Pattukkottaiyaar

திரைப்பாடல்-5

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

101. பொறுமை ஒருநாள்
ஏனென்று கேட்கவே ஆளில்லை என்பதாலே
தானென்ற அகங்காரம் தலைவிரித்து ஆடுதடா
ஊனுருக ஏழைகளின் உள்ளமெல்லாம் புண்ணாக
உயிரோடு கொல்பவனைக் காலம் உயர்வாய் மதிக்குதடா!

பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா
கொடுமைபுரியும் பாதகனை _ அவன்
குறைகள் விழுங்குமடா!

காலையாகி மதியமாகி மாலையானது பலபொழுது,
மாலையாகி பகலும்முடிந்து இருளில்போனது பலஇரவு
ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன்
வாழ்வெல்லாம் ஒருநாள் வாழ்வென்றால் _ தினம்
தீராத வெறியோடு போராடும் மனிதன்
பேராசை நிலைதன்னை என்னென்று சொல்வேன்! (பொறு…

மானம்என்றே மங்கை அழுதால்
இன்பமென்றே நகைப் பானே
பாலவயதில் செய்தவனையை
வாழ்வு முடிவில் நினைப்பானே!
தானாகச் சிரிப்பான் தானான அழுவான்
காணாத கனவும் காண்பானே _ அவன்
ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடிக்
கூனாகி ஊணாகிக் கூடாகிப் போவானே! (பொறு…

102. அன்புத் திருமணியே
அன்புத் திருமணியே அகமலரே! அருள் மணமே!
அறமே போற்றி!
புண்பட்டு உழலுகின்ற புவிதிருத்த அவதரித்த
பொருளே போற்றி!
கண்பெற்றும் பார்வைபெறா வம்பர்க்கும் வாழ்வளித்த
வாழ்வே போற்றி!
இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
புத்தமுதே போற்றி!

103. காதலுக்கு நாலுகண்கள்
கல்லால் இதயம்வைத்துக் கடும்விஷத்தால் கண்ணமைத்துக்
கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக் கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரைஉலகம் நடமாட விட்ட தடா!
காதலுக்கு நாலுகண்கள் கள்வனுக்கு ரெண்டுகண்கள்
காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை!

நீதியின் எதிரிகளாய் நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை பண்புமில்லை முறையுமில்லை
பேதைப் பெண்கள் இதைப் பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம்இல்லை என்பார் வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார் மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம்என்பார் கற்பின்விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர்இதைக் கடைசிவரை அறிவதில்லை!

104. ஆடுமயிலே
ஆடுமயிலே நீ ஆடுமயிலே
ஆனந்த நடம் ஆடுமயிலே! (ஆடு மயிலே…

பாடு குயிலே இசை பாடு குயிலே
அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
அமைதி பெருகி விலைபெறவே! (ஆடு மயிலே…

ஆடாதே நீயும் ஆடாதே _ வீண்
ஆணவக் குரங்கே ஆடாதே
போடாதே சத்தம் போடாதே _ கொடும்
பார்வை ஆந்தையே போடாதே!

வாடாதே முகம் வாடாதே
வண்ண மலரே வாடாதே!
வழக்கமான பூசை முடியுமுன்னே
மறந்தும் இதழை மூடாதே! (வாடாதே…

ஓடாதே மானே ஓடாதே _ நீ
ஓடும் வழி தவறி ஓடாதே!
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
விருந்தாய் விழுந்து விடாதே! (ஓடாதே..

105. மாந்தோப்பு வீட்டுக்காரி
மாந்தோப்பு வீட்டுக்காரி
மானோடும் நாட்டுக்காரி
ஏமச்சான் வாமச்சான் உன்னப்பாத்து
மாறாத ஆசை வச்சேன் (மாந்தோப்பு…

பொல்லாத அத்தைமவன்
புலியோட சண்டை போட்டான்
இல்லாத ஆசைகாட்டி
எம்மேலே கண்ணப் போட்டான்

வில்லை எடுத்துமச்சான்
வேட்டைக்குப் பயணம்வச்சான்
சொல்லாமெ பயணம்வச்சான்
சொல்லாமெ ஓடிவந்தேன் _ என் ஷோக்கு மச்சான்
ஏமச்சான் வாமச்சான் ஒன்னைத்தான்
தேடி மனம்வாடி வந்தேன் (மாந்தோப்பு…

106. கன்னித் தீவின்
கன்னித் தீவின் அழகுராணி நான்
கண்ணைக் கவரும் வண்ணமேனி தான்
என்னைக் கொண்டால் இன்பம் காணலாமே (கன்னி…

உல்லாசமான நேரம் வந்து
பொல்லாத காதல் போதை தந்து
உன்னோடு பேசும் மோகம் கொண்டு
உள்ளம் வாடுதே! (உல்லாச…

107. படிக்கப் படிக்க
ஆண் : படிக்கப் படிக்க நெஞ்சினிக்கும்
பருவமென்ற காவியம்!
பார்க்கப்பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம் (படிக்க…

பெண் : ஆ… ஆ… காதல் இன்ப ஓவியம்

ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும்
கண்கள்மட்டும் பேசும்

பெண் : ஆ… ஆ… பேசும்

ஆண் : அன்புமனம் பொங்கிவிட்டால்
அங்கமெல்லாம் பேசும்! (படிக்க…

தடுத்தவர்கள் வென்றதில்லை
சரித்திரமே சொல்லும் _ காதல்
அடுத்தவர்கள் அறியாமல்
ரகசியமாய்ச் செல்லும்!

பெண் : காதல் ரகசியமாய்ச் செல்லும்

ஆண் : கள்ளமில்லாக் காதலரை
வெண்ணிலவும் ஏற்கும்!
காட்டில் வாழும் பறவைகளும்
கானம்பாடி வாழ்த்தும்!

பெண் : ஆ… ஆ… கானம்பாடி வாழ்த்தும்

ஆண் : தொல்லைதரும் மனிதகுலம்
சொல்லிச் சொல்லித் தூற்றும்
தூய்மையான உள்ளங்களைச்
சூழ்ந்து நின்று வாட்டும்! (படிக்க…

தூய்மையான உள்ளங்களைச்
சூழ்ந்து நின்று வாட்டும்! (படிக்க…

108. ஐயா நானாடும்
ஐயா நானாடும் நாடகம் ரகசியந்தான் _ போடும்
நடையெல்லாம் நடனந்தான் சிங்காரந்தான் _ இதை
ரசிக்காத ஆளிருந்தால் அதிசயந்தான்! (ஐயா…

என்னைக் கண்டாலே ஆனந்த லோகம் _ உங்கள்
கண்முன்னே தான்வந்து மோதும் _ ரெண்டு
கண்ணாலே யோகந்தான் முன்னாலே மோகந்தான்
பெண்ணாலே தானின்ப வாழ்வே! (ஐயா…

ஆண்கள் கொண்டாடும் பெண்ணென்ற கோயில்
அன்பு குடிகொள்ளும் பேரின்ப வாயில் _ கண்டு
ஆடாத ஆளில்லை பேசாத வாயில்லை
பாடாத ஏடில்லை பாரில்!

109. பார் முழுதுமே
பார் முழுதுமே நமது பேர் புகழுமே _ நம்
பேரழகிலே இதயம் மகிழுமே!

காவினில் விளையாடும் காதலர் நிலையாவும்
காணப்பெரு மோகந்தரும் ஆனந்தமே
சேல் விழியாலே _ இனி தேன் மொழியாலே _ நமது
யாழ் ஒலியிலே _ விளையும் பேசின்பமே! (பார்…

110. குழந்தை வளர்வது
அன்பிலே _ நல்ல
குணங்கள் அமைவது பண்பிலே (குழந்தை…

ஆடிகடந்திடும் ஆசையிலே _ அது
ஓடித் தவழ்வது மண்ணிலே!

ஆகாயநிலவின் அசைந்தாடும் மலரின்
அழகையும் காண்பது கண்ணிலே _ பெரும்
ஆனந்தம் அடைவது பண்ணிலே! (குழந்தை…

கொங்சும் குரலும், பிஞ்சு விரலும்
குளறிப் பேசும் நிலையும் மாறி
அஞ்சும் மனமும் நாணமும் வந்து
ஆடை யணிந்திடும் அறிவும் வந்து
நாளும் நகர்ந்துமே ஓடவே _ கல்வி
ஏடும் நகர்ந்திடும் கூடவே! (குழந்தை…

காலத் தாமரை போலத் தோன்றும் நிறமாகியே
வானத் தாரகை நாணத் தோன்றும் முகமாகியே
வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும் வடிவாகியே
வண்ணத் தங்கம் மங்கத் திகழும் வயதாகியே
அறிவாகியே ஒளியாகியே தெளிவாகியே!

111. மகுடம் காக்க வந்த
செங்கோல் நிலைக்கவே செல்வம் செழிக்கவே
சிந்தையெல்லாம் மகிழவே, மங்கையர் குலக்கொடி
வந்தேபிறந்தனள் வளர்நீதி தழைத் தோங்கவே!

மகுடம் காக்க வந்த
மகள் வாழி _ குல மகள் வாழி _ ஒளி
மங்காத வெண்குடைப்
புகழ்வாழி! அன்பு நிழல் வாழி! (மகுடம்…

அகிலம் போற்றும் தமிழறம் வாழி!
அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி!
அன்பு நிறைந்திடும் மனம் வாழி _ கதிர்
ஆடி விளைந்திடும் நிலம் வாழி _ நீர் வளம் வாழி!

ஆளப் பிறந்தது பெண்ணரசு _ அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்!
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும் _ நன்றி
கலந்திடக் கும்ம பாடிடுவோம்!

துள்ளித் திரியுது உள்ளமெல்லாம் _ அதைச்
சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்!
செல்லக் குமாரி தெரிசனம் காணவே
தேடித் திரியுது கண்களெல்லாம்!

கத்தும் கடல் கொடுத்த முத்துச்சரந் தொடுத்த
சத்திரத் தொட்டிலிலே மலர்போல _ எழில்
சிந்துகின் றாளிவள் விழியாலே!
எத்தனை நாள்பொறுத்து பத்தினியீன் றெடுத்த
முத்திரைத் தங்கம் இனிமுறை போலே _ நலம்
பெற்றிட வளர்வாள் பிறை போலே!

அவள் யார்?

112. அடக்கிடுவேன்
பெண் : அடக்கிடுவேன் _ ஓய் அடக்கிடுவேன் _ ஒய்
அடங்காத காளையையும் அடக்கிடுவேன் கண்ணாலே
ஆட்டம் போடாதே ஓய்… சாட்டையிருக்கு பின்னாலே

ஆண் : மிரட்டிடுவேன் _ ஏய் மிரட்டிடுவேன் _ ஏய்
மிரளாத உருவத்தையும் மிரட்டிடுவேன் கொம்பாலே
வீணாத் துள்ளாதே _ ஏய் வளைச்சிடுவேன் வாலாலே

பெண் : துணிஞ்சி நின்னாப் புரிஞ்சிடுமே

ஆண் : புரியல்லையே

பெண் : துணிஞ்சி நின்னாப் புரிஞ்சிடுமே _ உன்
சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் குறைந்து போகுமே

ஆண் : நெருங்கி வந்தா விளங்கிடுமே _ உன்
விறுவிறுப்பும் பரபரப்பும் விழுந்துபோகுமே

பெண் : புடிச்சேன்னா விடமாட்டேன் _ நான்
புண்ணாக்கும் தவிடும்வச்சுத் தண்ணியும் காட்டிடுவேன்

ஆண் : வெறிச்சேன்னா ஆபத்துத்தான் _ நான்
மேயாத பயிரையெல்லாம் மேஞ்சு காட்டிடுவேன்!

113. சுகம் வருவது
சுகம் வருவது பாஸ்ட்டு _ நம்ம
சும்மாயிருந்திட்டா வேஸ்ட்டு
மனம்தனில் நினைத்துப்பார்
உணர்ந்து நடந்துபார் (சுகம்…

பொலிவைத் தருவது பருவம் _ முகப்
பொலிவைத் தருவது பருவம் _ அது
போனால் மாறிடும் உருவம் _ அது (போனா…

அழகைத் தருவது காலம் _ உடல்
அழகைத் தருவது காலம் _ அதில்
அடைந்த வரைக்கும் லாபம் (சுகம்…

முகமும் முகமும் சந்திக்கும்போது
முதலில் வருவது தயக்கம்,
மோகம் வளர்ந்து சிந்திக்கும்போது
மூளைக்குத் தருவது மயக்கம்
முழுதும் தெரிந்து இதயம் கலந்து
முடிவில் வருவது இணக்கம் _ அதற்
கிடையில் வருவது பிணக்கம் (சுகம்…

114. ஆணும் பொண்ணும்
பெண் : புதுஅழகை ரசிக்கவரும் மனசுக்கெல்லாம் பெரும்
ஆசை பொங்கும் நேரம் _ இதில்
ஆணும் பொண்ணும் கூட்டுச் சேர்ந்தா
ஆட்டத்துக் கென்ன பஞ்சமா? (ஆணும்…

காலையிலே மலர்ந்த மலர்
மாலையிலே உலர்ந்து விடும்
மனிதர் வாலிபமும் அப்படியே
வந்தது போல் சென்றுவிடும் _ இதை
இன்பமென்பார் சிலநாளிலே _ கொடும்
துன்பமென்பார் பலநாளில் _ ஓ
இன்பமில்லை துன்பமில்லை
இயற்கையென்பார் ஒரு நாளில்

ஆண் : வாழ்க்கையிலே பாதியை நாம்
தூக்கத்திலே கழிக்கலாமா? _ ஆ!
வந்தபோது கோட்டைவிட்டுப்
போனபின் விழிக்கலாமா?

பெண் : பல கவலை ஒழிந்திட இதயம் மகிழ்ந்திடக்
கலையை விரும்பிட வேணுமே
அமுத விருந்ததில் தோணுமே
பெண்கள் உறவு கலந்திடுமே!

ஆண் : கனிந்திடுமே

பெண் : உறவு கலந்திடுமே
வளர்ந்திடுமே கனிந்திடுமே!

தலைகொடுத்தான் தம்பி

115. துள்ளித் துள்ளி
பெண் : துள்ளித் துள்ளி அலைகளெல்லாம்
என்ன சொல்லுது? _ பல
துண்டு துண்டாய் எழுந்து _ அது
எங்கே செல்லுது…? _ துள்ளி

ஆண் : கள்ள விழிப் பார்வைதனைக்
கண்டு கொள்ளுது _ கோபங்
கொண்டே துள்ளுது _ உன்
கன்னத்தில் கிள்ளிவிட்டுச்
சிரிக்கச் சொல்லுது! _ கள்ள

பெண் : தென் கடலின் ஓரத்திலே
ஜிலுஜிலுக்கும் ஈரத்திலே
சின்னச் சின்ன நண்டு வந்து
என்ன பண்ணுது?

ஆண் : அது நில்லாத வேகத்திலே
அல்லும்பகல் மோகத்திலே
நீண்ட வளை தோண்டிக்கிட்டு
குடும்பம் பண்ணுது!

இருவர் : இத்தனையும் நம்மைப்போல
இன்பம் தேடுது _ இதை
எண்ணும்போது நமதுமனம்
எங்கோ போகுது!

பெண் : கண்டதும் மலரில்வண்டு
காதல் கொள்வதேன்? _ அது
வந்துவந்து மெய்மறந்து
மயங்கிப் போவதேன்?

ஆண் : கண்டவுடன் காதல்கொள்ளும்
காரணமும் ஏன்?
சிங்கார மலர்த் தேன் _ நான்
கன்னிமலர் நாடியதும்
வண்டு போலத்தான்…

பெண் : பாக்குமரச் சோலையிலே
பளபளக்கும் பாளையிலே
பறந்துபறந்து குருவியெல்லாம்
என்ன பின்னுது?

ஆண் : அது வாழ்க்கைதனை உணர்ந்துக்கிட்டு
மனசும்மனசும் கலந்துக்கிட்டு
மூக்கினாலே கொத்திக்கொத்தி
கூடு பின்னுது!

இருவர் : இத்தனையும் நம்மைப் போல
இன்பம் தேடுது _ இதை
எண்ணும்போது நமதுமனம்
எங்கோ போகுது!

116. அன்பு அரும்பாகி
அன்பு அரும்பாகி ஆசை மலராகி
இன்பம் கனியாகி எதிர்பார்க்கும் வேளையிலே
பண்பே என்வாழ்வில் பங்குகொண்ட மாமணியே _ உங்கள்
செம்பவழ வாய்திறந்து தேவையென்றால் என்னஅது? அத்தான்!
தேன் வேண்டுமா? _ இல்லை நான் வேண்டுமா?
தேடிவந்த யோகமே தென்றலே என் இன்பமே! (தேன்…

நாணம்உண்டு வீரம்உண்டு நல்லகுறள் பாடம்உண்டு
கானம்பாடும் ஞானம்உண்டு அதுவேண்டுமா? _ இல்லை
காதல்முத்தம் உண்டு அது வேண்டுமா? (தேன்…

காதில்வந்து பேசிடவா? கண்மலரை வீசிடவா?
கைகலந்த சந்தனம்உண்டு மெய்மறந்து பூசிடவா?
காதல்ரோஜா தந்து ஆனந்தம் கொண்டு ஆடிடவா…? (தேன்…

பொன் விளையும் பூமி

117. கன்னியூர் சாலையிலே
பெண் : கன்னியூர் சாலையிலே _ பொண்ணு
களைபறிக்கப் போகையிலே _ அந்த
சின்னமச்சான் சிவத்தக் கண்ணு _ அவ
பின்னால எதுக்கு வந்தான்?

ஆண் : எதுக்கு வந்தான்?
சொல்லாமத்தான் புரிஞ்சுக்கலாமே
ஒரு ஜாடையிலே
உள்ளம் ரெண்டும் ஒன்னாச்சி _ புது
உல்லாசந்தான் கண்டாச்சு (சொல்…

பெண் : சும்மா கிடந்த முல்லைக் கொடி
துள்ளி எதுக்கு வாடுது?

ஆண் : அது சுத்திப்படரக் கொம்பைத் தேடி
துடிச்சுத் துடிச்சு வாடுது

பெண் : தூங்காமே சிட்டு ரெண்டும்
தொடர்ந்து என்ன பேசுது?

ஆண் : அது ஜோடியான மகிழ்ச்சியிலே
சொந்தக் கதையப் பேசுது
சொதந்திரமாக் கூடுகட்டி
ஒருமனமா வாழுது

பெண் : அந்த நிலையும், இந்த நிலையும்

இருவர் : நொந்த நிலையைக் கிளறுது

பெண் : பொல்லாத ஆடு ஒண்ணு
உள்ளே என்ன பாக்குது?

ஆண் : புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும்
பொருத்தமான்னு பாக்குது

பெண் : பூங்குயிலும் யாருக்காக
ஏங்கி ஏங்கிக் கூவுது?

ஆண் : ஆண்குயிலைக் காணாமல்தான்
அவசரமாக் கூவுது
அன்புமீறி மயக்கத்திலே
அங்குமிங்கும் பாயுது

பெண் : அந்த நிலையும்…

ஆண் : இந்த நிலையும்…

இருவர் : சொந்த நிலையைக் கிளறுது

புதுமைப் பெண்

118. ஆம்பளைக் கூட்டம்
ஆம்பளைக் கூட்டம் ஆடுற ஆட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் _ அதை
ஆரம்பிசசாத் தெரியும் திண்டாட்டம் (ஆம்பளை…

அடங்கிக் கிடக்கிறதும் பணிஞ்சி நடக்கிறதும்
ஆக்கறதும் காக்கறதும் நாங்க _ உண்
டாக்கிறதும் காக்கிறதும் நாங்க _ அதை
அடிச்சிப் பறிக்கிறதும், அடுத்துக் கெடுக்கிறதும்
அட்டகாசம் பண்ணுறதும் நீங்க (ஆம்பளை…

ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
யாரோ எழுதி வைச்சாங்க _ அன்று
யாரோ எழுதி வைச்சாங்க _ அதை
அமுக்கிப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேன்னு
ஆண்கள் ஒசந்துக்கிட்டாங்க _ பெண்கள்
ஆமைபோல ஒடுங்கிப் போனாங்க (ஆம்பளை…

மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு _ இளம்
மங்கையை முடிப்பதுண்டு, மண்டைவரண்டு _ தன்
கணவனை இழந்தவள் கட்டழகி யானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு _ இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு (ஆம்பளை…

கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்
கச்சிதமாத் திட்டுவாங்க _ அதை
அச்சடிச்சும் காட்டுவாங்க _ சொன்ன
கருத்துக்கு மாறாக் கற்பைக் களவாடக்
கன்னக் கோலைத் தீட்டுவாங்க _ அவுங்க
கணக்கைப் புரட்டிப் பாருங்க… என்னங்க (ஆம்பளை…

119. நீதியின் வெற்றியடா
பொங்காத பெருங்கடல் பொங்கிவந்தது போல்
பொங்குது உள்ளமெல்லாம் அன்பில் முழக்குதடா
போகாத துன்பமெல்லாம் போனதே என்றும்
தீராத சண்டைகளும் தீர்ந்த தடா

உரிமைநிலைத்ததடா உண்மை பிழைத்ததடா
உழைப்பவன் கேள்வியை உலகம் மதித்ததடா!
நீதியின் வெற்றியடா சேரியின் வெற்றி _ அதை
நிரந்தர மாக்குதுபார் பொதுஜன சக்தி (நீதி…

ஜாதிகள் பேசி நம்மைத் தள்ளிவச்சி வாழ்ந்தவங்க
சாக்கடைப் பூச்சிகளாய் ஏழைகளை நினைச்சவங்க
தனக்கே ஊர்முழுவதும் சொந்தமென்று வளைச்சவங்க
சட்டங்கள் மாறிவரும் நேரம் என்ன ஆனாங்க? _ எல்லாம்
சரிசமமாய்ப் போனாங்க (நீதி…

பகலும் இரவும் மாடாய் உழைத்து
பட்டினி கிடந்து ஓடாய் இளைத்து
பயந்து பயந்து காலங் கழித்து
நலிந்த எளியோரை வலியவர் பார்த்து
போன ஜென்மத்தின் வினை யென்றும்
விதியென்றும் சொல்லி வச்சாங்க _ அவங்க
பொளச்சிக் கிட்டாங்க _ அதைப்
புரிஞ்ச மக்களும் நல்ல சமயத்தில்
முளிச்சிக் கிட்டாங்க _ ஆமா முளிச்சிக் கிட்டாங்க (நத…

கொத்தும் பணக்கழுகு கொள்ளைப் பெருச்சாளி
எத்திப் பிழைக்கவே சுத்தும் நரிக்கூட்டம்
ரத்தவெறி கொண்டலையும் யுத்தப்பெரும் முதலை
பித்தம் பிடித்தலையும் பேதக் குரங்குகள்
திட்டம் உடைந்ததும் சித்தம் தெளிந்தது
தேசத்தில் மாசற்ற தீபம் பிறந்தது
ஒற்றுமை மக்களின் ஒற்றுமை வந்தது
உலகம் விடிந்தது, கலகம் ஒழிந்தது
சோர்ந்த கைகள் உயர்ந்தது (நீதி…

கலைவாணன்

120. சவால் சவாலென்று
காசி : சவால் சவாலென்று
சதிராடும் பெண்ணாளே _ நெஞ்சில்
தன்மானத் துணிவிருந்தால் தாண்டிவா, முன்னாலே!

ஹரி : அடி சக்கேன்னானாம்!
வாய்யா வா! பொண்ணு, ஆவட்டும்

மாலா : பார்த்தாலே கண்ணடிமை _ என்
பக்கம் வந்தால் நெஞ்சடிமை _ என்னைப்
போட்டியிலே வென்றவர்கள் _ இந்தப்
புவிதனிலே யாருமில்லை _ அய்யா!
சரியாத் தெரிஞ்சா சவால் விடு!
சரக்கு இல்லாட்டா சலாம் கொடு! _ இங்கே
சரக்கு இல்லாட்டா சலாம் கொடு!

ஹரி : இந்தாய்யா முதல்லே நீ போடு கேள்வியை
பதிலை பிச்சுப்பிச்சு வைக்கிறோம்

காசி : காடும் வளமுடைய நாடும் _ பல
காத தூரமும் கடந்து ஓடும்,
வளைந்து கலைந்து
பிரிந்து பின்னும் கூடும்
நினைத்தபடி கண்டபக்கம்
சுற்றிவரும் _ அது என்ன?

ஹரி : இவ்வளவுதானா நாயி!

சிவன் : சும்மா இருடா, முந்திரிக்கொட்டை!

மாலா : மேட்டிலே நிற்காது வேற்றுமை பார்க்காது
காட்டுப் பயிர்களதைக் காணாவிட்டால் வாழாது
நாடெல்லாம் சுற்றி வரும் நன்மைதரும் அதன்பேரு
நதியய்யா எந்தன் பதிலய்யா

ஒருவன் : காட்டம்மா உன் கைவரிசையை

மாலா : ஆளைக்கண்டு மருண்டோடும் மானுமில்லே _ ரொம்ப
ஆழத்திலே நீந்திவரும் மீனுமில்லை
அங்கமெல்லாம் பாய்ந்துவிடும் அம்புமில்லை _ மலரில்
அல்லும் பகலும் வட்டமிடும் வண்டுமில்லை

சிவன் : என்ன சாமி அது?

ஹரி : முழிக்கிறியே இப்போ ஒத்துக்கிறியா?

காசி : தூர இருந்து கொண்டே
தொடாமல் திருடுவதும்,
சுற்றிவிட்ட பம்பரம்போல
சுழன்றுவட்டம் போடுவதும்,
வீரர்களும் மயங்க மோகவலை வீசுவதும் _ காதல்
விளையாடுவதும் கண்களம்மா!

சிவன் : கண்கள்

ஹரி : கண்கள்… சொல்லிப்புட்டாரே

காசி : ஏனம்மா! நான் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்?

ஹரி : ஓ!

காசி : பாமபுத் தலையில் தகதகதிமி
பார்த்தன் தேரில் ஜகண ஜண ஜண
பானை கடகட, உரலும் தட தட
பார்வை திருதிரு மேனி கருகரு
பொருளும் என்ன?… உன் பதிலும் என்ன?

மாலா : பாம்புத் தலையில் நடனமாடி
பார்த்தன் தேரில் சங்கு முழக்கி,
பானை உடைய வெண்ணெய் திருடி
உரலிலே கட்டுண்டு கிடந்தவன்
கமலக் கண்ணன்! கார்மேக வண்ணன்!

காசி : விபரமறியாத கன்னிப் பொண்ணுக்கு
வெட்கம் வருவது எப்போது?

குழு : அது எப்போது?

மாலா : விளையாட்டாய் அவள் திருமணம் பற்றி
உரிய தோழிகள் பேசும்போது

காசி : ஓயாமல் பேசும் மங்கையர் கூட
ஊமையாவது எப்போது?

குழு : எப்போது?

மாலா : காயாத வண்ணக் கமலக் கையை
காதலன் வந்து தொடும்போது

காசி : தகதகவெனக் கண்ணைப் பறிக்கும்
தண்ணீர்பட்ட உடனே கருக்கும்
சகலபேருக்கும் பொதுவாயிருக்கும்
சாதிவேற்றுமை தன்னைஒழிக்கும்
சடசடவெனத் தாவியணைக்கும்
சருகைப்பிடித்து உணவாப்புசிக்கும் அது என்ன?
சொல்லட்டுமா? நானே சொல்லட்டுமா?
தகதகவென கண்ணைப் பறிப்பதும்
தண்ணீர் பட்ட உடனே கறுப்பதும்
சருகை விறகை உணவாகப் புசிப்பதும்
அனலம்மா… நீ உணரம்மா!

கண் திறந்தது

121. இருக்கும் பொழுதை
ஒருகுறையும் செய்யாமே
ஒலகத்திலே யாருமில்லே _ அப்படி
உத்தமனாய் வாழந்தவனை _ இந்த ஒலகம்
ஒதைக்காம விட்டதில்லை…
இருக்கும் பொழுதை ரசிக்கணும் _ அட
இன்பமாகக் கழிக்கணும்
எதிலும் துணிஞ்சு இறங்கணும் _ நீ
ஏங்கி எதுக்குத் துடிக்கணும்? (இருக்…

நாளை நாளை என்று பொன்னான
நாளைக் கெடுப்பவன் குருடன்
நடந்து போனதை நெனச்சு ஒடம்பு
நலிஞ்சு போறவன் மடையன் _ சுத்த மடையன்
நம்மைப்போல கெடச்சதைத் தின்னு
நெனச்சதைச் செய்யிறவன் மனுஷன் (இருக்…

ஆடி ஓடிப் பொருளைத் தேடி…
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்…
அதிலே இதிலே பணத்தைச் சேத்து
வெளியிடப் பயந்து மறச்சு வைப்பான்;
அண்ணன் தம்பி பொண்டாட்டி புள்ளை
ஆருக்கும் சொல்லாமப் பொதச்சு வைப்பான்;
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான் _ ஆமா
பொதச்சு வைப்பான் (இருக்…

நல்ல வழியிலே வாழ நெனச்சு
நாயா அலையாதே _ அது இந்த நாளில் முடியாதே
நரியைப் போலே எலியைப் போலே
நடக்கத் தெரிஞ்சுக்கணும் _ தம்பி
உடம்பு அழுக்கு; உடையும் அழுக்கு!
உள்ளம் அழுக்குங்க _ அதுலேதான் உலகம் கிடக்குங்கு _ இது
உமக்கும் எமக்கும் கழுதைக்கும் தெரியும்
ஒண்ணும் சுத்தமில்லை _ உள்ளதைச்
சொன்னாக் குத்தமில்லை… (இருக்…

122. மனுசனைப் பாத்திட்டு
மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராஜா _ எம்
மனசிலே பட்டதை வெளியிலே சொல்றேன்
வந்ததுவரட்டும் போடா… சில (மனு…

உள்ளதைச் சொன்னா ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா _ ராஜா ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா _ இது உல்லாச புரிதாண்டா… (மனு…

வசதியிருக்கிறவன் தரமாட்டான் _ அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான் (வசதி…

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனு…

பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா _ நான்

ஒரு சிறுவன் :அங்கே நானும் வாரேண்டா _ வெளியே
படிக்க வேண்டியது நெறய இருக்குப்
படிச்சிட்டு வாரேண்டா _ சிலர்
படிக்க மறந்தது நெறய இருக்குப்
படிச்சிட்டு வாரேண்டா… (மனு…

எழுதிப் படிச்சு அறியாதவன் தான்
உழுது ஔச்சுச் சோறு போடுறான்…
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுறான் _ இவன்
சோறு போடுறான் _ அவன் கூறு போடுறான்

நல்ல தீர்ப்பு

123. அது இருந்தா இது இல்லை
அது இருந்தா இது இல்லை
எல்லோரும் நம்பும்படி சொல்லும் திறனிருந்தால்
சொல்லிலே உண்மை இல்லை
உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம்
உணர்த்திடும் திறமையில்லை
உண்மையும் நம்பவைக்கும் திறனும் அமைந்திருந்தால்
உலகம் அதை ஏற்பதில்லை

அது இருந்தால் இது இல்லை
இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்
அவனுக்கிங்கே இடமில்லை (அது இரு..

அங்கமதில் மங்கையர்க்கு அழகிருந்தால் அறிவில்லை
ஆராய்ந்து முடிவுசெய்யும் அறிவிருந்தால் அழகில்லை
அழகும்அறிவும் அமைந்தபெண்கள் அதிசமாய்ப் பிறந்தாலும்
குறுகும்மனம் கொண்டவர்கள் குலைக்காமல் விடுவதில்லை (அது இரு..

பள்ளிசெல்லும் மாணவர்க்குப் படிப்புவந்தால் பணமில்லை
பணமிருந்தால் இளைஞருக்குப் படிப்பதிலே மனமில்லை;
மனமிருந்து படிப்பும்வந்து பரீட்சையிலும் தேறிவிட்டால்
பலபடிகள் ஏறி இறங்கிப் பார்த்தாலும் வேலையில்லை. (அது இரு..

பொதுப்பணியில் செலவழிக்க நினைக்கும்போது பொருளில்லை
பொருளும்புகழும் சேர்ந்தபின்னே பொதுப்பணியில் நினைவில்லை
போதுமான பொருளும்வந்து பொதுப்பணியில் நினைவும்வந்தால்
போட்டதிட்டம் நிறைவேறக் கூட்டாளிகள் சரியில்லை (அது இரு..

பாண்டித்தேவன்

124. சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் செய்யுறதைச் செஞ்சிடுங்க
நல்லதுன்னாக் கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க
முன்னாலே வந்தவங்க என்னனென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க
ஒண்ணுமே நடக்காம உள்ளம்நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க (சொல்லு…

முடியிருந்தும் மொட்டைகளாய் மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய் விழுந்துகிடக்கப் போறீங்களா?
முறையைத் தெரிஞ்நடந்து பழைய நினைப்பை மறந்து
உலகம்போற பாதையிலே உள்ளம்தெளிஞ்சு வாரீங்களா?

சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க? (சொல்லு…

125. வம்புமொழி மாறிமாறி
வம்புமொழி மாறிமாறி அன்புமொழி யானதே
இன்பவழி நாடும்வழி என்னை மீறுதே! (வம்பு…

மடைதாண்டும் மீனைப்போல மனம்தாண்டி ஓடுதே… ஆ
மழைகண்ட பயிர்போல மகிழ்ச்சி கொண்டாடுதே
இளந்தென்றல் வீசுதே என்னென்னமோ பேசுதே
என்மேல் மணம்தன்னைப் பூசிடுதே… ஆ… ஆ…
அன்புக்கடல் ஓரத்திலே ஆசை அலை மோதுதே
இன்பத்திலும் இன்பம்வந்து என்னை மீறுதே (வம்பு…

வீம்புசெய்த பேதமெல்லாம் கூன்விழுந்து போகுதே
பாம்பிருந்த காட்டில்இன்று மான்புகுந்து ஆடுதே
பகைக்குரல் மாறுதே! பண்புக்குரல் பாடுதே! _ புதுப்
பாடங்கள் கூறிடுதே!… ஆ… ஆ…
மூடிவைத்த உண்மையெல்லாம் நேரில் வெளியானதே!
நீதியிடம் நேர்மை வந்து நேசமானதே!

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

posted by admin in Uncategorized and have No Comments

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment