1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209
படித்தபெண்
1. காப்பி ஒண்ணு எட்டணா
காப்பி ஒண்ணு எட்டணா கார்டுசைசு பத்தணா
காணவெகு ஜோராயிருக்கும் காமிராவைத் தட்டினா!
பிள்ளைகுட்டி கூடநிண்ணு பெரிதாகவும் எடுக்கலாம்
பிரியம்போல காசுபணம் சலிசாகவும் கொடுக்கலாம்
மல்லுக்கட்டி அழைக்கவில்லை மனமிருந்தா வந்திடலாம்
வயிறெரிந்த பேர்வழிங்க வந்தவழி சென்றிடலாம்
தண்டவாளம் விட்டிறங்கி தத்தளிக்கும் எஞ்சினைப் போல்
கொண்டவன் தனைமறந்து திண்டாடும் மங்கையரின்
குட்டு வெளியாக்கும் ஸ்டில்லுங்க! -_ கையில்
துட்டுயிருந்தா ஸ்டெடியா நில்லுங்க!
எந்தப்போஸில் வேணுமென்னாலும் எடுத்துத் தரேனுங்க _ -ஆனா
எல்லோருக்கும் ஸ்டில்லைமட்டும் காட்டி டாதீங்க!
தனியா வந்தாலும் கூட்டமா வந்தாலும்
சார்ஜ் ஒண்ணுதான் வாங்க -_ ஒரு
சான்ஸ் அடிச்சுப்பாக்க வாருங்க! (காப்பி…
2. வாடாத சோலை
பெண் : வாடாத சோலை மலர்பூத்த வேளை
வளர் காதலாலே மனம் பொங்குதே! – (வாடாத…
ஆண் : தாமரைப் பூமேலே தாவிடும் மீன்போலே
காமினி நீயென் கருத்தினில் பாய்ந்தாயே
பெண் : என்காதல் ராஜா எழில்மேவும் நேசா
மங்காத நிலவே இம்
மாநிலம் நாணிடும் மாரனே! – (வாடாத…
ஆண் : குறும்பும் நியாயமே அரும்பே மாரனே
கரும்பே ஆசைக் காவியமே -கரும்
மாந்தளிர் மேனி வாய்ந்தஎன் ராணி!
பெண் : புகழ்ந்தினிக் கவிபாடப் போதாது நேரம்
ஆண் : புது மடமயிலே வா போவோம் ஆற்றோரம்…
பெண் : வாழ்வெனும் ஓடம் புதுப்பள்ளிக் கூடம்
ஆண் : மாண்புயர் பாடம் கூறுது நேர்வழி சேருது…
இருவர் : ஆற்றோரம் மேவும் அடர்சோலை போல
படர் காதலாலே பலன் காணுவோம்
சுடர்வச வாழ்வில் சுகம் காணுவோம்! – (ஆற்றோ…
1955
மஹேஸ்வரி
3. அறம்காத்த தேவியே!
ஆண் : அறம்காத்த தேவியே! குலம்காத்த தேவியே- நல்
அறிவின் உருவமான ஜோதியே
கண்பார்த் தருள்வாயே!
அன்னையே! அன்னையே! – (அறம்…
பெண் : ஹே மாதா! என்தாயே
உன்பாதம் நம்பினேன் அம்மா!
சத்தியமே லட்சியமாய்ச் சேவை செய்யவே
பராசக்தியே நீ வரம்தா!
ஆண் : துன்பம் இல்லாமல் எல்லோரும் மனம் ஒன்றுகூடி இன்பம் கொண்டாடும் தினம்
நம் மனதில் உறுதியாகவே -இம்
மலிந்த கொடுமை நீங்கவே
மனித வாழ்வில் உயர்வு காணவே
நீ வாழ்ததிடுவாயே தேவியே! தேவியே!
பெண் : ஹே! பவானி லோகமாதா!
ஏழைகளின் வாழ்வில் சுகம்தா (சத்தியமே…
4. ஆசை வேணும் என்றால்…
ஆடல் : அள்ளி வீசுங்க – பணத்தை அள்ளி வீசுங்க – என்
மகள் : ஆசை வேணும் என்றால் காசை – (அள்ளி…
பணம்பெருத்த சீமான்என்னைப்
பார்த்துக் கருணை காட்டுங்க -_ கையில்
பசையில்லாத ஆசாமிங்க
பையக் கம்பி நீட்டுங்க – (அள்ளி…
1.சீமான் : க்ளாவர் ஜாக்கி மேலே துருப்பு
ஆட்டின் ராணியை அடிக்கிறேன்
2.சீமான் : உன் ஆட்டின் ராணி சீட்டு மேலே
ஆசை வச்சுப் பிடிக்கிறேன்
ஆடல் : சீட்டாத்தில் பணத்தை யெல்லாம்
மகள் : கோட்டை விட்ட கோமானே – ஒரு
செல்லாக் காசும் இல்லாப்போது
சிரிக்க வேண்டாம் சீமானே – என்
ஆசை வேணும் என்றால் காசை… – (அள்ளி…
5. அழகுநிலாவின்
அழகுநிலாவின் பவனியிலே அமைதிகொஞ்சும் இரவினிலே
அல்லி மலர்ந்தே ஆடுதே ஆடும்காரணம் ஏதோ?
களங்கமில்லா என்மனதினிலே கலையழகே உமதன்பாலே
இன்பம்உதயம் ஆவதுபோலே இதய உறவினாலே…
அல்லிமலர்ந்து ஆடுதே அமரகாவியம் பாடுதே!
6. சின்ன வீட்டு ராணி
சின்ன வீட்டு ராணி எங்க ராணி
சிங்காரத் தங்கநிறம் அவள் மேனி
கொள்ளைக்காரன் போல எல்லைதாண்டி வந்த
கொடிய வரை அழிக்கும் கோபராணி
7. ஆகாய வீதியிலே
ஆகாய வீதியிலே _- என்ன
அண்ணாந்து பார்த்தபடி
ஆராய்ச்சி பண்ணுறீங்க!
சொந்தமாய் இருந்த ஆனந்த நேரமிதை
ஏனோ வீணாக்குறீங்க?
1956
பாசவலை
8. உனக்கெது சொந்தம்
குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பாக்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! – (உனக்கு…
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு…
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு…
பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவரு எங்கே போனார் பாரு!
பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! (உனக்கு…
9. மச்சான் உன்னைப் பாத்து
மச்சான் உன்னைப் பாத்து மயங்கிப்போனேன் நேத்து
மனசுவச்சா இன்பம்வரும் பழையநடையை மாத்து (மசசான…
முத்தாத சுத்தரிச்செடி கொத்தோடே பூத்தகொடி
முத்துப்போல் சிரிச்சபடி சுத்திச்சுழலும் சித்திரக்கிளி
நான்தானய்யா _ மலைத் தேன்தானய்யா _ தடை
வேண்டாமய்யா _ அய்யா (மசசான…
கண்ணோடு கண்ணுபின்னி எண்ணாததெல்லாம் எண்ணித்
தன்னந்தனி இருந்தகனி இன்னமும்சொன்னா இளங்கன்னி
நான் தானய்யா _ மலைத் தேன்தானய்யா _ தடை
வேண்டாமய்யா _ அய்யா (மசசான…
10. இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் _ பெருங்
கூட்டிருக்குது கோனாரே! _ இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒருமுடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது (இநத…
கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுது _ அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது _ இந்தப்
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இநத…
ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேரம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு _ இதைப்
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது
நடக்கும்பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப்பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஓடைக்குது! (இநத…
11. எல்லாம் அலங்கோலமோ?
எல்லாம் அலங்கோலமோ?
இதுவும் என் காலமோ? _ துன்ப
இருளும் மனத் துயரும் இனி
எந்த நாளில் தான் மாறுமோ? (எல்லாம்…
உள்ளம் வேதனையால் _ வெந்தே
உருகும் பேதையினை _ கண்டும்
ஊமை யானதோ? _ நீதி
உறக்கம் கொண்டதோ? _ ஒரு
கள்ளம் நினைந்தறி யாதஎன்னைக்
கவலை மூடிடுமோ? _ மதி
கலங்கும் என் வாழ்வு கண்ணீரில்
கரைந்துதான் விடுமோ?
திரை கடலில் துரும் பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ? (எல்லாம்…
ஆசைச் செல்வங்களும் _ மனையும்
அழகு நாயகனும் _ விந்தை
பேசும் குழந்தைகளும் _ தாயும்
பிரிந்தே போனதுபோல் _ இந்த
வாசல் கோலங்களும் _ கலைந்து
மறைந்து போனதுவோ? _ படு
மோச உலகினிலே _ நல்லோரின்
முடிவும் இதுதானோ?
திரை கடலில் துரும் பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ? (எல்லாம்…
12 .மதிப்புக்கெட்ட மாமா
சூன்யக்காரி : ஹோய்… மதிப்புக்கெட்ட மாமா
நீ வாலையாட்ட லாமா?
நடிப்புக் காட்டி ஏமாந்து போனா
நாலு காலு மாமா?
கோரஸ் : ச்சு…
சூன்யக்காரி : மனசில் ஒண்ணும் வாக்கில் ஒண்ணும்
வச்சிருக்கலாமா? _ வீணே
வச்சிருக்கலாமா?
கோரஸ் : வச்சிருக்கலாமா? _ வீணே
வச்சிருக்கலாமா?
சூன்யக்காரி : மன்னாதி மன்னரெல்லாம்
பெண்ணை வெல்லப் போமோ?
கோரஸ் : பெண்ணை வெல்லப் போமா?
சூன்யக்காரி : வீட்டு வாசலைக் காக்கணும்
வேல சொன்னாக் கேக்கணும்
வேட்டையில் கவனம் இருக்கணும் _ குப்பை
மேட்டில் விழுந்து கிடக்கணும்
கோரஸ் : குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
சூன்யக்காரி : கோட்டைக் கடந்து போனா _ உன்
சீட்டுக் கிழிஞ்சிடும் தானா!
கோரஸ் : உன் சீட்டுக் கிழிஞ்சிடும் தானா
சூன்யக்காரி : குங்குமம் சுமக்கிற கழுதைக்கு _ அந்த
குங்கும மகிமை தெரியுமா?
கோரஸ் : நரி சங்கீத இனிமையை அறியுமா?
சூன்யக்காரி : கங்கை காவேரி நெறைஞ்சு போனாலும்
கரையில் நின்னு நாய் நக்கித்தான் குடிக்கணும்!
கோரஸ் : கங்கை காவேரி நெறைஞ்சு போனாலும்
கரையில் நின்னு நாய் நக்கித்தான் குடிக்கணும்!
13. சின்னப்பொண்ணு சிங்காரி
ஓ… சின்னப்பொண்ணு சிங்காரி நான் சிரிச்சுமயக்கும் ஒய்யாரி
அன்னநடை அழகோடு ஆடிப்பாடும் அலங்காரி (சின்…
ஓ… என்னைநீ பாராயோ? அருகினில் வாராயோ?
மன்னவா நாம்மகிழ்ந்து வாழ்வோம் இதயம் கலந்து (சின்…
ஓ… மின்னிடும் கண்கள் மத்தாபபூ கன்னமிரண்டும் ரோஜாப்பூ
எண்ணும்போதே இன்பமளிக்கும் கன்னிஎந்தன் சந்திப்பு…
ஓ… தனிமையில் என்றும் இனிமைதான் ஏது?
சமயம்உன் வாழ்விலே மீண்டும் வராது? (சின்…
14. ஐயையே நீங்க
அவள் : ஐயையே நீங்க ஆம்பிள்ளை யாங்க
பொய்யெல்லாம் ஏங்க பொல்லாத வம்புங்க!
கைமேல் நீங்க சத்தியம் தாங்க!
மைவேலை ஏங்க, மயங்கமாட்டேன் பொங்க!
அவன் : நான் ஊருலஉள்ள பெண்களை யெல்லாம்
ஒதறித் தள்ளிப்புட்டேன் _ வேணான்னு
ஒதறித் தள்ளிப்புட்டேன் _ இப்போ
ஒம்மேலதான் ஆசை _ அந்த
உண்மையைச் சொல்லிப் புட்டேன்!
அவள் : பச்சையாய் நீங்க பாடிப்புட்டீங்க
அச்சந்தான் போங்க ஆனாலும் கேளுங்க
இச்சை எல்லாங் கச்சிதம் தாங்க!
இருந்தாலும் நீங்க இதைமறந்து போகாதீங்க!
மச்சானே வாங்க மாப்பிள்ளை நீங்க
நிச்சயம் தாங்க எஞ்சொல்லை நம்புங்க
மனம்போல நீங்க வந்து சேந்தீங்க
குணசாலிதாங்க இந்தக் குறும்புப்பேச்சும் ஏங்க?
அவன் : தேருல வச்ச கலசம் போல
நேருல கண்டுக் கிட்டேன் _ உன்னைநான்
நேருல கண்டுக் கிட்டேன் _ ஒரு
தேதிய வச்சுத் தாலியைக் கட்ட
முடிவு பண்ணிப் புட்டேன் _ புள்ளே
முடிவு பண்ணிப் புட்டேன்
அவள் : மனசிலுள்ள ரகசியத்தை மறைக்கமுடியல _ என்னால
மறக்க முடியல _ உங்க
வார்த்தையால எனக்கு வந்த
மயக்கம் தெளியல _ இன்னும்
மயக்கம் தெளியல மச்சானே வாங்க!
அவன் : ஏருல கட்டின மாடுக போல
இணைஞ்சு வாழலாம் _ நாம இணைஞ்சு வாழலாம்!
அவள் : புளிச்ச சேறுல நட்ட நாத்துப்போல
செழிக்க வாழலாம் _ குடும்பம் செழிக்க வாழலாம்
இருவர் : நெனச்சதுபோல கெடச்ச தினால
நமக்கினி மேலே வழக்கேதும இல்ல
தனிச்சிருந் தாலே கசக்கும் பாலே
இணைஞ்சதினாலே இனியேது தொல்லை
15. உல்லாசப் பாட்டுப் பாடி
நடனமாது : உல்லாசப் பாட்டுப் பாடி
ஊரெங்கும் வேட்டையாடி
எல்லோரும் தூங்கும் போது
குல்லாய் போடும் கில்லாடி (உல்லாச…
கள்வர் : ஹோ ஹோ ஹோ… ஹோஹோஹோ…
நடனமாது : நீதி நேர்மையோடு நடந்தாலே _ நமக்
கேது வாழ்வில் இன்பம் இதுபோலே
பாரில் கள்ளத்தனமாய்
சேரும் வெள்ளிப் பணமே
அதை அள்ளித்தனதாய்
செய்யும் உள்ளத் துணிவால் (உல்லாச…
கள்வர் : ஹோஹோஹோ… ஹோஹோஹோ
சம்பரம்பா கம்பஞ் சம்பா
ரொம்ப ரொம்பத் திம்பாளா?
தங்க ரம்பா அங்கஞ் செம்பா
செங்கரும்பா? நம்மாளா?
நடன : ஓ… காசுதேடும் கஞ்சர் கூட்டல் நாட்டிலே _ கன்னக்
கோலை நாடும் கள்வர் கூட்டம் காட்டிலே
ஒரு ஈசன் தன்னையே
தினம் பூசை பண்ணுதே _ பக்தி
ஈசனிடமா? இல்லை காசினிடமா? _ உல்லாச
கள்வர் : பம்பம் பம்பம் பம்பம் பம்பம் போலா
16. ஆகாச வீதியிலே
சந்திரன் : ஆகாச வீதியிலே அமைதிகொஞ்சும் இரவினிலே
ஆனந்த பவனிவரும்
அமுதக் கலசம்நான் _ பேரழகு நிலாநான் (ஆகாச…
மாறாத எழிலரசி மங்கா ஒளிவீசி
மானிலத் தோர் மனசையெல்லாம்
மயங்கச் செய்யும் உல்லாசி
அழகு நிலா நான் _ பேரழகு நிலா நான்!
நட்சத்திரம் : நிலையே இல்லாத நிலவே நீயும்
கர்வம் கொள்வது நாயமோ?
உலகம் எல்லாம் எங்கள் கையில்
உன்னால் ஏதும் ஆகுமோ?
வளர்பிறை யாகித் தேய்பிறை யாகி
மாதம் ஒருநாள் மறைகின்றாய்
நிலைமை தன்னை மறந்தே வீணில்
பெருமை பேசித் திரிகின்றாய்! (நிலையே…
சந்திரன் : மிகப் பொறாமையால் பித்துப் பிடித்திங்கு
கத்திக் குலைக்காதே தாரையே _ இந்தத்
திக்கெட்டுங் கொண்டாடும் முக்கண் படைத்தவன்
செஞ்சையில் கொண்டதும் யாரையே?
எங்கும் இன்பமே தந்திடும் கன்னி நான்
என்று மின்னலே தந்திடும் கன்னி நீ!
எண்ணிப் பாரடி! பின்னற் பேசடி _ இங்கு
என் மகிமை உணராமல் உளறாதே நீ போடி! (மிகப்…
நட்சத்தரம : அடி! சூடாமணி! சும்மா ஆடாதடி! _ இந்த
நாடறியும் உன்பவுசைப் பாடாதடி!
ஈடுஇணை யில்லையடி எங்களுக்குத்தான் _ பலன்
கூடுவதும் குறைவதும் எங்களாலேதான் (சூடா…
சொந்தமாக ஜோதி உனக்கேதடி
மந்தபுத்தி உள்ளவளே சொல்லடி _ சுயமா
ஜொலிக்கும் தாரை நானே _ ஏண்டி
துடுக்குத் தனம் வீணே! _ நீ
சொன்னதையே சொல்லி _ இங்கு
துள்ளாதே கள்ளி (சூடா…
சந்தி : வாக்குவாதத் திறமையாலே
வம்புதும்பு பேசலாமோ?
என்மீதுஏனோ பொறாமை?
ஆக்கும்சக்தி படைத்தநீங்கள்
அழிக்கிறீர்கள் உலகையெல்லாம்
அன்பேதான் நெஞ்சில் இல்லாது!
என்னாலே இன்பம் எல்லாம் காண்பாரே காதலர்கள்
தன்னாலே! என் முன்னாலே!
உண்ணாத பிள்ளையெல்லாம்
தன்னாலே அமுதுண்ணும்
கண்ணாலே என்னைக் கண்டாலே
என்னை வெறுக்கும் மனிதர்எவரும்
இல்லையே எவரும் இல்லையே
எண்ணிப் பார்க்க வேண்டும் எந்தன்
சொல்லையே எந்தன் சொல்லையே!
17. மலரோடு விஷநாகம்
மலரோடு விஷநாகம் பிறப்பதாலே _ அந்த
மலரையே தள்ளிவைக்கும் வழக்கம் உண்டோ? _ தன்
நிலையறியா இளையவனின் தவறினாலே _ அவன்
இனத்தையே உதாசீனம் செய்தல் நன்றோ?
நீதி இதுதானா? நேர்மை இதுதானா?
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா? (நீதி…
சிற்றன்னை கைகேயி பிடிவாதத் தாலே
ஸ்ரீராமன் முன்னாளில் காடாளப் போனான்
சேய்களுடன் வீணான அபவாதத்தாலே _ இவன்
திருநாட்டை ஆளாமல் நாடோடி யானான்
நெறியோடு வாழ்வோரின் நிலையே இதுதானா? (நீதி..
குலதெய்வம்
18. அடியார்கள் உள்ளத்தில்
அடியார்கள் உள்ளத்தில் குடிகொள்ளும் தேவதையே
ஆதரிக்க வேணுமே என் ஜக்கா தேவி
அடங்காத பேர்களையும் ஆலைவாய்க் கரும்புபோல
ஆட்டிவைக்கும் அம்பிகையே நீயே _ என் ஜக்காதேவி
ஆதரிக்க வேணுமே!
காகம் பறக்காத தேசமெல்லாம்
கத்தியால் வெட்டுவேன் பாதர் வெள்ளை! _ அய்யா
கருவறுத்தவன் பாதர் வெள்ளை
பாதர் வெள்ளையென்ற பேரைக் கேட்டால்
பத்து மாதக் கர்ப்பம் பறந்துவிடும்!
இலங்கை தேசத்திற்கு இந்திரஜித்து
பாஞ்சால நாட்டிற்குப் பாதர் வெள்ளை!
பாஞ்சாலங் குறிச்சியின் பஞ்சவர்ணக்கிளி
வந்தேனே நானும் வந்தேனே!
பஞ்சபாணன் துயர் மிஞ்சும் ருபவதி
வஞ்சியஞ்சிடும் கொஞ்சும் கிளிமொழி
பாதச்சிலம்பு கொஞ்சி பத்தினியால் வஞ்சி
வந்தேனே _ நானும் வந்தேனே!
போருக்குப் போறேண்டி பாதர் வெள்ளை
போக விடைதாடி வெள்ளையம்மா!
வெள் : போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் கண்டதினால்
பாதர் : கண்ட கனவதைச் சொல்லா விட்டால்
கத்தியால் வெட்டிடுவேன் பாதர் வெள்ளை
வெள் : பிஞ்சு மலருமே சோம்பக் கண்டேன்
பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டேன்
பாதர் : பிஞ்சிட்ட வாழையும் சாகக் கண்டால்
பின்வாங்கேன் சண்டையில் பாதர் வெள்ளை!
வெள் : ஊமத்துரை மாமா கட்ட பொம்மு
ஊரை விட்டோடக் கனவு கண்டேன்
பாதர் : ஊரை விட்டோடக் கனவுகண்டால்
ஊக்கத்துடன் சண்டை செய்வேனடி!
ஏறியுட் கார்ந்தார் குதிரையின் மேல்
இழுத்துப் பிடித்தார் கடிவாளத்தை
வையாளி யோடுதாங் காட்டுவழி
வாரி எறியுதாம் பேக்குதிரை!
ஓட்ட ரங்காடு ஓடங்காடு
ஓடிவருகுதாம் பேக்குதிரை!
சில்லாடற்காடு செடிக்காடு
சிட்டாப்பறக்குதாம் பேக்குதிரை!
காலில் அகப்பட்ட கற்களெல்லாம்
பிறண்டு ஓடுதாம் முன்னாலே!
ஒட்டப் பிடாரத்துப் பாதை வழி
ஓடி வருகுதாம் பஞ்சவர்ணம்
கொக்குப் பறந்ததுபோல் குதிரை
கோட்டையை வந்துமே கண்டுகொண்டு
குதிரையை விட்டுமே தானிறங்கி னான்
கோடையிடி போன்ற பாதர் வெள்ளை!
19. கோபமா? என்மேல் கோபமா?
கோபமா? என்மேல் கோபமா?
கோட்டுப்போட்ட சின்னமச்சானே கோபமா? _ பனங்
காட்டுநரி சலசலப்புக்கு அஞ்சுமா?
வீட்டுக்குள்ள காட்டாதிங்க வீரமே! _ கர்ணம்
போட்டாலும் செல்லாது அதிகாரமே! – குட்டிக்கர்ணம்
போட்டாலும் செல்லாது அதிகாரமே! (கோட்டு…
பந்தியில் முந்தும் வீரரே!
வெற்றி வீரரே! வீராதி வீரரே!
பந்தியில் முந்தும் வீரரே! _ நீங்க
படையிலே பிந்தும் சூரரே!
பச்சோந்தி போல்மாறும் பண்பாளரே!
ஏமாந்த ஆளிடம் வாலாட்டும் தீரரே!
ஏனிந்த மௌனமோ சொல்வீரே!
சாயாது ஜம்பம் சாயாது! (கோட்டு…
நல்லபிள்ளை போலவே தன்னந் தனியாகவே
கள்ளத்தனமாய் நாவல் படிப்பாரே!
பள்ளிக்கூடம் சென்றவுடன் தூங்குவாரே!
பகுத்தறிவைப் பறக்கவிட்டு ஏங்குவாரே! _ கோட்டு
20. நம்ப முடியாது
கையாலே கண்ணைக் கசக்கிவிட்டு
இரண்டு சொட்டுக் கண்ணீராலே
குற்றங்களைக் கரைத்துவிடக் கற்றவர்கள்
வையாமல் திட்டாமல் மர்மமாய்
உள்ளிருந்து செய்யாக் கொடுமையெல்லாம் செய்து
பெயர் பெற்ற பெண்களை,
நம்ப முடியாது நம்ப முடியாது; பெண்கள்
பிடிவாதம் தீர்க்க முடியாது
கடிகார முள்ளின் நடைபோல உள்ளம்
கணமோரிடம் செல்லும் புவிமீது,
கடலாழங்கண்ட பெரியாரும் பெண்கள்
மனத்தாழங்காண முடியாது (முடியாது…
பிள்ளைப் பூச்சியை மடியில் கட்டிக் கொண்டு
புராணம் கேட்டவன் தன்னிலையும்,
அல்லும் பகலும் நம்மைப் பொம்மைபோல்
ஆட்டி வைக்கும் பெண்ணை
அடைந்தவன் கதையும் ஒன்றாகுமே _ அதனால் (முடியாது…
வஞ்சகம் மூணவுன்சு வம்புத்தனம் ஏழுஅவுன்சு
வறட்டுக் கவுரவமும் அரட்டைகளும் பத்தவுன்சு
எஞ்சியுள்ள தங்கம் வைரம் புஷ்பம்
தளுக்கும் குலுக்கும் மயக்கும் இனிப்பும் கசப்பும்
எண்ணாயிரம் அவுன்சு கலந்ததொரு பெண்ணடா _ அதை
நம்பிக் கெட்டவர்கள் பலபேர்களடா! _ அந்த
ஸ்டோரி ரொம்ப நீட்ட மடா! _ அதை
ஆராய்ந்து சொல்பவன் பாடு
பெரும் திண்டாட்டமடா! _ அதனால் (முடியாது…
21. கோழியெல்லாம் கூவையிலே
கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார் _ வாய்
கொப்பளிக்கும் முன்னேகொஞ்சம் காப்பியையும்
குடித்துவிட்டார்
குளிக்காமல் சாப்பிட்டு
ஏப்பம் விட்டார் _ தன்னைக்
குழந்தை போல்
எண்ணி விட்டார் _ எங்க
சின்ன மச்சான் இப்போ பட்டம் விடப்
புறப்பட்டு விட்டாரய்யா
பட்டம் விட்டாரய்யா! பறக்க விட்டாரய்யா!
எட்டாத உயரத்திலே விட்டாரய்யா _ பட்டம்
விட்டாரய்யா பறக்க விட்டாரய்யா
வெட்டவெளி வானத்திலே விட்டாரய்யா
வட்டமிடும் பறவைபோலே
விட்டாரய்யா பட்டம் விட்டாரய்யா!
ஆராரோ பட்டம் விட்டு பேராசை வட்டமிட்டு
ஆடிஓடிப் போனதைப்போலே விட்டாரய்யா _ அணை
கட்டாத ஏரத்தண்ணி கடலோடு போனதுபோல்
கற்றதெல்லாம் காற்றோடு விட்டாரய்யா! (விட்டா…
டாபட்டம் டீபட்டம் ஜமீன்பட்டம் சாமிபட்டம்
ஜாதிப்பட்டம் பஹதூர்பட்டம் லேடிபட்டம் கேடிப்பட்டம்
வாலறுந்து நூலறுந்து போனஇடம் தெரியல _ இந்த
வேலையத்த மச்சான்வெறும் காகிதப்பட்டம் கட்டி
விட்டாரய்யா ஓட விட்டாரய்யா!
ரங்கோன் ராதா
22. நாட்டுக்கு ஒரு வீரன்!
நாட்டுக்கு ஒரு வீரன்! _ செஞ்சிக்
கோட்டைக்கு அதிகாரன்
அந்த நாளில் ஆற்காடு நவாபை
எதிர்த்த ராஜா தேசிங்கு
கதையை நாம் சொல்வோம் இங்கு:
இந்தப் பாட்டைக் கேட்டால் பரம்பரை நிலைமை
பளிச்சுப் பளிச்சுன்னு தெரியும்
வேட்டுப் பீரங்கிக் கூட்டத்தில் பாய்ந்து
வெட்டியவன் கதை விபரம் புரியும்… (நாட்டுக்கு…
துள்ளிப் பாயும் குதிரை ஒன்று
டில்லித் துரையிடம் இருந்தது
கொல்லிச் சாரல் கொஙகு பக்கரி
சொல்லிப் பரிசாய்த் தந்தது
உள்ளத் துணிவாய் சவாரி.செய்ய
எல்லாப் படையும் பாய்ந்தது
உறுதி கொண்டவர் வருக வருகவென
ஓலை எங்குமே பறந்தது (நாட்டுக்கு…
அந்தப் பேச்சைக் காதிலே கேட்டான்
தேரணி மகராஜா
அடுத்த கணமே பயணப் பட்டான்
தேரணி மகராஜா
டில்லிக்குப் போனான் குதிரையைப் பார்த்தான்
தேரணி மகராஜா _ அவன்
திகைத்துப் போனதால் சிறையில் தள்ளினான்
டில்லிக்கு மகராஜா
தேரணி சிங்கை டில்லிச் சிறையில்
தள்ளிய மறுவாரம்
சிங்கக் குழந்தையை ஈன்று விட்டது செஞ்சித் திருநகரம் (நாட்டுக்கு…
உறையிலிருக்கும் போர்வாள்போலே
அறையிலிருந்தான் தேசிங்கு!
உலகவழக்கம் உணரும்வரைக்கும்
மடியில் வளர்ந்தான் தேசிங்கு _ தாய்
மடியில் வளர்ந்தான் தேசிங்கு
சிறையிலிருக்கும் தேரணி மன்னன்
சேதியறிந்தான் தேசிங்கு!
புரவியடக்கக் கருதி வடக்கே
புலிபோல் பாய்ந்தான் தேசிங்கு!
அப்பனை மிரட்டிய அதிசயக் குதிரையை
அங்கே கண்டானே!
அஞ்சாமலேறி சவாரி செய்து
அரும்புகழ் கொண்டானே! (நாட்டுக்கு…
வசனம் : தகப்பனை மீட்ட தேசிங்கு ராஜாவுக்கு திருமணம் நடந்தது. அப்போது டில்லி பாதுஷா ஆர்க்காடு நவாபை விட்டு தேசிங்கிடம் கப்பம் கேட்கச் சொன்னான். அதைக் கேட்டதும் தேசிங்குராஜன் என்ன சொன்னான் தெரியுமா?
செப்புக் காசுகூட செஞ்சி நாட்டான் _ வட
சீமைக்குக் கட்டிட மாட்டான் _ டில்லி
சேவடிக்குத் தினம் காவடி தூக்குவோன் _ அவன்
தெரிஞ்சும் எப்படிக் கேட்டான்?
இப்புவி மக்கள் இருப்பதெல்லாம் _ அவன்
அப்பன் வீட்டு நிலமோ? _ இந்தக்
குப்பை கூளங்களின் தப்புச் செயல்களை
ஒப்புக் கொள்ள வேணுமோ? _ நான்
கப்பம் கட்ட வேணுமோ? (நாட்டுக்கு…
குன்றுநிகர் தேசிங்கு கண்டபடி ஏசினான்
தண்டலுக்கு வந்தவன் தலைதெறிக்க ஓடினான்
அன்று நவாபு சேனை அத்தனையும் கூட்டினான்
அழகு செஞ்சி நகரை நோக்கி ஆனை குதிரை ஓட்டினான்
அந்தக் காட்சியைக் கண்ணாலே கண்டான் ராஜா தேசிங்கு
அகமதுபொங்கி முகமதுகானை அழைத்துவரச் சொன்னான்
வசனம் : அப்போது முகமதுகான் என்ன செய்து கொண்டிருக்கிறான்? ஆருயிர்த் தோழன் முகமதுகான் கல்யாண கோலத்திலிருக்கிறான். மணமகளிடம் முகமதுகான் விடை கேட்கும் கட்டம் காண்க.
வந்தது வந்தது ஓலை _ என்
வாளும் தலைகளும் சந்திக்கும் வேளை!
வந்தது வந்தது ஓலை
வாழ்க்கை தொடங்கிடும் வேளை _ என்
வார்த்தையைக் கேளுங்கள் போகலாம் நாளை வாழ்க்கை தொடங்கிடும் வேளை!1
மானம் பெரிது உயிர் சிறிது _ இது
வழிவழி வந்த வழக்கமடி _ இதில்
மாற்றம் நடந்தால் என் மார்பின் உதிரம் _ நம் மண்ணை மணப்பதும் உண்மையடி_ என்
வண்ணக்கிளியே விடை கொடடி (வந்தது…
நாளைவெற்றியில் திருமணம்இன்றேல்
நடப்பது வேறென்றே
நீலவேணியில் ஏறிப்பாய்ந்தான்
நெஞ்சில் உறுதிகொண்டே
வீரன் வந்ததைக் கண்ணாலேகண்டான்
ராஜா தேசிங்கு!
வெற்றி வந்ததாய் எண்ணி மகிழ்ந்தான்
ராஜா தேசிங்கு!
பாராசாரிக் குதிரை நீல வேணிக் குதிரை
பக்கம் பக்கம் வந்து நின்றன
சிங்க ஏறுபோல் இருவர் ஏறியமர்ந்ததும்
எதிரிப்படை நோக்கிச் சென்றன
அணி வகுத்த படை அதிருது _ அங்கு
கனமிகுந்த யானை கதறுது!
ஆற்காட்டான் நெஞ்சம் பதறுது _ அவன்
அழைத்து வந்தோர் தலை உதிருது
ஓர் கூட்டம் பல கூறாய்ச் சிதறுது _ சிலர்
உடம்பும் காலும் சேர்ந்து ஒதறுது
அடிபட்டு, ஒடிபட்டு, மிதிபட்டு,
அறுபட்டு தரைமுட்டலானவர்கள் எத்தனையோ? _ தலை
உடை பட்டுக் குடல்கொட்டிப் படைவிட்டுத் தெளிபட்டு நடைகட்டத்
துணிந்தவர் எத்தனையோ!
சிப்பாய் முகமது சிங்கம் எங்கும்
செந்நீர் ஆடி வருகையிலே
செப்புச்சிலைநிகர் தேசிங்கு கைவாள்
தீப்பொறி கக்கிச் சுழலையிலே
செக்கர் வானமா பூமியா? வென்று
சிந்திக்க வைக்கும் வேளையிலே
தீரன் முகமது பின்னின்று ஒருவன்
பீரங்கியாலே சுட்டானே
வீரன்முகமது குண்டடிபட்டு
வீழ்ந்ததைத் தேசிங்கு கண்டானே
வெற்றியினருகில் கை யொடிந்ததுபோல்
மேனி துடித்து நின்றானே
தனித்தனி மதத்தில் பிறந்த நமது
சரித்திரமே ஒரு புதுமையடா!
இணைந்த நம்குரலின் ஒற்றுமை முழக்கம்
என்றும் அழியாத பெருமையடா!
தங்கத் தூணொன்று குங்குமச் சேற்றில்
சாய்ந்ததோ வென்று அழுதானே!
நம்குலப்பெயரை நாட்டி விரைவிலே
நானும் வருகிறேன் என்றானே
சுற்றிய சேனை அடங்கலும் வென்றான்
சூரன் நவாபும் ஓடி ஒளிந்தான்
கத்தி எடுத்தே நன்றி மொழிந்தான்
வெற்றி வெற்றியென விண்ணிலெறிந்தான்!
பெற்ற பூமியை வணங்கி நிமிர்ந்தான்!
பெரும் படைவாளை மார்பிலேந்தினான்
வற்றாப் புகழோன் செஞ்சியின் தலைவன்
மடிந்ததை யறிந்தாள் மாது ராணியும்
திருமணமாகி ஒரு கணமாகிலும்
திருமுகம் காணா திருந்தீரே
திரையில் மறைந்ததும் கரந்தனில் முத்தம்
சிந்தியதோடு பிரிந் தீரே!
பெரும்படை வென்று திரும்புவேனென்று
இடும்தடை கடந்து சென்றீரே!
திறம்பட நின்று வரும் பகைகொன்று
களந்தனில் அமைதி கொண்டீரே _ என்று
சிரந்தனை மோதி அழுதாளே
தியாக வீரனைத் தொழுதாளே
நடந்த கதை இது மெய்யிலே _ உடன்
ராணியும் விழுந்தாள் தீயிலே! (நாட்டுக்கு…
23. ஊரடங்கும் வேளையிலே
ஊரடங்கும் வேளையிலே
உள்ளம் கவரும் சோலையிலே _ இவ
யாருக்காகக் காத்திருந்தா ஏரிக்கரையிலே?
அதுதான் எனக்கும் புரியலே! (நாட்டுக்கு…
ஆரணங்கின் மையலிலே
அந்தியிளம் வெய்யிலிலே
அங்கொருவர் வருவதுண்டு
அதையும் சொல்லிவிட முடியலே,
இங்கிருக்கும் இவமனசு
எங்கே இருக்குதோ தெரியலே? (நாட்டுக்கு…
உளறாதே பொன்னம்மா
உள்ளதைச் சொன்னா என்னம்மா?
கலங்காதே குப்பம்மா
நலுங்கு வைப்பது எப்பம்மா?
பழங்காலப் பைத்தியம் உங்கள்
இளங்காதல் ஏற்குமா? (நாட்டுக்கு…
காரணம் விளங்கியும் கதையேண்டி
காதலின் இலக்கணம் இதுதாண்டி
வீணர்கள் இட்ட சாதி வேலிதாண்டி
விந்தைகள்புரிவதும் அதுதாண்டி!
ஊரடங்கும் வேளையிலே
உள்ளம் கவரும் சோலையிலே _ அவர்
வாரேனென்று வாக்களித்தார்
வந்து சேரலே _ அதனால்
மனமும் சரியில்லே! (நாட்டுக்கு…
தங்கப்பதுமை
24. முகத்தில் முகம்
முகத்தில் முகம் பார்க்கலாம் _ விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்!
வகுத்த கருங்குழலை மழைமுகிலெனச் சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம்1 _ என்முன்
வளைந்து இளந்தென்றலில் மிதந்துவரும் கைகளில் வளையல் இன்னிசை கேட்கலாம் _ மானேஉன் (முகததல…
இகத்திலிருக்கும் சுகம் எத்தனை யானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் _ அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கம் _ காதல்
அகத்தினலே அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் _ இன்பம்
ஆயரம உருவாககலாம
இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில்
தங்கம் மங்கும் நிலையில் நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலெனச் சோலைதனில்
பொழுதெல்லாம் மகிழலாம்;
கலையெலாம் பழகலாம் _ சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும்
குறும்பு படர்ந்திடும் (முகததல…
25. விதியென்னும் குழந்தைகையில்
விதியென்னும் குழந்தைகையில் உலகந் தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை _ அது
விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
மேல்கீழாய்ப் புரட்டிவிடும் வியந்தி டாதே
மதியுண்டு கற்புடைய மனைவி யுண்டு
வலிமையுண்டு வெற்றிதரும் வருந்தி டாதே
எதிர்த்துவரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்ப மப்பா
1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209