Pattukkottaiyaar

திரைப்பாடல்-6

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

126. கொடுமை புரிவதே
கொடுமை புரிவதே தொழிலாச்சு _ உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம் பலியாச்சு _ எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு!

சோகச் சூழலிலே ஏழைச் சருகுகள்
சுற்றுதடா _ கண்ணீர் கொட்டுதடா
மோகச் செயலாலே முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி இரையாகுதடா _ அன்பை
அதிகார வெள்ளம் கொண்டு போகுதடா

பழந்துணி அணிந்தாலும் பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று துணியுதடா _ நேர்மை
பொல்லாத சூழ்நிலையால் வளையுதடா

127. வாவா சூரியனே
வாவா சூரியனே மனிதர்நிலையைத் தெரிஞ்சுக்க
வஞ்சகர் அதிகம்உண்டு நோக்கம்பாத்து நடந்துக்க! (வாவா…

தூங்கிக்கிடந்த உயிர்களெல்லாம்
துள்ளி எழுந்திடும் காலையிலே
சோர்ந்து கிடந்த கைகளெல்லாம்
துணிந்திடும் பல வேளையிலே
உலகத்தை நினைச்சாலே உடம்பு நடுங்குது
ஊருகெட்ட கேட்டைப்பாத்து நீதி பதுங்குது!
உருவங்கள் மனிதர்போல ஓடி அலையுது
உள்ளத்திலே எண்ணமெல்லாம் நஞ்சா விளையுது (வாவா…

நாடுமுன் னேறப்பலர் நல்லதொண்டு செய்வதுண்டு
நல்லதைக் கெடுக்கச்சிலர் நாசவேலையும் செய்வதுண்டு
ஓடெடுத்தாலும் சிலர் ஒற்றுமையாய் இருப்பதில்லை _ இந்த
உண்மையைத் தெரிந்தும்நீ ஒருவரையும் வெறுப்பதில்லை (வாவா…

128. நீயாடினால்
ஆண் : நீயாடினால் ஊராடிடும்
நானாடினால் யாராடுவார்?
மேல்நாடும் கீழ்நாடும் பார்த்தேன்
ஆண்பாடப் பெண்பாடக் கேட்டேன்
ஆனாலுன் போலெங்கும் காணேன் (நீ…

பெண் : சீமான்கள் கொண்டாடும் மேடை
செண்டாலே காற்றெல்லாம் வாடை
சிரிப்பெல்லாம் வெவ்வேறு ஜாடை
கண்காட்டினால் கை தட்டுவார்
கைகாட்டினால் கதை கட்டுவார்

ஆண் : கண்டதெல்லாம் உண்மை காத்திருக்கு நன்மை
காரியத்தில் கொஞ்சம் கவனம் வையம்மா
கருணை வையம்மா

பெண் : காரணம் இல்லாமலே கானமயிலாடுமா?
கருததொண்ணும் புரியாமல் அன்னநடை போடுமா?

ஆண் : நீயாடினால் ஊராடிடும் நானாடினால் யாராடுவார்?

உலகம் சிரிக்கிறது

129. சொல்ல முடியாத
சூதாடி மாந்தர்களின் சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனல் பாரறிந்த உண்மையன்றோ?
சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சக ராகி
கள்ள வேலைகள் செய்த கதை _ சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை (சொல்ல…

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மை யாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே (சொல்ல…

130. என் _ வீட்டு நாய்
முனி : என் _ வீட்டு நாய் போனதற்கே _ நான்
வீணாய்க் குந்தியிருக்கேன் _ ஒரு
வெறும் நாயைத் தேடிக்கிட்டு தம்பீ நீ
வீணாய்க் கிளம்பினாயே
பய _ டிப்புக் குடுத்து டிப்புக் குடுத்து
டிமிக்கி குடுத்துட்டாண்டா _ அவன்
திறந்த வீட்டிலே நாயைப் போலே
துணிந்து புகுந்துட்டாண்டா

சிங் : அவன் _ டிப்புக் குடுத்து டிப்புக் குடுத்து
டிமிக்கி குடுத்துட்டாண்டா _ நீ
திறந்த வீட்டிலே நாய் நுழைய
எடங் குடுத்ததும் ஏண்டா?

முனி : நம்பியிருந்த பொருள் நாணயம்மிகுந்த பொருள்
வெம்பி விழுந்ததடா என்தோழா _ இதை
வெளியிலேதான் சொல்லாதேடா என்தோழா

சிங் : வெம்பி விழவுமில்லை
நம்பிக்கையில் மோசமில்லை
சந்தேகம் வலுத்துக்கிட்டா கிறுக்குத் தோழா _ எல்லாம்
தலைகீழாய்த் தெரியுமடா குருட்டுத் தோழா

முனி : அட _ குதிரைமேலே சத்தியமா
கொடுமைக்குநான் சொல்லவில்லை
எதிரிக்காரப்பய ஒருத்தன் எந்தன் தோழா _ என்
இதயத்திலே இடிச்சிட்டாண்டா என் தோழா

சிங் : அட _ கொம்பொடிஞ்ச மாடு
குதிச்சி என்ன புண்ணியம்?

முனி : ஏய் _ தும்பறுந்த மாட்டைத்
தொரத்தி என்ன புண்ணியம்?

சிங் : காலொடிஞ்ச குதிரை
கனச்சி என்ன லாபம்?

முனி : கையொடிஞ்ச நொண்டி
மொறச்சி என்ன லாபம்? என்ன லாபம்?

சிங் : என்ன லாபம்?
முனி : என்னடா லாபம்?
இப்படிக்கு அன்புள்ள நஷ்டம்

சிங் : வந்தான் வந்தானே
வராதவன் வந்தானே

முனி : போனா போனாளே
போகாதவ போனாளே

சிங் : போனது போகட்டுமே தேடாதே

முனி :ஆனது ஆகட்டுமே தேடாதே
தேடாதே! வாடாதே!

131. அமுதமே என் அருமைக்

அமுதமே என் அருமைக் கனியே
ஆசை பொங்கும் கண்ணே
அன்பு தவழும் பொன்னே
தூங்கடா செல்வம் தூங்கடா! (அமுதமே…

கொடியிலாடும் மலரும் நாணும்
கலையின் வெள்ளமே… ஓ…
மடியிலாடி மழலைபேசி மணக்கும் மதுரத் தேனே
மனதைக் கவரும் பொன்னே
தூங்கடா செல்வம் தூங்கடா! (அமுதமே…

அழகு வானின் நிலவை ஓடித்
தழுவ வேண்டுமோ?… ஓ…
உலகம் தூங்கும் இரவில் நீ
உறங்கிடாததும் ஏனோ?
உயரும் நினைவு தானோ?
தூங்கடா செல்வம் தூங்கடா!
ஆடல் விநோத ஆனந்த கீத
பாடம் சொல்லும் மங்கையாள்! (தேவி…

அழகு வரும் நேரம் அன்னை அதி காரம்
முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம் (தேவி…

132. புள்ளையாரு கோயிலுக்கு
ஆண் : ஆனைமுகனே ஆதிமுதலானவனே
பானைவயிற்றோனே பக்தர்களைக் காப்பவனே
மோனைப்பொருளே மூத்தவனே கணேசா கணேசா!
ஏனென்று கேளுமையா _ இந்த ஏழைமுகம் பாருமையா

குழு : புள்ளையாரு கோயிலுக்குப் பொழுதிருக்க வந்திருக்கும்
புள்ளை யாரு _ இந்தப் பிள்ளை யாரு? (புள்ளை…

பெண் : வள்ளியம்மை நேசத்திலே வனவேடன் வேஷத்திலே
வாட்டங்கொண்ட வேலனுக்கு
உதவி செஞ்சாரு _ யானை உருவில் வந்தாரு _ இந்த
வாதங்கொண்ட மாப்பிள்ளைக்கு
என்னடி செய்வாரு? பெண்ணுக்கு எங்கடி போவாரு?

ஆண் : ஆஹா… குலுக்கி மினுக்கிக்கிட்டு
குடங்களையும் தூக்கிக்கிட்டு
தளுக்குநடை போட்டுக்கிட்டு
ஜாடையிலே பார்த்துக்கிட்டு
கொளத்தங்கரை ஓரத்திலே _ அட எங்கப்பா கணேசா!
மயக்கம்வரும் நேரத்திலே கூட்டமாவந்திருக்கும் _ இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா? _ இவங்க
நோட்டமென்ன சொல்லுமப்பா?

குழு : ஓகோ!

பெண் : தனக்கொருத்தி யில்லாமே
தனிச்சிருக்கும் சாமியிடம் (தனக்…

குழு : எனக்கொருத்தி வேணுமின்னு கேக்க வந்தாரோ?
ஏங்கி ஏங்கி ஏங்கி எதைப் பார்க்க வந்தாரோ?

ஆண் : ஏய்… போக்கிரிக் குட்டிகளா
தண்ணி தூக்கப் போறதுபோல்
கண்ணிபோட வந்திருக்கும் பொண்ணு யாரு? _ இவ
புருஷன் யாரு? _ அந்தக் கள்ளி யாரு?
வேப்பெண்ணையைப் பூசிக்கிட்டு
வெறுங்கையாலே கிண்டிவிட்டு
வேடுகட்டும் கூந்தலிலே செங்கமலம் _ காக்கா
கூடுகட்டப் பார்க்குதடி ருக்குமணி ருக்குமணி!

குழு : ஓஹோ!

பெண் : கட்டழகைப் பாருங்கடி
காலைப் புடிச்சி வாருங்கடி! (கட்டழகை…

ஆண் : ஏய்… ஒய்யாரப் பெண்டுகளா
ஒடம்பைத் துளைக்கும் வண்டுகளா!

குழு : நொண்டிக்கை நொண்டிக்கை
ஊளை மூக்கு ஊளை மூக்கு

ஆண் : கோண மூஞ்சி கோண மூஞ்சி
பூனைமுழி பூனை முழி!

குழு : முட்டிக் காலு சட்டித் தலை!

ஆண் : சொத்தப் பல்லு பட்டி வாயி!

குழு : நீதான்

ஆண் : நீங்கதான்

குழு : புடிங்கடி

ஆண் : நில்லுங்கடி… டுர்…

133. ஆட்டம் ஆட்டம்
இருவர் : ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆட்டத்திலே பல வகையுண்டு _ அதில்
கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு (ஆட்ட…

பெண் : சிறகை விரித்தால் மயிலாட்டம்
சேர்ந்து குதித்தால் ஒயிலாட்டம்

ஆண் : சீறிப் பாய்ந்தால் புலியாட்டம்
திரையில் மறைந்தால் நிழலாட்டம்

பெண் : கோஷ்டிகள் சேர்ந்தால் வாதாட்டம்
குழப்பம் வந்தால் போராட்டம்

ஆண் : சேஷ்டைகள் மிகுந்தால் குரங்காட்டம்
திருடர்கள் ஆட்டம் நரியாட்டம் (ஆட்டத்…

ஆண் : வெற்றிஎங்கள் கையிலே
வெள்ளிப்பணம் பையிலே
வேடிக்கை தேவையில்லை ரெடியா?

பெண் : சக்தி எங்கள் கையிலே சகலமும் பையிலே
தாமதம் தேவையில்லை ரெடியா? (சக்தி…

ஆண் : ஒன் டூ த்ரி… வெற்றி

பெண் : சக்தி

ஆண் : ஒன் டூ த்ரீ போர் பைவ்

கல்யாணிக்குக் கல்யாணம்

134. ஆனந்தம் இன்று ஆரம்பம்
ஆனந்தம் இன்று ஆரம்பம் _ மனம்
அன்பில் பிணைந்தால் _ பின் அதுவே பேரின்பம்
ஆடும்கடலும் பொன்னி ஆறும் கலந்ததுபோல்
கூடும் இவர்களிரு பேரும் தேடும்உயர் (ஆனந்…

மீனுடன் மானும் மங்கை விழிகளில் துள்ளுதே
விந்தை மிகும் மௌனம் வீரத்தை வெல்லுதே
தேனைச் சுமந்த மலர் மாலை சுமந்த அவள்
நாணிக் குனிந்த முகம் நல்ல பண்பைச் சொல்லுதே! (ஆனந் …

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று
தெள்ளு தமிழ்க் கவிஞன் தெளிவுரை சொன்ன துண்டு;
இல்லறம் ஏற்பவர்கள் இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந் தால் வாழ்வுக்கு மிக நன்று (ஆனந்…

135. வருஷத்திலே ஒரு நாளு
குழு : வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
மகிழ்ச்சிக்குரிய நாளு இந்தத் தீபாவளி
மனைவியும் கணவரும் மக்களோடு யாவரும்
மங்களமாய்க் கொண்டாடும் தீபாவளி (வருஷ…

மனசுக்குள்ளிருக்கிற கவலைகளெல்லாம்
மறைந்திட வரும் நாளு!
வாடிக்கையாகப் பட்டினி கிடந்தோர்
வயிறு நெறையும் நாளு!
நெனைக்க முடியாத காட்சிகளெல்லாம்
நேரில் தெரியும் நாளு!
நீண்டகாலமாய் ஆண்டுகள்தோறும்
நிகழ்ந்திடும் பெரு நாளு (வருஷ…

ஆண் : கண்ணே கண்ணுக்குள் நாடகமாடிடும்
பெண்ணே இன்னமும் நாணமா?

பெண் : எண்ணம் கலந்தபின் என்னைப் பிரிந்ததும்
இன்பம் மறந்ததும் ஞாயமா?

ஆண் : உன்னைப் பிரிந்து நான், உன்னால் மெலிந்திடும்
உண்மை மறந்ததும் ஏனம்மா?

பெண் : இன்னல் தொடர்ந்ததை, எல்லாம் மறந்தினி
என்றும் பெரும்சுகம் காணலாம்

இருவர் : பொன்னும் வைரமும்போல இணைந்துள்ளோம்
பொங்கும் மகிழ்ச்சியில் ஆடலாம்

பையன் : அக்கா… அக்கா…
பட்டாசு வெடிக்கிற வேளையிலே… நீ
படுத்துத் தூங்குறே மூலையிலே
கட்டோடு வெடிக்கும், கண்ணையும் பறிக்கும்
கம்முன்னு அடைக்கும் காதுக்குள்ளே;
தொட்டாலே போதும், சுர்ருன்னு சீறும்
சுட்டாலே நோகும் சொல்லாமலே வேகும்
எட்டாத ஊருக்கும் இதாலே பேரு
விட்டாலே ஜோரு வேடிக்கை பாரு! (வருஷ…

136. இந்த மாநிலத்தைப் பாராய்
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே _ இளம்
மனதில் வலிமைதனை ஏற்றடா _ முக
வாட்ட மதை உழைப்பால் மாற்றடா! (இந்த…

துயர்தனைக் கண்டே பயந்து விடாதே
சோர்வை வென்றாலே துன்பமில்லை
உயர்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்
உதவி செய்வார் யாருமில்லை (இந்த…

பேதத்தைப் பேசி நேரத்தை விழுங்கும்
பித்தருமுண்டு _ அவர் பக்தருமுண்டு
லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும்
நண்பருமுண்டு _ வெறும் வம்பருமுண்டு (இந்த…

137. தைப்பொறந்தா வழிபொறக்கும்
தைப்பொறந்தா வழிபொறக்கும் தாரணியில் எல்லோருக்கும் கைமேலே பலன்கிடைக்கும் அம்மா வீரம்மா _ எங்கும்
களஞ்சியமா நெறஞ்சிருக்கும் ஆமா மருதம்மா
பண்ணையிலே வேலைபார்க்கும் பாட்டாளி குடியிருக்கும்
சின்னஞ்சிறு சேரியிலும் அம்மா வீரம்மா _ இனி
தென்பாங்குப் பாட்டுக் கேக்கும் ஆமா மருதம்மா (தை…

மாட்டுக்கழுத்தில் மணிகளைக் கட்டி
வாழ்த்தவேணும் வழக்கத்தை ஒட்டி
வீட்டைமெழுகி விளக்குக ளேற்றி
வௌஞ்சநெல்லைக் கூடத்தில் கொட்டி
ஆசைதீர பரப்பிவிடணும் அம்மா வீரம்மா _ எங்க
அத்தைமவந்தான் அளக்கவரணும் ஆமா மருதம்மா

குனிஞ்சுநிமிந்து குறுக்கேபுகுந்து
கும்முனுகும்மியும் கொட்டுங்கடி
கோலவளையல் குலுங்குறாப்ல
கொஞ்சம்நல்லாத் தட்டுங்கடி
கதிரடிக்கணும் புதிருபொங்கணும்
காவேரி அன்னையைக் கும்பிடணும்
கஞ்சிப்பானை கவலைதீரக்
கலப்பைத் தொழிலை நம்பிடணும்

138. குட்டுகளைச் சொல்லணுமா?
குழு : குட்டுகளைச் சொல்லணுமா?
கூடையிலே அள்ளணுமா?
பட்டணத்துப் பகட்டுக்கெல்லாம் எளச்சமா? _ அள்ளி
விட்டால்போதும் வௌங்கிப்போகும் வெளிச்சமா?

பெண் : பட்டணம்கெட்ட கேட்டுக்குப்
பட்டிக்காடு மட்டமின்னு
பரபரப்பாக் கையைத் தட்டிப் பழிக்குது

தோழிகள் : அங்கே பார்த்தவங்க திட்டும்போது
வார்த்தைகளைக் கொட்டும்போது
காத்தடிக்கிற பக்கமெல்லாம் சிரிக்குது _ அந்தக் (குட்டு…

பெண் : பகல்வேஷக் காரரைப்போல்
மொகரைகளை மாத்திக்கிட
பவுடரிலே புரண்டு எழுந்து வருவாங்க

தோழிகள் : இன்னும் சகலருக்கும் தெரிஞ்சிருக்கும் தலையைவெட்டிச் சுருட்டிக்கிட்டு
வளையைக்கட்டி மறச்சிக்கிட்டுத் திரிவாங்க _ அந்தக் (குட்டு…
சகலமான வலிகளுக்கும்
சாந்திதேடும் மருந்திருந்தும்
சப்பிப்போட்ட மாங்கொட்டை போல்
மெலிவாங்க _ சிலர்
சதையைத் தூக்கச்
சத்தில்லாமே விழுவாங்க

பெண் : அங்கே _ தனக்குப்பொறந்த கொழந்தையைத்தான்
தாலாட்ட முடியாமே
சம்பளங்கொடுத்து ஆள்பிடிப்பா பொம்பளே!

தோழிகள் : அதுக்குத் தாளம்போட்டு வால்பிடிப்பார் ஆம்பளே _ அந்தக் (குட்டு…

ஆண் : அடியே பெண்டுகளா _
ஒருபேரு ராக்காயி ஒருபேரு மூக்காயி _ இன்னும்
எவபேரைக் கேட்டாலும் காத்தாயி கருப்பாயி
இந்த _ ஊருக்கும் பேருக்கும்
ஒங்க ஓல்டு முறைகளுக்கும்
பார்புகழும் சென்னைநகர்
எந்தப்பக்கம் கொறஞ்சிருக்கு? ஹேய்…! உங்க (குட்டு…

பட்டணத்தைப் பழிச்சுக்காட்டும்
பாப்பம்மா _ உங்க
பவுசைக் கொஞ்சம்
படம்புடிச்சுப் பாப்பமா?
இங்கே தலைவலியும் நோயும் வந்தா
சாமிகளைச் சுத்துவீங்க
இன்னும் ஜாதகத்தைப் பார்த்துப் புட்டு
ஆடு கோழி வெட்டுவீங்க
பலவித வைத்தியமும் படிச்சிருக்கும் டாக்டரிடம்
உடல்நிலையைச் சொல்ல மாட்டீங்க
மூச்சு _ நின்னு போனா… கத்துவீங்க _ அந்தக் (குட்டு…

கையெழுத்துப் போடக்கூடக் கல்வியறிவில்லாமே
கட்டைவிரல் முத்திரையில் _ ஒங்க
கதைகளெல்லாம் நடக்குதடி
காலம் போற வேகத்திலே வானில்
கப்பல் போற வேகத்திலே _ இங்கே
கண்மூடி வேலைகளில்
கணக்குப் பெருகுதடி _ அந்தக் (குட்டு…

139. உன்னை நினைக்கையிலே
உன்னை நினைக்கையிலே கண்ணே
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி (உன்னை…

பொன்னை உருக்கிய வார்ப்படமே _ அன்பு
பொங்கிடும் காதல் தேன்குடமே!
தன்னந் தனியாக நாளைக் கழிப்பது
சங்கட மன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை…

வட்டக் கருவிழி மங்கையே _ ஒளி
கொட்டும் நிலவுக்குத் தங்கையே!

கல்யாணப் பரிசு

140. துள்ளாத மனமும்
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் _ இசை
இன்பத் தேனையும் வெல்லும்
துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணி யாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் _ துயர்
இருளை மறைப்பதும் கீதம் (துள்ளாத…

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவிய ணைத்தே படர்ந்திடும்
மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்
உறவு கொண்டால் இணைந்திடும் _ அதில்
உண்மை அன்பு விளைந்திடும் (துள்ளாத…

141. ஆசையினாலே மனம்
பெண் : ஆசையினாலே மனம்

ஆண் : ஓஹோ…

பெண் : அஞ்சுது கெஞ்சுது தினம்

ஆண் : ஊஹம்…

பெண் : அன்பு மீறிப் போனதாலே
அபிநயம் புரியுது முகம்
ஆண் : ஐ… ஸ…

பெண் : ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறிப் போனதாலே
அபிநயம் புரியுது முகம்!
நாணம் கொண்டு ஓடும் கண்கள்
தாளம் போடுதே _ அதைக்
காணும் தென்றல் காதில் வந்து
காணம் பாடுதே…
வேரில்லாத கொடிதனில்

ஆண் : ஓஹோ… ஹோ…

பெண் : வாலில்லாத ஒரு அணில்

ஆண் : ஆஹஹா…

பெண் : ஆளில்லாத நேரம் பார்த்து
தாவிப் பிடிக்குது கையில்

ஆண் : ஸாரி…

பெண் : மாலை என்ற நேரம் வந்து
ஆளை மீறுதே… இளம்
காளை யொன்று காதல் என்று
கண்ணால் கூறுதே
தேடி வந்த ஒரு துணை

ஆண் : ஓஹோ… ஹோ…

பெண் : சிரிக்குது மயக்குது எனை

ஆண் : ஆஹஹா…

பெண் : மூடி மூடி வைத்த எண்ணம்
நாடுதே சுகம் தன்னை

ஆண் : ரியலி… (ஆசை…

142. டீ _ டீ _ டீ _ வாங்க
டீ _ டீ _ டீ _ வாங்க டீ _ டீ _ டீ (வாங்க டீ…

பாட்டாளித் தோழருக்கும் பலதொழி லாளருக்கும்
கூட்டாளி யாயிருக்கும் டீ _ கொஞ்சம்
சூட்டோடு போட்டா சோம்பேறி நண்பனுக்கும்
சுறுசுறுப்புக் கொடுக்கும் டீ _ இது
விறுவிறுப்புக் கொடுக்கும் டீ (வாங்க டீ…

காரிலே ஏறிட்டு ரோடுலே போறவங்க
காய்கறி பழம்விற்கக் கத்து வங்க
உருகும்தாரிலே நடக்கற தள்ளுவண்டிக் காரருங்க
சகலரும் விரும்பும் டீ _ பலருக்குச் சாப்பாடு கூட இந்த டீ

ஊருக்கும் பேருக்கும் உடல்மெலிந் தோருக்கும்
உள்ளபடி உழைக்கிற நல்லவங்களும்
காருக்கும் கூறுக்கும் வம்புத் தகராறுக்கும் மல்லுக்கும்
காரணமாய் உள்ளவங்களும் குடிக்கக்
கூழுக்கும் இல்லாத குடிசைகளும் _ பெருங்
கோட்டையும் விரும்பும் டீ _ பழைய
குணத்தை மறக்க வைக்கும் டீ (வாங்க டீ…

143. வாடிக்கை மறந்ததும் ஏனோ?
ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ? _ என்னை
வாட்டிட ஆசை தானோ? _ பல
கோடி மலரழகை மூடிவைத்து மனதைக்
கொள்ளை யடிப்பதும் ஏனோ? (வாடிக்கை…

பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ? _ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ? _ புது
மங்கைஎந்தன் மனதில் பொங்கிவரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ? (வாடிக்கை…

ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப் பாட்டும்
அமுத விருந்தும் மறந்து போனால்
உலகம் வாழ்வதும் ஏது? _ பல
உயிர்கள் மகிழ்வதும் ஏது? _ நெஞ்சில்
இனித்திடும் உறவை இன்பமெனும் உணரவைத்
தனித்துப் பெற முடியாது

பெண் : அந்தி நேரம் போனதால்
ஆசை மறந்தே போகுமா?
அன்புக் கரங்கள் சேரும்போது
வம்பு வார்த்தைகள் ஏனோ?
இன்ப வேகம் தானோ? (வாடிக்கை…

ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ?
காதல் நதியில் நீந்திடும் மீனோ?
கருத்தை யறிந்தும் நாணம் ஏனோ?

பெண் : பொறுமை இழந்திட லாமோ? _ பெரும்
புரட்சியில் இறங்கி லாமோ? _ நான்
கருங்கல்லுச் சிலையோ? காதலெனக் கில்லையோ?
வரம்பு மீறுதல் முறையோ?

இருவர் : சைக்கிளும் ஓடமண் மேலே _ இரு
சக்கரம் சுழல்வது போலே _ அணை
தாண்டிவரும் சுகமும், தூண்டிவிடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே

144. அக்காளுக்கு வளைகாப்பு
பெண் : மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள்நிற வளையல் இதுவாழ்வுதரும் வளையல்!
மங்கலப் பெண்குலம் போட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திருவளையல்!
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சைநிறம் விளங்கும் எழில் வளையல் _ தும்பை
மலர்போன்று இருமனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்!

குழு : அக்காளுக்கு வளைகாப்பு _ அத்தான்
முகத்திலே புன்சிரிப்பு
அக்கம்பக்கம் கலகலப்பு _ ஆரைப்
பார்த்தாலும் சுறுசுறுப்பு

பெண் : முத்துப்போலே பவழக் கொத்துப்போலே _ இன்னும்
மூணுமாசம் போனா மகன் பொறப்பான்!

1 பெண் : பட்டுப்போலே தங்கத் தட்டுப்போலே _ கரும்புக்
கட்டுப்போலே கெடந்து கண்ணைப் பறிப்பான்!

பெண் : ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளைபோலே
உக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான்! _ அவர்
கண்ண முளிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியைத்தான்!

2பெண் : அடி எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது
என்னென்னமோ பேசுறாங்க ரெண்டு பேரும்
அதை வௌக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரெம்பத் தூரம்!

குழு : ஆ அடி ஆமாண்டி நமக்கது ரொம்பத் தூரம்

பெண் : தாலாட்டுப்பாடி இவ தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு _ அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விடமாட்டாரு ஆளு _ மகனைக்
கீழே விடமாட்டாரு ஆளு! (அக்கா…

145. அக்காளுக்கு வளைகாப்பு
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா _ ஆ… உறவாடும் நேரமடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா
எண்ணத்தில் உனக்காக இடம்நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
வல்லமை சேர நல்லவ னாக
வளர்ந்தாலே போதுமடா… ஆ வளர்ந்தாலே போதுமடா

சித்திரைப் பூப்போல சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!
முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்தச் சிரிப்பு?
முகமோ? மலரோ? இது என்ன ரசிப்பு!
மின்னொளி வீசும் உன்எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா? _ ஆ… வேறென்ன வேணுமடா?

146. காதலிலே தோல்வியுற்றாள்
காதலிலே தோல்வியுற்றாள் கன்னி யொருத்தி
கலங்கு கின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி

ஆசையிலே பாத்திகட்டி அன்பை விதைத்தாள்
அல்லும்பகல் காத்திருந்து பயிர் வளர்த்தாள் (ஆசை…

பாசத்திலே பலனைப் பறிகொ டுத்தாள்
கனிந்தும் கனியாத உருவெ டுத்தாள் (காதலிலே…

147. உன்னைக்கண்டு நான்வாட,
உன்னைக்கண்டு நான்வாட, என்னைக்கண்டு நீவாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா ஆ… காணாத தூரமடா

நெஞ்சமும் கனலாகி நீராகும் போது
நிம்மதி என்வாழ்வில் இனி ஏது?
கொஞ்சிடும் மொழிகேட்டு மகிழ்ந்தவ ளெங்கே?
குலத்தின் விளக்காய்த் திகழ்ந்தவ ளெங்கே?
கண்ணுக்குள் நடந்த காட்சிக ளெல்லாம்
கனவாகிப் போனதடா ஆ… கனவாகிப் போனதடா…

ஆசைக்கு அணைபோட்ட அறிவான நங்கை
அன்புக்குப் பொருள்சொன்ன அருள் மங்கை!
பாசத்தின் சுமையோடு பறந்து சென்றாளே
பழகும் உனையும் மறந்து சென்றாளே
கண்டதும் நினைவில் கொண்டதும் முடிவில்
கதையாகிப் போனதடா… ஆ… கதையாகிப்போனதடா

148. காதலிலே தோல்வியுற்றான்
காதலிலே தோல்வியுற்றான் காளை யொருவன்
கடந்தபின்னே அமைதி எங்குபெறுவான்? _ காலம் (கடந்த…

அன்புமயில் ஆடலுக்கு மேடை யமைத்தான்
துன்பமெனும் நாடகத்தைக் கண்டு ரசித்தான் (அன்பு…

இன்பத்தினை விதிக்கு இரைகொடு த்தான்
இருந்தும் இல்லாத உருவெடு த்தான்

அமுதவல்லி

149. பாசத்தால் எனையீன்ற
பாசத்தால் எனையீன்ற அன்னை தந்தை
பதை பதைத்து நிற்கின்றார் மகனைக் காண
பேசத்தான் வார்த்தையில்லாக் கற்பு மங்கை
பிடியென்றாள் தன்னுயிரைக் கணவன் வாழ
மாசற்ற அன்புக்கு மரணம் உண்டோ?
மதிகெட்டு வந்தாயோ? வஞ்சகப் பாம்பே!
வாழத்தான் வேண்டும் நான் கடமைக்காக
மனமிருந்தால் ஓடிவிடு மாயப் பாம்பே! மாயப் பாம்பே!

150. சிட்டுக் குருவி
ஜிலுஜிலுக்கும் பச்சைமலை, தென்றல் பொறந்தமலை
தென்பொதிகை எங்கள்மலை சாமியோ, சாமி
தேக்கு மரம், பாக்கு மரம் _ எங்க
தென்னைமரம், புன்னை மரம் _ எங்க
வாழ்க்கையெல்லாம் காட்டுக்குள்ளே ஏஞ்சாமி யோசாமி! _ நாங்க
வந்ததில்லே நாட்டுக்குள்ளே

சிட்டுக் குருவியிவ, சிங்கினிக் குறத்திமவ,
சித்திரைப் பதுமை தானுங்க _ பொண்ணு மனசு
முத்திரைப் பசும் பொன்னுங்க
தையன்னத் தையன்னத்தானா
தையான தையன்னத் தானத்
தந்தோம் தன்னானக் கந்தையா
உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா

வேங்கை தனைத் துரத்தி விளையாடும் மறத்தி
வேலன் பேருசொல்லி வில்லை எடுப்பா
மீறிவரும் புலியை வீரத்தினால் அடக்கி
ஏறி மிதிச்சுக்கிட்டுப் பல்லை எடுப்பா
திக்கெல்லாம் சுத்தி வருவா _ மச்சானைத்தேடித்
தென்றலைத் தூது விடுவா (தையன்னத்…

உன்பேரைப் பாடிவந்தோம் சிங்காரக் கந்தையா
மழைமேகம் போலக் கூந்தல் தனைக்காட்டி
மயங்கியாட வச்சு மயில பிடிப்பா!
மதுரக் கவிபோலக் கோவையிதழ் காட்டி
வண்ணம்பாட வைச்சுக் குயில் பிடிப்பா!

பூனைபிடிப்போம் அதில் புனு கெடுப்போம்
பொல்லாத சிங்கத்தையும் அடைத்து வைப்போம்!
ஆனை பிடிப்போம் அதில் தந்த மொடிப்போம்
அங்குசம் தனைக்காட்டி அடக்கி வைப்போம்! (சிட்டுக்…

சிங்கினி சிங்கினி சிங்கினி
திறமையுள்ளவன் எடுத்துக்கோ
டங்கினி மங்கினி டங்கினி மங்கினி
ரகசியத்தைப் புரிஞ்சுக்கோ! (சிட்டுக்…

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

posted by admin in Uncategorized and have No Comments

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment