1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209
26. மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
மருந்து விக்கிற மாப்பிள்ளைக்கு
விருந்து வைக்கணும் வாருங்கடி
பறந்து பறந்து ஆடுங்கடி _ நம்ம
பழைய பாட்டைப் பாடுங்கடி
மிரண்டு மிரண்டு முளிக்கிறாரு
விவரம் என்ன கேளுங்கடி
விஷயம் புரிஞ்சு போகும் _ அவர்
பொட்டியைத் தொறந்து பாருங்கடி (மருந்து…
சூரணமா? மாத்திரையா?
வேரைப் புடுங்கி அரைச்சதா?
பூரணமாக் குணந் தருமா?
பொதிகை முனிவர் லேகியமா?
என்னங்காணும் வைத்தியரே
இப்படி நின்னா நடக்குமா?
சின்னப்பிள்ளை நடிக்கிறீங்க
சிரிப்பில்கூட சிக்கனமா? (மருந்து…
பொல்லாத மயக்கமுங்க
சொல்லாமல்தான் வருதுங்க
எல்லாமே கசக்குதுங்க
எல்லாமே கசக்குதுங்க
ஈரமலரும் சுடுதுங்க
என்ன காசியம்மா
இவருக்கு அது புரியுமா?
சொல்லடியம்மா வியாதிகளை
வெல்ல இவரால் முடியுமா? (மருந்து…
அந்தப் புரத்திலே வைத்தியம் பார்த்த
அனுபவம் இருக்கா இல்லையா? _ அவள்
தங்கக் கரத்திலே நாடி பார்க்கவும்
தைரிய மிருக்கா சொல்லையா?
இன்பக் குளத்திலே ஏக மலராக
இருப்பவள் எங்கள் எஜமானி _ தினம்
இளமை குலுங்கவரும் எழில்ராணி _ அவள்
அன்பு மனதிலே என்ன இருக்குதோ
அறிந்து கொண்டால் நீர்பெரும் ஞானி
யாருக்கும் விளங்காதவள் பாவி…1
கொஞ்சுவா கெஞ்சுவா அஞ்சினா மிஞ்சுவா
மிஞ்சினா அஞ்சுவா கெஞ்சுவா கொஞ்சுவா தெரியுமா?
ஆண் : சரிம்மா
பெண் : மருந்து… பாடுங்கடி
27. இன்று நமதுள்ளமே
பெண் : இன்று நமதுள்ளமே _ பொங்கும்
புது வெள்ளமே
இல்லற ஓடமிதே _ இனி
இன்பம் ஏந்திச் செல்லுமே!
ஆண் : மங்கையர் குலமணியே
மஞ்சள் முகந்தனிலே
மகிழ்ச்சிகள் துள்ளுமே
வந்தென்னை அள்ளுமே!
பெண் : நேற்று நம்மைக் கண்ட நிலா
நெஞ்சுருகிச் சென்ற நிலா
வாழ்த்துக்கள் சொல்லுமே _ இன்று
மனந்தனைக் கிள்ளுமே!
ஆண் : வள்ளுவன் வழியினிலே _ இனி
வாழ்க்கை ரதம் செல்லுமே
கண்களில் ஊறும் நீரும் _ இனி
நம் நிலைகாண நாணும் _ சுகம்
கவிதை பாடிவரும்
பெண் : கவலைகள் மாறவே _ கொண்ட
கடனும் தீரவே _ அன்னை
கருணை காட்டினால்
காலமெனும் பந்தலில் _ அன்புக்
கைகள் ஒன்று சேருமே
28. ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே
ஈடற்ற பத்தினியின்
இன்பத்தைக் கொன்றவன் நான் _ அவள்
இதயத்தில் கொத்தளித்த
எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத் தகுந்தவளை
வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால்
பண்பதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொள்கைக்கே
ஆளாய் இருந்துவிட்டேன் _ இனி
எந்தக் கொலை செய்தாலும்
என்னடி என் ஞானப்பெண்ணே
மனிதன் ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே அவன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார்மனக கண்ணுக்குள்ளே
ஆத்திரங்கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே (ஆரம்ப…
அன்பைக் கெடுத்து _ நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே?
துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே? (ஆரம்ப…
தவறுக்கும் தவறான தவறைப் புரிந்துவிட்டுத்
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறிப்பதறி நின்று கதறிப் புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே? (ஆரம்ப…
கண்ணைக் கொடுத்தவனே
பறித்துக் கொண்டாண்டி மானே
வளர்த்தவனே வெறுத்து விட்டாண்டி (கண்ணை…
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
போனபக்கம் போகவிட்டேன் பார்வையை – அவன்
பொறுத்திருந்தே புரிந்துகொண்டான் வேலையை (கண்ணை…
அவன்_எதிரில்வந்து கெடுக்கவில்லை
இதயமிடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை _ அது
என் தலையில் போட்டதடி பழியை (கொடுத்த…
சிங்காரம் கெட்டுச் சிறைப்பட்ட பாவிக்குச்
சம்ஸாரம் ஏதுக்கடி? _ என் தங்கம் சம்ஸாரம் ஏதுக்கடி?
மனைவியைக் குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவ தாகாதடி _ என் தங்கம் மன்னிக்கக் கூடாதடி (சிங்கார…
29. எழுந்தென்னுடன் வாராய்
ஆண் : எழுந்தென்னுடன் வாராய்… சொக்கமா
எழுந்தென்னுடன் வாராய்!
பெண் : எங்கு என்னை அழைக்கிறாய் என் மம்முத ராஜா?
ஆண் :என்னோட நீ வர ஏனடி தாமதம்?
பெண் : ஏனென்று கேக்காதே கால்ரெண்டும் நோகுது
ஆண் : நோகாமல் சுகமெல்லாம் தானாகப் பிறக்குமா!
பெண் : போகாத ஊரெல்லாம் போனாத்தான் பொறக்குமா?
ஆண் : (வசனம்) பெண்ணே, என் பொறுமையைச் சோதிக்காதே; ஆத்திரம் வந்தால் உன்னை என்ன செய்வேன் தெரியுமா?
பெண் : (வசனம்) என்ன செஞ்சிடுவே… ஹுக்கும்
ஆண் : கத்தியை உருவிக் குத்திடுவேன் _ உன்னை
கண்டதுண்டமா வெட்டிடுவேன்
பெண் : நிறுத்தய்யா.. நிறுத்தய்யா நேரங்கெட்ட நேரத்திலே
ஊரைவிட்டு ஓடுவது எதுக்கய்யா?
ஆண் : வாண்ணா வந்திடடி… மரியாதை யில்லாதவளே
ஏண்ணு கேக்காதே எதிர்த்துப் பேசாதே
எட்டி விரட்டிடுவேன் _ உன்னை
விட்டுப் பிரிந்திடுவேன்
பெண் : நீயே சகாயமென நினையாமல்… நாதா
வாயால் மோசமே போனேன் மதியாமல் பேதை
மாயம் எதுவும் இல்லை
வருத்தம் கொள்ளாதே என்னை
மன்னித்தருள வேண்டும்
வந்தனம் செய்தேன் ஸ்வாமி!
ஆண் : பத்தினி ரத்தினமே பறந்துவந்த சீதனமே _ என்
உத்தரவு போல உத்தமி _ நீயொரு
உதவிதான் செய்யவேண்டும்.
பெண் : (வசனம்) என்ன உதவி செய்யணும்!
அப்படியே ஆகட்டும் ஸ்வாமி
பூமாலை போட்டுப்போன மாமா வருவதற்குள்
காமாலை வந்ததய்யா வைத்தியரே
மாமியார் வைத்துப்போன
சாமானை வித்துத்தரேன்
மருந்தேதும் போடுமய்யா வைத்தியரே
ஆண் : கண்ணை யிழந்தவளே கட்டழகுப் பெண்மயிலே _ இந்தக்
கைகண்ட மருந்தை _ என் கைகொண்டு பூசினால்
கண்கண்ட குணம்பெறலாம்
இருவர் : களிம்போ களிம்பு களிம்போ களிம்பு
காயத்திலே பெருங்காய மிருந்தாலும்
மாயமாய் மறைக்கும் களிம்பு
வெள்ளைக் களிம்பு கருங்களிம்பு வீரக்களிம்பு
சொல்ல முடியாத நோய்களுக்கும் _ ஒரு
சூரணமிருக்கு வாங்கிடுங்கோ _ அதை
பல்லில் படாமலே உள்ளுக்குப் போடணும்
பாஷாணம் சேர்ந்தது பாத்துக்குங்கோ (களிம்போ…
30. இல்லற மாளிகையில்
இல்லற மாளிகையில் ஏற்றிவைத்த திருவிளக்கை
கள்வரிடம் பறிகொடுத்தே காண்பதெல்லாம் இருளாச்சே
உள்ளமெனும் மேடையிலே ஓடிவிளை யாடையிலே
ஒருகால் ஒடிந்துவிட்டால் உய்யும் வழியேதம்மா?
31. ஒன்றுபட்ட கணவனுக்குத்
ஒன்றுபட்ட கணவனுக்குத் தொண்டுசெய்து வாழ்வதற்கு
உரிமை கிடைத்திடுமா சொல்? _ வண்ணக்கிளியே _ அன்பின்
பெருமை நிலைத்திடுமா சொல்?
கன்று நன்று நீரிரைத்துக் கண்விழித்துக் காத்திருந்து
பிஞ்சுவிட்டுக் கனியாகும் போதிலே _ கிளையில்
துண்டுபட்டால் என்ன பலன் வாழ்விலே? (ஒன்று…
32. கணவன் கண்ணை
பறித்த கண்ணைப் பதித்துவிட்டேன்
பத்தினியே நீ எந்தன் கணவன் கண்ணை
எடுத்த கையால் கொடுத்துவிடு
ஏழைக்கு வாழ்வுகொடு!
இதயக்கோயில் அடுத்தவளே! அருள் மணியே!
அறங்காத்த தமிழ் மகளே! அம்மா உன்மேல்
ஆணையிட்டுக் கேட்கின்றேன்
அன்பிருந்தால் பண்பிருந்தால் கண்கொடம்மா!
ஏழைக்கு உன்அருள் எட்டாத சிகரமோ?
இன்னமும் கண்கள் குருடோ?
இருசெவியும் மந்தமோ? _ நான்
அழுதகுரல் கொஞ்சமோ?
இதயமும் கல்லானதோ?
இரக்கம் பிறக்கவில்லையோ?
வாய் திறந்து சொல்லம்மா? _ உன்
மகளின் கதையைக் கேளம்மா _ துன்பம்
கரைகடந்து போனபின்பும் மௌனமா? _ நீதி
முறைகடந்த நீயும் பெண்கள் தெய்வமா?
பெற்றுதா வென்று வேண்டும் மதுரைத் திருநகரமதிர
சிகரத்தோடு குரலும் உயர மறைகற்றவர் பதறப்
பொறி சிதறிய நாவெங்கே? மகரக் கொடியும் கொற்றவன்
மணிபொன் முடியும் கட்டொடு
மண்ணில் வீழப்பொங்கிய மனமெங்கே? (வாய்திறந்து…
கண்ணிலுதிரும் மலரெடுத்துக் கற்புநாரில் சரம்தொடுத்து
அன்னையே உன் காலடியில் சாற்றினேன் _ தினம்
ஆலயத்தில் அன்பு விளக்கேற்றினேன்;
உன்னை நம்பிநம்பி என்றும் போற்றினேன் _ இன்று
ஒளியிழந்த கணவரோடு நிற்கிறேன்;
செம்பும்கல்லும் தெய்வமென்று நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
சிற்பிகள் செதுக்கிவைத்த சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானா?
தனிச் சிலம்பெடுத்து ஊர் தழற்படச் சினத்தெரிந்த
சக்தியுண்டெனப் படைத்த கர்வமோ?
மனைச்சுகம் கெடுத்துக் கண் மணிச் சுடர்தனைப் பறித்து
வாடவைத்தல் நீவளர்த்த தர்மமோ?
அம்மா… அம்மா… அம்மா…!
கற்புக்கரசி
33. எல்லை மீறுதே மனம்
கோரஸ் : எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே _ ஆஹா
எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே
என்னாளும் காணாத இன்பம் பொங்குதே _ எல்லாம்
மண்ணின் கோலமோ? இல்லை மனித ஜாலமோ (எல்லை…
தலைவி : வந்தோரை வாழ்த்தும் மாஞ்சோலைக் காற்றும்
வண்டாடும் மாமலர்ப் பந்தாடுதே
மண்ணீரங் கொண்டே முன்னேற்றங் கண்டே
வேரோடும் செவ்வாழைத் தேராடுதே
கண்டாலுமே உளம் கொண்டாடுதே _ இந்தக்
கண்காட்சி யேதடி விண்மீதிலே!1
கோரஸ் : ஆகா எல்லை மீறுதே மனம் துள்ளி ஓடுதே
பெண் : அன்னாளில் ராமனின் அன்பான சீதையை
தென்னிலங்கை ராவணன்
திருடிக்கிட்டான் _ இல்லை சிறையெடுத்தான் _ அதன்
முன்னாலே ராவணன் கண்ணான தங்கையை
எண்ணாமல் லட்சுமணன்
மூக்கறுத்தான் _ இல்லை முடியறுத்தான் _ இன்னும்
பெண்ணாலே கெட்டழிந்து
ஒண்ணஒண்ணு வெட்டிக்கிட்ட
பெரியபெரிய கதைகளெல்லாம்
நினைவிருக்கா? _ உனக்கு
நினைவிருக்கா? _ இதைப்
பெருமையாகப் பேசுறியே அறிவிருக்கா?
கோரஸ் : போதும் போதுமே _ உங்க பூலோகமே!
பொல்லாத உல்லாசம் பொங்கினாலுமே _ இதன்
உள்ளே பாரடி _ வெறும் ஊழல் தானடி! (போதும்…
தலைவி : அடி அந்தரத்தில் ஊர்வசியும் ரம்பையரும் மோகினியும்
ஆசைக்கொரு நாயகியும் அருகிருக்க
கோரஸ் : நல்ல அரசிருக்க
தலைவி : அன்று இந்திரனும் தந்திரத்தால்
இங்கிருந்த அகலிகையின்
ஏக்கத்தில் கவுதமனாய் உருவெடுக்க
கோரஸ் : அவள் உடனிருக்க
தலைவி : அங்கு வந்தமுனி முன்பாக மங்கையவள் கல்லாக
வாங்கி வந்தார் இந்திரரும் ஆயிரத்தை
கோரஸ் : கண்கள் ஆயிரத்தை
தலைவி : அதை மறந்துவிட்டுத் தாக்குவதேன்
வந்த இடத்தை? (அதை…
பெண் : தன்னாணவம் கொண்டு ஆடாதேடி
தலைவி : வெறும் சந்தேகமே என்றும் கூடாதடி
பெண் : இந்த _ மண்ணாளுவோர் மிகப் பொல்லாரடி
தலைவி : எவர் வந்தாலுமே என்னை வெல்லாரடி (எல்லை…
கோரஸ் : போதும் போதுமே!*
34. தூஙகாது கண்
தூங்காது! கண் தூங்காது!
இருள் சூழும் உலகில்
பொதுவாழ்வு தோன்றும் வரை (தூங்காது…
வேங்கைவாட நரிமேன்மையாவதும்
வீரர்மரபு தாழ்வதும் நீங்கும்வரை (தூங்காது…
ஆதிநீதிமுறை ஆட்சி செய்யவே
அன்புமழை பெய்யவே
சோதி இறையருள் ஆறு பாயவே
பேதம் மறைந்து உய்யவே, காணும்வரை (தூங்காது…
இருள் சூழ்ந்த உலகில்
பொது வாழ்வு தோன்றும் வரை (தூங்காது…
35. காயமேயிது மெய்யடா!
இருவர் : காயமேயிது மெய்யடா! _ இதில்
கண்ணும் கருத்தையும் வையடா!
ஒருவன் : நோயும் நொடியும் வராமல் காத்து
நுட்பமாக உய்யடா! (காயமே…
மற்றவன் : ஆயுள் காலம் மனிதர்களுக்கு
அமைப்பிலே யொரு நூறடா
அரையும் குறையாய்ப் போவதனவன்
அறிவும் செயலும் ஆமடா!
ஒருவன் : மாயனார் எனும் குயவர் செய்த மண்ணுபாண்டம் தானடா _ இது
மத்தியில் உடையாதபடி நீ
மருந்து மாயம் தின்னடா! (காயமே…
மற்றவன் : வாயைக்கெடுத்தது பசியடா
ஒருவன் : அந்தப் பசியைக் கொடுத்தது குடலடா!
மற்றவன் : இந்தக் குடலைச் சுத்தம் செய்திடாவிடில்
உடலுக்கே சுகம் ஏதடா?
ஒருவன் : சாயம் கெட்டுப் போமடா!
மற்றவன் : சக்தி கெட்ட மக்களுக்குத்
தரணி வாழ்வும் ஏதடா? (காய…
ஒருவன் : மருந்தோ மருந்து
கன்னப்புத்து, கண்டமாலை _ மஞ்சக்
காமாலைகளுக்கெல்லாம் மருந்துணடு
மற்றவன் : காசுமாலைபோடாமே கழுத்துச் சுளுக்குன்னு
கண்ணீர்விடும் பொண்ணுக்கு மருந்துண்டா?
ஒருவன் : இல்லே
மற்றவன் : இருக்கு
ஒருவன் : அப்பச் சொல்லு?
மற்றவன் : மூசைத் தங்கத்தைக் கம்பிநீட்டிச் சூடுகாட்டி
முதுகிலே ரெண்டு வாங்கினா! குணங்கிடைக்கும்
ஒருவன் : ஜீவ சிந்தாமணி மருந்து
மற்றவன் : சித்த வைத்திய மருந்து
இருவர் : மருந்தோ மருந்து _ நம்ம
நாட்டு வைத்தியர், காட்டு மூலிகை
மருந்தோ மருந்து _ உடல்
நன்மை காணவே உண்மையோடு _ பலர்
உண்டது கை கண்டது (நாட்டு…
ஒருவன் : ஏட்டு மூலமாய்ப் பதினெண்சித்தர்
பாட்டாய்த் திருவாய் மலர்ந்தது (ஏட்டு…
மற்றவன் : சிரேஷ்டமான இம்மருந்துகள் ஒவ்வொரு
வீட்டிலும் இருப்பது நல்லது (நாட்டு…
ஒருவன் : கரப்பான் சொறிபடை சிரங்குகளுக்குக்
களிம்புகள் தருவோம் தடவிக்கலாம் (கரப்பான…
மற்றவன் : காமசுரத்தால் கவலைப்படுவோர்
கலியாண குளிகை சாப்பிடலாம் (காமமே…
ஒருவன் : கஷ்டப்படாமல் சுகமாய்வாழ
காயகல்பம் உண்டிடலாம் (கஷ்ட…
மற்றவன் : அது கைவசமில்லை தற்காலச் சாந்திக்குக்
காக்காய்பிடித்துப் புசிக்கலாம் (நாட்டு…
பாட்டுப்பாடும் தொண்டைகளெல்லாம்
பாறைபோல கட்டிக்கிட்டா
காட்டுக்குயில் சூப்புப் போட்டுச்
சாப்பிடச் சொல்லுங்க!
ஆட்டம் வராக் கால்களுக்கு மயில்காலுத் தைலம்போட்டு
அரைமண்டலம் அழுத்தியழுத்தித்
தேய்க்கச் சொல்லுங்க!
பொறுக்காத பல்லுவலிக்கு
சுருக்கத்திலே மருந்திருக்கு
போக்கிரிகிட்ட வாயைக்குடுத்துப்
பார்க்கச் சொல்லுங்ககோ!
கறுப்பான தலைமுடியும் வெளுக்காமெ இருப்பதற்குக்
காக்காயை உயிரோடு
முழுங்கச் சொல்லுங்கோ! _ அண்டங்
காக்காயை உயிரோட
முழுங்கச் சொல்லுங்கோ!
மருந்தோ மருந்து (நாட்டு…
36. இல்லாத அதிசயமா
இல்லாத அதிசயமா இருக்குதடி ரகசியமா
எதநெனச்சு இவமனசு இப்படி யாச்சுதோ?
கண்ணுக்குள்ளே புகுந்திருந்த காதலனைப் பிரிஞ்சிருந்தா
கவலைப்பட்டு மெலிவதுண்டு அப்படியிருக்குமா? _ இல்லை
முன்னும்பின்னும் பழக்கமின்றி மொதன்மொதலாக பார்த்திருந்தா
என்னென்னமோ பண்ணிடுமாம் இப்படியிருக்குமா?
சின்னஞ்சிறு பருவத்திலே ரொம்பரொம்ப ஆழத்திலே
சிந்தனைகள் செல்வதுண்டு அதாயிருக்குமா? _ இல்லை
கன்னியரின் கனவினிலே காணுகின்ற கடலுக்குள்ளே
எண்ணமீன்கள் மேய்வதுண்டு இதாயிருக்குமா? (இல்லாத…
மன்னன் மேலேவெச்ச ஆசை வளருது _ மனசு
வண்டிச் சக்கரம் போலேசும்மா குழலுது
வேலையாய்ப் போனவரு வெற்றியுடன் வருவாரு
மாலையிட்டு மணமுடித்து வாழ்விலின்பம் தருவாரு
வாழைத்தோட்டம் போல்தழைத்து மங்கலமாய் வாழ்வாரு
மஞ்சுளா முகத்தினிலே மஞ்சளாகத் திகழ்வாரு
வௌக்கிஎடுத்த வெங்கலத் தவலை _ உனக்கு
என்னடி கவலை? _ அந்த
ராசாமகன் ராசாவுக்கு ராசாத்தியாய் ஆவதற்கு
நல்லநாளும் வந்துஇருக்கு _ ஆனாலும் இந்த
ராணிக்குத்தான் கொஞ்சம் கிறுக்கு! (இல்லாத…
37. ஆடும் பெண்ணே
ஆடும் பெண்ணே _ ஓ ஆசைக் கண்ணே
ஊறிடும் தேனே ஓவிய வானே
மூடிய கைகள்ரெண்டும் தேடுவதும் என்னே? (ஆடும்…
காவிரிபோலே காசினி மேலே
ஆதரவாய் என்றும் வாழ்வாயே
காவிய நூலே நீவளர்ந் தாலே
வாள் முனையால் புவியாள் வாயே
மாமலர் வண்ணமுகமாது தந்த மயிலே (ஆடும்…
38. நம்பு
நம்பு நீயதை நம்பு _ புகழ் நாட்டிடும் பேரன்பு
மற்றெல்லாம் வெறும் வம்பு! (நம்பு…
உயர்இன்பம் சேர்க்கும் ஏழையைக் காக்கும்
எதிலும் நன்மை உண்டாக்கும்
ஈசனை வேண்டாமல் இருந்தாலும் வாழ்வில்
ஈகையால் மேன்மைதரும் அன்பு! (நம்பு…
39. செல்லக் கிளியே
செல்லக் கிளியே, அல்லிக்குளமே சொல்லத் தெரியாமல்
துள்ளி மகிழ்ந்திடும் பிள்ளைச் செல்வமே
தாலேலோ தாலேலோ தாலேலோ
சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்து
சாதிப் பவழத்தில் சேர்த்துதுவைத்தே
உன்னைச் செய்தே உலகினிக் கீந்த
அந்த இறைவனின் அன்பினுக்கு என்நன்றியடா
தாலேலோ தாலேலோ தாலேலோ
40. எனக்கொரு மனக்குறை
எனக்கொரு மனக்குறை அகற்றிடல் வேண்டும்
எதிர்த்தவர் சிரத்தினை அறுத்திடல் வேண்டும்
நினைத்ததை முடித்திடும் உடலதிறன் வேண்டும்
நெருப்பென எரித்திடும் செருக்குணம் வேண்டும்
41. அன்பே ஆண்டவனாகும்
அன்பே ஆண்டவனாகும் _ அதன்
ஆலயம் நெஞ்சாகும் அறநூலே கூறும் (அன்பே…
அறிந்தால் மண்மீதே ஆக்கம் கெடாதே
வருந்தும் வாழ்வும் வராதே
மாய்கையி லாடாதே மதியை மூடாதே
வான்மறை வாக்கும் இதே _ மாறா (அன்பே…
1957
சௌபாக்கியவதி
42. கருவுலகில் உருவாகி
கருவுலகில் உருவாகி மறுவுலகில் வரும்நாளைக்
கண்டறிந்து சொல்வா ருண்டு _ இந்தத் திருவுடலில் குடியிருக்கும் சீவன் பிரியும்நாளைத்
தெரிந்தொருவர் சொன்னதுண்டோ?
வருவனவும் போவனவும் விதியென்று வைத்தவன்
வாழ்வினை விதைத்த உழவன் _ அவன்
அறுவடைக் காலத்தில் அழுதாலும் தொழுதாலும்
அனுதாபங் காட்டுவானோ…?
43. உள்ளும் புறமுமாகி
உள்ளும் புறமுமாகி ஒளியாகி _ ஞான
வெளியாகி நின்ற உமையே!
துள்ளும் கலைகளாகித் துளியாகிக் கடலாகித் தெளிவாக நின்ற திருவே!
அல்லும் பகலுமாகி அறமாகித் தரமாகி
வளமாகி வந்த வடிவே!
அனுதினமும் உனதுமலரடி இணையில் இணையுமென
ஆண்டருள்வாய் அம்மையே…!
கையிலே சூலமும் கண்ணிலே கருணையும்
கனிவாயில் அன்பு நகையும்
கொய்யாத மலர்முகமும் குலுங்குநவமணி அழகுங்
கொண்ட தாயே!
மைபோன்ற இருட்டிலே வையகமும் மாந்தரும்
மயங்கும் வேளை
மெய்யிலே அறிவெனும் விளக்கேற்றி வைத்துநீ
விடுதலை வழங்குவாயே…!
44. ஓ… மாதா! பவானி!
ஓ… மாதா! பவானி! மனம் நிறை சங்கரி!
உனை நம்பிய பேதைக்கு அமங்கலமா அம்மா.. தேவி..
சகலமும் நீயெனத் துவங்கிய வாழ்வினில்
சகுன பேதமா?… இதுதான் உனது வேதமா?
மங்கல இசைஇன்னும் ஓயவு மில்லை
மணவறை ஆடை மாற்றவு மில்லை
மஞ்சள் அரிசிமண்ணில் சிந்தவுமில்லை
வந்தபேரின்பம் வைகைச் சுழல் தானோ?
வஞ்சம் ஏனோ…! ஓ _ மாதா! (சகலமும்…
கணவன் துணையே நிலையான செல்வம்!
கணவன் உயிரே மனையாளின் தெய்வம்!
கணவன் சேவையைப் பறிப்பதிலும்
எனைப் பலிகொள்ளலாமே… மாதா… தேவி… மாதா!
45. கங்கை அணிந்தவர்!
கங்கை அணிந்தவர்! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத வினோதா
லிங்கேஸ்வரா _ நின்தாள் துணை நீதா
தில்லையம்பல நடராஜா! செழுமைநாதனே பரமேசா!
அல்லல் தீர்த்தாண்டவா _ வாவா அமிழ்தானவா… (தில்லை…
எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி
எளிமை அகல வரந்தா _ வாவா வளம் பொங்கவா (தில்லை…
பலவித நாடும் கலை ஏடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலை யலங்கார பாண்டிய ராணி நேசா
மலையின் வாசா மங்கா மதியானவா… (தில்லை…
46. வாவா வெண்ணிலவே
வாவா வெண்ணிலவே _ இருள்
மறைந்தோடப் பிறந்தாயென் விருந்தாளியே!
மங்கை மனதிலே மலிந்திடும் கனவில்
பங்கு கொண்டுதவும் பாற்குடமே! (வாவா…
குமுதம் வாய்திறந்து குலுங்கும் வேளை
குலவியுடன் ஒளிதனில் குளிக்கும் வேளை
அமுதான நிலைகண்டு கருமேகம் புகுந்தால்
அதைநானும் சகியேனே! கலை வெள்ளமே! (வாவா…
நாளை என்கண்கள் விழித்திருந் தாலுந்தன்
நகைமுகம் மகிழ்ந்திட நற்செய்தி சொல்லுவேனே
நம்பினேன் உனதன்பையே நலம் பொங்க வா! (வாவா…
47. மஞ்சப்பூசி, பூமுடிச்சி
ஆண் : மஞ்சப்பூசி, பூமுடிச்சி மங்கலக் குங்குமம் வச்சு
கொஞ்சும் கிளிபோலவந்த அஞ்சலே _ ஒன்ன
கோயிலுகட்டிக் கும்பிடப்போறேன் நெஞ்சிலே!
பெண் : அக்கம்பக்கம் பாக்காம, அனுமதியும் கேக்காம
தெக்குச்சீமை ஆடுபோல கத்துறே _ சும்மா
சொக்குப்பொடி போட்டு என்னைச் சுத்துறே
ஆண் : சங்கம்பழக் கொத்துப்போல பொங்குகடல் முத்துப்போல
மங்கையே நீ சிரிச்சு _ என் மனதைத் தட்டிப் பறிச்சு
கண்கட்டி வித்தைகாட்டிக் கையைக்கட்டிப் போடுறே
கருப்பட்டிப் பேச்சுக்குள்ளே காதலைவச்சு மூடுறே
பெண் : சொல்லித்தான் தெரியணுமா?
சும்மாசும்மா கிளறணுமா?
கிறுக்குப்போல ஊளறணுமா?
உள்ளத்திலே கள்ளத்தனம் கூடாதே மச்சான்;
கோமாளி வேஷங்கள் போடாதே _ வெறுங்
கோணங்கி ஆட்டங்கள் ஆடாதே
ஆண் : நீ பொல்லாத பொம்பளே
பெண் : என்னைப் புரிஞ்சிக்காத ஆம்பிளே
ஆண் : அட _ எல்லாம் எனக்குத் தெரியும் பொண்ணே
எதுக்கு இப்படி நீ தயங்குற? _ ஒன்னை
ஏமாத்திட்டுப் போறாப்போல
ஏக்கம்புடிச்சு மயங்குற
பெண் : அடி ஆத்தே யாரும்
பாத்துக்கிட்டாக்க பொல்லாப்பு!
ஆண் : அட _ அதுக்கெல்லாம் நீ அஞ்சாதே _ என்
ஆத்தங்கரைத் தாழம்பூ!
48. ஏதுக்கோ…?
ஏதுக்கோ…?
இருவிழி மருளும் நாணங்கள் ஏதுக்கோ?
என்ன நினைவோ? இளமைத் துணிவோ?
சின்ன வாயில் புன்னகை ஏதுக்கோ? ஏதுக்கோ?
புன்னைக் கொம்பிலே புரளும் பூங்கொடி
மண்ணில் சிந்திடும் வாச மலரும்,
விண்ணோடு குலவும் கண்ணாடி நிலவும்
வீணாகும் மௌனம் ஏதுக்கோ?
வீசும் வேல்பார்வை ஏதுக்கோ?… (ஏதுக்கோ…
ஓடைத் தாமரை ஏடுபோல் _ முக
சாடை காட்டிடும் தங்கக் கலசமே!
ஒய்யாற நிலையே உண்டாக்கும் சிலையே
ஓயாத குறும்பும் ஏதுக்கோ?
உல்லாச மயக்கம் ஏதுக்கோ? (ஏதுக்கோ…
49. ஓ… சின்ன மாமா!
ஓ… சின்ன மாமா! ரொம்ப நேரமா _ உன்னைத்
தேடி மனசு வாடுறேன் குடிசையோரமா
பொன்னுச்சரம் போட்டுக்கிட்டு பூத்தமுகம் காட்டிக்கிட்டு
வண்ணக்கிளி வந்திருக்கேன் வாசப்பக்கமா
பொண்ணாளாம் என்னையே கண்ணாலம் பண்ணியே
எந்நாளும் வாழவே ஏந்தான் தயக்கமோ? (சின்ன…
ஆசை வீரா _ மீசைக்காரா பேசுறீர் ஜோரா
மாறா நேசம் மறந்தீரா?
வீசுங் காத்து விருந்துக் கழைக்குது
வித்தாரக் குருவி முத்தாரங் கேக்குது (சின்ன…
கண்ணாலே வெல்லும் மாது _ நானே அது
சொன்னாலே விளங்காது
என்ன வேணும்? ஏது வேணும்
என்னைப் பார்த்துக் கேளுங்காணும்
சொந்தக்காரி வேணுமா?
சூழ்ச்சிக்காரி வேணுமா? (சின்ன…
50. சிங்காரப் பூங்காவில்
சிங்காரப் பூங்காவில் ஆடுவோமே
தேனூறும் தென்பாங்கு பாடுவோமே! (சிங்கார…
கன்னிப்பொண்ணு கலங்குது நின்னு
என்னமோ எண்ணிச் சுழலுது கண்ணு (சிங்கார…
அன்னந்தனைக் கண்டொருத்தன் ஆசை கொள்ளுறான்
கன்னம்வச்சுக் கொண்டுபோகக் கனவு காணுறான்
என்னைக் கொண்டு செல்லும் அந்தக் கள்ளன் யாரடி?
எங்களுக்கென்ன தெரியும் சொன்னாத் தானடி!
வண்ண மலரடி முகம் வாடுவதும் ஏனடி?
வண்டுவர வில்லையென்ற வருத்தந் தானடி1 (கனன…
கையும் காலுந்தான் மேளம் _ இந்தக்
கணக்குக்குள் இருக்குது தாளம்!
சதங்கை கட்டி தாளத்தை ஒட்டிக்
கும்மியுங் கொட்டிக் கண்ணையும் வெட்டிப்
பலபல கலைகளை அபிநயம் காட்டிப்
பம்பரப் பெண்களின் நாட்டியப் போட்டி (கையும்…
ஒன்னத்தானே, ஒன்னத்தானே ஓ சின்ன மானே…
ஊமையான தேனடி? ஒண்ணுமில்லை போங்கடி
கன்னத்திலே ரோஜாநிறம் காணுவதும் ஏனோ?
காலம்செய்யும் வேடிக்கைக்குக் காரணந்தான் நானோ?
காணாத காட்சியெல்லாம் கற்பனை பண்ணுதல் ஞாயமா?
காணாம எப்படியம்மா கற்பனை வந்திடும் மாயமா?
ஒன்னத்தானே _ ஒன்னத்தானே (சிங்கார…
1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209