட மனிதருக்கு
நன்றிகெட்ட மனிதருக்கு அஞ்சிநிற்க மாட்டோம்
நாவினிக்கப் பொய்யுரைக்கும் பேரைநம்ப மாட்டோம்
என்று கூறுவோமடா _ ஒன்று சேருவோமடா
வீறுகொண்டு சிங்கம்போல் முன்ஏறு வோமடா!
எளிய மக்கள் தலையில்காசு ஏறி மிதிக்குது _ அதை
எண்ணிஎண்ணித் தொழிலாளர் நெஞ்சு கொதிக்குது
வஞ்சனைக்கும் அஞ்சிடோம் வஞ்சனைக்கும் அஞ்சிடோம்
பஞ்சம்நோய்க்கும் அஞ்சிடோம் பட்டினிக்கும் அஞ்சிடோம்
நெஞ்சினைப் பிளந்தபோதும் நீதிகேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்
காலி என்றும் கூலி என்றும் கேலி செய்யுங் கூட்டமே
காத்துமாறி அடிக்குது _ நீர் எடுக்கவேணும் ஓட்டமே
தாலிகட்டிக்கொண்ட மனைவி போலுழைத்த எங்களைத்
தவிக்கவிட்ட பேரை எந்தநாளும் மறக்க மாட்டோமே!
மஹாலட்சுமி
182. வேல் வெல்லுமா?
வேல் வெல்லுமா? _ என்விழி வெல்லுமா?
வேல்வந்து விழிபோலக் கதை சொல்லுமா? (வேல்…
கதை சொல்லுமா? _ வாழும் வகை சொல்லுமா?
கடல்போல எழுந்தின்பக் கரை துள்ளுமா? (வேல்…
கோழைக்கும் வீரத்தைக் கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய் இருப்பவள் மங்கை
வாழ்வினில் மோகத்தை வளர்ப்பவள் மங்கை _ ஆண்
மனதில் வீடுகட்டி வசிப்பவள் மங்கை
மங்கைஎன் பார்வையில் மலையசையும் _ பகை
வாளும் ஈட்டியும் என்ன செய்யும்? (வேல்…
கண்ணகிபோல் நாளைக் கழிக்கவும் தெரியும்
காதலை மாதவிபோல் ரசிக்கவும் தெரியும்
மன்னனைச் சகுந்தலைபோல் மதிக்கவும் முடியும்
மணிமேகலை போல் வெறுக்கவும் முடியும்! (வேல்…
வீரக்கனல்
183. போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
பெண் : போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும் _ ஒலகம்
புதுசா மாறும்போது பழைய
மொறையை மாத்திக்கணும்
ஆண் : போட்டுக்கிட்டா _ ஆமா
போட்டுக்கிட்டா _ தாலி (போட்டுக்…
பெண் : போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்,
புடிக்குதான்னு கேட்டுக்கணும்
ஆண் : புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும் (போட்டுக்…
பெண் : கழுத்திலே தாலி கெடந்தா
காலிகூட மதிப்பான் _ கொஞ்சம்
கண்ணியமா நடப்பான் _ இந்தக்
கயிறு மட்டும் இல்லையின்னா
கழுதைபோல இடிப்பான்
ஆண் : ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
அடுத்த பொண்ணு மதிப்பா _ கொஞ்சம்
அடங்கி ஒடுங்கி நடப்பா _ இந்த
அடையாளம் இல்லையின்னா
அசட்டுத்தனமா மொறைப்பா (போட்டுக்…
இதுலே மட்டும் போடுற முடிச்சே
இறுக்கிப் போட்டுக்கணும் _ நல்லா
இழுத்துப் பாத்துக்கணும் _ அது (இதுலே…
பெண் : எடையிலே பிரிங்சுக்காமே
முறுக்கிப் போட்டுக்கணும்
ஆண் : அதுலே ஒண்ணும் கொறைச்சலில்லே
அழுத்திப் போட்டிருக்கு _ உண்மை
அன்பு ஆசை ரெண்டும் சேத்து
முறுக்கிப் போட்டிருக்கு _ மூணு
முடிச்சாப் போட்டிருக்கு (போட்டுக்…
பெண் : பொறப்பு வளர்ப்புச் சட்டம்
ஆண் : நாம _ சேந்து போட்டுக்கணும்
பெண் : பொழப்பு இருப்பு நோட்டம்
ஆண் : அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்
பெண் : அட _ வரவு செலவுத் திட்டம்
ஆண் : ஒண்ணாச் சேந்து போட்டுக்கணும்
பெண் : நம்ம வழக்கமான ஆட்டம்
ஆண் : ஹா… ஹ… ஹ… (போட்டுக்…
திருடாதே
184. திருடாதே! பாப்பா
திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே!
திறமை இருக்கு மறந்துவிடாதே! (திருடா…
சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாத்து _ தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா _ அது
திரும்பவும் வராமப் பார்த்துக்கோ (திருடா…
திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது _ அதைச்
சட்டம்போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது (திருடா…
கொடுக்கிற காலம் நெருங்குவதால் _ இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது _ மனம்
கீழும் மேலும் புரளாது! (திருடா…
குமாரராஜா
185. மணமகளாகவரும்
மணமகளாகவரும் மங்கை எவளோ? _ என்
மருமகளாயிருக்கத் தகுந்தவளோ? (மணம…
குணமகளாய் விளங்கும் குலமகேளா? _ இனிய
குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ? (மணம…
மஞ்சள்குங்குமம் அணியும் வழக்குமுண்டோ? _ நல்ல
மனைவிக்குத் தேவையுள்ள அடக்குமுண்டோ? நெஞ்சில்
இரக்கம் உண்டோ? நேர்மை யுண்டோ? அவள்
நேசனுக்கதிக யோசனைபுகலும் நிலைக்கு நடக்கும்
இணக்கம் உடையவளோ? (மணம…
பொறுக்கி எடுத்த முத்துக் கருத்தைத்
தொகுத்துவைத்த திருக்குறள்
முப்பாலும் படிப்பவளோ?… ஆ… கனல்
தெறிக்கக் கொதித்த மணிச் சிலம்பையுடைத்து நீதி
தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ?… ஆ
அன்புக் கணை தொடுத்துத் துன்பத்தினை விரட்டும்
ஆற்றல் மிகுந்தவளோ?… இசை (குரலும்…
186. மங்கையரின்றித் தனியாக
பெண் : மங்கையரின்றித் தனியாக
வந்தவர் கிடையாது
பெண்கள் : தந்ததும் பெண்ணையா
கொண்டதும் பெண்ணையா
சந்தேகம் என்னையா?
சம்மதம் என்ற மொழி கேட்டாலே
பெண் : சஞ்சலம் தீர்ந்துவிடும் கூட்டாலே
பெண்கள் : சந்திப்பு ஓயாது
பெண் : சிந்திக்கத் தோணாது
பெண்கள் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா
பெண் : சிந்தனைக் காரரோ, யோகியோ
செய்வதேதும் அறியாத ஞானியா?
காதல் உறவினில்
பெண்கள் : பேதமில்லை
பெண் : பாசம் இணைந்தபின்
பெண்கள் : பாவமில்லை
பெண் : சந்திப்பு ஓயாது
பெண்கள் : சிந்திக்கத் தோணாது
பெண் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா (மங்கை…)
187. நான் வந்து சேர்ந்த இடம்
நான் வந்து சேர்ந்த இடம் நல்லயிடந்தான் _ இதை
நம்பவைக்கும் பொறுப்பு அன்பினிடந்தான் (நான்…
ஏனென்று தோன்றவில்லை எதிர்பார்த்து வந்ததில்லை
இல்லாத அதிசயந்தான் இதுஒரு ரகசியந்தான் (நான்…
அருமையுடன் வளர்த்து அறிவுள்ள பெண்ணாக
ஆக்கித்தரும் பொறுப்பு அன்னையிடந்தான் _ குலப்
பெருமைதனைக் காத்து பெற்றவர் மனம் நாடும்
பேரைப் பெறும் பொறுப்பு பெண்டந்தான் (நான்…
எனக்கும் புரியாமல் அவர்க்கும் புரியாமல்
இடையில் துணிவுவந்த விந்தை யாலே
எப்படியாகு மென்றும் எங்குபோய் நிற்குமென்றும்
எண்ணவும் முடியவில்லை சிந்தையாலே _ இன்று (நான்…
188. ஏட்டில் படித்ததோடு
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே! _ நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே (ஏட்டி…
நாட்டின் நெறிதவறி நடந்துவிடாதே _ நம் (நாட்டி…
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்துவிடாதே! _ நீ (ஏட்டி…
மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது _ பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது _ தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது _ நீ (ஏட்டி…
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிடவேணும்
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிடவேணும் _ அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் (ஏட்டி…
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும், நீபிறந்தமண்ணன் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும்! _ நீ (ஏட்டி…
189. என்னைப் பார்த்த கண்ணு
பெண் : என்னைப் பார்த்த கண்ணு வேறு
பெண்ணைப் பார்க்குமோ?
எண்ணம் கலந்த பின்னே இனி
சொன்னாலும் கேட்குமோ? (என்னை…
பின்னிக் கிடக்கும் முல்லைக் கொடியைப்
பிரிக்க முடியுமா? _ அன்பைப் பிரிக்க முடியுமா?
கண்ணும்கண்ணும் கட்டினகூட்டைக் கலைக்க முடியுமா?
பனியைநம்பி வெதைவெதைச்சாப் பலன் விளையாது
பருவமழை நானிருந்தால் பழுது வராது _ அத்தான்
வழியில்பார்த்துச் சிரிச்சதெல்லாம் மனைவி யாகுமா?
மலையைப் போல் வளர்ந்த காதல்
மறந்து போகுமா? _ சொன்ன வார்த்தை மாறுமா?
ஆண் : உன்னை நினைக்க நினைக்கக் கண்கள் மலருது
காணும் நினைவுமீறி உள்ளம் மயங்குது
உன்னைப் பார்த்தக் கண்ணு _ வேறு
பெண்ணைப் பார்க்குமா?
உள்ளம் கலந்த பின்னே _ இனி
சொன்னாலும் கேட்குமா? (உன்னை…
புனர்ஜென்மம்
190. உள்ளங்கள் ஒன்றாகித்
பெண் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே (உன்ன…
ஆண் : எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே
இளமை நேசமே மண்மேல் சுகமே! (எல்லை…
பெண் : சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே
தென்றல் வீசியே நன்றி கூறுமே (உன்ள…
கொஞ்சும் சோலைக் குருவி சொந்தம் பேசுமே
குறை வில்லாமலே எல்லாம் தருமே (கொஞ்சும்…
ஆண் : பொங்கும்நீரோடை சந்தம் பாடவே
கண்கள் ஆடுமே காதல் நாடகம்! (உள்ள…
191. இது காலத்தின் செயல்தானா?
கண்ணாடிப் பாத்திரத்தில்
கல்லெறிபட்டது போல் _ என்
எண்ணமெனும் தேன்கலசம்
உண்ணாமல் உடைந்திடுமோ? _ இன்பக்
காவியம் பொய்தானா? _ கொண்ட
காதலும் பொய்தானா? _ என்
ஆசைகள் வீண்தானா? _ இனி
அமைதியும் காண்பேனா? (இன்ப…
இது காலத்தின் செயல்தானா? _ சுகம்
கானல் நீர்தானா?
மன நம்பிக்கை வீண்தானா? _ நான்
வெம்பிய காய்தானா? (இன்ப…
இருள் மூடிய வான்போலே
கரை ஏறிய மீன்போலே
துயர்மீறிடும் நிலையாலே
படும்வேதனை தீராதோ? _ ஒரு
பாதையும் தோணாதோ? (இன்ப…
192. என்றும் துன்பமில்லை
என்றும் துன்பமில்லை, இனிச் சோகமில்லை
பெறும் இன்பநிலை, வெகு தூரமில்லை
இனி வஞ்சமும் பஞ்சமு மில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைக ளில்லை
கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலையில்லை
எங்கள் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை
நம் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை (என்றும்…
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக்குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக்குரல் (என்றும்…
இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம் (இங்கு…
இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை
கொடுமை தீமை பொறாமை விரோதமில்லை (என்றும்…
193. உருண்டோடும் நாளில்
உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா? இருள் வேண்டுமா? (உருண்…
திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
இது போதுமா? இன்னும் வேண்டுமா? (உருண்…
விரும்பாத போதும் விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா? விஷம் வேண்டுமா? (உருண்…
எதையும் தாங்கும் இதயம்
194. கனியிருக்கு விருந்த வைக்க
கனியிருக்கு விருந்த வைக்க
காடிருக்குக் கூடு கட்ட
கலந்துபேச நானிருக்கேன் வாங்க _ சும்மா
காத்திருக்க நேரமில்லே வந்திடுங்க (கனி…
சின்னஞ்சிறு சிட்டுகளே! சிங்காரப் பறவைகளே!
தெம்மாங்குக் குயில்களே! சிவந்த மூக்குக் கிளிகளே!
தேனெடுக்கும் வண்டுகளே ஓடிவாங்க _ நான்
சேதியொண்ணு சொல்லப்போறேன் சீக்கிரம் வந்திடுங்க (கனி…
ஓங்கிவளரும் மூங்கில்மரம்
ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு
ஒழுங்காகக் குருத்துவிட்டு
கெளைகெளையா வெடிச்சிருக்கு
ஒட்டாமெ ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? _ எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா? (கனி…
விக்ரமாதித்தன்
195. மொகத்தைப் பார்த்து
மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க _ சும்மா
மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க _ பல்லை
மூடிக்கிட்டுச் சிரிக்காதீங்க (மொகத்…
பொண்ணிருக்கும் வீட்டுக்குள்ளே புகுந்திருக்கும் மாப்பிளே,
போட்டியிலே ஜெயிச்சநீங்க புதுமையான ஆம்பளே!
என்னத்தான் புடிச்சிருக்கா இல்லையான்னு மனசிலே
இருக்கும் ரகசியத்தை இழுத்துப்போடுங்க வெளியிலே
முன்னும்பின்னும் பழக்கம் வேணுங்க _ இங்கே வர்ரதுன்னா
முறையிலேதும் நெருக்கம் வேணுங்க _ எண்ணத்தில்
பொருத்தம் வேணுங்க _ அது இல்லேன்னா
இரண்டு பக்கமும் இன்பம் ஏதுங்க?
அன்னம்போல நடக்குமுங்க ஆளைக்கண்டா பறக்குமுங்க
என்னமோன்னு நினைக்காதீங்க _ நான்
சொல்லிப்புட்டேன்… (மொகத்…
196. பாடுபட்டுக் காத்த நாடு
பாடுபட்டுக் காத்த நாடு கெட்டுப் போகுது
கேடு கெட்ட கும்பலாலே _ இங்க
கேடுகேட்ட கும்பலாலே… (பாடு…
சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே _ பெரும் (சூடு…
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே
வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே _ இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே நாம்… (பாடு…
கலைஅரசி
197. என்றும் இல்லாமல்
என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ?
எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது _ எது
வேண்டியோ வாடுது ஆடுது
மனம் என்னோடும் நில்லாமல்
முன்னால் ஓடுது _ என்
வீசும் தென்றல் காதோடு
பேசிடும் பாஷை நானறியேனே
வெறும் போதையோ? ஆசையோ? மாயமோ? _ இது
விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ? (என்றும்…
198. நினைக்கும்போது நெஞ்சம்
நினைக்கும்போது நெஞ்சம் கண்ணும் துடிப்பது ஏனோ?
நிறைந்த உறவில் கனிந்த காதல் நிலையிது தானோ?
அணையை மீறும் ஆசை வெள்ளம் அறிவை மீறுதே
அதையும்மீறி பருவகாலம் துணையைத் தேடுதே!… (நினை…
சுவரில்லாத வீடுகளில் உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே!
உனக்குநானும் எனக்குநீயும் உரிமைத் தேனென்று
கணக்கில்லாத கதைகள்பேசிக் கலந்ததை இன்று… (நினை…
199. அதிசயம் பார்த்தேன்
தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு வாள்முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடங்கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே _ அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே _ நான் (அதிசயம்…
மூணு பக்கமும் கடல் தாலாட்டுது _ தன்
மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது _ பல
வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதிசயம்…
மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு _ அதில்
மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
மானிருக்கு வண்ண மயிலிருக்கு
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதிசயம்…
அங்கே _ சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும் _ தழுவி
சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு மணம்சுந்து வரும்
இங்கே தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை _ சற்று
நேரங்கூட வெயில் மறைவதில்லை _ நம்மைத்
தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.
200. ஆசைவைக்கிற இடந்தெரியணும்
பெண் : ஆசைவைக்கிற இடந்தெரியணும் மறந்துவிடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே
மாமோய்… மாமா… மாமா…
வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா? _ அது
வளர்ந்தாலும் நீ நினைக்கிற இன்பம் மலருமா?
ஆண் : திரும்பிப் பார்க்கும்போது மனசு
திருட்டுப் போகுது _ கண்ணே திருட்டுப் போகுது
சம்மதத்தைச் சொல்லப் போறியா? _ இல்லே என்னைச்
சமயம் பார்த்துக் கொல்லப் போறியா?
கண்ணே… கண்ணே… கண்ணே…
பெண் : ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்? _ ஒங்
கனவு எப்படிப் கலிக்கும்?
கையைத் தொடாதே கையைத் தொடாதே _ மானம்
காற்றிலே பறக்கும் மாமோய்… மாமா… மாமா…
ஆண் : கணக்கு மறிக் காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்குமேலே பணம் இருக்குது மானே உனக்கு!
அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு _ நீ
கல்யாண தேதி வைக்கிறியா? _ இல்லே இப்போ
காவிக்கடைக்கு ஆள் அனுப்பிறியா?
கண்ணே… கண்ணே… கண்ணே…
பெண் : என்னய்யா நியும் ஒரு ஆம்பளையா?
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் விளங்கலியா?
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா
வந்தாலும் ஒட்டாது கசந்துபோகும் வேப்பிலையா
மாமோய்… மாமா… மாமா… (ஆசை…
மகனே கேள்
201. ஓரோண் ஒண்ணு
பையன்கள் : ஓரோண் ஒண்ணு
ஈரோண் ரெண்டு
மூவோண் மூணு
நாலோண் நாலு
வாத்தியார் : ஓரோண் ஒண்ணு
உள்ள தெய்வம் ஒண்ணு
ஈரோண் ரெண்டு
ஆண் பெண் ஜாதி ரெண்டு
மூவோண் மூணு
முத்துத் தமிழ் மூணு
நாலோண் நாலு
நன்னிலம் நாலு
உள்ளதெய்வம் ஒண்ணு
ஆண் பெண் ஜாதி ரெண்டு
முத்துத் தமிழ் மூணு
நன்னிலம் நாலு
பையன் : அஞ்சோண் அஞ்சு
வாத்தியார் : அஞ்சுவதற்கு அஞ்சு
பையன் : ஆறோண் ஆறு
வாத்தியார் : நல்லறிவுகள் ஆறு
பையன் : ஏழோண் ஏழு
வாத்தியார் : இசைக் குலங்கள் ஏழு (ஏழோண்…
சிறுமி : ஸ ரி க ம ப த நி ஸா
பையன் : எட்டோண் எட்டு
வாத்தியார் : எட்டும் வரை எட்டு
பையன் : ஒன்பதோண் ஒன்பது
வாத்தியார் : உயர் மணிகள் ஒன்பது
பையன் : பத்தோண் பத்து
வாத்தியார் : பாடல்கள் பத்து
உன்னையெண்ணிப்பாரு
உழைத்து முன்னேறு
உண்மையைக் கூறு
செம்மை வழி சேரு
சிறுமி : (உன்னை)
வாத்தியார் : அன்புக்கு வணங்கு
அறிந்தபின் இணங்கு
பண்புடன் விளங்கு
பசித்தவர்க் கிரங்கு
பையன் : (அன்புக்கு)
வாத்தியார் : பேதங்கள் தீர்த்து
பெருமையை உயர்த்து
நீதியைக் காத்து
நேர்மையைக் காட்டு
சிறுமி : நேர்மையைக் காட்டு
பொன்மொழி கேட்டு
பொய்மையை மாற்று
பொறுப்புகள் ஏற்று
பொதுப் பணியாற்று
வாத்தியார் : திருக்குறள் நூலை
சிறந்த முப்பாலை
கருத்துடன் காலை
படிப்பதுன் வேலை
202. ஆறறிவில் ஓரறிவு அவுட்டு
ஆண் : ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு (ஆறறி…
அடக்கமில்லாப் பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கு நடையிலும்
ஆதிகாலப் பண்பைக் காறறல
பறக்க விடும் உடையிலும் (ஆறறி…
தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…
ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச்சோத்து மடங்களிலும் (ஆறறி…
203. கலைமங்கை உருவம்
ஆண் : கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு
தணியாத மனித உள்ளம் எங்கே உண்டு? _ கண்ணே
கமல மலரை வென்று திகழும் முகத்திலும் ரெண்டு
கருவண்டு விளையாடும் காட்சி வேறெதில் உண்டு?
பெண் : எழில் சிந்தும் இளமை கொண்டு நேரில் நின்று
அலை மோதும் இன்பம் வேறெதிலே உண்டு?
வளம் பொங்கும் உருவம் கண்டு போதை கொண்டு
மயங்காத மங்கையுள்ளம் எங்கேயு ண்டு? அன்பே (ஆறறி…
ஆண் : கைவளையல் போடும் சண்டை _ எங்கும்
கன்னிலிசை பாடும் தண்டை _ சுழலும்
மைவிழியில் மேவும் கெண்டை _ வந்து
மெய்யுருகப் பாயும் ஒன்றை
பெண் : உள்ளம்இரண்டும் கனிந்து ஒன்றையொன்று கலந்தால்
கொள்ளை கொள்ளும் இந்த வெள்ளம் போறாதோ?
துள்ளிவந்து ஆண்களைத் துணை தேடும்போது
தூரநின்றே ஆட என்றும் வெண்கொடியே நீ
ஆண் : எண்ணச் சோலையில் நின்று
இருகரமும் இணைந்து படர்ந்து மகிழ
எழில்வளர சுகம் விளைய மனம் மலரும்
படர்ந்து நிறைந்து குலுங்க
துணையெனும் உறவினில் துணிந்திடும் நினைவினில்
சுவைதரும் சுபதின நிலைபெறவே
ஒருபுறமாட சிறுமயிலாட குளிரும்
முகமே அருகினில் நெருங்க
புதுநிறமே பெரும் தளிர்விரல் தரும்குறி
அபிநயங்கள் விளங்க
பெண் : அலைகடல்மேல் நிலவெனவே அனுதினமே
தழுவி இனிய மலர் குலுங்க
ஆண் : பனிமலரிதழ் அமுதினை அருந்த
பெண் : பல கதைகளும் கவிதையும் முழங்க
ஆண் : சுகம் வழங்க
பெண் : மதி மயங்க
இருவர் : விரைந்து தனைமறந்து அணைகடந்து வரும்
கலைபொங்கும் உருவம் கண்டு
காதல்கொண்டு தணியாத மனிதவுள்ளம் எங்கேவுண்டு?
(கலைபொங்கும் உருவம்கண்டு காதல் கொண்டு…
204. ஆட்டம் பொறந்தது
ஆட்டம் பொறந்தது உன்னாலே _ அதில்
அழகு வந்தது என்னாலே
காட்சி நிறைஞ்சுது பொன்னாலே _ அந்தக்
கலை வளர்ந்ததும் என்னாலே
சத்தம் பொறந்தது தன்னாலே _ அது
சங்கதமானது என்னாலே
ஜாடை பொறந்தது கண்ணாலே _ அது
மேடைக்கு வந்தது என்னாலே
ஆட்டம் ஐயா ஆட்டம்… (ஆட்டம்…
நடை பொறந்தது தன்னாலே _ அது
நடனமானது என்னாலே
நாடகம் சினிமா நளினம் கிளினம்
எல்லாம் இதுக்குப் பின்னாலே
ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்…
புதுசுபுதுசா கலரைக் காட்டி
பூ மலர்ந்ததும் பந்தலிலே
மதிப்பும் மருகும் மணமும் அதுக்கு
மலிஞ்சிருக்குது கூந்தலிலே
பளபளக்கிற பட்டுப் புடவைகள்
ஒளிஞ்சிருந்தது கடையிலே _ இப்ப
மினுமினுக்கிற ஜரிகையோட
சலசலக்குது இடையிலே _ இப்ப (மினு…
205. பருவம் வாடுது
பருவம் வாடுது இங்கே _ உன்
பார்வை எங்கே?
பாசம் தேடுது அங்கே _ உன்
பார்வை எங்கே?
கண் சுழலும் காதல் தொடரும்போது
ஜோடியில்லாத மாடு நீ ஓடுவதேனோ வீணா?
பாடங்கள் சேர்ந்து மூளையிலே
நாடகமாடும் வேளையிலே
காதலை நாடிட நேரமில்லை _ சுகம்
காணும் வழியில்லை
உன் யோசனையும் என் வேதனையும்
பெரும் சோதனைதான் போடீ
கல்வியும் வந்து காதலும் வந்தால்
கருத்தில் இட மேது?
உருவம் வாடுது இங்கே _ என்
உள்ளம் அங்கே
இளமை மீறுது இங்கே _ என்
இன்பம் அங்கே
வாலிபம் வரும் போதினிலே _ புது
வாழ்விலே வரும் மோகம் _ அதை
மறந்தால் பறந்தே போகும் _ நீ
உணர்ந்தால் ஆனந்த மாகும்
அன்பு மிகுந்து ஆசை வளர்ந்து
அழகு குலுங்கும் வயதிலே
அமைதியுமில்லை மனதிலே _ உன்
போதனையும் _ என் காதலையும் _ ஒரு
தேதியில் வெளியாகும்
நான் துணிந்திடும்போது
தொல்லைகள் ஏது? சுகந்தான் புவிமீது (உருவம்…
206. சூதாட்டம் ஆடும் காலம்
ஆண் : மணவறையில் சேர்த்து வைத்து
வாழ்த்துரைக்கும் ஓர் காலம்
மக்களைப் பெற்று மகிழவைக்கும் ஓர் காலம்
மனதிலே பாசங்கள் வளர்ந்து மறைந்தபின்னே
கனவுகண்டு விழிப்பதுபோல் கலைத்துவிடும்
ஓர் காலம் காலம்… காலம்
சூதாட்டம் ஆடும் காலம் _ பல
மாறாட்டம் செய்து போகும்
வாதாடி என்ன லாபம்? _ துயர்
மலிந்தோர்க்கு ஏது நியாயம்? (சூதாட்டம்…
பெண் : பேராசை காட்டி மயக்கும் _ இணை
பிரியாத அன்பைப் பிரிக்கும்
மாறாத இன்பம் போலே _ வந்து
மறைந்தோடும் மண் மேலே
ஆண் : இனி வாதாடி என்ன லாபம்? _ துயர்
மலிந்தோர்க்கு ஏது நியாயம்?
சூதாட்டம் ஆடும் காலம் _ பல
மாறாட்டம் செய்து போகும்
மக்கள் வேண்டும்; செல்வம் வேண்டும் _ என
மறவாமல் உள்ளம் தூண்டும் (மக்கள்…
மந்தையாக யாவும் கூடும்
சந்தை மாடுபோல ஓடும் _ இனி
வாதாடி என்ன லாபம்? _ உந்தன்
நிலை காண ஏது நேரம்? (சூதாட்டம்…
207. மட்டமான பேச்சு
மட்டமான பேச்சு _ தன்
வாயைக் கெடுக்குதுங்க _ அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க (மட்ட…
சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால்
தலைவலி மருந்துக்கு லாபம் _ அந்தச்
ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க
கும்பல் சேர்த்து வம்பு வளர்ந்து
குடும்பத்தைக் கலைக்குதுங்க _ பெருங்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க
புரளியும் வதந்தியும் மூட்டி _ ஒரு
பொய்யை நூறாகக் கூட்டி _ கரும்
பூதமென்றும் சிறு பேய்களென்றும் _ பல
பேரையும் ஊரையும் கெடுக்குதுங்க (மட்ட…
அறையில் வளர்ந்து வெளியில் பறந்து
அவதிப் படுத்துதுங்க _ ஊரை
அவதிப் படுத்துதுங்க _ அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
அமைதியைக் கெடுக்குதுங்க
பாழும் பொய்யென்று காட்டி _ உடல்
மாயக் கூடென்று கூட்டி _ உயர்
வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க (மட்ட…
ஆண் : எது?
பெண் : மட்டமான பேச்சு
கவலை இல்லாத மனிதன்
208. கண்ணுமேலே கண்ணுவச்சு
கண்ணுமேலே கண்ணுவச்சு காச முன்னே வச்சு
கன்னிஎன்ன ஆடவச்சுப் பாரய்யா!
கடைசிப் பாடல்
பாதை தெரியுது பார்
209. உண்மை ஒருநாள்
உண்மை ஒருநாள் வெளியாகும் _ அதில்
உள்ளங்க ளெல்லாம் தெளிவாகும
பொறுமை ஒருநாள் புலியாகும் _ அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும் (உண்…
காலம் தெரிந்து கூவும் சேவலைக்
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது;
கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும்
கணக்காய்க் கூவும் தவறாது (உண்…
தாழம் பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது;
சத்தி யத்தை உலகில் எவனும்
சதியால் மறைக்க முடியாது (உண்…
அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்;
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான் (உண்…
வம்பும் கலகமும் சிக்கலும் தீர்ந்தால்
மனிதனை மனிதன் நம்பிடுவான்;
வராத சமயம் வந்தே தீரும்
மடையனும் அதிலே திருந்திடுவான் (உண்…
1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209
-
Categories
-
Blogroll
-
Meta