Pattukkottaiyaar

திரைப்பாடல்-3

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

51. ஓகோகோ மச்சான்
ஓகோகோ மச்சான் நீங்களா? _ இங்கே
உள்ளே நுழைய வந்தீங்களா?
கேக்காத கதையைக் கேட்டீங்களா? _ அதைக்
கேட்டிருந்தும் கேள்விகளைப் போட்டீங்களா!
வண்ணமுக வெட்டழகி வட்டவிழிக் கட்டழகி
சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா? _ அவ
அன்னநடை மின்னலிடை அத்தனையும் சேர்ந்த ஒரு
பொண்ணாவந்து பொறந்திருக்கா புரியுமா?

முத்தத்திலே மோடிகளிருக்கு
கட்டிப்போடும் _ கையைக் _ கட்டிப்போடும் _ நித்தம்
ரத்தத்திலே நீஞ்சிற சாத்தான்
சத்தம்போடும் _ மச்சான் _ சத்தம் போடும்

சக்திக்கு மேல் ஆசையிருக்கு
தடவிப்பார்க்க மீசையிருக்கு
முத்திப்போன காதல்கிறுக்கு
முளிச்சிக்கிட்டே குருடாயிருக்கு

அவலைநினைச்சு உரலைஉருட்டும்
அயித்தைமவனைப் பாருங்கடி
கவலைபுடிச்சிக் கலங்குறாரு காலைப்புடிச்சி வாருங்கடி
தவளைதத்துற நடைநடக்குற சங்கதிஎன்ன _ கூறுங்கடி

கொவளைநிறையத் தண்ணிவச்சு _ அதில
இவரைப்புடிச்சிப் போடுங்கடி
குதிச்சு ஆடுங்கடி _ வந்து கூட்டமாப் பாடுங்கடி
மதிச்சு நடங்கடி _ வடை மாலையைப் போடுங்கடி

போட்டிக்கு வந்தவரு மாட்டிக்கிட்டாராம்
பொண்ணுக்குக் கண்ணிவச்சுக் கோட்டை விட்டாராம்
பூட்டிய வீட்டில் புகுந்துக் கிட்டாராம்
பொட்டியைத் தேடி ஆளை மிதிச்சாராம்

கத்தியைக் கண்டொருத்தர் காதல் கொண்டாராம்
கையில் கொடுத்தவுடன் கண்ணீர் விட்டாராம்
எத்தனை பேரோ ஏமாந்துவிட்டாராம்
சத்திரவீரர் வித்தை காட்டுறாராம் (போட்டி…

சந்தர்ப்பம் பாத்துஒரு சாமி வந்தாராம்
சக்தி நிறைஞ்சுதுண்ணு சாம்பல் தந்தாராம்
மந்திரம் பண்ணி மயக்கப் பார்த்தாராம்
மயங்காத கன்னி விலங்கைப் பூட்டினாளாம் (போட்டி…

வாடிவாடி கட்டப்பொண்ணே வாடி
வந்திருக்கு ஜோடி மந்திரத்தை மீறி
வாசலுக்கு முன்னோடி _ ஹேய்
கருப்போ சிவப்போ மச்சான் விரும்புறது பெண்தானடி
கசப்போ இனிப்போ மச்சான் ஒம்மேலே ஒரு கண்தானடி
பாருபாரு பக்கம் வந்து பாரு
ஊருபேரு ஒனக்குச் சொல்லுவாரு
ஒண்ணுமில்லே தகராறு ஹேய் (கருப்போ…

ஏதுஏது இது தெரியாது
இருக்குது காது எதுவுங் கேக்காது
எடத்தை விட்டு நகராது ஹேய் (கருப்போ…

வீரா _ வீராதி வீரரான சூரா!
மாறாத மோகங் கொண்டீரா? மானோடு றவாட வந்தீரா?
ஏறாத மாமலையில் ஏறி வேங்கையோடு
போர் புரிந்து பெரும் பேரடைந்தோமென
ஊர் திரும்பி விடுவீரா…?
பாரினில் அதிகாரமுடைய நாரியரிடம் உமது சக்தி
நீரினில் விழும் தீ!
வேருடன் எல்லா விதிகளும்
மாறிடும் ஒரு மங்கை சொல்லில்
அதை மறந்தீரோ? _ இத்தனை கேட்டும் அறிவிழந்தீரோ?
ஓரக் கடலில் ஈரமிருந்தும்
ஊன்றும் விதையதில் உயிர் பெறாது;
உணர்ந்து திரிந்து ஓடினாலே
உங்கள் உயிர் இனி உடலில் வாழும்
அதை மறந்தீரோ? இத்தனை கேட்டும் அறிவிழந்தீரோ?

52. சிங்கார வேலவனே!
சிங்கார வேலவனே! சிவகாமி தன் மகனே!
தினைப்புனத்தில் குறவர் வீட்டிலே
திருட்டுத்தனமா புகுந்தவனே சண்முகனே _ ரொம்பச்
சிறுசிலே வெண்ணெய்திருடித் தின்னவன் மருமகனே!

பச்சை பயில் வாகனனே பாடுங்குறி சொல்லிடவா?
உச்சிமலை விட்டிறங்கி உலகத்தைக் கண்டிடு வா!
காசியாத்திரை போகையிலே _ ஒரு
காதல் மாத்திரை தின்னதுண்டா?

சோசியர் மகன் சொக்கலிங்கம் _ ஒங்க
சொப்பனத்தில் வந்து சொன்னதுண்டா?
ஆசை வீட்டிலே விளக்கு வைக்கற
அழகுக் கன்னியைக் கண்டதுண்டா?

பேச நினைச்சு ராவும் பகலா
பித்த மயக்கம் கொண்டதுண்டா? _ ஐயாவே அந்த
உத்தமிஉனக்குப் பத்தினியாவா மெய்யாவே

ஒருத்தர் நிலைமை இப்படியிருக்க
ஒங்க நிலைமையும் ஒண்ணுதானா? _ ஒரு
கருத்த கன்னியின் பெருத்த மேனியில்
கண்ணைப் பதிச்சதும் உண்மைதானா?

அருத்தம்புரிஞ்சு அவளும் வாழைக்
குருத்துப்போல வாடிப்போனா
தரத்துக்கேத்த தங்கரதம் _ அவ
சம்மதிப்பா நீங்க தேடிப்போனா சரிதானா? _ ஒரு
ஜாடைக்கு என்னைப்போல் தடிச்சஉடம்பு அதுதானா?
அரசிளங்குமரி

53. ஏற்றமுன்னா ஏற்றம்
ஒருவன் : ஏற்றமுன்னா ஏற்றம்
இதிலேயிருக்குது முன்னேற்றம்

மற்றவன் : எல்லாரும் பாடுபட்டா _ இது
இன்பம் விளையும் தோட்டம் (எல்லா…

ஒருவன் : கிணற்று நீரை நிலத்துக்குத்தான்
எடுத்துத்தரும் ஏற்றம்

மற்றவன் : கிளைவெடிக்கும் பயிர்களுக்கு
உயர்வளிக்கும் கூட்டம்

ஒருவன் : எறும்பு போல வரிசையாக
எதிலும் சேர்ந்து உழைக்கணும்

மற்றவன் : இடுப்பே வளையா மனிதர்
எதிர்பார்த்துப் பொழைக்கணும் _ நம்மை
எதிர்பார்த்துப் பொழைக்கணும்

ஒருவன் : உடும்பு போல உறுதிவேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்

மற்றவன் : ஒடஞ்சி போன நமதுஇனம்
ஒண்ணா வந்து பொருந்தணும்

ஒருவன் : ஓதுவார் தொழுவாரெல்லாம்
உழுவார் தலைக்கடையிலே…

மற்றவன் : உலகம் செழிப்பதெல்லாம்…
ஏர் நடக்கும் நடையிலே…

ஒருவன் : ஆதிமகள் அவ்வை சொல்லை
அலசிப் பார்த்தா மனசிலே (ஆதி…

மற்றவன் : நீதியென்ற நெல் விளையும்
நெருஞ்சி படந்த தரிசிலே…

ஒருவன் : விதியை எண்ணி விழுந்து கிடக்கும்
வீணரெல்லாம் மாறணும்

மற்றவன் : வேலை செஞ்சா உயர்வோமென்ற
விபரம் மண்டையில் ஏறணும் (விதியை…

ஒருவன் : நிதியை எண்ணும் பெரியவங்க
நெஞ்சில் அன்பும் சேரணும்

மற்றவன் : நிரந்தரமா சகலருமே
சொதந்திரமா வாழணும்

54. கண்டி கதிர்காமம்
கண்டி கதிர்காமம் எஞ்சுப்பையா கழுகுமலை பழனிமலை
கால்நடையாய்ப் போக வேணும்
எங்கந்தா, எம்முருகா _ என்வேலா எங்குமரா _ ஆ _ ஆ
சுப்பிரமணியா _ ஆறுமுகா _ நீ கண்திறந்து பார்த்திடய்யா
எட்டுச் சாண குச்சிக்குள்ளே _ கந்தையா
எத்தனை நாளிருப்பேன்? _ ஒரு
மச்சுவீடு கட்டித் தாருங்காணும் _ உச்சி
மலையின் மேலோனே _ ஒரு (மச்சு வீடு…

சட்டியில் சேர்ந்ததெல்லாம் _ கந்தா உன்
சன்னதி சேர்ந்திடுவேன் (சட்டியில்…

மொட்டை ஆண்டி ஒன்னை முழுசாவே நம்புறேன்
மோட்சம் தந்திடப்பா _ அட (மொட்டை…

தீராத வினைகளெல்லாம் தீர்த்துவைப்பார் கோவிந்தம்
மாறாத மனசையெல்லாம் மாத்திவைப்பார் கோவிந்தம்!
பட்டைநாமம் கண்டால் பசிதீர்ப்பார் கோவிந்தம் _ உன்
கட்டை கடைத்தேறக் கைகொடுப்பார் கோவிந்தம்!

கோவிந்தம் கோவிந்தம் கொடுத்தாப் புண்ணியம் கோவிந்தம்!
ரகுராமா ரகுராமா நடுத்தெருவிலே என்னை விடலாமா?
அடப்பாவிகளே பாவிகளே பாத்துட்டுச் சும்மா போறீங்களே!
கோவிந்தம் கோவிந்தம் கோவப்படாதே கோவிந்தம்!

மானாகி, மயிலாகி, மானாகி, மயிலாகி
நானாகி, நீயாகி, வடிவாகி வந்த வடிவே _ ஏ _ ஏ
பெண்ணாகி, ஆணாகி, பேச்சாகி, மூச்சாகி அடேயப்பா
பெண்ணாகி, ஆணாகி, பேச்சாகி, மூச்சாகி
கண்ணாலே கொல்லும் கண்ணே _ கண்ணே கண்ணே
உடம்பை நம்பாதே _ கண்ணே உடம்பை நம்பாதே
உயிர்பிரிந்த பின்னே இது ஒன்றுக்கும் உதவாத மண்ணே

55. நந்தவனத்திலோர் ஆண்டி…
நந்தவனத்திலோர் ஆண்டி… அவன்
வந்த இடத்திலோர் மங்கையை வேண்டி (நந்த…

வார்த்தையைக் கொடுத்துப்புட்டாண்டி _ இவன்
வம்பாக மாட்டிக்கிட்டுத் தொங்கப் போறாண்டி (நந்த…

காஷாயம் கட்டிக்கிட்டாண்டி _ கொஞ்சம்
காதல் கதையிலும் ஒட்டிக்கிட்டாண்டி (காஷாயம்…

வேஷத்தை மாத்திக்கிட்டாண்டி _ இப்போ
வேறொரு ஆளாகி வெளுத்துக் கட்றாண்டி (நந்த…

56. சின்னப் பயலே
சின்னப் பயலே சின்னப் பயலே
சேதி கேளடா _ நான்
சொல்லப்போற வார்த்தையைநல்லா
எண்ணிப் பாரடா _ நீ எண்ணிப் பாரடா (சின்னப்…

ஆளும்வளரணும் அறிவும்வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்…

உனனை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீதரும் மகிழ்ச்சி (ஆசை…

நாளும் ஒவ்வொரு பாடம்கூறும்
காலம்தரும் பயிற்சி _ உன்
நரம்போடுதான் பின்னிவளரணும்
தன்மான உணர்ச்சி _ உன் (நரம்…

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா _ தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
வலது கையடா _ நீ வலது கையடா (வளர்ந்து…

தனியுடைமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா _ நீ தொண்டு செய்யடா (தனி…

தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா _ எல்லாம் பழைய பொய்யடா! (சின்னப்…

வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க _ உன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே _ நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே _ நீ வெம்பி விடாதே!*
அம்பிகாபதி

57. வரும்பகைவர்
வரும்பகைவர் படைகண்டு மார்தட்டிக் களம்புகும்
மக்களைப் பெற்றோர் வாழ்க!
மனங்கொண்ட துணைவர்க்கு விடைதந்து வேல்தந்த
மறக்குலப் பெண்கள் வாழ்க!

உரங்கொண்டு போராடி உதிரத்தில் நீராடி
அறங்காத்த உள்ளம் வாழ்க!
திறமான புகழ்கொண்ட திடமான தோள்களும்
செல்வீரர் மரபும் வாழ்க!
மக்களைப் பெற்ற மகராசி

58. ஓ… மல்லியக்கா
ரோஜா : ஓ… மல்லியக்கா
மல்லி : ஏண்டி, ரோஜா அக்கா
ரோஜா : மல்லியக்கா மல்லியக்கா எங்கடி போறே?
கொஞ்சம் சொல்லடியக்கா எதுக்கு இப்படிக்
குலுக்கி நடக்கிறே?
மல்லி : நான் _ மணவறையைச் சிங்காரிச்சு
வாசனையை அள்ளித் தெளிச்சு
வாரவங்க எல்லோரையும் மயக்கப் போறேன்
மணப்பொண்ணு கூந்தலிலே மணக்கப் போறேன்
ரோஜா : நீ மணப்பொண்ணு தலையில் மட்டும்
மணக்கப் போறே,
நான் _ மாப்பிள்ளை கழுத்தச் சுத்தி
தொங்கப் போறேன்
நீ வாசனையைக் கொடுத்துப்பிட்டு
வதங்கப் போறே.

நான் வாரவங்க கையில்எல்லாம்
குலுங்கப் போறேன் _ அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? _ உன்
தரத்துக்கும் உடல்நெறத்துக்கும் _ நான்
கொறஞ்சு போனேனா?
மல்லி : கள்ளமில்லா மனசுக்கென்னை
உவமை சொல்வாங்க _ பெரும்
கவிஞரெல்லாம் காவியத்தில்
இடம் கொடுப்பாங்க
காத்தடிச்சாப் போதும் என்னைக்
காணத் துடிப்பாங்க _ ஒன்னக்
கண்டாக்கூட முள்ளெநெனச்சு
முகஞ் சுளிப்பாங்க _ அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? _ உன்
தரத்துக்கும்உள்ள குணத்துக்கும் _ நான்
கொறஞ்சு போனேனா?
ரோஜா : நீமலருமுன்னே வந்துகடைக்கு மலிஞ்சு போறவ!
மல்லி : நீஉலருமுன்னே தொட்டாக்கூட உதிர்ந்து போறவ!
ரோஜா : நீ வளரும்போதே கொம்பைத் தேடிப்பிடிச்சவ
மல்லி : அதுக்கு வகையில்லாமெ
தனிச்சுநின்னு தவிச்சவ! _ அடி
தந்தனத்தான தந்தனத்தான
சரக்கிது தானா? _ உன்
தரத்துக்கும் உள்ள குணத்துக்கும் நான்
கொறஞ்சு போனேனா?
(தாமரை வருதல்)
தங்கச்சி தங்கச்சி தாமரைத் தங்கச்சி
எங்களுக்குள்ளே எவதான்சிறந்தவ
எடுத்துச் சொல்லு தங்கச்சி?
தாமரை : மலருவதெல்லாம் உலருவதுண்டு
மறந்துட வேணாம் அக்கச்சி! அக்கச்சி! _ சில
மனிதரைப்போல வம்புகள் பேசி
பிரிந்திட வேணாம் அக்கச்சி! அக்கச்சி!
தாமரை : உலகில் சிறந்தது என்ன?
மல்லி : அன்பு உள்ளவர் செய்திடும் தானம்
தாமரை : அந்தத் தானத்தில் சிறந்தது என்ன?
ரோஜா : நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்
தாமரை : அதிலும் சிறந்தது என்ன?
மல்லி : பல அஹிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன
உலக சமாதானம்!
தாமரை : அதை நாம் உணர்ந்து நடக்க வேணும் _ எல்லோரும்
ஒன்றா இருக்க வேணும்! _ அப்போதுதான்
உலவும் சமாதானம் _ எங்கும் நிலவும் சமாதானம்!
மூவரும் : அதை நாம் உணர்ந்து நடந்திடுவோம்
எல்லோரும் ஒன்றாய் இருந்திடுவோம்!

புதையல்

59. உனக்காக எல்லாம்

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
எதுக்காக கண்ணே எதுக்காக? _ நீ
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக?
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக? _ மெள்ளக்
காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக (உனக்காக…

பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா? _ இல்லே
பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா?
துள்ளிவரும் காவேரியில் குளிக்கணுமா? _ சொல்லு
சோறுதண்ணி வேறுஏதுமே இல்லாமெக் கெடக்கணுமா?
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால்
இந்துமகா சமுத்திரத்தைஇங்கிருந்தே தாண்டிடுவேன்;
மேகம்போலே வானவீதியிலே நின்னு மிதந்திடுவேன் _ இடி
மின்னல்மழை புயலானாலும் துணிஞ்சு இறங்கிடுவேன் (உனக்காக…

60. சின்னச் சின்ன இழை
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னிவரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி _ நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி (சின்ன…
அன்னையர் தந்தையர் வண்ணக் குழந்தைகள்
புன்னகை மங்கையர் போற்றிப் புனைந்திடும்
ஆடையடி நெய்துமடி போடுங்கடி
சிந்தனைச் சிற்பிகள் தேசத்தறி ஞர்கள்
செந்தமிழ்ச் சோலையில் பூத்த கலைஞர்கள்
மங்கலமாநிலம் காக்கும் மறவர் யாவரும் _ புவி
வாழ்வை உயர்த்தும் மக்கள் எல்லோரும்1
வாங்கி மகிழும் பொன்னாடையடி2 (சின்ன…
உழைத்திடும் எளியவர் அடிக்கடி துவைத்து வந்தாலும்3
மங்காது பார்வை சிங்காரப் போர்வை;
பணத்தொகை மிகுந்தவர் படித்தவர் பெருத்தவர் நாடும்
பச்சைப் பட்டாடை பார்த்தால் கிளிஜாடை
ஒற்றுமையோடு அத்தனை நுலும்
ஒழுங்கா வந்தால் வளரும் _ இதில்
ஒரு நூலறுந்தால் குளறும் _ இதை
ஓட்டும் ஏழை கூட்டுற வாலே
உலகில் தொழில் வளம் உயரும் _ இந்த
உலகில் தொழில்வளம் உயரும்4
என்னடி கண்ணம்மா இன்னுஞ் சொல்ல வேண்டுமா?
வள்ளுவரின் வழிவந்த பெரும்பணி வாழ்வில்
நன்மை யுண்டாக்கும் தன்மானம் காக்கும்
புதுவகைப் புடவைகள் விதவிதப் பறவைகள் போலே
நல்ல நிறங்காட்டும் நாளும் புகழ் காட்டும்5
அலாவுதீனும் அற்புத விளக்கும்

61. கண்ணுக்கு நேரிலே
கண்ணுக்கு நேரிலே கலைஎன்ற தேரிலே
கைகொட்டி ஆடிவந்த காதலே
இன்னும் சந்தேகமோ? ஏனிந்த வேகமோ?
மின்னலின் தோழி எந்தன் மீதிலே
எண்ணங்கள் யாவும் அங்கே
எழிலன்னம் நானும் இங்கே
இனிவிட்டுப் போவ தெங்கே?

முடிவைக் காணாமலே சொல்லக்கூடாததெல்லாம்
தோன்றும் இந்த நாழிகை
பல்லக்குப் போன்றமங்கை பக்கம் வந்தால் வெட்கம் மீறாதோ?
ஆசைக்குப் பேதமில்லை அதில்மட்டும் வேதமிலலை
அறிவுக்கே வேலையில்லை குறிவைக்கும் போதிலே
கொஞ்சும்பெண் மோகம்வெல்லும் நெஞ்சம்ஏது பாரிலே?
கொம்புத் தேனான என்னைக் கொள்ளைகொண்டீர்
வெள்ளையன்பாலே!

ஆரவல்லி

62. சின்னக்குடி
சின்னக்குடி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போறவண்டியில்
குடும்பம்பூரா ஏத்துனா!
குளிரடிக்கிற குழந்தைமேலே
துணியப்போடடுப் போத்துனா
குவாக்குவான்னு கத்தினதாலே
முதுகிலரெண்டு சாத்துனா
கிலுகிலுப்பயக் கையில்கொடுத்து
அழுதபிள்ளையைத் தேத்துனா (சின்ன…
பன்னப்பட்டிக் கிராமத்திலே
பழையசோறு தின்னுக்கிட்டா
பங்காளிவீட்டுச் சிங்காரத்தோட
பழையகதையும் பேசிக்கிட்டா (சின்ன…
கண்ணுக்குட்டிய மல்லுக்கட்டியே
கயித்தப்போட்டுப் பிடிச்சுக்கிட்டா
மண்ணுக்கட்டியால் மாங்காஅடிச்சு
வாயில போட்டுக் கடிச்சுக்கிட்டா! (சின்ன…

63. சின்னப் பெண்ணான போதிலே
பெண் : சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா? _ அம்மா
நீசொல் என்றேன்! (சின்ன…

வெண்ணிலா! நிலா! _ என்
கண்ணல்லவா கலா! _ உன்
எண்ணம்போல் வாழ்விலே
இன்பம்தான் என்றாள்! (வெண…

கன்னிஎண் ஆசைக்காதலே!
கண்டேன் மணாளன் நேரிலே!
என்னாசைக் காதல் இன்பம் உண்டோ? _ தோழி
நீ சொல் என்றேன் (வெண…

கண்ஜாடை பேசும் வெண்ணிலா!
கண்ணாளன் எங்கே? சொல்நிலா _ என்
கண்கள் தேடும் உண்மைதனை
சொல்நிலவே என்றேன்!

ஆண் : வெண்ணிலா! நிலா! _ என்
கண்ணல்லவா கலா! _ உன்
எண்ணம்போல் வாழ்விலே
இன்பம் காணலாம்!

சக்கரவர்த்தித் திருமகள்

64. பொறக்கும்போது பொறந்த
உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் _ காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக் குணம் _ ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் _ ஆனால்
இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா
மனதின் பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது _ எல்லாம்
இருக்கும்போது பிரிந்த குணம்
இறக்கும்போது சேருது (பொறக்…

பட்டப்பகல் திருடர்களைப்
பட்டாடைகள் மறைக்குது _ ஒரு
பஞ்சையைத்தான் எல்லாஞ்சேர்ந்து
திருடனென்றே உதைக்குது (பொறக்…

காலநிலையெ மறந்து சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது _ புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்பிடிச்சி ஆட்டுது _ வாழ்வில் (பொறக்…

கணக்குப் புரியாம ஒண்ணு
காசைத்தேடிப் பூட்டுது _ ஆனால்
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது (பொறக்…

புரளிகட்டிப் பொருளைத் தட்டும் சந்தை _ பச்சைப்
புளுகை விற்றுச் சலுகை பெற்ற மந்தை _ இதில்
போலிகளும் காலிகளும் பொம்மலாட்டம்
ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை
உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் _ நம்பி
ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் _ நாம்
உளறி என்ன? கதறி என்ன? ஒன்றுமே நடக்கவில்லை
தோழா _ ரொம்ப நாளா!1 (பொறக்…

மகாதேவி

65. குறுக்கு வழியில் வாழ்வு
சூழ்ச்சியிலே சுவரமைத்து சுயநலத்தால் கோட்டைகட்டிச்
சுடர்விட்ட நீதிதனைத் தூக்கி எறிந்துவிட்டுச்
சாட்சிகள் வேண்டாம் சகலமும் நானென்று சதிராடும் வீணர்களின் அதிகார உலகமடா
புதிரான உலகமடா _ உண்மைக்கு
எதிரான உலகமடா _ இதில்
பொறுமையைக் கிண்டிவிடும்
போக்கிரிகள் அதிகமடா

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா _ இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு…

இருக்கும் அறிவை மடமை மூடிய
இருட்டு உலகமடா _ வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு…

விளையும் பயிரை வளரும் கொடியை
வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்
வெந்திடும் தோட்டக்காரனிடம்
மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல
வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான
பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு…

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குருங்கு தாவும் _ அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் _ சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா _ தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு…

தாயித்து… தாயித்து _ பலர்
சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
சங்கதியைச் சொல்லவரும் தாயித்து _ சில
சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோராப் போடவரும் தாயித்து _ அய்யா
தாயித்தோ… தாயித்து _ அம்மா தாயித்தோ… தாயித்து

தில்லில்லா மனுஷனாகக பல்லெல்லாம் நெல்லாரிக்கி
சொல்லெல்லாம் வெஷமிரிக்கி கேளுங்கோ _ இதர்
நெல்லார்க்கி பொல்லார்க்கி அல்லா நடுவேரிக்க
எல்லாம் வௌக்கிப் போடும் பாருங்கோ லேலோ
தாயித்தோ… தாயித்து _ ஆவோ தாயித்தோ… தாயித்து

பொம்பளைங்க பித்துக்கொண்ட பொடவைப் பக்தர்களுக்குப்
புத்தியைப் புகட்ட வந்த தாயத்து _ செம்புத்
தகட்டைப் பிரிச்சாத் திரையில் மறஞ்சிருக்கும்
சேதிகளைச் சொல்லும் இந்தத் தாயத்து

ஒருவன் :
அய்யா! இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா?
மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை
வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் _ இதில்
மறஞ்சிருக்கு அரியபெரிய ரகசியம் (தாய…

மற்றவன் : ஏம்பா! பணம் வருமானத்துக்கு ஏதாவது (வழி)யிருக்கா இதிலே?

ஒடம்பை வளைச்சு நல்லா ஒழச்சுப்பாரு _ அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு உக்கார்ந்துக்கிகட்டு சேக்கிற பணத்துக்கு
ஆபத்திருக்கு அது உனக்கெதுக்கு? (தாய…

அடுத்தவன் : ஏய்யா! இதாலே பொம்பளைகள மயக்க முடியுமா?

கண்ணும் கருத்துமே பெண்ணைக் கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்டகண்ட பக்கம்திரிஞ்சா கையும்காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
(வசனம்)
தம்பி, அதெல்லாம் செய்யாது இதுவேறே? (தாய…

1958

பதிபக்தி

66. வீடு நோக்கி ஓடுகின்ற
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அநேக நன்மையே _ உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே _ கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே1

அன்று ஆடுமேய்த்த பெண்கள் _ இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்புமீறி ஆடிப்பாடக் காணலாம் _ பலர்
ஜோடியாக மாறினாலும் மாறலாம் _ சிலர்2

தாடிக்கார ஞானிபோலும் வாழலாம் (வீடுநோக்கி…
நாளைவீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
பல… விந்தையான வார்த்தை வீழும் காதிலே1
விட்டுப்போனபோது அழுதவலல
புதுமையான நிலையில் _ அல்லி
பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் _ தொட்டுத்
தேனைப்போலப் பேசினாலும் பேசலாம் _ கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம் (வடுநோகக…

67. அம்பிகையே முத்து மாரியம்மா
ஓங்கார ரூபிநீ ஆங்கார மோகினி
உக்ர மா காளி நீயே
ரீங்கார நாதம் நீ ஸ்ருங்கார மாதுநீ என்
நெஞ்சூரில் வாழும் தாயே!
அம்பிகையே முத்து மாரியம்மா _ உன்னை
நம்பி வந்தோம் ஒரு காரியமா! (அம்பி…
ஆளைவிழுங்கி ஏப்பமிடும் காலமம்மா காளியம்மா
ஏழை எங்கள் நிலமையைத்தான்
எடுத்துச் சொல்றோம் கேளுமம்மா! (அம்பி…
சமயபுரத்து மகமாயி சகலஉலக மாகாளி
கன்னப்புரத்து மகமாயி காஞ்சிபுரத்துக் காமாட்சி
குறைகள் தீரக் கொடுமைகள்மாற
கருணைக் கண்ணால் பாருமம்மா!
கும்பிடுபோடும் ஏழைஎங்கள்
குடும்பம் வாழ வேணுமம்மா! (அம்பி…
இன்பம் என்று சொல்லக் கேட்டதுண்டு _ அது
எங்க வீட்டுப் பக்கம் வந்ததுண்டா?
பண்பும் அன்பும் நிறைஞ்சிருக்குது
பணம் அதைக் கண்டு ஒதுங்கிநிக்குது
துன்பம் வந்தெங்களைச் சொந்தம் கொண்டாடுது
சூழ்நிலையும அதுக்கு ரொம்பத் துணையாகுது

சூதுக்காரர் தொட்டிலிலே காதும்கண்ணும் கெட்டு _ நல்ல
நீதியது குழந்தைபோல உறங்குதம்மா _ அதை
நினைக்கையிலே மக்கள்மனது கலங்குதம்மா _
காசிவிசாலாட்சி கன்யா குறிச்சி வடிவழகி, பேச்சி, கூச்சி, பெரியாட்சி
காட்சி கொடுக்கும் மீனாட்சி! சடச்சி, பெரியாட்சி
குறைகள் தீர… கண்ணால் பாருமம்மா
கும்பிடு போடும் ஏழை எங்கள் குடும்பம் வாழ வேணுமம்மா
தெரிஞ்சு நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு _ உண்மை
ஒளிஞ்சு மறைஞ்சு வாழுதம்மா _ இன்று
பணிஞ்சு நடக்கும் எளியவரிடம்
பசியும் பிணியும் பந்தயம் போடுதம்மா!

கொஞ்சம் ஏமாந்தால் வஞ்சம் தீர்க்கப்பாக்குது
தஞ்சமம்மா உலக நிலை இதுதானம்மா
தேவைக்கேற்ற வகையில் உன்னைப்
போற்றுகிறோம் தூற்றுகிறோம்!
தீர்ப்பளித்துக் காப்பதுந்தன் திறமையம்மா _ உன்
திருவடியைப் பணிவதெங்கள் கடமையம்மா!

அக்கினிக்காளி பத்திரகாளி அந்தரக்காளி உதிரக்காளி
நடனக்காளி சுடலைக்காளி!
நெடியசூலி பெரும்பிடாரீ
கும்பிடு போடும்
ஏழை எங்கள் குடும்பம் வாழவேணுமம்மா
குறைகள் தீரக் கொடுமைகள் மாற
கருணைக் கண்ணால் பாருமம்மா! (கும்பிடு…

68. கொக்கரக் கொக்கரக்கோ
பெண்: கொக்கரக் கொக்கரக்கோ சேவலே!
கொந்தளிக்கும் நெஞ்சிலே,
கொண்டிருக்கும் அன்பிலே,
அக்கறை காட்டினாத் தேவலே

ஆண்: குப்பையைக் கிளறிவிடும் கோழியே
கொண்டிருக்கும் அன்பிலே,
ரெண்டும் உண்டு என்று நீ
கண்டதும் இல்லையோ வாழ்விலே! (கொக்…

பெண்: காலம் நேரம் அறிந்து உலகைத்
தட்டி எழுப்பிடும் சேவலே!
காத்திருப்பவரைக் கொத்தி விரட்டிடும்
காரணம் என்ன சேவலே?

ஆண்: கொத்தவுமில்லை விரட்டவுமில்லை
குற்றம் ஏதும் நடந்திடவில்லை
கொண்ட நினைவுகள் குலைந்து போனபின்
இன்பம்ஏது கோழியே? _ அந்த
எண்ணம் தவறு கோழியே (கொக்…

பெண்: நாட்டுக்கு மட்டும் போதனை சொல்லி
நம்பிய பெண்ணின் நிலையை அறியா
ஞானியை நீயும் பாரு _ இது
ஞாயந்தானா கேளு?

ஆண்: நம்பியிருப்பதும் நட்பை வளர்ப்பதும்
அன்பு மெய் அன்பு! _ அந்த
அன்பின் கருத்தை விதவிதமாக
அர்த்தம் செய்தாலே அது வம்பு! (குப்பை…

69. சின்னஞ்சிறு கண்மலர்
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவழ வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத் தமிழ்ச்சோலையே! மாணிக்க மாலையே
ஆரிரோ… அன்பே ஆராரோ!

ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ?
எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ?
நாளை உலகம் நல்லோரின் கையில்,
நாமும் அதிலே உய்வோம் உண்மையில்,
மாடிமனை வேண்டாம் கோடிச்செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும் (வண்ண…

பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ?
பாய்நதே மடிதனில் சாய்நதால்தான் தூக்கமோ?
தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்
தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்
குப்பைதனில் வாழும் குண்டுமணச் சரமே!
குங்குமச் சிமிழே ஆராரோ… (வண்ண…

70. இரைபோடும் மனிதருக்கே
இரைபோடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம் வீண் அனுதாபம் கொண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே

முறையோடு உழைத்துண்ண முடியாத சோம்பேறி
நரிபோலத் திரிவார் புவிமேலே _ நல்ல
வழியோடு போகின்ற வாய்பேசா உயிர்களை
வதச்சுவதச்சுத் தின்பார் வெறியாலே (இரை…

காலொடிந்த ஆட்டுக்காகக் கண்ணீர்விட்ட புத்தரும்
கடல்போல உள்ளங்கொண்ட காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமைகண்டு திருந்தவழி சொன்னதும் உண்டு
காதில்மட்டும் கேட்டு அதை ரசித்தாங்க _ ஆனா
கறிக்கடையின் கணக்கைப்பெருக்கி வந்தாங்க (இரை…

71. ராக் ராக் ராக்
1-வது ஆள் : ஒன்… அண்ட்டூ… அண்ட்த்ரீ… அண்ட்போர்

2-வது ஆள் : தைதைதை… தை… தை… தை… தை… தை

1-வது ஆள் : ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் (ராக்…
இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை… தை… தை… தை…
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டேன்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டேன்ஸ் ஜோடி டேன்ஸ்
பாடி பியூட்டிகள் பப்ளி சிட்டிகள்
பாடி ஆடிடும் டேன்ஸ்!

2-வது ஆள் : ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திருநடன சபேசன்
ஆடினார் அன்றோ!
அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் (அன்றே…

1-வது ஆள் : ஸார்… ஸார்… ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்… பார்… பார்… வேலைகளைப் பார்
பாய்… பாய்… பாய்… படேபடே பாய்
ரார்… டீடி… ராட்டி… டா

கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!
லவவுலே மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…
கலை… கலை… கலை!

2-வது ஆள் : கோபியர் கூடவே காவினி லாடிடும்
குறும்புக்காரன் கோபலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறைசெய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது! (ஆடினார்…

1-வது ஆள் : ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல்

72. திண்ணைப் பேச்சு வீரரிடம்
தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரமனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் _ இந்தத் (திண்ணை…

பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் _ இந்தத் (திண்ணை…

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் _ இந்தத் (திண்ணை…

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் _ இந்தத் (திண்ணை…

73. வீடு நோக்கி ஓடிவந்த
வீடு நோக்கி ஓடிவந்த என்னையே
நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே (வீடு…

இனி காடுமேடு சொந்தம் காணும்யாவும் சொந்தம்
கூடுமில்லை குஞ்சுமில்லை என்ன ஆனந்தம்! _ இரு
காலிருந்தும் கையிருந்தும் பாரிலே _ ஒரு
வாலுமில்லை தலையுமில்லை வாழ்விலே (வீடு…

இனிக் காற்று மழையிலின்பம் கல்லு முள்ளிலின்பம்
பூட்டுமில்லை கதவுமில்லை எந்தன் வீட்டுக்கே _ நான்
எண்ணிஎண்ணிக் கதறியென்ன உலகிலே _ ஒரு
இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே! (வீடு…
பிள்ளைக்கனியமுது

74. காக்காய்க்கும் காக்காய்க்கும்
பெண்கள் : காக்காய்க்கும் காக்காய்க்கும் கல்யாணமாம்
கானக் கருங்குயிலு கச்சேரியாம்

ஆண்கள் : கண்டகண்ட பக்கமெல்லாம் அழைப்புகளாம்
காலம் தெரிஞ்சுக்கிடக் குறிப்புகளாம் (காக்காயககும…

பெண்கள் : வீட்டுக்கு வீடு விருந்துகளாம்
வில்லுவண்டிக் கூண்டுமேலே ஊர்வலமாம்

ஆண்கள் : பழங்களும் விதைகளும் பரிசுகளாம் _ அதன்
பரம்பரை மொழியிலே வாழ்த்துக்களாம்! (காக்காயககும…

பெண்கள் : ஒற்றுமையில்லாத மனிதரைப்போல _ அது
ஒண்ணஒண்ணு கொத்திக்கிட்டு ஓடலையாம்!

ஆண்கள் : உயர்வு தாழ்வு என்று பேதம் பேசிக்கிட்டு
ஒதுங்கி வாழ இடம் தேடலையாம் (காக்காயககும…

பெண்கள் : அதிகமாகச் சேத்துக்கிட்டு அல்லும்பகல் பாத்துக்கிட்டு
இருப்பவங்க போல நடக்கலையாம்!

ஆண்கள் : நல்ல இதயத்தை மாத்திக்கிட்டு ஈயாதவன்போல
கதவைத்தான் சாத்திக்கிட்டுச் சாப்பிடலையாம்!

பெண்கள் : வரிசை தவறாமேக் குந்திக்கிட்டதாம்
வந்ததுக்கெல்லாம் இடம் தந்துக்கிட்டதாம்!

ஆண்கள் : மனிதனைக் கேலி பண்ணிக்கிட்டதாம் _ அவன்
வாழ்க்கையின் கோணலை எண்ணிக்கிட்டதாம்!

75. சீவி முடிச்சிக்கிட்டு
பெண் : சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
தேரோட்டம் பாக்கப்போறேன் வாறியா? _ மச்சான்
தேரோட்டம் பாக்கப்போறேன் வாறியா?

ஆண் : ஆடுதுரை தங்கமணி
அல்லிவேஷம் போடுறாளாம்
நாடகம் பாக்கப்போறேன் வாறியா? _ பொண்ணே
நாளைககுத் திரும்பிடலாம் ஜாலியா!

பெண் : கோபுரமாம் கும்பங்களாம்
கொடிகட்டிப் பறக்கிற கம்பங்களாம்

ஆண் : ஊஹம்

பெண் : கூட்டங்களாம் நாட்டங்களாம் _ மேளம்
கொட்டிக்கிட்டு ஆடுற ஆட்டங்களாம் _ மச்சான்
சித்திரைத் திருநாளு மருதையிலே _ நம்ம
சுத்திச்சுத்திப் பாத்திடலாம் குருதையிலே!

ஆண் : பத்துக்குரல் முத்துக்கண்ணு பாடுறாளாம்!
பவளக்கொடி வேஷத்திலே ஆடுறாளாம்!
சீனுகளாம் ஜிமிக்கிகளாம் _ நீ
சிரிக்கிற மாதிரியா வெளிச்சங்களாம்! _ பெண்ணே
ஓசியிலே நாடகம் திருச்சியிலே _ நாம
ஒண்ணாக் கிளம்பிடலாம் வா மயிலே!

1-25 | 26-50 | 51-75 | 76-100 | 101-125 | 126-150 | 151-175 | 176-209

posted by admin in Uncategorized and have No Comments

Place your comment

Please fill your data and comment below.
Name
Email
Website
Your comment