1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209
151. ஆடைகட்டி வந்த நிலவோ?
ஆண் : ஆடைகட்டி வந்த நிலவோ? _
கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ? _ இவள்
ஆடைகட்டி வந்த நிலவோ? _ குளிர்
ஓடையில் மிதக்கும்மலர்
ஜாடையில் சிரிக்கும்இவள்
காடுவிட்டு வந்த மயிலோ? _ நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ? (ஆடை…
பெண் : துள்ளித்துள்ளி ஆடுமின்ப லோகமங்கை
சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை
எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள்
தள்ளிவிட்டு:ப போனபின்னும் தேடிவந்தாள்
கிளைதானிருந்தும் கனியேசுமந்து
தனியேகிடந்த கொடிதானே…
கண்ணாளனுடன் கலந்தானந்தமே _ பெறக்
காவினில் ஆடும் கிளிதானே
ஆண் : அந்திவெயில் பெற்ற மகளோ? _ குலுங்கும்
அல்லிமலர் இனத்தவளோ? _ குன்றில்
உந்திவிழும் நீரலையில்
ஓடிவிளை யாடிமனம்
சிந்திவரும் தென்றல் தானோ? _ இன்பம்
தந்து மகிழ்கின்ற மானோ?
பெண் : அன்புமனம் கூடுவதில் துன்பமில்லை
ஆண் : அஞ்சிஅஞ்சி ஓடுவதில் இன்பமில்லை
பெண் : வீணைமட்டு மிருந்தால் நாதமில்லை
ஆண் : மீட்டுவிரல் பிரிந்தால் கானமில்லை
இருவர் : இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன்நேர மிதே மனம் மீறிடுதே
வன மாளிகை யோரம் ஆடிடுவோம் (துள்ளி…
152. காலம் எனுமொரு
ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடுதம்மா,
ஆடும் கடலினில் மருவிய கண்கள்
பேசுவதும் பெருங் கதையம்மா!
கதையம்மா! கதையம்மா!
காதல் என்றொரு கதையம்மா! (காலம்…
பெண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்
காதல் படகும் விளையாடி வர,
ஆடும் படகினில் மருவிய கண்கள்
பேசுவதும் ஒரு கதை தானோ?
காதல் என்பது கதை தானோ? (காலம்…
ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே _ மானே
காயான வாழ்வு கொண்டேன்
என் செய்வேன் நானே
பெண் : பொருந்தாத நேசம் இல்லை
பொய் ஏதும் இல்லை
இருந்தாலும் இன்பமில்லை!
ஏன் இன்பம் இல்லை?
ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி
உறவினில் ஒன்றும் குறைவில்லை
உண்மையில் அடி பெண்மயிலே _ உன்
உரிமையில் என்றும் தடையில்லை (காலம்…
153. கண்கள் ரெண்டும்
கண்கள் ரெண்டும் வண்டு நிறம்!
கன்னம் ரோஜாச் செண்டு நிறம்!
கலையே வடிவாய் வருவாள்
அவளங்கம் தங்கநிறம் (கண்…
விண்ணில் பிறந்து மண்ணில் இறங்கி
மண்ணில் நடந்து வந்தது போல்
வண்ண மலர் மாலை கொண்டு
வாழ்வினிலே ஆசை கொண்டு
வந்திடுவாள் நாணம் கொண்டு
மணமகளும் நானே யென்று
வாலிபரை அழகில் வென்று
வாட்டிடுவாள் சபையில் நின்று (கண்…
மோகத் தென்றலில் ஆடும் கூந்தல்
மேகத்தோடு சிநேகம் _ குறி
யாகப் பாய்ந்திடும் நாணப் பார்வைகள்
வீரன் கணையிலும் வேகம்
நளின நடை அன்னம் போலே
நெளியும் இடை மின்னல் போலே
ஆடை கொடி பின்னல் போலே
அன்பு மொழி கன்னல் போலே
நெஞ்சினிலே நேசத் தாலே
நீந்திடுவேன் மீனைப் போலே!
அங்கம் யாவும் தங்க நிறம்
ஆசை உள்ளம் சங்கு நிறம்
அழகே… வடிவாய் வரும்
மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்
அழகு விருந்தெனை அடைய நினைத்திடும்
ஆண்மகனும் எவரோ…?
அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும்
அளவு தெரிந் தவரோ?
பகைவ ரிடம் பல்லைக் காட்டித் தளபதியாய் வந்தவர் வேண்டாம்
பாவை யரை அருகில் வைத்து:ப
பார்த்துருசி கண்டவர் வேண்டாம்
கடமை யுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட
கண்கள் விரைந்திடுதே;
இளமை குலுங்கிடும் இவரை மணந்திட
இதயம் விரும்பிடுதே _ அங்கம்
வாழவைத்த தெய்வம்
154. வெங்கிமலை உச்சியிலே
ஒருவன் : வெங்கிமலை உச்சியிலே! _ புது
வெற்றி நின்று அழைக்குதடா! _ புகழ்
மங்கிக் கிடந்தவர்க்கே! _ அங்கே
வாழ்க்கை இருக்குதடா!
பொங்கி ஓடும் வெள்ளமெல்லாம்
பள்ளத்திலே வீழ்ந்து வீணாய்ப்
போகுதடா! உள்ளம் வேகுதடா!
புறப்படடா! உடனே புறப்படடா!
பொறுப்புடன் உழைத்துழைத்து
வெறுப்படைந் திருப்பவனே!
வரப்பெடுத்து வயலமைத்து
வானம் பார்த்து நிற்பவனே!
புறப்படடா! உடனே புறப்படடா!
கூட்டம் : புறப்படுவோம்! உடனே புறப்படுவோம்!
மற்றவன் : ஓட்டுவீட்டு முருகப்பா!
ஓலைக்குடிசை மருதப்பா!
மேட்டுக்கொல்லை வேலப்பா!
வேப்பந்தோப்பு மாரப்பா!
மாட்டைப்புடிச்சிக் கட்டிப்போட்டு
வாங்கப்பா _ நம்ப
மாணிக்கண்ணன் காட்டும்வழியில்,
போங்கப்பா!
கூட்டம் : புறப்படுவோம்! சேர்ந்து புறப்படுவோம்!
ஒருவன் : ஈரமில்லாப் பாறைகளை
நொறுக்கிடுவோம்! அணையை எழுப்பிடுவோம்!
மரங்கள் போட்டுத் தடுத்திடுவோம்!
ஏழைகளின் திசையிலதைத்
திருப்பிடுவோம் _ தண்ணியை
ஏரிகுளம் வயல்நிறையப் பெருக்கிடுவோம்!
கூட்டம் : புறப்படுவோம்! ஒண்ணாப் புறப்படுவோம்!
ஒருபெண்: கருப்பாயி செவப்பாயி
காடக்குப்பம் வெள்ளையம்மா _ அடி
காளியம்மா பக்கிரியம்மா
ஓடிவாங்கடி சீக்கிரமா
கதையும் கட்சியும் பேசஇப்போ நேரமில்லே _ பொதுக்
காரியத்தில் இறங்கும்போது பேதமில்லை!
பெண்கள்: புறப்படுவோம்! நாமும் புறப்படுவோம்!
ஒருவன் : கொடுமையையும் வறுமையையும் கூடையிலே வெட்டிவை!
பெண் : கொஞ்சநஞ்ச பயமிருந்தால்
மூலையிலே கட்டிவை!
ஒருவன் : நெடுங்கவலை தீர்ந்ததென்று
நெஞ்சில் எழுதி ஒட்டிவை!
பெண் : நெரிஞ்சிக் காட்டை அழித்து _ அதில்
நெல்லு விதையைக் கொட்டிவை!
ஒருவன் : ஏழைகளின் புதுஉலகம் தெரியுதடா! _ நாம்
ஏமாந்து வந்தநிலை ஒழியுடதா!
கூட்டம் : கட்டிடுவோம் _ அணையைக் கட்டிடுவோம்!
1958 – 1959*
ஆளுக்கொரு வீடு
155. செய்யும் தொழிலே தெய்வம்
செய்யும் தொழிலே தெய்வம் _ அந்தத்
திறமைதான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி _ கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி (செய்யும்…
பயிரை வளர்ந்தால் பலனாகும் _ அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் _ இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங் காலமுண்டு அதை நம்பிடுவோம் (செய்யும்…
சாமிக்குத் தெரியும், பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை _ அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை _ இதைப்
பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம் (செய்யும்…
காயும் ஒரு நாள் கனியாகும் _ நம்
கனவும் ஒரு நாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும் _ நம்
கனவும் நினைவும் நிலையாகும் _ உடல்
வாடினாலும் பசி மீறினாலும் _ வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்
156. பெண்ணில்லே நீ
ஆண் : பெண்ணில்லே நீ பெண்ணில்லே
காதல்நடிப்புத் தெரியாவிட்டால் பெண்ணில்லே
ஆணில்லே நான் ஆணில்லே _ அதைக்
கற்றுக்கொடுக்க முடியாவிட்டால் ஆணில்லே
பெண் : காதல் ஆஹாஹா! காதல்
ஆண் : ஆமாம் காதல்
பெண் : காதலோ காதல்
அது எங்கே கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்?
இனிப்பா, புளிப்பா, கசப்பா, காதல் கசப்பா? _ அது
ஆண் : ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
உண்பதுதான் மெய்க் காதல் _ இந்த
உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
உறவுக்குப் பேர்தான் காதல்!
பெண் : கண்ணிரண்டும் மூடாமல்
காத்திருந்தேன் _ இரவல் காத்திருந்தேன்
கதவைத் திறந்துவைத்துப்
பாத்திருந்தேன் எதிர் பாத்திருந்தேன்
ஆண் : ஆஹா ஹோ காதல் வந்ததா?
பெண் : இல்லை பூனை வந்தது
ஆண் : என்னைப் பார் கண்ணைப் பார்
ஏக்கம் கலந்து பார் (என்னைப்…
இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
இதயம் சுடுதா தொட்டுப்பார்
பின்னேபோ, முன்னேவா
பேசு, பாடு, ஆடு,
நேசம் வை, நீ நேசம் வை
நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை
பெண் : நேசந்தான் உன் நேசந்தான்
நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்
157. அன்பும் அறிவும்
அடியார்க்கு அடியாராய் அத்தனையும் கற்றவராய்ப்
பெரியவராய்ச் சின்னவராய்ப் பேசுகின்ற உத்தமரே!
முடிகள் நரைத்தாலும் மூளை நரைக்காமல்
முன்னேறி வந்தவரே _ ஐயா உங்கள்
பொன்மேனி வாழியவே!
அன்பும் அறிவும் ஆசையும் நெறஞ்ச
ஐயா வாழ்க! வாழ்க!
அம்பது வருஷம் இவரைச் சுமந்த
அன்னை பூமி வாழ்க! (அன்பும்…
சின்னக் குழந்தையைப்போலே துள்ளி விளையாடும்
குணம் வாழ்க! _ ஐயா குணம் வாழ்க! _ ஒரு
தினை அளவுகூட சுயநல மில்லாத
மனம் வாழ்க _ ஐயா மனம் வாழ்க! (அன்பும்…
காசு பணங்களைக் கைதிக ளாக்கிய
கை வாழ்க! _ ஐயா கை வாழ்க!
காலந் தெரிஞ்சி அதை விடுதலை செய்த
பை வாழ்க! _ ஐயா பை வாழ்க!
அளவுக்கு மீறிச் சேர்த்து வைப்பதால்
ஆபத்து வருமென்றே
அள்ளி அள்ளியே வழங்குகின்றாரிவர்
வள்ளல் வழி நின்றே _ இமயமலையும்
இவரும் ஒன்றே! (அன்பும்…
158. ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஊருக்கெல்லாம் ஒரே சாமி ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா!
மூச்சுக்கெல்லாம் ஒரே காத்து ஒரே காத்து ஒரே தண்ணி
ஒரே வானம் ஒரே பூமி ஆமடி பொன்னாத்தா! (ஊருக்…
எல்லோருக்கும் உலகம்ஒண்ணு இருளும்ஒண்ணு ஒளியும்ஒண்ணு
இன்னும்சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணுதானே
யாரு மேலே கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
ஆகமொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம்தானே (ஆக…
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஒரேபாதை ஒரே வாசல்
ஒரே கூடு ஒரே ஆவி பாரடி கண்ணாத்தா! (உயிருக்…
பாடுபட்டோர் கொஞ்சமில்லே
பலன்வெளைஞ்சாப் பஞ்சமில்லே
ஆடும்மாடும் நாமும் வாழ
அருள்புரிவாளே அம்மா அருள்புரிவாளே
அங்காளம்மன் கோவிலுக்குப் பொங்க வைக்கவேணும்
அன்னையவள் எங்களையும் பொங்க வைக்கவேணும் (அங்கா…
ஆளுக்கெல்லாம் ஒரே கோயில் ஒரே கோயில் ஒரே பூசை
ஒரே ஞாயம் ஒரே தீர்ப்பு! கேளடி கண்ணாத்தா! (ஊருக்…
159. தாயில்லை தந்தையில்லை
தாயில்லை தந்தையில்லை
தக்கதுணை யாருமில்லை
ஓய்வில்லாக் கவலையாலே
ஒருவழியும் தோன்றவில்லை
இலைஇல்லை மலரும் இல்லை
கனி இல்லை காயும் இல்லை
தலையில்லா உருவம்போலே
வாழ்வும் ஆனதே (இலை…
விதியே உன்சேலையோ?
இதுதானுன் ஆசையோ?
கதியில்லா ஏழைஎங்கள்
காலம் மாறுமோ? (விதியே…
நிலவில்லா வானம்போலே
நீரில்லா ஆறுபோலே
சிலையில்லாக் கோயில்போலே
வீடும் ஆனதே (நிலவி…
ஒருநாளில் ஓயுமோ?
இருநாளில் தீருமோ?
பலநாளும் துன்பமானால்
உள்ளம் தாங்குமோ?
கரையேறும் பாதைகாணோம்
கண்ணீரில் ஓடமானோம்
முடிவில்லா வேதனைஒன்றே
கண்ட லாபமோ? (இலை…
160. நீ கேட்டது இன்பம்
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ? _ எதிர்
பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இதுதானோ? (நீ கேட்டது…
பேசிப் பேசிப் பல நாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது? (நீ கேட்டது…
துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே
இன்ப மென்றோர் உலகம் தோன்றி
ஏழை துயரைத் தீர்த்திடாதோ? (நீ கேட்டது…
161. அன்பு மனம் கனிந்த
ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே
அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும்
அறியாத பாவையா?
பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால்
அச்ச மாகுமா?
அன்புமனம் கனிந்ததும்
புரியாமல் போகுமா? (அஞ்சு…
மாலைவெயில் மயக்கத்திலே
மறந்திட லாமோ?
மனைவிஎன்றே ஆகுமுன்னே
நெருங்கிட லாமோ? (மாலை…
ஆண் : உறவானது மனதில்
மணமானது நினைவில்
இதை மாற்றுவ தார்மானே
வையக மீதில்? (உறவா…
காதலுக்கே உலகம்என்று
கனவு கண்டேனே (காத…
பெண் : நான் கனவில் கண்ட காட்சியெல்லாம்
கண்ணில் கண்டேனே
ஆண் : இது காவியக் கனவு
பெண் : இல்லை காரியக் கனவு
இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு
அன்புமனம் துணிந்துவீட்டால்
அச்சம் தோணுமா?
ஆவலை வெளியிட
வெகுநேரம் வேணுமா?
இருகுரல் கலந்துவிட்டால்
இன்ப கீதமே
இன்னமுத வீணையும்
அறியாத நாதமே! (புது…
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
162. என்னருமைக் காதலிக்கு
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே? (என்…
கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே _ உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே? (கண்…
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே? _ உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்…
கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே _ ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே _ அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே _ அதை
வாங்கிவந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்…
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே…
கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே _ இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே _ இது (அவள்…
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே?
163. பிஞ்சு மனதில் பிரியம்
பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து
மஞ்சள் அழகும் மணமும் கொடுத்து
வஞ்சம் தீர்க்கும் எதிரி போலே
மனிதரை விதியும் வாட்டுதே
கோடி கோடி உயிர்கள் வந்து
ஓடி ஓடிப் போகுதே
கொண்டிருந்த ஆசையெல்லாம்
துண்டு துண்டாய் ஆகுதே… கோடி கோடி
கண்ணை மூடித் திறக்குமுன்னே
காட்சி வேறாய் மாறுதே
கணக்கில்லாத வேகத்தோடு
காலரதமும் ஓடுதே… கோடி கோடி
ஒளியைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தால்
உடனே இருளும் மூடுதே
ஒளியினாலே விரிந்த மலர்கள்
ஒளியால் உதிர்ந்து வாடுதே… (கோடி கோடி…
164. விஷயம்ஒண்ணு
ஆ… விஷயம்ஒண்ணு சொல்லப்போறேன் கேளடிகேளு _ உண்மை
வெளியாகும் நேரம் வந்தது கேளடி கேளு
ஓ… நடந்தது எல்லாம் தேவையில்லை தள்ளுடி தள்ளு _ இனி
நடக்கப் போற சங்கதியத்தான் சொல்லடி சொல்லு
ஓ… வறுமையில்லே வாட்டமில்லே
வயிற்றலடிக்கும் கூட்டமில்லை ஆ… (வறுமை…
ஆ… கொடுமையெல்லாம் மாறிவருது கேளடிகேளு _ இன்பம் _ விஷயம்
குடிசையைத்தான் நாடி வருது கேளடி கேளு நல்லவர்போல உலகம்மீது
நரியும்கழுகும் உலவும்போது ஆ… (நல்லவர்…
நம்மைஇன்பம் நாடிவருமா?
சொல்ல சொல்லு _ உலகம்
நிம்மதியாக வாழவிடுமா?
சொல்லடி சொல்லு (நடந்தது…
ஏமாத்தும் போர்வையிலே ஏழைகளின் வேர்வையிலே
எக்காளம் போடுற கூட்டம் _ நாட்டில்
எக்காளம் போடுற கூட்டம் _ மக்கள்
எதிர்த்துக்கிட்டா எடுக்கணும் ஓட்டம் (விஷயம்…
சங்கிலித்தேவன்
165. சட்டையிலே தேச்சுக்கலாம்
ஆண் : சட்டையிலே தேச்சுக்கலாம்
சகலருமே பூசிக்கலாம்
பெண் : கைக்குட்டையிலே நனச்சுக்கலாம்
கூந்தலிலே தெளிச்சுக்கலாம்
ஆண் : எட்டி எட்டிப் போறவரைக்
கிட்டே வந்து பேசவைக்கும்
பெண் : கொஞ்சம் பட்டாலும் போதுமுங்க
வாடை பலநாள் இருக்குமுங்க
ஆண் : சரக்கு வேணுமா? _ அய்யா
சரக்கு வேணுமா?
பெண் : சரக்கு வேணுமா? _ வாசனைச்
சரக்கு வேணுமா? (சர…
ஆண் : இறக்குமதியான உடனே எங்கும்
பறக்கும் வாசனைச் சரக்குங்க
பெண் : ஊரிலே இத்தனை நாளும் வித்ததுபோக
இன்னும் கொஞ்சந்தான் இருக்குங்க (சர…
ஆண் : அஞ்சு பேருடன் பத்தினி துரோபதை
அம்மா போனது வனவாசம்
பெண் : அமுதம் கடைந்த காலத்திலே நம்ம
ஆண்டவனுக்குக் கடல் வாசம்
ஆண் : அன்பை வளர்க்கப் பாடுபடுவோர்க்கு
அதிகம் கிடைப்பது சிறைவாசம்
பெண் : இன்ப லோகத்தைத் தேடுவோருக்கு
இதிலே கிடைப்பது சுகவாசம்
இருவர் : ஏமாத்தவும் மாட்டோம் _ நாங்க
ஏமாறவும் மாட்டோம்
என்ன நடந்தாலும் ஊரை
ஏச்சிப் பொழைக்க மாட்டோம் _ நாங்க
இதயமுள்ள கூட்டம் (ஏமாத்தவும்…
பெண் : சொன்ன சொல்லு மாறமாட்டோம்
சூழ்ச்சி பண்ணமாட்டோம் _ நாங்க
சொரண்டிச் சேர்க்க மாட்டோம்
ஆண் : சில சோம்பேறிப் பசங்கபோலே
சும்மா வாங்க மாட்டோம் _ காசைச்
சும்மா வாங்க மாட்டோம்
இருவர் : ஏமாத்தவும் மாட்டோம்…
166. படிப்புத் தேவை
படிப்புத் தேவை _ அதோடு
உழைப்பும் தேவை _ முன்னேற
படிப்புத் தேவை _ அதோடு
உழைப்பும் தேவை!
உண்மை தெரியும் உலகம் தெரியும் படிப்பாலே _ நம்
உடலும் வளரும் தொழிலும் வளரும்
உழைப் பாலே _ எதற்கும் (படி…
பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள் பலப்பல உண்டு _ மன
பக்குவம்கொண்டு மக்கள் முன்னேறக்
காரணம் ரெண்டு _ அதுதான் (படி…
வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத் தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத்தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காருஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக்கதிர் விவரம்கண்ட
சர் சி.வி.ராமனும் தொழிலாளி! _ எதற்கும் (படி…
ஜனத்தொகை மிகுந்தாலும் பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர் _ மேலும்
பணம்சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால்தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும் _ மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின்நிலைமை
மோசமாக முடியும் _ எதற்கும் (படி…
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
167. ஒன்றுபட்டால் உண்டு
பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…
இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…
பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை
ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை
இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை (ஒன்று…
பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர்வழி வேண்டும் உறவில்
ஆண் : பேசிடும் அன்பும் செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்?
இருவர் : காணா வளமும் மாறாத நலமும்
கண்டிடலாம் அன்பு நினைவில் (ஒன்று…
168. எல்லோரும் இந்நாட்டு மன்னரே
எல்லோரும் இந்நாட்டு மன்னரே _ நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரே
நல்லாரும் பொல்லாரும் நல்வழி செல்லாரும்
உள்ளாரும் காசுபணம் இல்லாமல் இரு:நதோரும் (எல்லோ…
முன்னேற்ற மில்லாமல் மூலையிலே கிடந்தவரும்
கண்ணிலே நீர்பெருகக் கவலையிலே மிதந்தவரும்
தண்ணீரும் காற்றுமுண்டு தள்ளாடி நடந்தவரும்
தலைவிதியை நம்பிநம்பி சக்கைபோல் வாழ்ந்தவரும் (எல்லோ…
மன்னன் : ராசாதிராசன் வந்தேனே _ நான் வந்தேனே
ராசாதிராசன் வந்தேனே
எங்கும் புகழொடு இன்பம் பெருகிட
பொங்கும் வளமொடு
புவிதனை ஆண்டிடும் மகாராசா
பக்கத்துச் சேரியிலே குறிப்பிட்ட தேதியிலே
பள்ளிக்கூடம் தொறந்தாச்சா மந்திரி மந்திரி! மந்திரி!
குழு : எங்கே? எங்கே? எங்கே?
மந்திரி : அவரவர் மனைவிகளே அவர்களுக்கு மந்திரிகள்
அன்புகொண்டு குடியரசு புரிந்திடணும்
ஆவதெல்லாம் பொதுவாய்த்தான் நடந்திடணும்
மன்னன் : ஆகா! ஆகா! சபாசு!!!
ஆண்டி மடத்திலுள்ள அட்ரசை மாத்தியதில்
ஆஸ்பத்திரி தொறந்தாச்சா மந்திரி! மந்திரி! மந்திரி!!
மந்திரி : இப்போ _ ஆரோக்கியம் கம்மியில்லே
யாருக்கும் பிணியில்லே
ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரே
குழு : ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
மன்னன் : கட்டத் துணியும் _ நம்ப கடன்கேட்ட கோதுமையும்
கப்பலில் வந்தாச்சா மந்திரி?
மந்திரி : இனி எட்டாத சீமைகளை
எதிர்பார்க்கத் தேவையில்லை
இங்கேதும் பஞ்சமில்லை மன்னரே
குழு : ஆமாம் மன்னரே! மன்னரே! மன்னரே!!!
மன்னன் : பாயும் புலிபோன்ற பாட்டாள வீரர்கையில்
ஆயுதம் தந்தாச்சா மந்திரி! மந்திரி! மந்திரி!!
மந்திரி : இப்போ _ ஆயுதம் தேவையில்லே
அடிதடி வம்புமில்லே
அமைதிதான் நிலவுது மன்னரே
குழு : எங்கும் அமைதிதான் நிலவுது மன்னரே
ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
169. அண்ணாச்சி வந்தாச்சி
ஆண் : அண்ணாச்சி வந்தாச்சி
அறிவு தெளிஞ்சாச்சு? _ ஓ மீனாச்சி
குப்பே கொறஞ்சாச்சி
சுத்தம் பொறந்தாச்சடி (அண்ணா…
பெண் : அண்ணாச்சி வந்தாலும்
ஆயிரம் சொன்னாலும் _ ஓ மாமா
துன்பந்தான் போகாமெ
சுத்தந்தான் உண்டாகுமா? _ எல்லாம்
அண்ணாச்சி எண்ணம்போல் நடந்திடுமா? அறிவு
அவ்வளவு சீக்கிரம் தெளிஞ்சிடுமா? _ ஒரு
கருத்தும் புரியாமே படிப்பும் வளராமே
திருந்து திருந்துண்ணா திருந்திடுமா?
ஆண் : அடி _ இருக்கும் பொருளைச் சுத்தமாவச்சிக்க
இங்கிலீசு படிக்க வேணுமா?
அடிக்கடி குளிக்கவும் அழுக்கைத் தொலைக்கவும்
அஞ்சாறு வருஷங்களாகுமா? _ நம்ப (அண்ணா…
பெண் : பல சேலையுள்ள சீமாட்டி
தினம் ஒண்ணாகக் கட்டிடலாம்
ஏழையென்ன செய்யுறது மாமா?
ஆண் : அடி _ கந்தைத்துணி ஆனாலும்
கசக்கித்தான் கட்டிக்கிட்டா
பஞ்சைக்கொரு காலம் வரும் போடி
பெண் : ஆகா _ இந்நிலை மாறுமா மாமா _ நீ
என்மேலே பாயாதே கோவமா?
ஆண் : ஆகா _ சந்தேகம் வேணாண்டி மீனாச்சி _ இது
சரியாப் போகாட்டி நானாச்சி
பெண் : ஆகா _ மாமா அழகாய்ப் பேசுறே
ஆண் : ஓகோ _ மீனாச்சி நீயா சொல்லுறே?
இருவர் : நம்மை இறுக்கிப் பிடிச்சிருந்த மூடத்தனம்
குழு : ஒழிக!
இருவர் : ஏமாளி ஆக்கிவைச்ச கோழைத்தனம்
குழு : ஒழிக!
இருவர் : சுருண்டு படித்திருந்த சோம்பல்
குழு : ஒழிக!
இருவர் : துணியில் படிஞ்சிருந்த சாம்பல்
குழு : ஒழிக!
இருவர்: போகாத பீடைகளும் பூச்சிவரும் பாதைகளும்
தீராத போதைகளும் சேர்ந்து (அண்ணா…
குழு : ஒழிக! விடிஞ்செழுந்து வீடு மொழுகி
விறுவிறுப்பா வேலை முடிச்சி
எல்லோரும் புது உல்லாசமுடன்
ஒன்னா நீந்திடுவோமே (விடிஞ்…
ஒருத்தி : மாரியக்கா மாரியக்கா
மஞ்சப் புடிச்சிருக்கா? _ எம் முகத்திலே
மஞ்சப் புடிச்சிருக்கா?
பெண் : மரிக்கொழுந்து மரிக்கொழுந்து _ உன்
மச்சானைக் கேட்டாத் தெரியுமடி _ புது
வடிவும் அழகும் வடியுமடி _ அதில்
புரியா விஷயமும் புரியுமடி (விடிஞ்…
170.கலங்காதே கவலைப்படாதே
உலகத்திலே இந்த மரணத்தில் மட்டும்
உயர்வும் தாழ்வும் இல்லை _ இது
உருவமில்லாத எவனோ ஒருவன்
உண்டாக்கி வைத்த எல்லை
கலங்காதே கவலைப்படாதே
கவனித்துக் கேளடி தங்கமே
உறங்காதே பயந்துவிடாதே
உலகத்தைப் பாரடி தங்கமே
இன்பத்தைத் தேடித்தேடி
ஏழைநெஞ்சம் ஏங்குது
அன்பில்லார் வீட்டில் அது
ரொம்பநாளாத் தூங்குது
எந்தச் சாமிக்கும் காதுகேக்கலே
இல்லாதவனை எட்டிப் பார்க்கலே
வந்தாலும் போனாலும்
வாழ்ந்தாலும் கெட்டாலும்
ஏனென்று கேட்க ஆளேது? (கலங்…
மலைபிளந்தோம் கல்லை உடைத்தோம்
மரம் பிளந்து வழிகள் அமைத்தோம்
வாடிக்கையாய் உள்ளம் உடைந்தோம்
வாழ்க்கையெல்லாம் துன்பம் அடைந்தோம்
எல்லோரும் சேர்ந்து ஏமாத்தும்போது
முன்னேறும் பாதை ஏது? (கலங்…
வியர்வையிலே மேனிகரைந்து வெயிலாலே அழகு குறைந்து
பசியாலே பலமும் குறைந்து பாடுபடும் முதுகு வளைந்து
தாங்காத துயரில் போராடும் போது சந்தோஷ நாளும் ஏது?
171. சாயா… சாயா…
சாயா… சாயா… கரம்சாயா… கரம்சாயா
ஓரணாத்தான்யா சாப்பிட்டுப் போய்யா
ஒடம்பைப் பாருய்யா வாய்யா வாய்யா (கரம்சாயா…
வேலைக்கில்லாமே வீண் செலவாகும்
மூளைக்கு மருந்து சாயா
வேடிக்கையான ஜோடிக்கும் சீமான்
ஜாலிக்கும் விருந்து சாயா
வேளைக்கு வேளை வீட்டுக்கு வீடு
வேண்டிய நண்பன் சாயா
வெளியிலே அறையிலே கடையிலே கப்பலிலே
சபையிலே குடிப்பது சாயா… ஏன்யா? (கரம்சாயா…
கொழுந்துத் தேயிலை குளிரும் பனியிலே
கொழுக்கும் மலையிலே வெளைஞ்சது;
கொறைஞ்ச வெலையிலே மிகுந்த சுவையிலே
குணமும் மணமும் நிறைஞ்சது
மேடையிலே பேசும் லீடரும் போலீஸ்
வீரரும் விரும்பிக் கேட்பது;
நாகம் சினிமா நாட்டிய மாடும்
தோழரும் வாங்கிச் சுவைப்பது
மூலையில் தூங்கும் சோம்பலும் நீங்கும்
ஏலமும் சுக்கும் கலந்தது;
இரவிலே பகலிலே ரயிலிலே வெயிலிலே
ஏரோப் பிளேனிலே கிடைப்பது (கரம்சாயா…
172. இன்ப உலகில் செல்வம்
உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா
உதவிசெய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா
உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லனெ ன்றுன்னை
நடுவில்வைத்துப் போற்றுமடா
இன்ப உலகில் செல்வம் அதிகம்
இதயந்தான் கொஞ்சம் _ அன்பு
இதயந்தான் கொஞ்சம்
இதயமுள்ள மனிதன் கையில்
உதவும்பொருள் பஞ்சம் _ இன்று
உதவும்பொருள் பஞ்சம் (இன்ப…
இரக்கம் கொண்ட வனைச் செல்வம்
எதிரியென்றே சொல்லுதடா
இல்லை யென்றே ஏங்கும் நிலையில்
எட்டியுதைத்தே தள்ளுதடா (இன்ப…
தேனாறு பாயுது _ வயலில்
செங்கதிரும் சாயுது _ ஆனாலும்
மக்கள் வயிறு காயுது _ அதிசயந்தான் இது
வகையாக இந்த நாட்டில் என்று
மாற்ற முண்டாகுமோ? _ கலைந்த
கூட்டம் ஒன்றாகுமோ? (இன்ப…
173. எங்க வாழ்க்கையிலே
அல்லி : எங்க வாழ்க்கையிலே உள்ள சுவையைப் பாருங்க
மனமுள்ள முதலாளி _ எந்நாளும் வராத விருந்தாளி
இந்த ஏழைகள் பாட்டைக் கேளுங்க _ ரொம்ப
இனிப்பா யிருக்கும் தேனுங்க _ ஒங்க
மாளிகை போல சேரியிலே _ ஒரு
வசதியும் கிடையாது _ ஆனாலும்
வஞ்சகம் தெரியாது!
ராணி : பணத்தால் எதுவும் ஜெயமாகும் நலம் மேவும்
நினைத்தது முடிந்திடும் நிரந்தர சுகம்தரும்! (பண…
உல்லாசம்… சம்… சம்… சல்லாபம்… பம்… பம்…
ஒய்யாரம்… ரம்… ரம்… உண்டாகும்… ஆஹாஹா
நமக்கே உலகம் _ ஒரு சிறுவிரல சைந்தாலே
பொருள் குவிந்திடும் மலைபோலே
இனி நிகரேது புவிமேலே (உல்லாச…
அல்லி : இது _ ஓலைக் குடிசை தானுங்க
எங்கும் _ ஓட்டை நிறைந்த வீடுங்க
தினம் _ ஓய்வில்லாமல் உழைத்து வந்தாலும்
உயர்வதும் கிடையாது _ ஆனாலும்
அயர்வதும் கிடையாது (எங்க…
ராணி : இங்கே வரும் விருந்தினர் மனம்
மகிழ்ந்திடும் சுகம் பெரும்
பெருமையிலே வரும் ஆனந்தமே!
அல்லி : இங்கே _ வறுமையிலே தினம் _ வாடினாலும்
மனம் _ பொறுமையிலே பெரும் _ ஆனந்தமே
ராணி : இங்கே மதிக்கும் உடையும்
ஜொலிக்கும் நகையும் சேர்ந்திடுமே
அல்லி : இங்கே மானமும் பெண்மையும் விளங்கிடுமே
ராணி : இங்கே செல்வம் உண்டு
அல்லி : இங்கே உள்ளம் உண்டு
ராணி : இங்கே அழகு உண்டு
அல்லி : இங்கே அன்பு உண்டு
ராணி : இங்கே படிப்பு உண்டு
அல்லி : இங்கே பண்பு உண்டு
174. எந்த நாளும் சந்தோஷமே
எந்த நாளும் சந்தோஷமே
எல்லை மீறும் உல்லாசமே
சிந்து பாடும் தென்றலே _ உன்
சொந்தமே என் இன்ப சுகமே (எந்த…
காண்பது கனவோ ஜாலங்களோ?
கண்கள் மயங்கிடும் கலைதானோ?
காலம் செய்திடும் நாடகமோ?
ஓவியம் போல மேவிடும் எழிலே
தாவி என்மேலே ஜாடை செய்யாதே
சோலைகளே… ஓடைகளே… (எந்த…
வாலிப வயதாம் காவினிலே
வாழ்வு வளம்பெறும் நினைவினிலே
மனது பாயுதே மான்போலே…
பாடிடும் கீதம் ஊறிடும் அமுதம்
பாரினில் வேண்டும் வேறெது வேண்டும்?
அங்கமெல்லாம்… ஆனந்தமே! (எந்த…
175. சலசல ராகத்திலே
சலசல ராகத்திலே டம்முடும்மு தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா _ நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா? (சல…
ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையில் மனமிருக்க
அலைமேலே அலைஎழுந்து ஆளைவந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்டகதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்புமுகத்தைப் பார்க்கணும் (சல…
பச்சைமலைச் சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்துவந்து கூடுதே!
மீனும்மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரைநாடிப் போகுதே! (சல…
Place your comment