Pattukkottaiyaar

திரைப்பாடல்-4

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

மர்மவீரன்

76. அன்பிருக்குது அறிவிருக்குது
ஒற்றுமையில் ஓங்கிநின்ற சக்தியாலே _ மக்கள்
உள்ளமெலாம் பொங்குதடா வெள்ளம் போலே
வெற்றியெனும் மேடையில் அன்புக்காளை…
வீரநடை போடுதடா இந்தவேளை…

அன்பிருக்குது அறிவிருக்குது
பண்பிருக்குது பாரிலே… அதை
அழிக்க எண்ணித் திருட்டு நரிகள்
குழிபறிக்குது வேரிலே…

ஒருவர் : மாமறவர் வழியில் பிறந்து சிறந்து
மகாவீரன் என விளங்குவேன்

மற்றவர் : வாளும் திடமுடைய தோளும் துணையிருக்க யார்க்கும் உலகில் அஞ்சிடேன்

இருவர் : எண் திசைகளும் கண்டு நடுங்க
வென்று வாகை சூடுவோம்
அறிவிலே கலைஞராய் திறனிலே தீரராய்
நாடும் ஏடும் எமைப்பாட
தொல்லுலகம் உள்ளவரை
வளர்புகழ் அடைவோம்

கூட்டம் : இது வீரர் பிறந்த மண்ணு _ இதில்
நாமெல்லோரும் ஒண்ணு

மற்றவர் : அட ஆத்தே நீங்க பெரும் வீரர்கள்தான் _ உங்களைப்
பார்த்தே எதிரி ஓடிப்போயிடுவான் (அன்பி…

ஒருவர் : வெட்டும் கூர்வாளினைக் காட்டிடுவேன் _ நாட்டில்
வேதனை செய்வோரை வாட்டிடுவேன்
மற்றவர் : எந்தநாடும் இதற்கீடில்லை என்றே _ என்
சொந்த நாட்டைச் சொர்க்கமாக்கிடுவேன்

இருவர் : கற்றவர் நெஞ்சக் கருத்தினிலே ஒன்றி
ஒற்றுமை கொண்டுல காண்டிடுவோம் (வெட்டும்…

கூட்டம் : இது வீரர் பிறந்த மண்ணு _ இதில்
நாமெல்லோரும் ஒண்ணு

சக்க : அட ஆத்தே நீங்கபெரும் வீரர்கள்தான் (அன்பி…

77. துடிக்கும் வாலிபமே
துடிக்கும் வாலிபமே நொடிக்குள் போய்விடுமே
அதற்குள் காண்பதெல்லாம் ஆனந்தமே! ஆனந்தமே! (துடிக்கும…

வளையலின் நாதம் வாளோடு சிநேகம்
வாழ்வின் உல்லாசம் மாமணம் வீசும்!
எனதாசை போலே நடந்தால் மண்மேலே
நாடாளும் ராஜா நீயே _ அதனால்
காண்பதெல்லாம் ஆனந்தமே!

இனித்திடும் காலம் இளமையின் ஜாலம்
மனத்தினில் புதுமையை வளர்க்குது மேலும்
விழியாலே பேசும் அழியாத நேசம்
நிலம் மீதில் நீங்காகதே! _ அதனால் (காண்ப…
திருமணம்

78. துள்ளிவரப் போறேன்
ஆண் : துள்ளிவரப் போறேன் சுருள்சுருளாய்ப் பாட்டுகளை
அள்விடப் போறேன் அய்யா எஞ்சாமிகளே _ இந்தத்
திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ

தமிழ் நாடு
இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு _ இது
நாலு மொழிகளின் தாய் வீடு!
ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
தாங்கி வளரும் திருநாடு! (நாங்க…

பெண் : மதுரத் தமிழ் வழிந்து உதிரத்தொடு கலந்து
மனதில் துணிவு கொண்டு வாழ்ந்தவர்; சக்தி
கரைக்கலை பயின்று தேர்ந்தவர்

ஆண் : அன்று எதிரிப்படை யெழுந்து பதறிமிகச் சினந்து
இமயச்சரிவில் வந்த போதிலே _ வெற்றி
எமக்கென்றே முழங்கிற்று காதிலே! _ இது (நாங்க…

ஆந்திர நாடு
இருவர் : எங்கள் நாடு ஆந்திர நாடு _ விசால ஆந்திரநாடு
எந்தநாடும் இதற்கில்லை ஈடு!
பெண் : பொங்கும் கிருஷ்ணா நதி ஓடும் நாடு
ஆண் : போகம் மூன்றும் தவறாத நாடு
பெண் : எங்கள் பொழிலும் தோன்றுவளர் கூடு
ஆண் : என்றும்நீ இதைப் போற்றிக் கொண்டாடு
பெண் : கீர்த்தனை கவிதைகள் ஆயிரம் வளர் நாடு (எங்க…
ஆண் : இதை _ நேர்த்தியுடன்
இருகை கூப்பி வாழ்த்துவமே (எங்க…

கன்னட நாடு
பெண் : தங்கம் விளையும் பூமி எங்கள் கன்னட பூமி
காவேரி ஆறுபாயும் காட்டில் யானைகள் மேயும்
சாமுண்டி சக்திமேவும் தவறாத பக்திவாழும் (தஙக…

மலையாள நாடு
இருவர் : எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்

பெண் : அலையாடும் கடல் விளையாடும்

ஆண் : அக்கம் பக்கம் கொக்குகளும்
வட்டமிட்டுப் பறக்கும் (எங்கள்…
பெண் : பாக்குமரத்தில் பாளை சிரிக்கும் _ பச்சை
பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்

ஆண் : தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும் _ இன்னும்
சித்திரச் சேலையெல்லாம் கண்ணைப் பறிக்கும்
அழகுக் குயில்கள்வந்து பாடிக்கிடும் _ தென்னையை
மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்

பெண் : சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும் _ மயில்
சிறகை விரிச்சிக்கிட்டு ஆடிக்கிடும்

ஆண் : தேனிருக்கும்

பெண் : பூவிருக்கும் மானிருக்கும்

இருவர் : வனமிருக்கும் செங்கனிகளுமிருக்கும்
தின்றால் மிக இனிக்கும் (எங்கள்…

79. கழனி எங்கும் கதிராடும்
பெண் : கழனி எங்கும் கதிராடும்
அழகு மங்கை சதிராடும்
கலையான நிலைகாண வா… நீ வா வா (கலை…

ஆண் : கலையத்திலே கஞ்சிகொண்டு
கரையிலே வரும் பெண்ணைக் கண்டு _ அங்கே
கலப்பைதனை மறந்துஉழவன்
கலங்குகின்றானே! _ நின்று மயங்குகின்றானே!

பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும் ஒரு
நொடிக்குள் அவனை இழுக்குதே… (கழனி…

ஆடிவரும் நதியோரம்,
ஆணும்பெண்ணும் வெகுநேரம்
அழுக்குநீங்கத் துணிதுவைக்கும்
வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே

ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும்
அணைகளையும் தாண்டிவிடும்
அரிய பெரிய ரகசியத்தை
அறிந்திடலாமே _ நாம் அறிந்திடலாமே!

பெண் : எந்தன் மயிலே… மழை முகிலே

ஆண் : இளங்குயிலே… அதன் குரலே

இருவர் : எழில் குலுங்கும் உலகை உணர்ந்திடுவோம்
உத்தமபுத்திரன்

80. நெலமை இப்படி
ஒருவன் :மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிஞ்சவங்க மூத்தவங்க படிச்சவங்க
வாழ்கின்ற நாடு! இது

மற்றவன் :மூச்சுத் திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
ஜனங்கள் படும்பாடு! இது

ஒருவன் :நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமைமேலே கொடுமைவளர்ந்து நெருக்குது _ அது
அருமையான பொறுமையைத்தான்
கெடுக்குது _ ஊர் (நெலமை…

மற்றவன் : பாதைமாறி நடக்குது பாஞசுபாஞ்சு மொறைக்குது,
பழமையான பெருமைகளைக் கொறைக்குது _ நல்ல
பழக்கமெல்லாம் பஞ்சுபஞ்சாப் பறக்குது _ ஊர் (நெலமை…

ஒருவன் : என்ன இருந்தாலும் மனுசன் இப்படி ஆடக் கூடாது

மற்றவன் : எதுக்கும் ஒரு முடிவிருக்குது அதிகநாளு ஆடாது

ஒருவன் : ஏழைகளை அடிச்சுப்பறிக்கும்
எண்ணம்உடம்புக் காகாது

மற்றவன் : காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது _ ஊர் (நெலமை…

ஒருவன் : அன்புவளர்ந்த கோட்டைக்குள்ளே
அகந்தைபுகுந்து கலைக்குது

மற்றவன் : வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது

ஒருவன் : விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது

மற்றவன் : வெறிநாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனைக் கடிக்குது _ ஊர் (நெலமை…
கன்னியின் சபதம்

81. பள்ளம் மேடுள்ள
பள்ளம் மேடுள்ள பாதையிலே
பாத்து நடக்கணும் காளைகளே!
பழைய போககிலே பயனில்லை _ நல்ல
விஷயமிருக்கணும் மூளையிலே (பள்ளம்…

நல்லவர் செய்த செயல்களிலே _ பயிர்
நடனமாடுது வயல்களிலே _ அது
நெல்லுகதிராகி முதிரும் நாளிலே
நிலமுதலாளிகள் கையிலே _ போய்
நிறைந்திடும் மார்கழித் தையிலே (பள்ளம்…

வல்லமையோடு வாழ்ந்திடும் எளியோர்
வாடிக்கைக் காரர் நாட்டுக்கு _ பலர்
வாடுவதுண்டு சோற்றுக்கு _ ஆனால்
மாடுகளே உங்க பாடுதேவலே
வைக்கோல் வந்திடும் வீட்டுக்கு (பள்ளம்…

உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியிலே கலக்குது;
ஒற்றுமை யில்லா மனித குலம்
உயர்வும் தாழ்வும் வளர்க்குது (பள்ளம்…

பச்சைக் கொடிகள் வேலி யிலே
பாகு பாடின்றித் தழைக்குது _ அதைப்
பார்த்திருந்தும் சில பத்தாம் பசலிகள்
பக்கம் ஒண்ணாய்ப் பறக்குது _ அன்புப்
பாலம் பழுதாய்க் கிடக்குது (பள்ளம்…

தேடிவந்த செல்வம்

82. பக்கத்திலே இருப்பே
ஆண் : பக்கத்திலே இருப்பே _ நான்
பாத்துப் பாத்து ரசிப்பேன்
வெக்கத்திலே முழிப்பே _ நான்
விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன் (பக்கத்திலே…

செக்கச் சிவந்திருக்கும்
சிங்காரக் கன்னத்திலே
செல்லமாக் கிள்ளிடுவேன் _ நான்
உள்ளதெல்லாம் சொல்லிடுவேன் (பக்கத்திலே…

பக்குவம் தவறாத
பருவக்கெண்டை மீன்போல
பளிச்சின்னு துள்ளிடுவே
பாஞ்சி மனசை அள்ளிடுவே (பக்கத்திலே…

காவேரி ஓரத்திலே கால்பதுங்கும் ஈரத்திலே
காலையிலே நான்நடப்பேன்
கலப்பை கொண்டுக்கிட்டு
கட்டழகி நீ வருவே
விதையைக் கொண்டுக்கிட்டு _ நெல்லு
விதையைக் கொண்டுக்கிட்டு (பக்கத்திலே…

வாய்க்கா வெட்டின களைப்பிலே _ நான்
வந்து குந்துவேன் வரப்பிலே _ புது
மஞ்சள் நிறத்திலே, கொஞ்சம் முகத்திலே
நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக் கொடி நீ
கஞ்சிகொண்டு வருவே _ இன்பம்
கலையத்திலே தருவே (பக்கத்திலே…

பெண் : அப்புறம்?
ஆண் : ஒரு வீர மகனைப் பெத்திடுவே…!
பெண் : ஆளைப் பாருங்க!
ஆண் : நீ தாலாட்டத் தெரியாம தவிச்சிடுவே _ நான்
தந்தானத்தாம் தாளம்போட்டுப் பாடுவேன்
பெண் : எங்கே பாடுங்க?
ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
அப்பா அம்மா சொன்னதைக் கேளு
அறிவு வந்ததும் சிந்திச்சுப் பாரு
அலட்சியமா இருந்திடாதே சின்னத் தம்பி
அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி _ நாட்டில்
அதிகவேலை காத்திருக்குது உன்னை நம்பி

பெண் : அப்புறம்… ?
ஆண் : நீ பக்கத்திலே இருப்பே

நான் வளர்த்த தங்கை

83. மாலை நேரம்
மாலை நேரம் வந்தது பாரு
மகிழும் பறவை கானம் கேளு
இன்னும் கொஞ்சம் இருந்து பாரு
இருட்டும் விடியும் இதுதான் வாழ்வு!

அசையும் ரோஜா மலரைக் கண்டால்
அழகை ரசிக்கத் தடையில்லை
அருகில் நெருங்கிப் பறித்து விடாதே
அழகும் போகும் மலரும் வாடும்!

பருவமும் அழகும் போய் விடுமே
பெருங் குணமதே பலன் தருமே
இந்தி சீனி பாயி பாயி
என்பதை உணர்ந்தால் துன்பம் இல்லை

மானமும் பண்பும் தோழமை அன்பும்
மனிதரை உயர்த்தும் வழியன்றோ?
ஒன்றே ஜாதி ஒன்றே நீதி
உன்குலம் என்குலம் எங்கே சொல்வாய்? (மானமும்)

ஆசைக்கும் பாவமில்லை
அதைவிட வேகமில்லை
அன்புக்கு மோசமில்லை
இன்பத்தில் பேதமில்லை
அமுத பானமதே பெற வா… வா…!

பாடாத சோலை வண்டு
பாடுது மோகங் கொண்டு
ஆடாத கண்ணு ரெண்டு
ஆடுது உன்னைக் கண்டு
அமுத பானமதே பெற வா… வா…

84. இந்தியாவின் ராஜதானி
ஆண் : சலோ டில்லி கமான் லில்லி _ இனி

பெண் : வாட்

ஆண் : இந்தியாவின் ராஜதானி லில்லி _ இனி
என்றும்உன் இதயராணி லில்லி!
இன்பலோக சிங்காரி நெம்பர் ஒண்ணுலேடி _ நீ
பந்துபோல எகிறிப்பாயும் லில்லி! _ உன்
அன்பு வார்த்தைதான் எனக்கு மியூஸிக்கு _ உன்
அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு! (உன்…

பெண் : உன் பார்வை வெரிஹீட்டு தெரிஞ்சுக்கோ
மீறிப்போனா எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு
இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன் _ என்
இதயத்துக்கு உன்அன்பு எம்டன்!
எதுக்கு இப்படி ஆடுறே? என்ன நெனச்சு வாடுறே?
நெருங்கி வந்தா ரெண்டுமனசும் தனாதன்!
கண்களுக்கு இமயமலை வெரிஹைட்டு _ மெய்க்
காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு!

ஆண் : அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு _ நீ
அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு _ அவர் (இந்தியா…

பெண் : யூ சில்லி!

ஆண் : இன்பலோக சிங்காரி நெம்பர்ஒண்ணு லேடி _ நீ
பந்துபோல எகிறிப்பாயும் வல்லி!
ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு _ இனி
பல்பு அண்டு சுச்சுநம்ம லைப்பு! (ஹெல்பு…

பெண் : சிங்கார ரிங்கு நான், ரங்கூனு வைரம் நீ _ நம்
ஜோடி உலகில் புது டைப்பு!

இருவர் : ஆ! காஷ்மீருக்கு ராஜதானி ஸ்ரீ நகர் _ நம்
காதல்வாழ்வின் ராஜதானி அன்புநகர்
கலகலவென சிரித்துநாம் மனசுபோல நடக்கலாம்
கலந்தேபின்னே வளரும் ஹேப்பி பார் எவர்

85. இன்பமுகம்
இன்பமுகம் ஒன்று கண்டேன் _ கண்டு
எதுவும் விளங்காமல் நின்றேன் _ அதை
இரவே உன்னிடம் சொல்ல வந்தேன்! (இன்ப…

தேடாமல் அலையாமல் நேரிலே _ சுகம்
ஓடோடி வந்தது வாழ்விலே _ மனம்
ஆனந்தம் பாடுவ தேனோ? _ இது
ஆரம்ப ஜாடைகள் தானோ? _ இன்று (இன்ப…

தோன்றாத நினைவெல்லாம் தோன்றுதே _ கண்கள்
தூங்காமல் ஆசையைத் தூண்டுதே _ அது
ஏனென்று கேட்கவும் ஓடுதே _ புது
நாணம் வந்தே தடை போடுதே _ பொங்கும் (இன்ப…

86. கற்பின் இலக்கணமே!
கற்பின் இலக்கணமே! கலங்கமில்லாத் திலகமே!
தீபமே! பெண் தெய்வமே! _ உன்
கண்ணில் நீர்பெருகக் கவலையிலே மனம் உருகக்
கடும்பயணம் போவதெங்கே? (கடும்…

பெரும்பாசமே இழந்துமனம் பாதியில் ஒடிந்து
உனதாசைக் கலசமே நொறுங்கியதோ? (பெரும்…

சொந்தமும் பந்தமும் சுகங்களும் அன்பும்
சூழ்ந்துகொண்டே தினம் பாராட்டும் (சொந்த…

இன்பமென்றுனை நம்பவைத்துமே
இடையினில் ஏமாற்றும் _ இதில்
எத்தனை மாறாட்டம்? (பெரும்…

காலத்தின் கைகளில் வண்டியும் மாடும்
கண்ட திசையில் அதன்மனம்போல் ஓடும்… (கால…

எங்கு சேருமோ? என்ன ஆகுமோ?
இங்கில்லையோ கவனம்? எதுவரை உன் பயனம் (எங்கு…

87. ஆண்கள் மனமே
பெண் : ண்கள் மனமே அப்படித்தான் _ அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்கள்…

திருமணமாகிடும் முன்னே ஒண்ணும்
தெரியாதவர்போல இருப்பாங்க
திருமணமாகி மனைவியைக் கண்டால்
வெடுக்கென்று முறைப்பாங்க (ஆண்கள்…

ஆண் : பெண்கள் குணமே அப்படித்தான் _ அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான் _ இந்தப் (பெண்கள்…

மணமாகுமுன்னே வாயும்பேசாமல்
மதிப்புமரியாதை தருவாங்க _ திரு
மணமானபின்னே வரிந்து கட்டிக் கொண்டு
குஸ்திக்கும் வருவாங்க (பெண்கள்…

பெண் : அன்பு கனிந்திட கைகளை நீட்டி
அருகினில் வருவாங்க
இன்ப வாழ்வில் சில நாட்களானபின்
எப்படியும் போவாங்க (ஆண்கள்…

ஆண் : போட்டா போட்டியில் பெண்களுக்குள்ளே
பொறாமை யடைவாங்க
போனாப்போகுதுன்னு ஆண்கள் இருந்தால்
பொறுமையைக் குடைவாங்க (பெண்கள்…

பெண் : மானே தேனே என்பதெல்லாம் ஒரு
மாதம் சென்றதும் மாறிடுதே!

ஆண் : வணக்கமும் பயமும் பக்திகளும் ஒரு
வாரம் சென்றதும் ஓடிடுதே!

பெண் : ஆமைகளென்றே பெண்களை எண்ணி
ஆட்டம் போடுவாங்க
அதுவும் போதாமல் சமயம் பார்த்தே
அடிக்கவும் துணிவாங்க! (ஆண்கள்…

ஆண் : இந்தப் பெண்கள் குணமே அப்படித்தான் _ அதன்
பேச்சும் போக்கும் இப்படித்தான்

88. பார்த்தாயா மானிடனின் லீலையை
பார்த்தாயா மானிடனின் லீலையை _ தேவா
பார்த்தாயா மானிடனின் லீலையை _ தேவா
நிலையான உலகத்தையும் நேரான பழக்கத்தையும்
தலைகீழாய்ப் புரட்டிவிடும் தாறுமாறு வேலையை (பாரத்…

பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே… (பக்த…

பசியும் சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லே பஜனையில்லே
சுத்தமான போலிகளின்
சோம்பேறி வேஷத்திலே! (சுத்த…

தொடர்ந்து உந்தன் கண்ணெதிரில்
நடந்துவரும் மோசங்களை (பார்த்…

ஆட்டம் போட்டுப் புரள்வதுதான்
ஆண்டவனின் சேவையா?
ஆலயத்தைத் தரிசிக்க
அலங்காரம் தேவையா?
ஆளை ஆளு இடிக்கிறதும்
அடிதடியும் ஏனையா?
அன்பர்கண்ணு அங்கே மொறைக்குது
கும்பிடுமட்டும் இங்கே நடக்குது (பார்த்…

விண்ணும்மண்ணும் நீயானாய்
வெயிலும்மழையும் நீயானாய்
விளங்கும்அகில உலகமீது
நீயில்லாத இடம் ஏது? (விண்…

காசு தந்தால்தான் உன்னைக்
காணும்வழி காட்டுவதாய்
கதவுபோட்டுப் பூட்டிவைத்துக்
கட்டாயம் பண்ணுவதை (பார்…

89. அம்மாதுளசி
அம்மாதுளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா (அம்மா…

அகிலமும் நீயே ஆதியும் நீயே
ஆண்டருள் வாயே அன்பெனும் தாயே
நிதமுமென் வாழ்வில் நிலையான தாயே
நினைவிலும் கனவிலும் நீயே துணை (அம்மா…

மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
தேன்மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச (மானமும்…

மங்கல நாணும் மஞ்சளும் வாழ
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
வழிபுரிவாய் ஜோதி நீயே துணை (அம்மா…

பெற்ற மகனை விற்ற அன்னை

90. அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அனாதை அழுதா யார் வருவாங்க? (அழாதே…

என் தாயுமில்லை உன் தாயுமில்லை
என் செய்வேன் கண்ணே ஆராரோ _ உன்னை
அணைப்பாருமில்லை மதிப்பாருமில்லை
அன்பே என் கண்ணே ஆராரோ!

என்ன நினைந்தே நீ ஏங்கி அழுதாயோ?
இன்பத் தேனே ஆராரோ!
பேசாத நீதி நமக்காகப் பேசும்
கலங்காதே செல்லப் பாப்பா! (அழாதே…

மாறாத காலம் உனக்காக மாறும்
வருந்தாதே செல்லப் பாப்பா
தாலாட்டும் மாதா தலைசாய்ந்த பின்னே
துணையேது சின்னப் பாப்பா?
தாங்காத துன்பம் தனில்வாடும் தந்தை
மனம்நோகும் முன்னே தூங்கம்மா _ அவர்
பெருந்தூக்கம் தூங்கும் வேதாவைப் பார்த்தே
வருவார் என் கண்ணே தூங்கம்மா! (அழாதே…

91.மாமா மாமா
தோழிகள் : மாமா மாமா பன்னாட
வாங்கி வாயேன் பொன்னாட
வரவுமட்டும் பொண்ணோட
செலவுயெல்லாம் ஒன்னோட

பெண் : ஆமாஞ்சாமி காரியம் முடிச்சி
அனுப்பி வைக்கிறோம் கையோட

தோழிகள் : சீமான் ஒனக்கு வரிசைவம்மே
சாமான் தாறோம் பையோட
கோமாளிக்கும் கோமாளி _ ஏ
குலுக்கி மினுக்கும் ஏமாளி (வரவு…

பெண் : கத்தி எடுத்தாலே சத்தமில்லாமலே

தோழிகள் : பத்துப் பதினைஞ்சு சுத்தரிப் பிஞ்சுகள

பெண் : பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும்
பதுங்கி எழுந்து நறுக்குவே!

தோழிகள் : ஆஞ்சு ஓங்சு அசந்து போயி
விழுந்து ஒதுங்கி பொறுக்குவே!

பெண் : செத்துக் கிடக்கிற கட்டு விரியனை
எட்டியிருந்தே நொறுக்குவே!

தோழிகள் : புத்தியிருக்குது கூஜா தூக்க
பித்துயிருக்குது ராஜாவாக (வரவு…

பெண் : மாப்பிள்ளையின்னா மாப்பிள்ளைதான்
நல்லாத் தூங்குவே தோப்பிலே!

தோழிகள் : மாப்பிள்ளையின்னா மாப்பிள்ளைதான்
மண்ணாங்கட்டி மாப்பிளே
சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டு
நல்லாத்தூங்குவே தோப்பிலே!

பெண் : கூப்பிடும்போது கொறட்ட விடுவே _ பொண்ணு
கூப்பிடும்போது கொறட்டை விடுவே
ஆப்பிட்டுக்கிட்டு அவதிப்படுவே! (மாமா…

92. உருளுது பெறளுது
ஒருத்தி : உருளுது பெறளுது உலகம் சுழலுது
ஓடுது ஆடுது கூடுது கொறையுது
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க _ அய்யா
உண்மையைத் தெரிஞ்சிக்கிங்க

மற்றவள் : இரவும் பகலும் இருட்டுது மெரட்டுது
ஏறுது இறங்குது இடையிலும் மாறுது
எடங்கண்டு நடந்துக்கிங்க _ சாமி
எடங்கண்டு நடந்துக்கிங்க

ஒருத்தி : பாயுது சாயுது ஞாயத்தைத் தாண்டி
மேயும் மனம்போலே!

மற்றவள் : பல _ ஆயிரமாயிரம் தீமையைத் தாங்கி
அலையுது வெறியாலே!

ஒருத்தி : ஆசைகள் அதிகம் அறிவுக்குப் பஞ்சம்
அதிசயம் இதுதாங்க

மற்றவள் : வெறும் _ வேஷமும்மோசமும் வெடச்சுப்பாக்குது
வேதனை அதுதாங்க! (உருளுது…

ஒருத்தி : கூடுவிட்டுக் கூடு பாஞ்சு
கூறுகெட்டு நின்னதெல்லாம்
நூறுதிட்டம் போடுதுங்க _ வாய்
வீரம் பேசுதுங்க!

மற்றவள் : நன்மையும் தீமையும் நாளைக்குத் தெரியும்
ரகசியம் இதுதாங்க _ ஒங்க
கண்ணையும் காதையும் திருப்பிடும் விஷயம்
கடைசியில் இருக்குதுங்க.

ஒருவன் : நாணமில்லை நன்றியுமில்லை
நம்பவும் வழியில்லை

மற்றவள் : இதில் _ உண்மையன்புக்கு உடல் நலமில்லை!

ஒருத்தி : அது உயிரை இழந்தால்
நாட்டுக்குத் தொல்லை!

மற்றவள் : இதால் _ ஒவ்வொரு நாழியும்
நீதியின் மனசு உருகுதுங்க

ஒருத்தி : நேரமும் காலமும் மாறி வருதுங்க
நெலமையைக் கேளுங்க

மற்றவள் : ரொம்ப _ நீண்ட குட்டுகள் வெடிக்கப் போகுது
நேருலே பாருங்க (அய்யா…

93. எதிரிக்கு எதிரி
எதிரிக்கு எதிரி சாட்டையடி
எல்லாம் இவரின் வேட்டையடி;
கதறும் குரலே கீதமடி _ இது
அதிசய ராஜா காலமடி! (எதிரிக்கு…

வளரும் உல்லாச நிலையில் என்னாளும்
மகிழும் மனம்தானே _ பெண்
அழகினிலே தன் விழிகளை வீசும்
கலைஞன் இவர்தானே! _ பலர்
ஆசைகொண்டு தேடி _ இன்ப
வாசமலரோடு வந்து
காணுகின்ற முகந்தானே _ இனி
ஆனந்த சுகந்தானே _ இவர்
அடைவது நிஜந்தானே! (எதிரிக்கு…

பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல்
பகையை வளர்த்தாலே _ இவர்
பார்வையிலே உன் வீரமும் பலமும்
பறந்திடும் பொடி போலே! _ மிக
நல்லவளைப் போலிருந்து குள்ளநரியாய் நடந்து
எல்லை மீறித் துள்ளாதே! _ இந்த
இடந்தனில் செல்லாதே! _ இவர்
குணந்தான் பொல்லாதே! (எதிரிக்கு…

அன்பு எங்கே?

94. ஆனா ஆவன்னா
பெண் : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா

சிறுவர் : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

பெண் : ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன? …. சொல்லு!

சிறுவர் : வள்ளுவன்!

பெண் : ஈனா ஈயன்னா எதையும்வெல்லும் பொருளென்ன?…

சிறுவர் : அன்பு!

பெண் : ஊனா ஊவன்னா உலகஉத்தமன்
பேரென்ன?… சொல்லு!

சிறுவர் : காந்தித் தாத்தா!

பெண் : ஏனா ஏயன்னா எழுத்தறிவித்தவன் இறைவனாகும் (ஆனா…
பெண் : அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன?…

சிறுவர் : மாடு!…

பெண் : சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும்
சோலையில் வாழும் அது என்ன?…

சிறுவர் : கிளி…!

பெண் : கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன?…

சிறுவர் : காக்கா!…

சிறுமி : இல்லை, குயில்!… (ஆனா…

பெண் : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்! (அன்பும்…
ஆளும் திறமையும் வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்! (ஆனா…

நாடோடி மன்னன்

95. மானைத்தேடி மச்சான்
தோழி : மானைத்தேடி மச்சான்
வரப்போறான் _ ஓ வரப்போறான்
தாளத்தோட தாலி
கட்டப்போறான் _ ஏ கட்டப்போறான் (மானை…

தலைவி : தாலிகட்டும் வீரனவன்
யாரு? _ ஏ எந்த ஊரு?
மாலை கட்ட வேணும்
கொஞ்சம் கூறு _ ஏ என்ன பேரு? (மானை…

தோழி : போதும் போதும் கேலி சும்மா போடி _ ஏ
பொடிவச்சுப் பேசும் வம்புக்காரி
சின்னஞ்சிறு அன்னம் _ நீ
எண்ணும் பல எண்ணம்!

தலைவி : முன்னும் பின்னுமாக வந்த பின்னும்

1. தோழி : பிறகு என்ன பண்ணும்…?

2. தோழி : உறவு வந்து பின்னும்… (மானை…

தலைவி : அழகிலே நடையிலே
சுகமெல்லாம் நிறைந்து விடுமோ?

தோழி : ஆசை பொங்கும் தோற்றம்
அமுதூட்டும் பழத்தோட்டம்!

தலைவி : என்னென்னமோ சொல்லி என்மனசைக் கிள்ளி
இங்குமங்கும் ஓடவைக்கும் கள்ளி

1. தோழி : பருவம் வந்து துள்ளி,

2. தோழி : உருகுறாளே வல்லி… (மானே…

96. தூங்காதே தம்பி
தூங்காதே தம்பி தூங்காதே _ நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே! (தூங்காதே…

நீ தாங்கிய உடையும் ஆயுதமும் _ பல
சரித்திரக் கதைசொல்லும் சிறைக்கதவும்
சக்தியிருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்காதே…

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங் கெட்டார் _ சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஷ்டமில்லை யென்று அலட்டிக் கொண்டார் (தூங்காதே…

விழித்துக் கொண்டோரெல்லாம்
பிழைத்துக் கொண்டார் _ உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம்
கோட்டை விட்டார் (தூங்காதே…

போர்ப்படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான் _ உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் _ கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் _ இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் _ பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா! (தூங்காதே…

97. கண்ணோட கண்ணு
கண்ணோட கண்ணு கலந்தாச்சு
காணாத இன்பம் கண்டாச்சு
ஒண்ணோட ஒண்ணு துணையாச்சு
உள்ளம் நெனைச்சது நடந்தாச்சு (கண்ணோட…

பொன்னான பொண்ணு தனியா நின்ன
பொல்லாத காலம் நடந்தாச்சு
கண்ணாள னோடு கிண்ணாரம் பேசும்
பொன்னான நேரம் பொறந்தாச்சு (கண்ணோட…

சின்னஞ் சிறிசிலே அஞ்சு வயசிலே
நெஞ்சிலே கொண்ட அன்பு _ இளம்
பிஞ்சிலே கொண்ட அன்பு _ இப்போ
என்ன பண்ணியும் பிரிக்க முடியலே
பாராமலே வந்த வம்பு… எதிர்
பாராமலே வந்த வம்பு (கண்ணோட…

கன்னக் கதுப்பிலே செல்லச் சிரிப்பிலே
அன்னைக்கே வந்த அன்பு _ அதில்
என்னைக்கும் இல்லே வம்பு _ அது
என்னையும் உன்னையும் கேக்காமே
இணைக்கப் போவுதே வம்பு _ ஆஹா
வேண்டாமே இந்த வம்பு (கண்ணோட…

எங்கே என் இன்பம் எங்கே? என் இதயம் எங்கே?
பகைவர் நடுங்கும் நடை எங்கே? _ என்
பக்கம் இருந்த பலம் எங்கே? (எங்கே…

வீரமாமுகம் தெரியுதே _ அது
வெற்றிப் புன்னகை புரியுதே
விந்தைப் பார்வையில் மேனிஉருகுதே
மேலும்மேலும் என் ஆசை பெருகுதே
காதல் வளருதே! வாழ்வு மலருதே!

98. காடு வெளைஞ்சென்ன மச்சான்
பெண் : சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி
சோம்ப லில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு _ வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு _ அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்? (அட காடு…

ஆண் : இப்போ _ காடு வெளையட்டும் பொண்ணே _ நமக்குக்
காலமிருக்குது பின்னே
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சுப்
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் _ ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

ஆண் : இப்போ காடு வெளையட்டும் பொண்ணே _ நமக்குக்
காலமிருக்குது பின்னே

பெண் : மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே _ பசி
வந்திடக்காரணம் என்ன மச்சான்?

ஆண் : அவன் _ தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு _ இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

ஆண் : தினம் _ கஞ்சிகஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

ஆண் : இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் _ மீதம்
உள்ளவரின் நிலை என்ன மச்சான்?

ஆண் : நாளை வருவதை எண்ணி எண்ணி _ அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலந்தானே மிச்சம்?

ஆண் : நானே போடப்போறேன் சட்டம் _ பொதுவில்
நன்மை புரந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் (நன்மை…

இரத்தினபுரி இளவரசி

99. எங்கே உண்மை
எங்கே உண்மை என் நாடே?
ஏனோ மௌனம் சொல் நாடே?
மேலான செல்வம் வீணாக லாமோ?
வீழாமல் மீளாயோ! (எங்கே…

மீறி வரும் குரல் கேளாயோ?
வெற்றி வரும் வேகம் பாராயோ?
பாராளத் தகுந்தவள் உன் மகளோ?
பாதகம் புரிந்திடும் பொய் மகளோ?
பாதகம் புரிந்திடும் பொய் மகளோ?
தாய் வாழ்ந்த வீடும் சாகாத பேரும்
தாழ்ந்தாலுன் கண் தாங்குமோ? (எங்கே…

காலமுன்னைக் குறை கூறாதோ?
காவியங்கள் யாவும் ஏசாதோ?
வாள் வீரம் சூழ்ச்சியை வாழ்த்திடுமோ?
போலியைப் பொய்மையைப் போற்றிடுமோ? (தாய…

100. தேவி மனம் போலே
தேவி மனம் போலே சேவை புரிந் தாலே
தேவை நிறைவேறும் (தேவி…

பாவ வினை தீரும் யோக நிலை யாலே
தேவ மொழி யாலே மாய வழி காணும்
ஞான மருள் வாளே! (தேவி…

வானில் உலாவும் வண்ண நிலாவும்
நாணம் கொள்ளும் நகையாள்!

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

posted by admin in Uncategorized and have No Comments

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment