Pattukkottaiyaar

திரைப்பாடல்-8

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

176. துணிந்தால் துன்பமில்லை
துணிந்தால் துன்பமில்லை
சோர்ந்துவிட்டால் இன்பமில்லை! (துணி…

இனிமை கலந்துவரும் பாட்டாலே _ மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே! (துணி…

கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்பப் பறவையுண்டு பாரிலே!
துடிக்கும் இதயங்களே தாளம் _ காற்றில்
மிதக்கும் ஓசையெல்லாம் கானம் (துணி…

ஆராரோ வென்று அன்னை பாடக் கண்டு
அமைதியிலே குழந்தை தூங்குவது முண்டு
வாடிடும் முல்லை ரீங்கார வண்டு
வருவது கண்டு மனம்பொங்கும் மது சிந்தும்
பகமை நீங்கிவிடும் பாட்டாலே _ பெரும்
பசியும் தீர்ந்துவிடும் கேட்டாலே! (துணி…

இரும்புத்திரை

177.மனிதரை மனிதர்
மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்
மதிப்பது நம்கடமை,
வள்ளுவப் பெருமான் சொல்லிய வழியில்
வாழ்வது அறிவுடைமை,

உழைப்பை மதித்து பலனைக் கொடுத்து
உலகில்போரைத் தடுத்திடுவோம்,
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள்விளக் கேற்றிடுவோம்

178. நெஞ்சில் குடியிருக்கும்
பெண் : நெஞ்சில் குடியிருக்கும்
அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா? _ என்
நினைவைப் புரிந்துகொள்ள முடியுமா?

ஆண் : கண்ணில் குடியிருக்கும்
காதலிக்கும் நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா? _ என்
கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமா?

பெண் : என்றும்பேசாத தென்றல்
இன்றுமட்டும் காதில்வந்து
இன்பம் இன்பம்என்று சொல்வதும் என்ன?

ஆண் : ஓரவிழிப் பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாததுபோல் கேட்பதுமேனோ?

பெண் : மலர்க்கொடி தலையாட்ட,
மரக்கிளையும் கைநீட்டக்
கிளையில்கொடி இணையும்படி ஆனதுமேனோ?

ஆண் : இயற்கையின் வளர்ச்சிமுறை
இளமைசெய்யும் கிளர்ச்சி முறை
ஏனென்று நீகேட்டால் யானறிவேனோ?

179. கையிலே வாங்கினேன்
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…

180. ஆசைகொண்ட நெஞ்சிரண்டு
ஆசைகொண்ட நெஞ்சிரண்டு பேசுகின்றபோது
ஆடாத சிலைகளும் ஆடாதோ?
ஆனந்த கீதங்கள் பாடாதோ?
ஆடலுக்கும் பாடலுக்கும் ஊதும்குழல் யாழினுக்கும்
ஆதாரமானது கானம்
ஊடலுக்கும் காதலுக்கும் உண்மைஅன்புக் கூடலுக்கும்
உகந்ததுவாலிப காலம்

வண்டுலாவும் மலர்ச் சோலையிலே _ தென்றல்
வந்துலாவுகின்ற வேளையிலே _ காளைக்
கன்றுபோல் உருவம் கொண்ட ஆள்ஒருவன்
நின்றுபோட்ட ஒரு பார்வையிலே _ என்னைக்
கொன்று விட்டானடி மாமயிலே!

இதையும் அதையும்கண்டு மதியும்மயக்கங் கொண்டு
இதயக்கதவை வந்து தட்டுதே _ எண்ணம்
இமயச்சிகரம் தன்னை எட்டுதே!
அதிகத் துணிவுகொண்டு ஆசை கரைபுரண்டு
அதிரத் தலைசுழன்று சுற்றுதே _ நிலவு
அனலை வாரிக் கொட்டுதே!

181. நன்றிகெட்ட மனிதருக்கு
நன்றிகெட்ட மனிதருக்கு அஞ்சிநிற்க மாட்டோம்
நாவினிக்கப் பொய்யுரைக்கும் பேரைநம்ப மாட்டோம்
என்று கூறுவோமடா _ ஒன்று சேருவோமடா
வீறுகொண்டு சிங்கம்போல் முன்ஏறு வோமடா!

எளிய மக்கள் தலையில்காசு ஏறி மிதிக்குது _ அதை
எண்ணிஎண்ணித் தொழிலாளர் நெஞ்சு கொதிக்குது
வஞ்சனைக்கும் அஞ்சிடோம் வஞ்சனைக்கும் அஞ்சிடோம்
பஞ்சம்நோய்க்கும் அஞ்சிடோம் பட்டினிக்கும் அஞ்சிடோம்
நெஞ்சினைப் பிளந்தபோதும் நீதிகேட்க அஞ்சிடோம்
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம்

காலி என்றும் கூலி என்றும் கேலி செய்யுங் கூட்டமே
காத்துமாறி அடிக்குது _ நீர் எடுக்கவேணும் ஓட்டமே
தாலிகட்டிக்கொண்ட மனைவி போலுழைத்த எங்களைத்
தவிக்கவிட்ட பேரை எந்தநாளும் மறக்க மாட்டோமே!

மஹாலட்சுமி

182. வேல் வெல்லுமா?
வேல் வெல்லுமா? _ என்விழி வெல்லுமா?
வேல்வந்து விழிபோலக் கதை சொல்லுமா? (வேல்…

கதை சொல்லுமா? _ வாழும் வகை சொல்லுமா?
கடல்போல எழுந்தின்பக் கரை துள்ளுமா? (வேல்…

கோழைக்கும் வீரத்தைக் கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய் இருப்பவள் மங்கை
வாழ்வினில் மோகத்தை வளர்ப்பவள் மங்கை _ ஆண்
மனதில் வீடுகட்டி வசிப்பவள் மங்கை
மங்கைஎன் பார்வையில் மலையசையும் _ பகை
வாளும் ஈட்டியும் என்ன செய்யும்? (வேல்…

கண்ணகிபோல் நாளைக் கழிக்கவும் தெரியும்
காதலை மாதவிபோல் ரசிக்கவும் தெரியும்
மன்னனைச் சகுந்தலைபோல் மதிக்கவும் முடியும்
மணிமேகலை போல் வெறுக்கவும் முடியும்! (வேல்…

வீரக்கனல்

183. போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
பெண் : போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும் _ ஒலகம்
புதுசா மாறும்போது பழைய
மொறையை மாத்திக்கணும்

ஆண் : போட்டுக்கிட்டா _ ஆமா
போட்டுக்கிட்டா _ தாலி (போட்டுக்…

பெண் : போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்,
புடிக்குதான்னு கேட்டுக்கணும்

ஆண் : புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும் (போட்டுக்…

பெண் : கழுத்திலே தாலி கெடந்தா
காலிகூட மதிப்பான் _ கொஞ்சம்
கண்ணியமா நடப்பான் _ இந்தக்
கயிறு மட்டும் இல்லையின்னா
கழுதைபோல இடிப்பான்

ஆண் : ஆம்புளைக்கும் தாலி கெடந்தா
அடுத்த பொண்ணு மதிப்பா _ கொஞ்சம்
அடங்கி ஒடுங்கி நடப்பா _ இந்த
அடையாளம் இல்லையின்னா
அசட்டுத்தனமா மொறைப்பா (போட்டுக்…

இதுலே மட்டும் போடுற முடிச்சே
இறுக்கிப் போட்டுக்கணும் _ நல்லா
இழுத்துப் பாத்துக்கணும் _ அது (இதுலே…

பெண் : எடையிலே பிரிங்சுக்காமே
முறுக்கிப் போட்டுக்கணும்

ஆண் : அதுலே ஒண்ணும் கொறைச்சலில்லே
அழுத்திப் போட்டிருக்கு _ உண்மை
அன்பு ஆசை ரெண்டும் சேத்து
முறுக்கிப் போட்டிருக்கு _ மூணு
முடிச்சாப் போட்டிருக்கு (போட்டுக்…

பெண் : பொறப்பு வளர்ப்புச் சட்டம்

ஆண் : நாம _ சேந்து போட்டுக்கணும்

பெண் : பொழப்பு இருப்பு நோட்டம்

ஆண் : அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்

பெண் : அட _ வரவு செலவுத் திட்டம்

ஆண் : ஒண்ணாச் சேந்து போட்டுக்கணும்

பெண் : நம்ம வழக்கமான ஆட்டம்

ஆண் : ஹா… ஹ… ஹ… (போட்டுக்…

திருடாதே

184. திருடாதே! பாப்பா
திருடாதே! பாப்பா திருடாதே!
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே!
திறமை இருக்கு மறந்துவிடாதே! (திருடா…

சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாத்து _ தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா _ அது
திரும்பவும் வராமப் பார்த்துக்கோ (திருடா…

திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது _ அதைச்
சட்டம்போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது (திருடா…

கொடுக்கிற காலம் நெருங்குவதால் _ இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது _ மனம்
கீழும் மேலும் புரளாது! (திருடா…

குமாரராஜா

185. மணமகளாகவரும்
மணமகளாகவரும் மங்கை எவளோ? _ என்
மருமகளாயிருக்கத் தகுந்தவளோ? (மணம…

குணமகளாய் விளங்கும் குலமகேளா? _ இனிய
குரலும் மொழியும் கொண்ட கலைமகளோ? (மணம…

மஞ்சள்குங்குமம் அணியும் வழக்குமுண்டோ? _ நல்ல
மனைவிக்குத் தேவையுள்ள அடக்குமுண்டோ? நெஞ்சில்
இரக்கம் உண்டோ? நேர்மை யுண்டோ? அவள்
நேசனுக்கதிக யோசனைபுகலும் நிலைக்கு நடக்கும்
இணக்கம் உடையவளோ? (மணம…

பொறுக்கி எடுத்த முத்துக் கருத்தைத்
தொகுத்துவைத்த திருக்குறள்
முப்பாலும் படிப்பவளோ?… ஆ… கனல்
தெறிக்கக் கொதித்த மணிச் சிலம்பையுடைத்து நீதி
தெரிவித்த கண்ணகியைத் துதிப்பவளோ?… ஆ
அன்புக் கணை தொடுத்துத் துன்பத்தினை விரட்டும்
ஆற்றல் மிகுந்தவளோ?… இசை (குரலும்…

186. மங்கையரின்றித் தனியாக
பெண் : மங்கையரின்றித் தனியாக
வந்தவர் கிடையாது

பெண்கள் : தந்ததும் பெண்ணையா
கொண்டதும் பெண்ணையா
சந்தேகம் என்னையா?
சம்மதம் என்ற மொழி கேட்டாலே

பெண் : சஞ்சலம் தீர்ந்துவிடும் கூட்டாலே

பெண்கள் : சந்திப்பு ஓயாது

பெண் : சிந்திக்கத் தோணாது

பெண்கள் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா

பெண் : சிந்தனைக் காரரோ, யோகியோ
செய்வதேதும் அறியாத ஞானியா?
காதல் உறவினில்

பெண்கள் : பேதமில்லை

பெண் : பாசம் இணைந்தபின்

பெண்கள் : பாவமில்லை

பெண் : சந்திப்பு ஓயாது

பெண்கள் : சிந்திக்கத் தோணாது

பெண் : சந்தோஷம் நாடாத ஆளேதய்யா (மங்கை…)

187. நான் வந்து சேர்ந்த இடம்
நான் வந்து சேர்ந்த இடம் நல்லயிடந்தான் _ இதை
நம்பவைக்கும் பொறுப்பு அன்பினிடந்தான் (நான்…

ஏனென்று தோன்றவில்லை எதிர்பார்த்து வந்ததில்லை
இல்லாத அதிசயந்தான் இதுஒரு ரகசியந்தான் (நான்…

அருமையுடன் வளர்த்து அறிவுள்ள பெண்ணாக
ஆக்கித்தரும் பொறுப்பு அன்னையிடந்தான் _ குலப்
பெருமைதனைக் காத்து பெற்றவர் மனம் நாடும்
பேரைப் பெறும் பொறுப்பு பெண்டந்தான் (நான்…

எனக்கும் புரியாமல் அவர்க்கும் புரியாமல்
இடையில் துணிவுவந்த விந்தை யாலே
எப்படியாகு மென்றும் எங்குபோய் நிற்குமென்றும்
எண்ணவும் முடியவில்லை சிந்தையாலே _ இன்று (நான்…

188. ஏட்டில் படித்ததோடு
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே! _ நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே (ஏட்டி…

நாட்டின் நெறிதவறி நடந்துவிடாதே _ நம் (நாட்டி…

நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்துவிடாதே! _ நீ (ஏட்டி…

மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது _ பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது _ தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது _ நீ (ஏட்டி…

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிடவேணும்
சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிடவேணும் _ அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும் (ஏட்டி…

வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும், நீபிறந்தமண்ணன் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும்! _ நீ (ஏட்டி…

189. என்னைப் பார்த்த கண்ணு
பெண் : என்னைப் பார்த்த கண்ணு வேறு
பெண்ணைப் பார்க்குமோ?
எண்ணம் கலந்த பின்னே இனி
சொன்னாலும் கேட்குமோ? (என்னை…

பின்னிக் கிடக்கும் முல்லைக் கொடியைப்
பிரிக்க முடியுமா? _ அன்பைப் பிரிக்க முடியுமா?
கண்ணும்கண்ணும் கட்டினகூட்டைக் கலைக்க முடியுமா?
பனியைநம்பி வெதைவெதைச்சாப் பலன் விளையாது

பருவமழை நானிருந்தால் பழுது வராது _ அத்தான்
வழியில்பார்த்துச் சிரிச்சதெல்லாம் மனைவி யாகுமா?
மலையைப் போல் வளர்ந்த காதல்
மறந்து போகுமா? _ சொன்ன வார்த்தை மாறுமா?

ஆண் : உன்னை நினைக்க நினைக்கக் கண்கள் மலருது
காணும் நினைவுமீறி உள்ளம் மயங்குது
உன்னைப் பார்த்தக் கண்ணு _ வேறு
பெண்ணைப் பார்க்குமா?
உள்ளம் கலந்த பின்னே _ இனி
சொன்னாலும் கேட்குமா? (உன்னை…

புனர்ஜென்மம்

190. உள்ளங்கள் ஒன்றாகித்
பெண் : உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே
கொள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே (உன்ன…

ஆண் : எல்லை மீறும் அன்பே செல்வம் ஆகுமே
இளமை நேசமே மண்மேல் சுகமே! (எல்லை…

பெண் : சிந்தும் செந்தேனும் சொல்லில் ஊறுமே
தென்றல் வீசியே நன்றி கூறுமே (உன்ள…
கொஞ்சும் சோலைக் குருவி சொந்தம் பேசுமே
குறை வில்லாமலே எல்லாம் தருமே (கொஞ்சும்…

ஆண் : பொங்கும்நீரோடை சந்தம் பாடவே
கண்கள் ஆடுமே காதல் நாடகம்! (உள்ள…

191. இது காலத்தின் செயல்தானா?
கண்ணாடிப் பாத்திரத்தில்
கல்லெறிபட்டது போல் _ என்
எண்ணமெனும் தேன்கலசம்
உண்ணாமல் உடைந்திடுமோ? _ இன்பக்
காவியம் பொய்தானா? _ கொண்ட
காதலும் பொய்தானா? _ என்
ஆசைகள் வீண்தானா? _ இனி
அமைதியும் காண்பேனா? (இன்ப…

இது காலத்தின் செயல்தானா? _ சுகம்
கானல் நீர்தானா?
மன நம்பிக்கை வீண்தானா? _ நான்
வெம்பிய காய்தானா? (இன்ப…

இருள் மூடிய வான்போலே
கரை ஏறிய மீன்போலே
துயர்மீறிடும் நிலையாலே
படும்வேதனை தீராதோ? _ ஒரு
பாதையும் தோணாதோ? (இன்ப…

192. என்றும் துன்பமில்லை
என்றும் துன்பமில்லை, இனிச் சோகமில்லை
பெறும் இன்பநிலை, வெகு தூரமில்லை
இனி வஞ்சமும் பஞ்சமு மில்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைக ளில்லை

கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலையில்லை
எங்கள் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை
என்றும் துன்பமில்லை இனிச் சோகமில்லை
நம் வாழ்வினில் துயர்வரப் பாதையில்லை (என்றும்…

அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக்குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக்குரல் (என்றும்…

இங்கு சொல்வதும் செய்வதும் மோசம்
வந்து சூழ்ந்திடும் நேசமும் வேஷம் (இங்கு…
இனி செல்கின்ற தேசத்தில் பேதமில்லை
கொடுமை தீமை பொறாமை விரோதமில்லை (என்றும்…

193. உருண்டோடும் நாளில்
உருண்டோடும் நாளில் கரைந்தோடும் வாழ்வில்
ஒளி வேண்டுமா? இருள் வேண்டுமா? (உருண்…

திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
இது போதுமா? இன்னும் வேண்டுமா? (உருண்…

விரும்பாத போதும் விருந்தாக மேவும்
குணம் வேண்டுமா? விஷம் வேண்டுமா? (உருண்…

எதையும் தாங்கும் இதயம்

194. கனியிருக்கு விருந்த வைக்க
கனியிருக்கு விருந்த வைக்க
காடிருக்குக் கூடு கட்ட
கலந்துபேச நானிருக்கேன் வாங்க _ சும்மா
காத்திருக்க நேரமில்லே வந்திடுங்க (கனி…

சின்னஞ்சிறு சிட்டுகளே! சிங்காரப் பறவைகளே!
தெம்மாங்குக் குயில்களே! சிவந்த மூக்குக் கிளிகளே!
தேனெடுக்கும் வண்டுகளே ஓடிவாங்க _ நான்
சேதியொண்ணு சொல்லப்போறேன் சீக்கிரம் வந்திடுங்க (கனி…

ஓங்கிவளரும் மூங்கில்மரம்
ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு
ஒழுங்காகக் குருத்துவிட்டு
கெளைகெளையா வெடிச்சிருக்கு
ஒட்டாமெ ஒதுங்கிநின்னா ஒயர முடியுமா? _ எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா? (கனி…

விக்ரமாதித்தன்

195. மொகத்தைப் பார்த்து
மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க _ சும்மா
மொகத்தைப் பார்த்து முறைக்காதீங்க _ பல்லை
மூடிக்கிட்டுச் சிரிக்காதீங்க (மொகத்…

பொண்ணிருக்கும் வீட்டுக்குள்ளே புகுந்திருக்கும் மாப்பிளே,
போட்டியிலே ஜெயிச்சநீங்க புதுமையான ஆம்பளே!
என்னத்தான் புடிச்சிருக்கா இல்லையான்னு மனசிலே
இருக்கும் ரகசியத்தை இழுத்துப்போடுங்க வெளியிலே

முன்னும்பின்னும் பழக்கம் வேணுங்க _ இங்கே வர்ரதுன்னா
முறையிலேதும் நெருக்கம் வேணுங்க _ எண்ணத்தில்
பொருத்தம் வேணுங்க _ அது இல்லேன்னா
இரண்டு பக்கமும் இன்பம் ஏதுங்க?
அன்னம்போல நடக்குமுங்க ஆளைக்கண்டா பறக்குமுங்க
என்னமோன்னு நினைக்காதீங்க _ நான்
சொல்லிப்புட்டேன்… (மொகத்…

196. பாடுபட்டுக் காத்த நாடு
பாடுபட்டுக் காத்த நாடு கெட்டுப் போகுது
கேடு கெட்ட கும்பலாலே _ இங்க
கேடுகேட்ட கும்பலாலே… (பாடு…

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே _ பெரும் (சூடு…

வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே
வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே _ இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே நாம்… (பாடு…

கலைஅரசி

197. என்றும் இல்லாமல்
என்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல்
இன்பம் உண்டாவதேனோ?
எண்ணங்கள் பண்பாடுது
கண்களும் எங்கோ வழிதேடுது _ எது
வேண்டியோ வாடுது ஆடுது

மனம் என்னோடும் நில்லாமல்
முன்னால் ஓடுது _ என்
வீசும் தென்றல் காதோடு
பேசிடும் பாஷை நானறியேனே
வெறும் போதையோ? ஆசையோ? மாயமோ? _ இது
விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ? (என்றும்…

198. நினைக்கும்போது நெஞ்சம்
நினைக்கும்போது நெஞ்சம் கண்ணும் துடிப்பது ஏனோ?
நிறைந்த உறவில் கனிந்த காதல் நிலையிது தானோ?
அணையை மீறும் ஆசை வெள்ளம் அறிவை மீறுதே
அதையும்மீறி பருவகாலம் துணையைத் தேடுதே!… (நினை…

சுவரில்லாத வீடுகளில் உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை அன்பு சாட்சியே!
உனக்குநானும் எனக்குநீயும் உரிமைத் தேனென்று
கணக்கில்லாத கதைகள்பேசிக் கலந்ததை இன்று… (நினை…

199. அதிசயம் பார்த்தேன்
தஞ்சமென்று வந்தவரைத் தாய்போல் ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு வாள்முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடங்கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையைச் சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே _ அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே _ நான் (அதிசயம்…

மூணு பக்கமும் கடல் தாலாட்டுது _ தன்
மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது _ பல
வளம்பெருகி மறவர் பேர்நாட்டுது (அதிசயம்…

மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு _ அதில்
மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
மானிருக்கு வண்ண மயிலிருக்கு
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு (அதிசயம்…

அங்கே _ சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும் _ தழுவி
சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு மணம்சுந்து வரும்
இங்கே தங்கிட நிழலுமில்லை
பொங்கிடக் கடலுமில்லை _ சற்று
நேரங்கூட வெயில் மறைவதில்லை _ நம்மைத்
தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.

200. ஆசைவைக்கிற இடந்தெரியணும்
பெண் : ஆசைவைக்கிற இடந்தெரியணும் மறந்துவிடாதே
அதுக்குமேலே வார்த்தையில்லே வருத்தப்படாதே
மாமோய்… மாமா… மாமா…
வம்புபண்ணி சண்டைக்கு நின்னா
அன்பு வளருமா? _ அது
வளர்ந்தாலும் நீ நினைக்கிற இன்பம் மலருமா?

ஆண் : திரும்பிப் பார்க்கும்போது மனசு
திருட்டுப் போகுது _ கண்ணே திருட்டுப் போகுது
சம்மதத்தைச் சொல்லப் போறியா? _ இல்லே என்னைச்
சமயம் பார்த்துக் கொல்லப் போறியா?
கண்ணே… கண்ணே… கண்ணே…

பெண் : ஒன்னைக் கண்டாலே கண்ணை எரியுது
காதல் எப்படி மொளைக்கும்? _ ஒங்
கனவு எப்படிப் கலிக்கும்?
கையைத் தொடாதே கையைத் தொடாதே _ மானம்
காற்றிலே பறக்கும் மாமோய்… மாமா… மாமா…

ஆண் : கணக்கு மறிக் காடு இருக்குது
அடுக்கு மாடி வீடு இருக்குது
அதுக்குமேலே பணம் இருக்குது மானே உனக்கு!
அத்தனையும் பாதுகாக்கும் கவலை எனக்கு _ நீ
கல்யாண தேதி வைக்கிறியா? _ இல்லே இப்போ
காவிக்கடைக்கு ஆள் அனுப்பிறியா?
கண்ணே… கண்ணே… கண்ணே…

பெண் : என்னய்யா நியும் ஒரு ஆம்பளையா?
சும்மா இளிக்கிறியே
சொன்னதெல்லாம் விளங்கலியா?
உண்மையா நீ எனக்கு மாப்பிள்ளையா
வந்தாலும் ஒட்டாது கசந்துபோகும் வேப்பிலையா
மாமோய்… மாமா… மாமா… (ஆசை…

மகனே கேள்

201. ஓரோண் ஒண்ணு
பையன்கள் : ஓரோண் ஒண்ணு
ஈரோண் ரெண்டு
மூவோண் மூணு
நாலோண் நாலு

வாத்தியார் : ஓரோண் ஒண்ணு
உள்ள தெய்வம் ஒண்ணு
ஈரோண் ரெண்டு
ஆண் பெண் ஜாதி ரெண்டு

மூவோண் மூணு
முத்துத் தமிழ் மூணு
நாலோண் நாலு
நன்னிலம் நாலு
உள்ளதெய்வம் ஒண்ணு
ஆண் பெண் ஜாதி ரெண்டு
முத்துத் தமிழ் மூணு
நன்னிலம் நாலு

பையன் : அஞ்சோண் அஞ்சு

வாத்தியார் : அஞ்சுவதற்கு அஞ்சு

பையன் : ஆறோண் ஆறு

வாத்தியார் : நல்லறிவுகள் ஆறு

பையன் : ஏழோண் ஏழு

வாத்தியார் : இசைக் குலங்கள் ஏழு (ஏழோண்…

சிறுமி : ஸ ரி க ம ப த நி ஸா

பையன் : எட்டோண் எட்டு

வாத்தியார் : எட்டும் வரை எட்டு

பையன் : ஒன்பதோண் ஒன்பது

வாத்தியார் : உயர் மணிகள் ஒன்பது

பையன் : பத்தோண் பத்து

வாத்தியார் : பாடல்கள் பத்து
உன்னையெண்ணிப்பாரு
உழைத்து முன்னேறு
உண்மையைக் கூறு
செம்மை வழி சேரு

சிறுமி : (உன்னை)

வாத்தியார் : அன்புக்கு வணங்கு
அறிந்தபின் இணங்கு
பண்புடன் விளங்கு
பசித்தவர்க் கிரங்கு

பையன் : (அன்புக்கு)

வாத்தியார் : பேதங்கள் தீர்த்து
பெருமையை உயர்த்து
நீதியைக் காத்து
நேர்மையைக் காட்டு

சிறுமி : நேர்மையைக் காட்டு
பொன்மொழி கேட்டு
பொய்மையை மாற்று
பொறுப்புகள் ஏற்று
பொதுப் பணியாற்று

வாத்தியார் : திருக்குறள் நூலை
சிறந்த முப்பாலை
கருத்துடன் காலை
படிப்பதுன் வேலை

202. ஆறறிவில் ஓரறிவு அவுட்டு
ஆண் : ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு (ஆறறி…

அடக்கமில்லாப் பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கு நடையிலும்
ஆதிகாலப் பண்பைக் காறறல
பறக்க விடும் உடையிலும் (ஆறறி…

தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச்சோத்து மடங்களிலும் (ஆறறி…

203. கலைமங்கை உருவம்
ஆண் : கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு
தணியாத மனித உள்ளம் எங்கே உண்டு? _ கண்ணே
கமல மலரை வென்று திகழும் முகத்திலும் ரெண்டு
கருவண்டு விளையாடும் காட்சி வேறெதில் உண்டு?

பெண் : எழில் சிந்தும் இளமை கொண்டு நேரில் நின்று
அலை மோதும் இன்பம் வேறெதிலே உண்டு?
வளம் பொங்கும் உருவம் கண்டு போதை கொண்டு
மயங்காத மங்கையுள்ளம் எங்கேயு ண்டு? அன்பே (ஆறறி…

ஆண் : கைவளையல் போடும் சண்டை _ எங்கும்
கன்னிலிசை பாடும் தண்டை _ சுழலும்
மைவிழியில் மேவும் கெண்டை _ வந்து
மெய்யுருகப் பாயும் ஒன்றை

பெண் : உள்ளம்இரண்டும் கனிந்து ஒன்றையொன்று கலந்தால்
கொள்ளை கொள்ளும் இந்த வெள்ளம் போறாதோ?
துள்ளிவந்து ஆண்களைத் துணை தேடும்போது
தூரநின்றே ஆட என்றும் வெண்கொடியே நீ

ஆண் : எண்ணச் சோலையில் நின்று
இருகரமும் இணைந்து படர்ந்து மகிழ
எழில்வளர சுகம் விளைய மனம் மலரும்
படர்ந்து நிறைந்து குலுங்க
துணையெனும் உறவினில் துணிந்திடும் நினைவினில்
சுவைதரும் சுபதின நிலைபெறவே
ஒருபுறமாட சிறுமயிலாட குளிரும்
முகமே அருகினில் நெருங்க
புதுநிறமே பெரும் தளிர்விரல் தரும்குறி
அபிநயங்கள் விளங்க

பெண் : அலைகடல்மேல் நிலவெனவே அனுதினமே
தழுவி இனிய மலர் குலுங்க

ஆண் : பனிமலரிதழ் அமுதினை அருந்த

பெண் : பல கதைகளும் கவிதையும் முழங்க

ஆண் : சுகம் வழங்க

பெண் : மதி மயங்க

இருவர் : விரைந்து தனைமறந்து அணைகடந்து வரும்
கலைபொங்கும் உருவம் கண்டு
காதல்கொண்டு தணியாத மனிதவுள்ளம் எங்கேவுண்டு?
(கலைபொங்கும் உருவம்கண்டு காதல் கொண்டு…

204. ஆட்டம் பொறந்தது
ஆட்டம் பொறந்தது உன்னாலே _ அதில்
அழகு வந்தது என்னாலே
காட்சி நிறைஞ்சுது பொன்னாலே _ அந்தக்
கலை வளர்ந்ததும் என்னாலே

சத்தம் பொறந்தது தன்னாலே _ அது
சங்கதமானது என்னாலே
ஜாடை பொறந்தது கண்ணாலே _ அது
மேடைக்கு வந்தது என்னாலே
ஆட்டம் ஐயா ஆட்டம்… (ஆட்டம்…

நடை பொறந்தது தன்னாலே _ அது
நடனமானது என்னாலே
நாடகம் சினிமா நளினம் கிளினம்
எல்லாம் இதுக்குப் பின்னாலே
ஆட்டம் ஐயா ஆட்டம் (ஆட்டம்…

புதுசுபுதுசா கலரைக் காட்டி
பூ மலர்ந்ததும் பந்தலிலே
மதிப்பும் மருகும் மணமும் அதுக்கு
மலிஞ்சிருக்குது கூந்தலிலே

பளபளக்கிற பட்டுப் புடவைகள்
ஒளிஞ்சிருந்தது கடையிலே _ இப்ப
மினுமினுக்கிற ஜரிகையோட
சலசலக்குது இடையிலே _ இப்ப (மினு…

205. பருவம் வாடுது
பருவம் வாடுது இங்கே _ உன்
பார்வை எங்கே?
பாசம் தேடுது அங்கே _ உன்
பார்வை எங்கே?
கண் சுழலும் காதல் தொடரும்போது
ஜோடியில்லாத மாடு நீ ஓடுவதேனோ வீணா?

பாடங்கள் சேர்ந்து மூளையிலே
நாடகமாடும் வேளையிலே
காதலை நாடிட நேரமில்லை _ சுகம்
காணும் வழியில்லை
உன் யோசனையும் என் வேதனையும்
பெரும் சோதனைதான் போடீ
கல்வியும் வந்து காதலும் வந்தால்
கருத்தில் இட மேது?
உருவம் வாடுது இங்கே _ என்
உள்ளம் அங்கே
இளமை மீறுது இங்கே _ என்
இன்பம் அங்கே
வாலிபம் வரும் போதினிலே _ புது
வாழ்விலே வரும் மோகம் _ அதை
மறந்தால் பறந்தே போகும் _ நீ
உணர்ந்தால் ஆனந்த மாகும்
அன்பு மிகுந்து ஆசை வளர்ந்து
அழகு குலுங்கும் வயதிலே
அமைதியுமில்லை மனதிலே _ உன்
போதனையும் _ என் காதலையும் _ ஒரு
தேதியில் வெளியாகும்
நான் துணிந்திடும்போது
தொல்லைகள் ஏது? சுகந்தான் புவிமீது (உருவம்…

206. சூதாட்டம் ஆடும் காலம்
ஆண் : மணவறையில் சேர்த்து வைத்து
வாழ்த்துரைக்கும் ஓர் காலம்
மக்களைப் பெற்று மகிழவைக்கும் ஓர் காலம்
மனதிலே பாசங்கள் வளர்ந்து மறைந்தபின்னே
கனவுகண்டு விழிப்பதுபோல் கலைத்துவிடும்
ஓர் காலம் காலம்… காலம்

சூதாட்டம் ஆடும் காலம் _ பல
மாறாட்டம் செய்து போகும்
வாதாடி என்ன லாபம்? _ துயர்
மலிந்தோர்க்கு ஏது நியாயம்? (சூதாட்டம்…

பெண் : பேராசை காட்டி மயக்கும் _ இணை
பிரியாத அன்பைப் பிரிக்கும்
மாறாத இன்பம் போலே _ வந்து
மறைந்தோடும் மண் மேலே

ஆண் : இனி வாதாடி என்ன லாபம்? _ துயர்
மலிந்தோர்க்கு ஏது நியாயம்?
சூதாட்டம் ஆடும் காலம் _ பல
மாறாட்டம் செய்து போகும்
மக்கள் வேண்டும்; செல்வம் வேண்டும் _ என
மறவாமல் உள்ளம் தூண்டும் (மக்கள்…

மந்தையாக யாவும் கூடும்
சந்தை மாடுபோல ஓடும் _ இனி
வாதாடி என்ன லாபம்? _ உந்தன்
நிலை காண ஏது நேரம்? (சூதாட்டம்…

207. மட்டமான பேச்சு
மட்டமான பேச்சு _ தன்
வாயைக் கெடுக்குதுங்க _ அது
வெட்டித்தனமாக் கேக்கிறவங்க
காதையும் கெடுக்குதுங்க (மட்ட…

சந்திலும் பொந்திலும் வாதம் _ அதால்
தலைவலி மருந்துக்கு லாபம் _ அந்தச்
ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க

கும்பல் சேர்த்து வம்பு வளர்ந்து
குடும்பத்தைக் கலைக்குதுங்க _ பெருங்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி
பொழப்பையும் கெடுக்குதுங்க

புரளியும் வதந்தியும் மூட்டி _ ஒரு
பொய்யை நூறாகக் கூட்டி _ கரும்
பூதமென்றும் சிறு பேய்களென்றும் _ பல
பேரையும் ஊரையும் கெடுக்குதுங்க (மட்ட…

அறையில் வளர்ந்து வெளியில் பறந்து
அவதிப் படுத்துதுங்க _ ஊரை
அவதிப் படுத்துதுங்க _ அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே
அமைதியைக் கெடுக்குதுங்க

பாழும் பொய்யென்று காட்டி _ உடல்
மாயக் கூடென்று கூட்டி _ உயர்
வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க (மட்ட…

ஆண் : எது?

பெண் : மட்டமான பேச்சு

கவலை இல்லாத மனிதன்

208. கண்ணுமேலே கண்ணுவச்சு
கண்ணுமேலே கண்ணுவச்சு காச முன்னே வச்சு
கன்னிஎன்ன ஆடவச்சுப் பாரய்யா!

கடைசிப் பாடல்

பாதை தெரியுது பார்

209. உண்மை ஒருநாள்
உண்மை ஒருநாள் வெளியாகும் _ அதில்
உள்ளங்க ளெல்லாம் தெளிவாகும
பொறுமை ஒருநாள் புலியாகும் _ அதற்குப்
பொய்யும் புரட்டும் பலியாகும் (உண்…

காலம் தெரிந்து கூவும் சேவலைக்
கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது;
கல்லைத் தூக்கிப் பாரம் வைத்தாலும்
கணக்காய்க் கூவும் தவறாது (உண்…

தாழம் பூவைத் தலையில் மறைத்தாலும்
வாசம் மறைவது கிடையாது;
சத்தி யத்தை உலகில் எவனும்
சதியால் மறைக்க முடியாது (உண்…

அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால்
ஆண்டவன் கூட அஞ்சிடுவான்;
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான் (உண்…

வம்பும் கலகமும் சிக்கலும் தீர்ந்தால்
மனிதனை மனிதன் நம்பிடுவான்;
வராத சமயம் வந்தே தீரும்
மடையனும் அதிலே திருந்திடுவான் (உண்…

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

posted by admin in Uncategorized and have No Comments

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment